மே 29 அன்று ஏவிபி செய்தி சேனலுக்கு மோடி அளித்த பேட்டியில், காந்தி படம் வெளியிவதற்கு முன்பு வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்றும் படம் வெளியான பிறகே காந்தி மீது ஆர்வம் ஏற்பட்டது என்றும் பேசியுள்ளார்.
மோடிக்கு என்ன திடீர் காந்தி பாசம் என்று பிறகு பார்க்கலாம். காங்கிரசை தினமும் ஏதாவது கூற வேண்டும் என்பதற்காகவே உளறிக் கொண்டிருக்கிறார் மோடி. அதுபோல இதுவும் ஒரு உளறல். காந்தியை பற்றி மோடிக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் அல்லது காந்தி படம் பார்த்த பின்பு தெரிந்திருக்கலாம். அதனாலயே உலகிற்கு தெரியாது என்று கூறுவது மோடியின் அறிவீனம்.
காந்தி மீது பாசமில்லை! காங்கிரஸ் மீதான காண்டு!
மோடியின் இந்த பத்தாண்டு கால ஆட்சியில் காந்திக்கு பெருமை சேர்க்கும் விதமாகவோ அல்லது காந்தியை உயர்த்தி பிடிக்கும் விதமாகவோ அல்லது உலகிற்கு தெரியும் விதமாகவோ எதுவுமே செய்ததில்லை. மாறாக காந்தியின் ராட்டையை தனது சுய விளம்பரத்திற்காக மட்டும் பயன்படுத்திக் கொண்டார்.
காந்தியை ஆர்எஸ்எஸ்-சும் பாஜகவும் தனது சித்தாந்த விரோதியாகவே பார்க்கிறது. அதனாலேயே காந்தியின் உருவ பொம்மையை ஒரு ஆர் எஸ் எஸ் பெண் தீவிரவாதி துப்பாக்கியால் சுடும் வீடியோவை மோடி உட்பட யாரும் கண்டிக்கவே இல்லை. காந்தியை தூரம் வைத்துவிட்டு தீவிர இந்துத்துவவாதியும் இந்து மகா சபையின் தலைவருமான மன்னிப்பு புகழ் ஷூ சாவர்க்கரை உயர்த்தி பிடிக்கிறது. அவரையே தேசத்தின் தந்தை என்கிறது.
கோட்சே காந்தியை சுட்டுக் கொன்ற பிறகு உலகம் முழுவதும் பேசப்பட்டார். அந்த வகையில் காந்தியை உலகளவில் பிரபலப்படுத்தியதில் ஆர் எஸ் எஸ் க்கும் பங்கு உண்டு.
ஆர் எஸ் எஸ் ஐ காப்பாற்றிய கோட்சே!
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை பிரிக்கும் திட்டத்திற்கு இந்து மகாசபை கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. இதன் விளைவாக இந்தியாவில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. இந்த கலவரத்தின் போது காந்தி இந்துக்களை சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கூறினார். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிய காரணமே காந்தி தான் என ஆர் எஸ் எஸ் காந்தியை கொல்ல திட்டமிட்டது.
1948 ஜனவரி 30 அன்று டில்லியில் காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான். நாதுராம் கோட்சேவுக்கும் rss-க்கும் தொடர்பில்லை என்றும் கோட்சே ஆர்எஸ்எஸ்-லிருந்து விலகி இந்து மகாசபையில் இணைந்து விட்டார் என்றும் தெரிவித்தார்கள். அன்று ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த ஹெட்கேவர் தப்பினார். ஆனால் இந்து மகா சபையின் தலைவராக இருந்த சாவர்க்கர் சிக்கிக்கொண்டார். அவரும் பின்னாளில் விடுதலை செய்யப்பட்டார். நவம்பர் 15 1949 அன்று கோட்சே காந்தியின் கொலை வழக்கில் தூக்கிலிடப்பட்டார்.
ஆர் எஸ் எஸ் க்கும் காந்தியின் கொலைக்கும் தொடர்பில்லை என்பது போல் RSS சார்பு எழுத்தாளர்களால் பல கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் ஆர் எஸ் எஸ் பாஜகவும் வளர்ந்த பிறகு கோட்சேவை தியாகியாக போற்றி வணங்கி வருகிறார்கள். அவரது பிறந்த நாளில் கோட்சேவை போற்றும் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.
