குறைந்த வேலை நேரத்துக்காக நடத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் தொழிற்துறை ஒரு அமைப்பாக வளர்ந்த பொழுது இப்போராட்டம் வெளிப்பட்டது.

இந்நாட்டில் (அமெரிக்காவில்) ஆரம்ப நாட்களில் பல வேலை நிறுத்தங்கள் நிகழ்ந்தன. ‘அதிக ஊதியம் வேண்டும்’ என்பதுதான் இந்த வேலைநிறுத்தங்களில் முக்கிய கோரிக்கையாக எழுப்பப்பட்டது. இருந்த போதிலும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வகுத்த போதெல்லாம் குறைந்த வேலை நேரம், சங்கம் சேரும் உரிமை போன்ற பிரச்சினைகளை முன்வைத்தனர். தொழிலாளர்கள் வெகுவாக சுரண்டப்பட்ட காலகட்டம் அது. நீண்ட வேலை நேரங்கள் அவர்களை மேலும் துன்பப்படுத்தின. எனவே வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்பது கோரிக்கையாக எழுப்பப்பட்டது.

‘அதிகாலை முதல் அந்திசாயும் வரை’ என்பதுதான் அப்போதெல்லாம் வேலைநாள். இதனால் ஏற்பட்ட மனக்குமுறல்களை அமெரிக்கத் தொழிலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வெளிக்காட்டினர். பதினாறு, பதினேழு ஏன் பதினெட்டு மணிநேர வேலை என்பதெல்லாம் அப்போது சாதாரண விஷயங்கள், 1806-ம் ஆண்டு பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களின் தலைவர்கள் மீது சதி வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது தொழிலாளர்கள் பத்தொன்பது, இருபது மணி நேரங்கள் வேலை வாங்கப்பட்டார்கள் என்ற விஷயம் வெளியே வந்தது.

 

1820 மற்றும் 30-களில் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று பற்பல வேலைநிறுத்தங்கள் நிகழ்ந்தன. பத்து மணி நேர வேலைநாள் என்ற கோரிக்கை பல தொழில் மையங்களில் முன் வைக்கப்பட்டது. பிலடெல்பியா நகர இயந்திரத் தொழிலாளர்களின் சங்கம்தான் உலகின் முதற் தொழிற்சங்கமாக கருதப்படுகிறது. இந்த தொழிற்சங்கம் உருவான இரு ஆண்டுகளுக்குப் பின்புதான் இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் உருவாகத் துவங்கின. பத்து மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை முதன் முதலாக வைத்த பெருமை இச்சங்கத்துக்கே உண்டு. 1827-ல் பிலடெல்பியாவில் கட்டிடங்கட்டும் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தில்தான் இந்தக் கோரிக்கை பிரதானமாக வைக்கப்பட்டது. 1834-ல் நியுயார்க்கில் ரொட்டி தொழிலாளர்கள் எகிப்திய அடிமைகளைக் காட்டிலும் அதிகம் துன்புற்றனர். நாளொன்றுக்கு அவர்கள் பதினெட்டிலிருந்து இருபது மணி நேரம் வேலை செய்ய வேண்டி வந்தது என்ற செய்தியை அப்போது வெளியான ‘தொழிலாளருக்காக வாதிடுபவன்’ (Workingmen’s Advocate) என்ற பத்திரிகை வெளியிட்டது. பத்துமணி நேர வேலை நாளுக்கான இப்போராட்டங்கள் விரைவிலேயே ஒரு இயக்கமாக உருவெடுத்தன். 1837-ல் ஏற்பட்ட நெருக்கடி ஒரு தடையாக இருந்தபோதிலும் வேன் பியுரன் தலைமையிலான அரசாங்கம், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பத்து மணி நேர வேலைநாள் அறிவித்தது. எல்லோருக்கும் பத்து மணி நேர வேலை நாள் என்பதற்காக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. பல தொழிற்சாலைகளில் இக்கோரிக்கை வெற்றியடைய, உடனேயே தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை நாள் என்ற கோஷத்தை எழுப்பினர்.

