காலை 10 மணிக்கே மதியம் 12 மணிக்கு போன வெயில் சுட்டெரிக்கிறது, மாலை சூரியன் மறைந்த பிறகும் இரவு 12 மணிவரை வெப்ப கதிர்கள் ஊடுருவி, வீட்டின் நான்கு சுவர்களும் உறக்கத்தை கெடுக்கின்றது. கடும் கோடை காலத்தில் சூறாவளி காற்றும், திடீர் பெருமழையும் பெய்து விவசாயத்தை நாசமாகிறது. அப்போதெல்லாம் ”முன்ன மாதிரி கிடையாது! காலம் கெட்டுப் போச்சு” என்று புலம்புகிறார்கள் மக்கள்!.
”போன வருஷம் மாதிரி இல்ல! இந்த வருஷம் அதிக வெயிலா இருக்கு!” ”போன முறை மாதிரி இல்லே! இந்த வருஷம் பேய் மழை பெய்யுது” ”என்னன்னே தெரியல ஒரே வறட்சியா இருக்கு” என்று மக்கள் அன்றாடம் பேசிக்கொள்வதை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்
பருவ காலங்கள் மாறி விட்டதாகவும், அதன் விளைவாகவே காலம் கடந்ததும் பேய் மழை சூறாவளி போன்ற அனைத்தும் தோன்றுகின்றன என்றும், இந்த பருவ கால மாற்றத்தினால் பூமியே அழிந்துவிடும் இறுதிகட்டத்தில் உள்ளது என்றும், இதற்கு அடிப்படையாக இருக்கும் புவி வெப்பமயமாதலை தடுக்காவிட்டால் இன்னும் சில நூற்றாண்டுகளில் இந்த புவிக்கோளம் உயிரினங்கள் வசிக்க தகுதியில்லாத வறண்ட பாலைவனமாக மாறிவிடும் என்று எச்சரிக்கிறார்கள் சூழலியல் விஞ்ஞானிகள். டைட்டானிக் நாயகன் லியோனார்டோ டிகாப்ரியோ, ஐ.நா வில் குரலெழுப்பிய கிரேட்டா துன்பர்க் போன்ற சூழலியல் ஆர்வலர்களும் பூமியை பாதுகாக்கும் படி குரலெழுப்புகின்றனர்.

