ச்சநீதிமன்றத்தின் அக்டோபர் 13 ஆம் தேதி தீர்ப்பை அடுத்து விஜய், ஆதவ் அர்ஜூன், புஸ்ஸி ஆனந்த் உட்பட பலரும் புளகாங்கிதத்தில் துள்ளிக் குதிக்கின்றனர். வெற்றிவாகை சூடிவிட்டதாக அறிக்கைகள் விடுகின்றனர்.

ஆம், அனைத்திற்கும் வாஷிங் மிஷினாக விளங்கும் பாஜக கும்பல் வலையில் கச்சிதமாக சிக்கிக் கொண்டது பொறுக்கி நடிகர் விஜய் கும்பல். ‘எங்களின் கொள்கை எதிரி பாஜக!’ என்று விஜய் இனி முழங்குவாரா?

சிவகங்கை மடப்புரம் அஜித்குமார் காவலர்களால் கொலை செய்யப்பட்ட போது தமிழ்நாடு அரசு வழக்கை சிபிஐ -யிடம் ஒப்படைத்த தருணத்தில் ‘சிபிஐ என்பது பாஜக-வின் கைப்பாவை இயந்திரம்; சிபிஐ-ஐ பாஜக தான் ஆட்டுவிக்கிறது; ஸ்டாலின் அங்கிள், அங்கே போய் ஏன் ஒளிந்து கொள்கிறீர்கள்? அன்பார்ந்த மக்களே, பாஜக-விற்கும் திமுக-விற்கும் இடையிலான கள்ள உறவு வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது; நன்கு புரிந்து கொள்ளுங்கள்; சிபிஐ என்றாலே ஊறுகாயை ஊறப்போடுவது போல, ஐந்து வருடங்கள் ஆறு வருடங்கள் என இழுத்து அடிப்பதற்குத் தான்…’ என்றெல்லாம் வீர வசனம் பேசிய விஜய், ஆதவ் அர்ஜூன் கள்ளத்தனமாக அப்பாவி மக்களை பயன்படுத்தி கையொப்பம் வாங்கி சிபிஐ விசாரணை கோருவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இதற்குத்தான் அருண் ராஜ் ஐஆர்எஸ்-க்கு கட்சியில் பதவி கொடுத்து ‘உருப்படியான பணிகளை’ச் செய்ய நியமித்தீர்களா?

41 பேர் செத்து கிடக்கையில், கிட்டத்தட்ட 100 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடிய சூழலில் துண்டைக் காணோம்; துணியைக் காணோம்… என்று தலைவர்களும் தொண்டர்களும் ஓடி மறைந்தது அவமானமாக உங்களுக்கு தெரியவில்லையா? இரங்கல் தெரிவித்து அறிக்கை விட எண்ணம் வந்ததா? தமது கூட்டத்திற்கு வருகை தந்த அப்பாவி மக்கள் இப்படி செத்து ஒழிந்து விட்டார்களே என்பதற்காக அவர்களுக்காக உங்கள் கட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டனவா?

செய்வதையெல்லாம் செய்துவிட்டு, 72 மணி நேரம் கடந்து, ஈனக் குரலில் சத்தம் வெளிவராத வகையில் துக்கத்தை காண்பிப்பது போன்ற நடிப்பில், ‘சி.எம். சார், பழிவாங்க விரும்பினால் என்னைப் பழி வாங்கிக் கொள்ளுங்கள்; என் தொண்டர்களை பழி வாங்கி விடாதீர்கள்…’

என கூறுவதற்கு உங்களுக்கு சற்றும் வெட்கமாகத் தெரியவில்லையா? இதற்கு எடப்பாடி, நயினார் நாகேந்திரன் & கோ… காவடி தூக்குவது அவர்களுக்கு கேவலமாகப்படவில்லையா?

படிக்க:

 கடவுள் விஜய்-யும், வெறியூட்டப்பட்ட பக்தர்களும்!

 திரை நாயகன் விஜய் கட்சி தொடங்கியது முதல் 41 உயிர்கள் காவு கொடுத்தது வரை!