தொழிற்சங்க இயக்கத்தின் அதிவேக வளர்ச்சியால் 1850-களில் இக்கோரிக்கை புதிய உத்வேகத்தை அடைந்தது. 1857-ல் ஏற்பட்ட நெருக்கடி இந்த உத்வேகத்திற்கு ஒரு தடையானது. இருந்தபோதிலும் நன்கு வளர்ச்சி பெற்ற தொழிற்சங்கங்கள் அதற்கு முன்பே இக்கோரிக்கையை அடைந்தன. இவ்வாறு குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட எல்லா வளரும் நாடுகளிலும் இப்போராட்டங்கள் நிகழ்ந்தன. உதாரணமாக வெகு தூரத்தில் இருந்த ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் ‘8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு’ என்ற கோரிக்கையை முன் வைத்து 1858-ல் அதை அடைவதில் வெற்றியும் பெற்றனர்.

எட்டு மணி நேர இயக்கம் அமெரிக்காவில் துவங்கியது.

1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின் போது வெடித்த போராட்டங்கள்தான் மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாய் அமைந்தன. ஆனாலும் இதற்கு ஒரு தலைமுறை முன்பே ‘தேசிய தொழிற்சங்கம்’ குறைந்த வேலை நேரத்துக்கான கோரிக்கையை முன்வைத்து பரந்த இயக்கத்தையே நடத்தியது. ‘தேசிய தொழிற் சங்கம்’ அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க ஸ்தாபனமாக அப்போது விளங்கியது.

ஹாங்காங்கில் மே தின ஊர்வலம் நடத்திய இந்தோனேசியா புலம்பெயர் தொழிலாளிகள்

1861-62-ல் உள்நாட்டுப் போர் துவங்கியது. இதற்கு சற்று முன்பே துவங்கப்பட்ட வார்ப்பட அச்சு தொழிலாளர் சங்கம், இயந்திர தொழிலாளர்கள் சங்கம், கொல்லர்கள் சங்கம் போன்ற தேசிய தொழிற்சங்கங்கள் அப்போது மறையத் துவங்கின. ஆனபோதிலும் அதற்கடுத்த சில ஆண்டுகளில் பல உள்ளூர் தேசிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியமும் எழுச்சியும் உருவானது. இவ்வாறு பல தொழிற்சங்க பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து 1866, ஆகஸ்டு 20-ஆம் நாள் பால்டிமோர் என்னுமிடத்தில் தேசிய தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள். இதன் தலைவராக வில்லியம் எச. சில்விஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மாற்றியமைக்கப்பட்ட வார்ப்பட அச்சு தொழிலாளர் சங்கத்தின் தலைவராவார். தொழிற்சங்க இயக்கத்தில் முக்கியமானவராய் கருதப்பட்ட இவர் ஒரு இளைஞர். இவர் லண்டனில் இருந்த முதலாவது இனடர் நேஷனல் தலைவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார். இதன் காரணமாக தேசிய தொழிற்சங்கத்துக்கும் இன்டர்நேஷனலின் பொதுக்குழுவுக்கும் இடையே உறவை ஏற்படுத்த அவரால் முடிந்தது.

 

தேசிய தொழிற்சங்கத்தின் முதல் மாநாடு 1866-ல் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“அமெரிக்கா முழுமைக்கும் 8 மணி நேர வேலைநாள் என்பதை சட்டமாக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே முதலாளித்துவ அடிமைத்தனத்திலிருந்து இந்நாட்டின் உழைப்பை விடுவிக்க முடியும். இந்த மாபெரும் பலனையடைய நாம் நம்முடைய சக்தி அனைத்தையும் ஒன்று திரட்ட தீர்மானிக்கிறோம்”.