கிரேட்டா துன்பர்க்

இவை எல்லாம் எப்போது தொடங்கியது? ஏன் புவி வெப்பமயம் ஆகிக் கொண்டே செல்கிறது? இதற்கும் நமது அன்றாட செயல்பாட்டுக்கும் என்ன தொடர்பு என்பதை ஒரு பருந்துப் பார்வையில் சுருக்கமாக பார்த்தால் மட்டுமே எந்த அளவிற்கு நாம் வசிக்கும் இந்த பூமி என்ற கிரகமானது அழிவின் விழிம்பில் நின்று கொண்டு இருக்கிறது என்பதை நாம் உணர முடியும்
ஏறக்குறைய 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாலில்லா குரங்கு இனத்திலிருந்து பிரிந்து ஹோமொ என்ற சிற்றினமாக பிரிந்தது. 28 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அதிலிருந்து ஹோமோ ஹெபிலிஸ் என்ற இன்றைய மனிதனை ஒத்த மனிதர்கள் வசித்துவந்தனர். இந்த காலகட்டத்தில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதர்களாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது இயற்கையின் ஒரு அங்கமாக இருந்ததால் மனிதர்களால் இயற்கைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. 12,000 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தைப் பண்படுத்தி அதாவது காடுகளை அழித்து, நிலங்களை சமன்படுத்தி விவசாயத்தை துவங்கிய காலக் கட்டத்தில் தான் பூமியின் அழிவும் மெல்லமெல்ல துவங்கியது. மனிதர்கள் உருவாக்கிய விவசாயம் இயற்கையை அழிப்பதில் முதல் வேலையைச் செய்தது. ஆனால் இது மனித குலத்திற்கும், புவிக் கோளத்திற்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதன் தொடர்ச்சியாக காடுகள், புல்வெளிகள் அழிக்கப்பட்டு நகரமயமாக்கம் (நவீன காலம் போன்றது அல்ல) துவங்கிய பின்னரே, அதாவது 7,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பூமி தன் வயதை குறைத்துக் கொள்ள துவங்கியது. இந்த இடத்தில் நாம் மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும் அதாவது முதல் முதலில் மனித நாகரீகம் அறியப்பட்ட மெசபடோமியாவில் (ஈராக்) இயற்கையை ஒட்டியே வாழ்க்கை இருந்ததால் சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது இல்லை.
சூரியனில் இருந்து வெளியாகும் ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு நொடிக்கு 600 மில்லியன் டன்கள் ஹைட்ரஜன் அணுக்களை வெளிப்படுத்துகிறது. இவை ஒன்றுடன் ஒன்று இணைந்து எரிவதால் ஹீலியம் அணுக்கள் உருவாகிறது. இதனால் அங்கிருந்து பருப்பொருள் ஆற்றலாக வினாடிக்கு 4 மில்லியன் டன் கொண்ட ஆற்றல் வெளிப்படுகிறது இந்த ஆற்றல் பூமிக்கு வந்தடையும் போது சூரியனில் உருவான ஆற்றலில் 0.23 சதவீதம் மட்டுமே நமக்கு வந்தடைகிறது. அதாவது இந்த சூரியக் கதிர் வேகம் ஒரு மணிக்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 1368 வாட் அளவிற்கு வெப்ப ஆற்றலை உருவாக்குகிறது.
இந்த வெப்ப ஆற்றல் பூமியைத் தாக்கி நாசம் அடையாமல் பாதுகாக்க ஒரு போர்வையை போல செயல்படும் பாதுகாப்பு அரணே வளிமண்டலம் (Atmosphere) என்றழைக்கப்படுகிறது. நாம் வசிக்கும் இடத்திலிருந்து ஆகாயத்தை நோக்கி 100 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் இருக்கின்ற அண்டவெளியின் பெயரே வளிமண்டலம் ஆகும் இந்த வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலம்தான் சூரியனிலிருந்து புறப்படும் புற ஊதாக் கதிர்கள், வெப்ப ஆற்றல்கள் நேரடியாக பூமியை வந்தடையாமல் 93% முதல் 99% வரை பாதுகாக்கிறது. இந்த ஓசோன் படலம்தான் இன்று அழிக்கப்பட்டு வருகிறது. சூரிய வெப்பமும் சுட்டெரிக்கிறது.
மனிதகுலம் பல நூற்றாண்டுகளாக பாதுகாத்து வந்த சுற்றுச்சூழல் ஓர்மையை கடந்த 200, 250 ஆண்டுகளில், அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறை துவங்கிய பிறகு மிக வேகமாக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இதில் பொதுவாக உலக மக்கள் அனைவரும் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் நடந்துக் கொள்கிறோம் என்று பேசுவது வர்க்க கண்ணோட்டமற்ற, பிரச்சனைகளை பொதுவாக அலசுகின்ற மோசடியாகும். முதலாளித்துவ உற்பத்தி முறையால் லாபம் பெறுகின்ற, ஏகபோக முதலாளிகள், ஏகாதிபத்திய முதலாளிகள்தான் சுற்றுச்சூழலை நாசப்படுகிறார்கள் என்றே கூறவேண்டும்..

முதலாளித்துவ லாப வெறியால் அழிந்துக் கொண்டிருக்கும் பூமி!

கடந்த சில ஆண்டுகளில் உலகளவில் ஏற்பட்டுள்ள சில சூழலியல் பாதிப்புகளை பார்த்தால் நிலைமையின் விபரீதம் நமக்கு புரியும். 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஒரு கோடியே 80 லட்சம் ஏக்கர் காடுகள் பற்றி எரிய துவங்கின. அவ்வாறு பற்றி எரிந்ததன் விளைவாக நூறு கோடிக்கும் அதிகமான விலங்குகளும், பல்வகை மரங்களும், பல்வகை தாவரங்களும் அழிந்தது
உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும், பூமிக்கு தேவையான 20% ஆக்சிஜனை உருவாக்கும் அமேசான் பள்ளத்தாக்கில் 2019 – ல் மட்டும் 75,000 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் அமேசான் பள்ளத்தாக்கில் இருந்த அரிய வகை தாவரங்கள், விலங்குகள், மரங்கள் ஆகிய அனைத்தும் அழிந்தன. பிரேசில் அதிபர் போல்சனரோவின் ஏகாதிபத்திய ஆதரவு, கார்ப்பரேட் கொள்கைகளினால் பூமியின் நுரையீரலில் முக்கிய பகுதி அழிந்து போனது.
2014 ஜூன் முதல் 2019 மார்ச் வரை இந்தியாவில் ஒரு கோடியே 18 லட்சத்து 30 ஆயிரம் மரங்கள் வெட்டி தள்ளப்பட்டுள்ளன. ஒரு மரத்தை வைத்து உருவாக்குவதற்கு ஏறக்குறைய இருபதிலிருந்து முப்பது ஆண்டுகள் ஆகும். ஆனால் இப்படிப்பட்ட மரங்களை கார்ப்பரேட்டுகளின் தேவைக்காக எவ்விதக் கேள்வியுமின்றி அழித்துக் நாசமாக்குகிறார்கள். உலகின் இருபுறத்திலும் அதாவது அண்டார்டிகா, ஆர்டிக்கா துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் புவி வெப்பமயமாதல் காரணமாக கடுமையாக உருகி வருகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக அழிக்கப்படும் காடுகள்

