
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு 2026 ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வரும் ஏப்ரல் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என தமிழக அரசியல் சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
ஆளும் திமுக கூட்டணி எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே தொடர்கிறது. பாஜகவும் தனது கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. ஏற்கனவே அக்கூட்டணியில் அதிமுக உள்ள நிலையில், தற்போது பாமக (அன்புமணி), அமமுக, புரட்சி பாரதம், தமாக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. மறுபுறம், பாஜகவின் B – டீம்களான தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன. கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு முடியும் போது சில கட்சிகள் கூட்டணி மாறவும் வாய்ப்புள்ளது என்றாலும், தமிழக தேர்தல் களம் திமுக கூட்டணி – எதிர்- பாஜக மற்றும் பாஜக B – டீம் என்றே அமையும் என்றால் மிகையல்ல.
கூட்டணிக் கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் அதே நேரத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியையும் தொடங்கி விட்டன. இந்த வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீச தொடங்கி விட்டன கூட்டணி கட்சிகள். இதனை முதலில் தொடங்கியது தவெக தலைவர் விஜய். அவரைத் தொடர்ந்து எடப்பாடி, பிரதமர் மோடி, திமுக தலைவர் ஸ்டாலின் என அடுத்தடுத்து மக்களின் வாக்குகளை ஈர்க்க தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றனர்.
மக்கள் மீது திணிக்கப்படும் பாசிச சட்டங்களும்!
கவர்ச்சிவாத தேர்தல் வாக்குறுதிகளும்!
விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், வணிகர்கள் என அனைத்து உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் பல்வேறு பாசிச சட்டங்களை கடந்த 11 ஆண்டுகளில் கொண்டு வந்துள்ளது பாசிச பாஜக. குறிப்பாக, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், மூன்று வேளாண் சட்டங்கள், புதியக் கல்விக் கொள்கை மற்றும் நீட், கியூட் போன்ற நுழைவுத் தேர்வுகள் திணிப்பு, சிறுபான்மையினரை இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சி.ஐ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் போன்ற சட்டங்கள், வரியை சூறையாடும் ஜி.எஸ்.டி, இயற்கை வளங்களை, பொது சொத்துக்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் சட்டங்கள், பாரம்பரிய விதைகளை அழிக்கும் விதை திருத்த சட்டம், மின்சாரத் திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம், ஒரே நாடு – ஒரே தேர்தலுக்கான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு போன்ற சட்டங்கள். இந்த பாசிச சட்டங்கள் மற்றும் திட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.
ஆர்எஸ்எஸ் பாஜக முன் வைத்து செயல்படும் இந்த கார்ப்பரேட் காவி பாசிச அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் திட்டங்களுக்கு மாற்று திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அப்போது மட்டுமே பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பாசிச பிடியிலிருந்து மீட்க முடியும். இதனை செய்வதாக எதிர்க்கட்சிகளான காங்கிரசு, இடதுசாரிகள், திமுக உள்ளிட்டு எந்த கட்சியும் தனது தேர்தல் வாக்குறுதியாக கொண்டு வருவதில்லை. மாறாக, இலவச – கவர்ச்சிவாத வாக்குறுதிகளை மட்டுமே அள்ளி வீசி மக்களை கவர முயற்சிக்கின்றன.
சமீபத்தில் காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய் தங்களது தேர்தல் வாக்குறுதிகளாக,”எல்லாருக்கும் நிரந்தரமான வீடு இருக்க வேண்டும்; வீட்டிற்கு ஒரு இருசக்கர வாகனம் கண்டிப்பாக இருக்க வேண்டும்; பொருளாதார வளர்ச்சிக்கு வழியை ஏற்படுத்த வேண்டும்; வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு டிகிரியாவது படித்திருக்க வேண்டும்; வீட்டில் குறைந்தபட்சம் ஒருவருக்கு வருமானம் இருக்க வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். இதனை எப்படி செய்வோம் என்பதை தேர்தல் அறிக்கையில் விரிவாக இடம்பெறும்” என அறிவித்தார்.
அதேபோல், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக, பாஜகவின் பாசிச நடவடிக்கைகளை மறைக்கும் விதமாகவும், தவெக தேர்தல் வாக்குறுதிக்கு இணையாக தனது முதல் 05 தேர்தல் வாக்குறுதிகளாக, மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய்; ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம்; வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடு; 05 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம்; 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்துவது என அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தனது பங்கிற்கு தமிழகத்திற்கு தேவை டபுள் இஞ்ஜின் சர்க்கார். இதனை தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமே செய்யும் என பாசிச நடைமுறைகளை மறைக்கும் டபுள் இன்ஜின் எனும் புதிய பிரச்சார யுத்தியை கையில் எடுத்துள்ளார்.