மேலும் இம்மாநாட்டில் 8 மணி நேர வேலை நாளை சட்டபூர்வமாக்க சுயேச்சையான அரசியல் நடவடிக்கை வேண்டும் மற்றும் தொழிலாளர் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. தேசிய தொழிற்சங்க போராட்டங்களினால் எட்டு மணி நேர குழுக்கள் ஏற்பட்டன. மேலும் இச்சங்கத்தின் அரசியல் நடவடிக்கைகளினால் பல மாநில அரசுகள் அரசு வேலைகளில் எட்டு மணி நேர வேலை நாளை அமுல்படுத்தின. 1868-ல் அமெரிக்க காங்கிரசும் இதே போன்ற ஒரு சட்டத்தை இயற்றியது. போஸ்டனைச் சேர்ந்த இயந்திர தொழிலாளியான ‘ஐராஸ் டூவர்டு’ என்பவர்தான் இந்த எட்டு மணி நேர இயக்கத்தின் எழுச்சியூட்டும் தலைவராக விளங்கினார். ஆரம்பத்தில் தொழிலாளர் இயக்கத்தின் கொள்கைகள், திட்டங்கள் பழமையானதாக இருந்தன. இவை எல்லா நேரங்களிலும் சரியாக இருந்தன என்றும் சொல்ல முடியாது. ஆனாலும் அடிப்படியில் இந்த இயக்கம் பாட்டாளி வர்க்கத்தின் வலுவான அடிப்படைகளைக் கொண்டிருந்தது. மேலும் திருத்தல்வாத தலைவர்கள், முதலாளித்துவ அரசியல்வாதிகள் இந்த இயக்கத்தில் ஊடுருவாமல் இருந்திருப்பார்களேயானால் இந்த இயக்கம் போர்க்குணமிக்க தொழிலாளர் இயக்கத்தின் ஆரம்ப கட்டமாக இருந்திருக்கும். இவ்வாறு நான்கு தலைமுறைகளுக்குப் பின் தேசிய தோழிற்சங்கமானது முதலாளித்துவ அடிமைத்தனத்திற்கெதிராகவும் சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்காகவும் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டது.

சில்விஸ் தொடர்ந்து லண்டனிலுள்ள இன்டர்நேஷனலோடு தொடர்பு கொண்டிருந்தார். இவரைத் தலைவராகக் கொண்ட 1867-ல் நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாடு சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தோடு ஒத்துழைக்க வேண்டும் என முடிவு செய்தது. 1869-ல் இன்டர்நேஷனலின் பொதுக்குழுவின் அழைப்பிற்கிணங்க பேஸிலில் நடைபெற்ற இண்டர்நேஷனல் காங்கிரசுக்கு ஒரு பிரதிநிதியை அனுப்ப முடிவு செயதது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாநாட்டிற்குச் சற்று முன்பு சில்விஸ் மரணமடைந்தார். எனவே சிக்காகோவிலிருந்து வெளிவந்த ‘வொர்க்கிங்மென்ஸ் அட்வகேட்’ பத்திரிகையின் ஆசிரியரான ஏ.சி.காமெரான் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார்.

மாநாட்டில் பொதுக்குழு அந்த நம்பிக்கையூட்டும் இளம் அமெரிக்க தொழிலாளர் தலைவனுக்கு ஒரு விஷேச தீர்மானத்தில் அஞ்சலி செலுத்தியது. ”பாட்டாளி வர்க்க ராணுவத்தின் தளபதியாக பத்தாண்டு காலம் மாபெரும் திறமையோடு பணியாற்றிய சில்விஸ், எல்லோருடைய கவனமும் திரும்பும் வகையில் செயல்பட்டவர். ஆம் அந்த சில்விஸ்தான் இறந்து விட்டான்” என்றது அஞ்சலி தீர்மானம். சில்விஸின் மறைவு தேசிய தொழிற்சங்கத்தின் அழிவுக்கு ஒரு காரணமாகி பின்னால் அது மறையவும் காரணமாயிற்று.