2015 -ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாட்டில் 195 நாடுகள் கலந்துகொண்டு ஒவ்வொரு நாடும் தாங்கள் வெளியேற்றுகின்ற பசுமைக்குடில் வாயுக்களை குறைத்துக் கொள்வதாக கூறிக்கொண்டனர். அது ஒன்றும் நடக்கவில்லை. இந்த ஆண்டு சுற்றுச் சூழல் தினத்தில் உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்டேரி டாலஸ் பாரிஸ் ஒப்பந்தத்தை கடைபிடிக்கும்படி கெஞ்சியுள்ளார். இல்லையெனில் இன்னமும் 5 ஆண்டுகளில் பூமியின் வெப்பம் தொழிற்புரட்சி காலத்திற்கு முன்பு இருந்தை விட 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துவிடும் என்று கதறுகிறார். கொரானா வைரஸ் தக்கியதால் பல நாடுகள் ஊரடங்கை அறிவித்தது. இதனால் பூமி சற்று இளைப்பாறுகிறது. ஆனால் உலகை சூறையாடும் ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசான அமெரிக்கா தொடர்ந்து அதிகளவில் பசுமைக்குடில் வாயுக்களை வெளியேற்றுகிறது. பிற நாடுகள் ஏற்றத்தாழ்வுவுடன் வெளியேற்றினாலும் சுற்றுச்சூழலை நாசமாக்கும் பல கேடான செயலை தொடர்ந்து செய்து வருகின்றன.
இதே நிலை நீடிக்குமானால் 2050 -ஆம் ஆண்டு கடல் மட்டம் 20 அடி வரை உயரும் அபாயம் உள்ளது. இதனால் கடற்கரையோர நகரங்கள் அழிந்து போகும் அபாயம் கண்முன்னே தெரிகிறது. குறிப்பாக மாலத்தீவுகள், ஆஸ்திரேலியாவின் முக்கியமான கடற்கரை நகரங்கள், வட அமெரிக்காவில் வான்கூவர், சியாட்டில், போன்றவை இருக்கவே இருக்காது. லாஸ் ஏஞ்சல்ஸ், சாண்டியாகோ பகுதிகளில் பெரும்பான்மை பகுதிகள் கடலுக்குள் மூழ்கிவிடும். அதைவிட சுருக்கமாகச் சொன்னால் உலகின் அதிசயங்களுக்கு தேர்வான அமெரிக்காவின் 93 மீட்டர் உயரமுள்ள சுதந்திரதேவி சிலையின் கால் பகுதி கடலுக்குள் மூழ்கிவிடும்.

அமெரிக்க சுதந்திர தேவி சிலை!