ஆளும் திமுக அரசு, டபுள் இஞ்ஜின் சர்க்கார் வட மாநிலங்களில் டப்பா இஞ்சினாக உள்ளது என கூறியுள்ளதுடன் மார்ச் 15 வாக்கில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிப்போம் என்றும், இந்த முறை தேர்தல் அறிக்கை கதாநாயகனாக அல்லாமல் கதாநாயகியாகவும் இருக்கும் என்று அறிவித்துள்ளது என்றாலும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளும் கண்டிப்பாக வீடு இல்லாதவர்களுக்கு வீடு; இரு சக்கர வாகனம்; அனைவருக்கும் வேலை உத்திரவாதம்; பொருளாதார மேம்பாடு; மகளிர் உதவித்தொகை அதிகரிப்பு ஆகிய இலவச – கவர்ச்சிவாத வாக்குறுதிகள் மட்டுமே கண்டிப்பாக இடம் பெறும். பாசிச சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்புகள் கண்டிப்பாக இருக்காது என்பதில் சந்தேகம் இல்லை. தேர்தல் வாக்குறுதிகளில் பாசிச சட்டங்கள் ரத்து செய்யப்படும் என வந்துவிட்டால் மட்டும் போதாது. அதற்கான மாற்று திட்டங்களும் அது நடைமுறைக்கு செல்லும் வழிமுறையும் அவசியம்.
பாசிச கட்டமைப்பில் தேர்தல் வாக்குறுதிகளும்!
அதன் பின்னால் ஒளிந்துள்ள அபாயமும்!
உலக வங்கி – உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைக்கு ஏற்பவும், அம்பானி, அதானி உள்ளிட்ட தேசம் கடந்த தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் நலன்களுக்காவும், தனியார்மயம் தாராளமயம் உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க பொருளாதார கொள்கையை தீவிரமாக அமல்படுத்துவதன் மூலம்தான் இந்தியாவை அதன் மாநிலங்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியுமென்று கூறுகிறது பாசிச கும்பல். இதற்கு ஏற்ற வகையிலே தேர்தல் வாக்குறுதிகள் தீர்மானிக்கப்படுகிறது. எளிமையாக சொன்னால், எந்த ஒரு கட்சியும் இந்தியாவில் நடைமுறையில் உள்ள மறுகாலனியாக்க பொருளாதார கொள்கைகளை ஏற்றுக்கொண்டே தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். இதற்கு திமுகவும் விதிவிலக்கல்ல.
படிக்க:
♦ ஐந்து மாநில தேர்தல்கள்: தேவை கவர்ச்சி திட்டமா? குறைந்தபட்ச செயல்திட்டமா?
♦ புதிய ஜனநாயகம் | பிப்ரவரி 2026 | இதழின் உள்ளே
இதனை புரிந்துக் கெள்ளாமல், ஒரு கட்சி இலவச வீடு தருகிறது, மாதம் 2000 தருவதாக கூறுகிறது, மற்றொரு கட்சி வண்டி தருகிறது, மாதம் 3000 தருகிறது எனவே, யார் அதிகமாகவும், நமக்கு தேவையான வாக்குறுதிகளை தருகிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போடலாம் என நினைப்பது அடி முட்டாள்தனம்.
எந்தக் கட்சியும் அதன் வேட்பாளரும் தனது சொந்த பணத்தை எடுத்து மக்கள் நல திட்டங்களுக்கும் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவும் செலவு செய்வதில்லை. பெரும்பான்மை வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற தங்களது தொகுதிகளில் செய்யும் செலவுகள் கூட அரசாங்க காண்டிராக்டில் அடித்த கொள்ளை, காடுகளையும் மலைகளையும் வெட்டி விற்ற காசு, புறம்போக்குகளை விற்று ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றிக் குவித்த பணம், ரேசன் அரிசி, வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம், வளர்ச்சித் திட்டங்கள் அனைத்திலும் சுருட்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்க அதிகாரிகள் வாங்கும் லஞ்சப்பணத்தில் வசூலிக்கும் கப்பம், சட்டவிரோத சமூக விரோதத் தொழில்கள், போலீசுடன் கூட்டு சேர்ந்து நடத்தும் கட்டைப் பஞ்சாயத்து கலெக்சன், இவையனைத்துக்கும் மேலாக பன்னாட்டு முதலாளிகளிடம் நாட்டைக் கூட்டிக் கொடுத்து வாங்கிய கமிசன் என்று இவர்கள் சூறையாடிய பொதுச் சொத்துதான் தொகுதிக்கு 4 கோடி 5 கோடி என ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது.