எனவே, அப்பாவி ஏழை எளிய மக்களின் வாரிசுகளான சினிமா மோகத்தில் மூழ்கிக் கிடக்கும் விஜய் ரசிகர்களே, ஏமாந்தது போதும்; விஜய்க்கு இம்மியளவும் மக்களுக்கான அரசியல் என்பது தெரியாது; தெரியவே தெரியாது! இன்னும் சொல்லப்போனால் உங்களை பாழும் கிணற்றில் தள்ளாமல் விடமாட்டார். அவர் அரசியலில் அவதரித்திருப்பது என்பது பாசிச பாஜகவிற்கு உதவி புரிவதற்காகவும், தான் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமே என்பதனை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, இப்போதே விழித்துக் கொள்ளுங்கள்; அந்த கழிசடை சாக்கடை சேற்றில் இருந்து வெளியேறுங்கள் என்பதே எமது அன்பான வேண்டுகோள்.

சரியான உழைக்கும் மக்களுக்கு விடியலை தேடி தரும் அமைப்பு புரட்சிகர இயக்கங்களாக மட்டுமே இருக்க முடியும் என்பதை உணர்ந்து அணிசேர முன் வாருங்கள்.

தமிழ்நாடு அரசின் தொடை நடுங்கித்தனம்!

செப்டம்பர் 27 இல் கரூரில் அப்படிப்பட்ட கோரச் சம்பவம் நடந்திருக்கின்ற பொழுது விஜய், ஆதவ் அர்ஜுன், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், அருண் ராஜ், மதியழகன், பவுன்ராஜ் அனைவருமே தப்பிக்க விடப்படாமல் அனைவரையும் முதல் தகவல் அறிக்கை கொண்டு வந்து கைது செய்து சிறையில் தள்ளி இருக்க வேண்டும். இப்பொழுது தமிழ்நாடு அரசாங்கம் தலை குனிந்து நிற்பது போல அப்படிப்பட்ட நிகழ்வு ஒன்றும் குடி முழுகிப்போய் இருக்காது.

இவ்வகைகளில் தமிழ்நாடு அரசு குறிப்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின், கட்சி சார்ந்த சட்டத்துறை வழக்கறிஞர்கள், காவல்துறை அனைவரும் ஒட்டுமொத்தமாக கோட்டை விட்டு விட்டார்கள்.

மாறாக, 28-09-2025-ல் ஊடகவியலாளர்களிடம் கரூரில் முதல்வர் பேட்டி அளிக்கும் பொழுது, ‘எந்த ஒரு அரசியல் தலைவரும் தமது தொண்டர்கள் சாவினை விரும்ப மாட்டார்கள்’ என்று விஜய்க்கு நற்சான்றிதழ் கொடுத்தது கொடுமையிலும் கொடுமை.

குறிப்பிட்ட இடத்திற்கு விஜய் 7 மணி நேரம் தாமதமாக வருவது மட்டுமல்ல; வாகனத்திற்குள் இருந்து கொண்டு லைட்டை அனைத்து அனைத்துப் போடுகிறார்; மக்கள் முண்டியடித்துக் கொண்டு கைகளை நீட்டிக்கொண்டு வாகனத்தை நெருங்கின்ற பொழுது விரல்களை வாயில் அரைகுறையாக மூடிக் கொண்டு புன்முறுவல் பூக்கின்றார் விஜய். இதற்கு அர்த்தம் என்ன? அத்தருணத்தில் எல்லாம், மக்கள் மயக்கமாகி கீழே விழுந்து கொண்டிருக்கிறார்கள். நெரிசலில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சேடிஸ்டை எங்கும் காண முடியாது. விஜய் ஒவ்வொரு கூட்டத்திற்கும் காலதாமதமாக வருவதற்கு காரணமே மக்கள் இப்படி முட்டி மோத வேண்டும்; நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டும் என்பது அவரது கெத்தை பிற அரசியல் இயக்கங்களுக்குக் காண்பிப்பதற்கே என்பது புரிய வேண்டும்.

படிக்க:

 கிரிமினல் விஜய்: தமிழக அரசியலில் முளைத்துள்ள புதிய விசச் செடி!