தென் அமெரிக்காவை பொருத்தவரை ஈகுவடார், சிலி, பாக்லந்து தீவுகள் போன்றவையும் அய்ரோப்பிய நாடுகளான டென்மார்க், நெதர்லாந்து போன்ற நாடுகள் இருந்த சுவடு தெரியாமல் அழிந்து விடும். பெல்ஜியம், லண்டன், வடக்கு ஜெர்மனி ஆகிய அனைத்தையும் கடலுக்கு அடியில் தான் தேட வேண்டியிருக்கும். மொத்தத்தில் ஐரோப்பா கண்டத்தில் பெரும்பான்மையான நாடுகள் கடலில் மூழ்கிவிடும். இந்தியாவைப் பொருத்தவரை குஜராத் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டு தனித்தீவு ஆகிவிடும். அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகள் முழுமையாக அழிந்து விடும். சென்னை, மும்பை, கொல்கத்தா, புதுச்சேரி ஆகிய கடற்கரை நகரங்கள் இருந்த இடம் தெரியாமல் போகும் அபாயம் உள்ளது. இவையெல்லாம் மிரட்டுவதற்காக நாம் கூறவில்லை. ஆபத்தை பற்றி புரிந்து கொண்டு சூழலியல் பாதிப்புகளுக்கு எதிராக போராட வேண்டிய அவசியத்தை விளக்கவே கூற வேண்டியுள்ளது. புவி வெப்பமயமாதல் இந்த அளவிற்கு பாதிப்பை உருவாக்கும் என்று சூழலியல் அறிஞர்கள் தொடர்ந்து எச்சரிக்கிறார்கள். இதனால்தான் பருவகால அவசரநிலையை அறிவித்துள்ளனர். தற்போது பூமியின் வெப்பம் 15 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது இது இன்னமும் 3 டிகிரி செல்சியஸ் உயர்ந்தால் மேற்கண்ட பாதிப்புகள் நிச்சயம்.
2050 -ஆம் ஆண்டில் சூழலியல் அகதிகள் 15 கோடி பேர் உருவாகி விடுவார்கள் என்பது மட்டுமல்ல இதே நிலைமை நீடித்தால் 2100 ஆம் ஆண்டு 200 கோடி பேர் உலக அளவில் சூழலியல் அகதிகளாக உருவாகி விடுவார்கள் என்பதிலிருந்து பூமியின் இறுதி காலத்தில் நாம் வாழ்கிறோம் என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஆனால் சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் பற்றி மக்கள் பேசக்கூடாது என்பதே கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்கையாகும்.

படிக்க:
பேரழிவின் விளிம்பில் பூமி!

திருவாளர் மோடி முன்வைத்துள்ள 5 ட்ரில்லியன் பொருளாதாரம், இந்தியாவில் புதிதாக 12 அணுமின் நிலையங்களையும், கடற்கரையோரங்களில் நிலக்கரியைப் பயன்படுத்தி இயக்கப்படும் அனல் மின் நிலையங்களையும், இயற்கையாக ஓடும் நீரின் போக்கை கட்டுப்படுத்தி அணைக்கட்டுகளை கட்டுவதன் மூலம் புனல் மின்நிலையங்களையும் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அன்றாடம் 1,75,000 மெகாவாட் மின்சாரத்தை 2022 -க்குள் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் நாட்டின் ’வளர்ச்சிக்காக’ இந்த 5 ட்ரில்லியன் பொருளாதாரம் முன் வைக்கப்படுகிறது. ஏற்கனவே பூமிக்கடியில் இருக்கும் கரியமில வாயுவை அதிகளவில் வெளிப்படுத்தும் நிலக்கரியும், ஆலைகளில் இருந்து அளவின்றி வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடும் தான் பசுமை குடில் வாயுக்களை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கிறது. இவை பூமியின் வெப்பத்தை அதிகரிக்க செய்கிறது. இந்நிலைமையில் புதியதாக மின் உற்பத்திக்காக மேற்கண்ட ஆலைகளும் துவக்கப்பட்டால் இந்தியாவின் சுற்றுச் சூழல் மிகவும் நாசமாகிவிடும்.

இந்தியாவில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளை முறைப்படுத்துவதற்கான சுற்றுச்சூழல் சட்டம் 1986 -ல் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் படி தொழிற்சாலைகளை இரண்டு பிரிவாக பிரித்து A பிரிவின் கீழ் அணுமின் நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள், இரசாயன உரத் தொழிற்சாலைகள், பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரிக்கின்ற தொழிற்சாலைகள், நிலத்தின் அடியிலிருந்து எடுக்கப்படும் எண்ணை, நிலக்கரி, எரிவாயு தொழிற்சாலைகள், இவற்றை ஓரிடத்தி லிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல தேவைப்படும் இராட்சத குழாய்கள் பதிப்பது போன்ற அனைத்தும் சுற்றுச்சூழலை பாதிக்கின்ற, மோசமான கெடுதல் தரும் பணிகள் என்று பிரிக்கப்பட்டது.

ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சு வாயுக்கள்.