1982-ல் வெளியான ‘காந்தி’ திரைப்படம் காந்தியின் பயணத்தை அடிப்படையாகக் கொண்ட காந்தியின் வாழ்க்கை வரலாற்றை பேசும் திரைப்படமாக 1982ல் வெளியானது. வழக்கறிஞரான காந்தி அகிம்சை போராட்டத்தின் தத்துவத்தின் மூலம் பிரிட்டிஷ்க்கு எதிரான இந்திய ‘கிளர்ச்சி’யின் மூலம் தலைவர் ஆன வரலாற்றை பேசுகிறது இப்படம். 1983 ஆம் ஆண்டு 8 ஆஸ்கர் விருதுகளை வென்று குவித்தது ‘காந்தி’ திரைப்படம்.
இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே 1953இல் அமெரிக்கன் பியூச்சர் டாக்குமென்ட்ரி படமாக ‘Mahatma Gandhi: 20th century prophet’ இந்த டாக்குமெண்டரிக்கான வேலையை 1937லேயே ஏ.கே.செட்டியார் தொடங்கிவிட்டார் என்று IMDB கூறுகிறது.
1963-ல் பிரிட்டிஷ் அமெரிக்கன் திரில்லர் திரைப்படமாக 9 Hours to Rama வெளியானது. மார்க் ராப்சன் இயக்கிய இந்த படமானது காந்தியைக் கொல்ல நாதுராம் கோட்சேயின் திட்டம் என்ற கோணத்தில் கற்பனை கதையாக உருவானது.
உலக நாடுகளில் காந்தியின் சிலைகள்!
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஏகாதிபத்தியங்களால் விரும்பப்படக்கூடிய நபராக காந்தி இருந்தார். காந்தியின் அகிம்சை வழிப் போராட்டம் ஏகாதிபத்தியங்களுக்கு ஏதுவாக இருந்தது. அதனால் உலக நாடுகளில் காந்தியின் சிலைகள் அமைப்பதில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.
- அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 1950 ஆம் ஆண்டு உலக அமைதி நினைவகத்தில் காந்தியின் சிலை நிறுவப்பட்டது.
- பெல்ஜியம் தலைநகர் ப்ரஸ்சல்சில் 1969 ஆம் ஆண்டு காந்தியின் நூறாவது பிறந்தநாள் நினைவை ஒட்டி புகழ்பெற்ற பெல்ஜிய கலைஞரான ரெனே க்ளிக்வெட்டால் செதுக்கப்பட்ட சிலை நிறுவப்பட்டது.
- லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் மே 17, 1968 அன்று அப்போதைய பிரதமர் ஹரோல்ட் வில்சனால் காந்தியின் சிலை திறந்து வைக்கப்பட்டது.
- 1948 ல் உகாண்டாவில் நைல் நதியில் காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே காந்தியின் மார்பளவு சிலை 1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
- மே 15, 1988 அன்று கனடாவில் உள்ள ஒன்டாரியோவின் பிரீமியர் டேவிட் பீட்டர்சன் அவர்களால் வாய்ஸ் ஆஃப் வேதஸ் மைதானத்தில் ஒரு மகாத்மா காந்தி சிலை திறக்கப்பட்டது. இதற்கான திட்டம் 1982லேயே போடப்பட்டது.
மேற்குறிப்பிட்ட தரவுகள் அனைத்தும் மோடி கூறியது போல் காந்தியின் திரைப்படம் 1982-ல் வெளியாவதற்கு முன்பே நடந்தவை.
படிக்க:
♦ தேர்தலில் வெற்றிப்பெற ஏக்கர் கணக்கில் பொய் பேசும் மோடி! | சாம் பித்ரோடா பேசியதில் எந்த தவறுமில்லை!
♦ எய்ம்ஸ்: மதுரையை தொடர்ந்து தர்பங்கா பொய்யர் மோடி!
ஆர் எஸ் எஸ் ஆல் திட்டமிட்டு கொல்லப்பட்ட காந்தியை மோடி தற்போது பேசி வருவதற்கு காரணம் தேர்தல் ஆதாயம் மட்டுமே, காந்தி மீதான பற்று கிடையாது.
அதிகாரத்தை கைப்பற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார் மோடி. ஆனால் மோடி சொல்லும் அனைத்தையும் எதிர் கேள்வி எழுப்பாமல் ஊமைகளாய் கடந்து செல்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து தரகு முதலாளிகள் வசம் அதிகாரம் மாற்றப்பட்டதற்கு முக்கிய காரணமாய் இருந்தவர் காந்தி. காந்தியை பற்றி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம். அவற்றை வெளிப்படையாக பேச வேண்டும். ஒருபுறம் காந்தியை படுகொலை செய்துவிட்டு, மற்றொருபுறம் காந்தியை புகழ்பாடுவதாக நாடகமாடும் இழிவான வேலையை செய்யக்கூடாது. அதைதான் பாசிச ஆர்.எஸ்.எஸ்- பாஜக கும்பல் செய்து வருகிறது.
- நலன்