எட்டு மணி நேர இயக்கம் குறித்து மார்க்ஸ்

1866-ம் ஆண்டு எட்டு மணி நேர வேலை நாள் என்ற முடிவை தேசிய தொழிற்சங்கம் எடுத்தது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் கூடிய இன்டர்நேஷனலின் காங்கிரசும் இதே கோரிக்கையைப் பின்வருமாறு முழங்கியது.

”வேலை நாளுக்கு சட்டபூர்வமான அளவு முதலாவது தேவையாகும். இது இல்லாமல் தொழிலாளி வர்க்க முன்னேற்றம் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் முழுமையாக இருக்காது…. வேலை நாளுக்கான சட்டபூர்வ அளவு எட்டு மணி நேரமாக இருக்க வேண்டும் என்று இம்மாநாடு முன் மொழிகிறது.”  தேசிய தொழிற்சங்கத்தின் இந்த எட்டுமணி நேர இயக்கத்தைக் குறித்து மார்க்ஸ் 1867-ல் வெளியான மூலதனம் புத்தகத்தில் ‘வேலை நாள் குறித்து’ எனும் தலைப்பின் கீழ் குறிப்பிடுகிறார். கறுப்பு மற்றும் வெள்ளை தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையைப் பற்றிய அந்த புகழ்பெற்ற பத்தியில் பின்வருமாறு எழுதுகிறார். ”அமெரிக்க ஐக்கிய குடியரசின் ஒரு பகுதியை அடிமைத்தனம் பிடித்திருக்கும் வரையில் எந்த விதமான சுயேச்சையான தொழிலாளர் இயக்கமும் முடக்கப்பட்டே இருந்தது. தொழிலாளர்களில் ஒரு பகுதி கறுப்பு இனத்தவர் என்று முத்திரையிடப்பட்டிருக்கும் வரையில் வெள்ளைத் தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே விடுதலை தேடிக் கொள்ள முடியாது. ஆனால் அடிமைத்தனத்தின் அழிவிலிருந்துதான் புதிய உத்வேகமுள்ள வாழ்க்கை பிறந்தது. உள்நாட்டுப் போரின் முதல் பலனே 8 மணி நேர வேலை நாளுக்கான போராட்டமாகும். இது ஒரு இயக்கமாக அதிவேகத்துடன் அட்லாண்டிக் முதல் பசிபிக் வரையிலும், நியூ இங்கிலாந்து முதல் கலிபோர்னியா வரையிலும் பரவியது.”

இருவார வித்தியாசத்தில் நடைபெற்ற பால்டிமோர் தொழிலாளர் மாநாடும், ஜெனிவா இன்டர்நேஷ்னல் காங்கிரசும் ஒரே சமயத்தில் எட்டு மணி நேர வேலை நாளை முன் மொழிந்தன என்பதை மார்க்ஸ் சுட்டிக் காட்டுகிறார். இவ்வாறு அட்லாண்டிக்கின் இருபுறமும் உற்பத்தி முறை நிலைமையால் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இயல்பாக ஏற்பட்ட வளர்ச்சி ஒரே விதமான இயக்கத்தை அதாவது எட்டு மணி நேர வேலை நாளுக்கான இயக்கத்தை உருவாக்கியது.

ஜெனிவா காங்கிரஸ் முடிவு எவ்வாறு அமெரிக்க முடிவோடு ஒத்துப் போகிறது என்பதை தீர்மானத்தின் பின்வரும் பகுதி காட்டுகிறது. ”வட அமெரிக்க ஐக்கிய நாட்டு தொழிலாளர்களின் பொதுவான கோரிக்கையாக இந்த அளவு இருப்பதால், இந்த காங்கிரஸ் இந்தக் கோரிக்கையை உலகத்தின் அனைத்து தொழிலாளர்களுக்குமான பொது மேடையில் முன் வைக்கிறது.”

அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தின் இந்த செல்வாக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு இதே போன்ற காரணங்களுக்காக இன்னும் வேகமாக சர்வதேச காங்கிரசில் செலுத்தப்பட்டது.

நாளை…

அமெரிக்காவில் மே தினம் பிறந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here