படிக்க:
♦ இயற்கை வளங்களை பாதுகாக்க தேர்தல் மட்டுமே போதாது!
♦ பீகார் சிறப்பு தீவிர திருத்தமும், தேர்தல் புறக்கணிப்பு அரசியலும்!
அதாவது, தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற ஆளும் கட்சிகள் செலவிடப்படும் தொகை மக்களிடம் வசூலிக்கப்படும் வரிப் பணம் மட்டுமின்றி உலக வங்கி மற்றும் ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பல்களிடம் கடனாகவும் பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பல் சும்மா கடன் தருவதில்லை. இங்கிருக்கும் வளங்களை சுரண்டிச் செல்லவும், வளமான பொருட்களை ஏற்றுமதி செய்யவும் நிர்பந்தித்தே கடன் தருகிறார்கள். தமிழக அரசின் 2024-2025 பட்ஜெட் மதிப்பீடுகளின்படி, ஒரு ரூபாய் வரவு என்பதில் 33 பைசா கடனாக வாங்குகின்றனர் என்பதையும் தமிழக அரசின் கடன் 10 லட்சம் கோடி என்பதையும் ஒப்பிட்டு பார்த்தால் வளர்ச்சி என்ற பெயரில் அறிவிக்கப்படும் திட்டங்களும், இலவச- கவர்ச்சிவாத வாக்குறுதிகளும் நம்மை மேலும் கடனாளிகளாகவும், ஏகாதிபத்திய அடிமைகளாகவும் மாற்றும் அபாயம் உள்ளதே தவிர அனைவருக்கும் தரமான வாழ்க்கை தரத்தை ஒருபோதும் தராது.
உதாரணமாக மூன்று வேளாண் சட்டங்களை நடைமுறைப் படுத்த வேண்டும் என பாசிச மோடி அரசு தொடர்ந்து முயற்சிப்பதற்கு உலக வர்த்தக கழகத்துடன் இந்தியா போட்டிருக்கும் விவசாயம் தொடர்பான ஒப்பந்தம் (Agreement on Agriculture – AOA) முக்கியமானது. இந்த ஒப்பந்த அடிப்படையிலே இந்திய விவசாயம் சார்ந்த அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டு வந்திருக்கின்றன.
இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறாத வரை மூன்று வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்திய தீர வேண்டும் என்பது மட்டுமின்றி விவசாயத்தில் சுயமாக எந்த முடிவும் எடுக்க முடியாது. உலக வர்த்தக கழகத்துடன் இந்தியா போட்டிருக்கும் விவசாயம் தொடர்பான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம் என எந்தக் கட்சியும் தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பதில்லை. அதே நேரத்தில் கவர்ச்சிவாத திட்டங்களை வாக்குறுதிகளை புறக்கணித்து மக்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் பாசிச சட்டங்கள் ரத்து செய்வோம் என தேர்தல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதியாக கொண்டுவர வேண்டும் என புரட்சிகர அமைப்புகள் தவிர வேறு எந்த அமைப்பும் போராடுவதில்லை.
தேர்தல் வாக்குறுதிகள் நிலையும்!
ஐக்கிய முன்னணி-மக்கள் முன்னணி தேவையும்!
எந்த கட்சியும் தங்களுடைய ஐந்து வருட ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியதில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கேள்வி கேட்பதற்கான எந்த சட்டப்பூர்வமான வழிமுறைகளும் குடிமக்களுக்கு இல்லை. அதிகபட்சம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற சொல்லி போராட்டம் நடத்தலாம். இதனை தான் தற்போது அரசு ஊழியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர். எனினும், அடுத்த தேர்தலில் கட்சிகளின் வாக்குறுதிகளை கடவுள் நம்பிக்கையை போல மக்கள் நம்புகிறார்கள். ஊடகங்களும் நம்பவைக்கும் வேலையை செய்கின்றன. ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமல்ல பாசிசத்திற்கு எதிரான மாற்று திட்டங்களை நிறைவேற்றுவதற்கான வழிமுறை என்ன? அவற்றை நிறைவேற்றுவதற்கான உண்மையான அதிகாரம் எப்படி உருவாக்குவது என்பது பற்றியான விவாத்திற்குள் யாரும் செல்வதில்லை. இதனால் உண்மையான அதிகாரத்தை நோக்கி நகராமல் தற்போதைய மாற்றாக விஜய் தெரிகிறார் என சிலரும், சீமான் என சிலரும் நினைக்கிறார்கள்.
