கோவையில் முதல் தனியார் ரயில்!  ரத்தம் கொதிக்கிறது!

1947 முதல் இந்தியாவில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு பயன்படுகின்ற ரயில்வே துறை ஜூன் 14 முதல் தனியார்மயம் ஆக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள ரயில்வே அரசாங்கத்தால் நடத்தப்படும் பொதுத்துறை நிறுவனம் ஆகும். அதுமட்டுமின்றி 1,27,760 கிலோமீட்டர் நீளமான ரயில் பாதையை உடைய உலகின் 3-வது மிகப்பெரிய ரயில்வே அமைப்பாகும்.

இந்தியன் ரயில்வே என்றழைக்கப்படும் ரயில் போக்குவரத்து மொத்தம் 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நாடு முழுவதும் தனது மக்கள் சேவையை ஆற்றி வருகிறது. நாடு முழுவதும் 7500 ரயில் நிலையங்களின் மூலமாக மக்களுக்கு தேவையான வர்த்தகப் பொருட்களில் அதாவது சரக்கு போக்குவரத்து 30% முதல் 40% வரை ரயில்வே மூலமாகவே நடைபெறுகிறது.

பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் போது 1853 ஆம் ஆண்டு மும்பை நகரத்திற்கும் தானாவிற்கும் இடையில் முதல் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது.

இந்த ரயில்வே துறை 1950ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. இந்தியன் ரயில்வே சுமார் 4 மில்லியன் தொழிலாளர்களைக் கொண்ட, உலகின் எட்டாவது மிகப்பெரிய பணியாளர்களைக் கொண்ட அரசு நிறுவனமாகும்.

இத்தகைய பெருமைகளை உடைய இந்திய ரயில்வே ஆர்எஸ்எஸ்-பாஜக ‘தேசபக்தர்களின்’ ஆட்சியில்தான் தனியாருக்கு தாரை வார்க்கபடுகிறது. இந்திய ரயில்வே அதானி குழுமத்திடம் பேரம்பேசி விற்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் 140 வழித்தடங்களில் தனியாருக்கு கொடுக்க போவதாக மோடி கும்பல் அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவில் உள்ள சீரடி வரை ஜூன் மாதம் 14 ஆம் தேதி முதல் தனியார் ரயில் போக்குவரத்து துவங்கி நடக்க உள்ளது.

அதேபோல ராமர் யாத்ரா என்ற பெயரில் ஜூன் 21 டெல்லியில் இருந்து நேபாளம் வரை இரண்டாவது தனியார் ரயில்வே போக்குவரத்து துவங்க உள்ளது இந்த ராமர் யாத்ரா என்பது ராமர் சென்று அலைந்ததாக கருதப்படும் இடங்களை இணைக்கின்ற புனித பயணத்தை முன்வைத்து நடத்தப்படுகிறது.

தேசத்தின் சொத்துக்கள் அனைத்தும் கூறுகட்டி தனியாருக்கு விற்பதை சிறந்த ஆட்சி என்று கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகள் மோடி அரசை பாராட்டுகின்றனர்.

இன்றைய தலைமுறையில் ரயில்வே என்றால் அது அரசு நிறுவனம் என்ற நிலைமாறி நம் சமகாலத்திலேயே தேசத்தின் மிகப் பெரிய சொத்து தனியாருக்கு தாரை வார்க்க படுவதை அனுமதிக்கவே கூடாது.

காடுகளிலும், மலைகளிலும், சமவெளி பிரதேசங்களிலும், கடற்கரை ஓரங்களிலும் ரத்த வேர்வை நிலத்தில் சிந்த இரும்பு தண்டவாளங்களை தோளிலும், முதுகிலும் சுமந்து நாடு முழுவதும் ரயில்வே இணைப்பை ஏற்படுத்திய கோடிக்கணக்கான தொழிலாளிகளின் உழைப்பிலும் மக்களுடைய வரிப்பணத்தில் உருவான ரயில்வே தனியாருக்கு தாரைவார்க்க படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இன்று ரயில்வேயில் உள்ள தொழிற்சங்கங்கள் அரசியல் ரீதியாக இதனை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டத்தையும், தங்களது போராட்டத்தின் நியாயத்தை மக்கள் ஏற்கின்ற வகையில் அரசியல் போராட்டமாக மாற்ற வேண்டும்.

“ரயில்வேயை தனியாருக்கு விற்காதே” என்ற முழக்கத்துடன் தொடர் போராட்டங்களை நடத்துவது என்ற திசையில் முன்னேற வேண்டும்.

அதற்கு முதற்படியாக தொழிலாளர்களின் நலனையும் நாட்டின் நலனையும் ஆளும் கும்பலிடம் அடகு வைத்துள்ள பிழைப்புவாத, மஞ்சள் தொழிற்சங்கங்களை அடையாளம் கண்டு வீசி எறிய வேண்டும்.

அதுபோலவே ரயில்வே தொழிலாளர்களுடன் பொது மக்களும் ஒன்றிணைந்து வீதியில் இறங்கி போராடுவோம்! உலகின் மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை பாதுகாப்போம்!

  • சண். வீரபாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here