B பிரிவில் 50 ஹெக்டேருக்கும் குறைவான சுரங்கப் பணிகள், 500 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள், சர்க்கரை ஆலைகள், சிமெண்ட் ஆலைகள் மற்றும் பிற தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டன. இவை இரண்டும் புதிய தாராளவாத கொள்கைகளுக்கு போதுமான அளவிற்கு சேவை செய்யவில்லை என்பதால், அதாவது அந்நிய முதலீடுகள் நமது நாட்டில் தடையின்றி இறங்குவதற்கு இதுபோன்ற சட்டங்கள் கேடு விளைவிப்பதாக கூறிக்கொண்டு புதிதாக EIA – 2020 என்ற சட்டத்தை கொண்டு வந்தனர். இதன்படி A பிரிவின் கீழ் அனுமதி கேட்கின்ற ஆலைகளுக்கு மத்திய நிபுணர் குழுவும், சுற்றுச்சூழல் அமைப்பும் அனுமதி வழங்க வேண்டும் என்றும், இந்தப் பிரிவின் கீழ் உரிமம் கோருகின்ற ஆலைகளுக்கு மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் திருத்தியுள்ளனர்
B1 பிரிவுகளுக்கு கீழ்வரும் ஆலைகளுக்கு மாநில நிபுணர் குழு ஆய்வு செய்தால் போதும் என்றும், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்றும் சட்டங்களைத் திருத்தி உள்ளனர். B2 பிரிவின் கீழ் உரிமை கோரும் ஆலைகளுக்கு கருத்துக்கேட்பு தேவையில்லை என்றும் கூறியுள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் ஏற்கனவே சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கின்றன A பிரிவின் கீழ் இருக்கும் உயிர்க்கொல்லி ஆலைகள் அனைத்தையும் B2 பிரிவின் கீழ் கொண்டுவந்து விட்டனர். அந்த ஆலைகளை துவங்குவதற்கு கருத்துக்கேட்பு தேவையில்லை என்று உடனடியாக அறிவித்து விட்டனர் இவை அனைத்தும் மோடி கும்பல் பட்டவர்த்தனமாக கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதையே காட்டுகிறது
கார்ப்பரேட் பொருளாதார வளர்ச்சிக்காக, ஏகாதிபத்திய அடிவருடி பொருளாதாரத்திற்காக நமது வாழ்க்கையும், சுற்றுச்சூழலும் எந்த அளவிற்கு பறிபோகிறது என்பதே நாம் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டிய உண்மையாகும்.
ஏகாதிபத்தியங்களை பொருத்தவரை பூமியின் அழிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்பதே உண்மை. எலிசியம் என்ற ஹாலிவுட் திரைப்பட்த்தில் வருவதைப் போல பூமி அழியும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இதனை நிரூபிக்கும் விதமாக உலகின் முதல் பணக்காரன் ஆன எலன் மாஸ்க், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கான வேலைகளை இப்போதே துவங்கிவிட்டார். தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலமாக இந்த வேலையை திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறார்.

எலன் மஸ்க்

எனவே பெரும்பான்மை மக்களாகிய நம்மை நெகிழி பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பேசுவதும், பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று பள்ளி, கல்லூரி குழந்தைகளை வைத்து விழிப்புணர்வு ஊர்வலம் விடுவதும் சுற்றுச்சூழல் அழிவை ஒரு போதும் தடுக்காது. இதனால் பருவநிலையை சரி செய்து விட முடியும் என்று அரை வேக்காட்டு அறிஞர்கள் நமக்கு பாடம் நடத்துவதும், மக்களின் மீது குறை சொல்வதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக இந்த பூமிப்பந்து மாற்றப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து அதை முறியடிக்கும் திசையில் போராட வேண்டும். அழிவின் விளிம்பில் இருக்கும் பூமியை பாதுகாக்க மனிதகுலம் அரசியல், பொருளாதாரம், பண்பாடு மட்டுமின்றி சூழலியல் அம்சத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு போராட வேண்டும். உலகம் முழுவதையும் ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கையிலிருந்து விடுவித்து சோசலிச பொருளாதாரத்தை கட்டுவதை நோக்கி பயணிப்பதே உடனடித் தீர்வாக உள்ளது.

  • இளஞ்செழியன்.

இந்தக் கட்டுரை ஏற்கனவே புஜதொமு முகநூல் பக்கத்தில் வெளியானது. அவசியம் கருதி மீள் பதிவு செய்கிறோம்.

கருத்துப் போராட்டத்தில் இணையுங்கள்! செய்திகளை மக்களுக்கு பகிருங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here