தெற்காசியாவின் வாகன அழிப்பு மையமாக இந்தியாவை மாற்ற போவதாக அறிவித்துள்ளார் நிதின் கட்காரி.
வாகன அழிப்பால் அழியப் போகும் சுற்றுசூழல் :
இது குறித்து தெரிந்துகொள்ள ஏற்கனவே இறக்குமதி ஆகும் பல்வேறு கழிவுகள் குறித்து முதலில் தெரிந்து கொள்வோம். அதிலிருந்து தெற்காசியாவின் வாகன அழிப்பு கேந்திரம் குறித்து முடிவுக்கு வருவோம்.
ஏகாதிபத்திய குப்பை காடாகும் மூன்றாம் உலக நாடுகள் :
ஏற்கனவே போர் வெறி பிடித்த அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளின் காலாவாதியான ஆயுதங்களை பழைய இரும்பு கழிவு என்ற பெயரில் தள்ளிவிட்டு வருகின்றன. நமது நாட்டிற்கும் இப்படி இறக்குமதி ஆகிறது. அதன் ஆபத்து புரியாமல் உழைக்கும் மக்கள் அதை கையாள்வதும், பாய்லர்களில் போட்டு உருக்குவதும் பெரும் வெடி விபத்தையும், உயிர் பலியையும் ஏற்படுத்தி வருகிறது.
படிக்க:
♦ நிலக்கரிச் சுரங்கம்; கருப்பில் தோய்த்த நெல் – கருப்பு நுரையீரல்
அதே போல் ஆயுள் முடிந்த கப்பல்களை உடைத்து அழிக்கும் வேலையில் அண்டை நாடான பங்களாதேசம் நம்நாட்டில் குஜராத்தும் முன்னணியில் உள்ளன. இப்படி கப்பல்களை அழிக்கும் போது ஆஸ்பெட்டாஸ் உள்ளிட்ட கழிவுகள் நம் மண்ணில் மலை போல் குவிந்து மாசுபடுத்தி வருகிறது.
அதே போல் வளர்ந்த நாடுகளின் மருத்துவ கழிவுகளும் மின் அணு கழிவுகளும் கன்டைனர்களில் தூத்துக்குடி போன்ற துறைமுகங்கள் மூலம் இறக்குமதியாகி நம் மண்ணில் புதைக்கப்படுகிறது.
உண்மை நோக்கம் வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சியா?
நம்ம வீட்டு இளைஞர்களை குப்பைகளை பொருக்கியோ அல்லது பழைய இரும்பு தட்டுமுட்டு சாமான்களை வாங்கியோ தொழில் நடத்து என்று யாராவது ஆலோசனை சொல்கிறோமா? அது மோசமான தொழில் என்பதல்ல: ஆனால் அது ஒரு நாட்டின் தொழில்துறையின் முதன்மையான பங்களிப்பை கொண்டிருப்பது இது அல்ல. மேலும் இதில் ஈடுபடுவதன் மூலம் பெரிய லாபத்தை அல்லது சமூக மதிப்பீட்டை பெறுவது இல்லை என்பதால் தான்.
இப்பொழுது நிதின் கட்காரி நமது நாட்டையே தெற்காசியாவில் போய் குப்பை பொருக்குங்கள் என்கிறார். வேறு வேலை இல்லாமல் இதுதான் இறுதி வாய்ப்பு என்ற நிலை இருந்தால் இதை ஏற்கலாம். ஆனால் நம் நாட்டில் உயர்தர கனிம வளங்கள் இருக்கின்றன. முதல்தரமான இரும்பை, அலுமினியத்தை பிற உலோகத்தை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் தெரிந்த தகுதியானவர்கள், படித்தவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். அப்படிப்பட்ட தொழிற்சாலைக்கான உட்கட்டமைப்பும் உள்ளது. அப்படி இருந்தும் ஓட்டை உடைசல் களை வாங்கி வந்து உடைப்பதன் மூலம் தான் வேலை வாய்ப்பு தொழில் வளர்ச்சி என்பது ஏமாற்று!
கார்ப்பரேட் காவி பாசிட்டுகளான மோடி, கட்காரி போன்றோர் அறிவித்து வரும் ஒவ்வொரு திட்டமும் நாட்டுக்கும், சுற்றுச்சூழலுக்கும், மனிதனுக்கும் பெரும் கேடு விளைவிப்பதாக உள்ளது. எனவே தனித்தனியாக போராடுவதை விடுத்து, பாதிக்கப்படும் அனைவரும் நாட்டைக் காக்க பாசிசத்தை வீழ்த்த ஒன்றிணைவோம்.
- இளமாறன்.