உண்மையில் விஜய் ஒர் பாசிச கோமாளி அவரது கட்சியில் உள்ள நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா பாஜகவின் சிலிப்பர் செல்கள். எனவே பாஜகவின் பி- டீமாகவே அக்கட்சி செயல்படும். உதாரணமாக, தலைநகர் டெல்லியில் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த காங்கிரசை துடைத்தெறியும் ஆயுதமாகவே ஆம் ஆத்மியை உருவாக்கி ஊழல் ஒழிப்பு நாடகத்தை கட்டியமைத்தது காவி பாசிச கும்பல்.
ஆம் ஆத்மியின் பத்து ஆண்டு கால ஆட்சியில் டெல்லியில் காங்கிரஸின் செல்வாக்கு முற்றிலும் சரிந்து போன பிறகு, ஆம் ஆத்மியையும் தூக்கியெறிந்துவிட்டு நேரடியாக பா.ஜ.க-வை அதிகாரத்திற்கு கொண்டு வந்திருக்கிறன. தற்போது தமிழகத்தில் திமுகவை துடைத்தெறியும் ஆயுதமாக தவெகவை பயன்படுத்துகிறது காவி பாசிச கும்பல். அதேபோல் சீமான் “பார்ப்பனிய கடப்பாறை கொண்டு திராவிடத்தை இடிப்பேன்” என பகிரங்கமாக அறிவித்து தான் பாஜகவின் பி- டீம் என்பதை அறிவித்து விட்டார். சீமானின் நாம் தமிழர் மற்றும் விஜய்யின் தவெக மாற்று அல்ல. அவர்கள் முன்வைக்கும் திட்டங்களும் தேர்தல் வாக்குறுதிகளும் உலக வங்கி மற்றும் உலக வர்த்தக கழகத்திற்கும், மறுகாலனியாக்க பொருளாதார கொள்கைக்கும் உட்பட்டதாகும். ஆகவே இவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்.
அதே நேரத்தில், திராவிடமில்லா தமிழகம் என்ற பாஜகவின் தொடர் பிரச்சாரம் உருவாக்கிய தாக்கமும், திமுகவின் தரகு முதலாளிகளின் சார்பு தன்மையாலும் நாம் தமிழர் மற்றும் தவெக கட்சிகள் பாசிசத்திற்கு பாதை அமைத்து தருகின்றன. குறிப்பாக இந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி 15 முதல் 20 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது என்கின்றது பல புள்ளி விவரங்கள். தவெக கட்சி அதிகபட்சமாக 20% வாக்குகள் பெற்றாலும் வெற்றிபெற முடியாது. ஆனால் வாக்குகளை பிரிக்க முடியும். இவ்வாறு பிரிக்கப்படும் வாக்குகள் தங்களது ஆட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ள இளைஞர்கள் மற்றும் மக்களின் வாக்குகள் மட்டுமே என தவறாக கணித்து வருகிறது திமுக.
அதாவது எதிர்ப்பு வாக்குகள் சிதறும் போது எளிதில் வெற்றி பெறலாம் என கருதுகிறது. இதனால் திமுக கூட்டணி பழைய முறையிலேயே தேர்தலை எதிர்கொள்கிறது. இது பாசிசத்திற்கும் அதற்கு துணைநிற்கும் B- டீம்களுக்கு சாதகமாகவே அமையும். அதாவது, பாசிச பாஜகவிற்கு எதிராக தேர்தல் கூட்டணி என்பது மட்டும் போதாது. மாநில பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பொருளாதார மாற்று திட்டங்கள் என்பதை தாண்டி பாஜக முன் தள்ளும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு அரசியல்-பொருளாதார – பண்பாட்டு கொள்கைகளை உள்ளடக்கிய குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணி மற்றும் மக்கள் முன்னணி உருவாக்க வேண்டும்.
இதன் மூலம் அமைக்கப்படும் ஜனநாயக கூட்டரசு அமைக்க வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் ஜனநாயக கூட்டரசு மூலமே பாசிசக் கும்பல் முன்ன்வைக்கும் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளுக்கு மாற்றாக முன் வைக்கப்படும் தேர்தல் வாக்குறுதிகளும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களும் நடைமுறைப்படுத்துவது உறுதி செய்ய முடியும்.
◾தயாளன்.
புதிய ஜனநாயகம்
மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்
பிப்ரவரி 2026 இதழ் கட்டுரை