 கரூர் மரண ஓலங்களும் – உச்சநீதிமன்ற ஒரு தலைபட்ச தீர்ப்பும்

எனவே விஜய்க்கு மு.க. ஸ்டாலின் நற்சான்றிதழ் கொடுத்து கொண்டிருக்கக் கூடிய வேளையில், அவர்கள் தமிழ்நாடு அரசை நோக்கி, செந்தில் பாலாஜியை நோக்கி ‘சதி செய்கிறார்கள்; வேறு எங்குமே இப்படிப்பட்ட நிகழ்வு நடந்திராத பொழுது கரூரில் மட்டும் ஏன் இப்படி?’ என்று உங்களை நோக்கி கேள்வி கேட்கிறார்கள். அவை அனைத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் அளித்திருக்கிறது என்பதே பேருண்மை.

உழைக்கும் மக்களைப் பொருத்தமட்டில், இந்த பாராளுமன்ற சட்டமன்ற அமைப்புகளின் மூலம் நாட்டின் உழைக்கும் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் ஏதும் தீரப் போவதில்லை; விலைவாசி உயர்வோ, வேலையில்லா திண்டாட்டமோ தீர்க்கப்படப்போவதில்லை; பணக்காரர்களும், கொள்ளையர்களும், ஊழல் பேர்வழிகளும், பாலியல் குற்றவாளிகளும் புழுத்து நாறும் அரசியல் அரங்கங்களாக மாறிவிட்டன இச்சமூக அமைப்பில் உள்ள முதலாளித்துவ அரசியல் இயக்கங்களின் நடவடிக்கைகள்.

அதிலும் குறிப்பாக 2014இல் பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து கார்ப்பரேட்- காவிப் பாசிசம் தலை விரித்து ஆடுகிறது. அனைத்துத் துறைகளும் அதிகார வர்க்க கூட்டமும் ஏறத்தாழ காவிமயமாகிவிட்டன. ஒரு தலித் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் சூழலில் ஒரு கேடுகெட்ட பார்ப்பன வழக்கறிஞன் ஷூ-வைத் தூக்கி வீசி இருக்கிறான். தலைமை நீதிபதி பி ஆர் கவாய் அதைப் பெருந்தன்மையாகக் கடந்து சென்று விட்டாலும், ஒரு பிரதமர், உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் என்ன செய்திருக்க வேண்டும்? உடனடியாக அந்த அயோக்கியனை கைது செய்து சிறையில் தள்ளி இருக்க வேண்டாமா? தலைமை நீதிபதியாக ஹவாய் இடத்தில் ஒரு சீனிவாசச்சாரி என்ற பார்ப்பனன் இருந்திருந்தால் அவன் மீது இப்படியே ஷூ வீசப்படுமாகில் இந்த ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் வாளாதிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா?

எனவே, மேற்கண்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் தோற்றுத் துவண்டு வீழ்ந்து விட்டது. சொல்லிக் கொள்ளப்படும் பாராளுமன்ற சட்டமன்றத் தேர்தல் என்பது அவற்றில் அரசியல் கட்சிகள் வெல்வது என்பது அதிலும் குறிப்பாக பாஜக மற்றும் அதன் கூட்டணி வெல்வது என்பது தேர்தல் திருட்டுக்கள் மூலமே என்பது உறுதியாகிய பின் இந்த கேடுகெட்ட சமூக அமைப்பை தலைகீழாக புரட்டிப் போடும் வகையிலான கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவதற்காக ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் அணி திரள்வதன் மூலமும், வீதிகளில் இறங்கி தீரமிக்க போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலமே சகலவற்றிற்குமான நிரந்தரத் தீர்வை எட்ட முடியும் என்பதே நிதர்சனம்.

  • எழில்மாறன்

1 COMMENT

  1. விஜய் ரசிகர் கூட்டம் படிப்பினை எடுக்க வேண்டும் என்ற கட்டுரை தா.வெ.க. கட்சியின் நிர்வாகிகளின் பொய் பிம்பத்தை தோலுரித்து காட்டுகிறது அதேபோல் திமுக அரசு அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்துக் கொண்டு கையாளாகாத அரசாக இருப்பதை அம்பலப்படுத்தி உள்ளது இதில் பாசிச பாஜகவின் பங்கு என்ன என்பதையும் அதனுடைய சதி திட்டத்தையும் அம்பலப்படுத்தும் விதத்தில் இந்த கட்டுரை உள்ளது அதே போல் ரசிகர்களை எச்சரிக்கை செய்யும் வகையிலும் கட்டுரை எழுதப்பட்டுள்ளது ஆசிரியர் தோழர் இளமாறன் அவர்களுக்கு நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here