மிழ்நாடு சட்டசபைக்கான தேர்தல் களத்தில் தேர்தலில் போட்டியிடும் கட்சியின் பிரச்சாரங்களில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஆளும் திமுக கூட்டணி கட்சியினர் திமுக அரசின் கடந்த ஐந்தாண்டு கால சாதனைகள் இனிவரும் நாட்களிலும் தொடர்ந்திட வேண்டியும், அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை பாசிச பாஜக கபளீகரம் செய்திடும் என்ற எச்சரிக்கை விடுத்தும் மக்களிடையே பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். மேலும் மகளிர் உரிமைத் தொகையை ரூ. 2000 ஆக உயர்த்துவது, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகையை ரூ. 1500 ஆக உயர்த்துவது, வீட்டு உபயோகப் பொருள் வாங்குவதற்காக 8000 ரூபாய் கூப்பன் கொடுப்பது போன்ற வாக்குறுதிகளை கூறியும் திமுக கூட்டணி கட்சியினர் மக்களிடையே வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

அதேசமயம், அதிமுக கூட்டணி கட்சியினாரோ தமிழ்நாட்டில் நடப்பது கருணாநிதியின் குடும்ப ஆட்சி, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, கஞ்சா – போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தங்கள் அணிக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குளிர்சாதனப்பெட்டி மற்றும் பத்தாயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியையும் கொடுத்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அதிமுக கூட்டணியின் பிரச்சாரம் மற்றும் அவர்களின் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதை உணர்ந்து கொண்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சார பாணியை அதிரடியாக மாற்றிவிட்டார்.

“கடைசி காலத்தில் கலைஞரை வீட்டுச் சிறையில் ஸ்டாலின் அடைத்து வைத்திருந்தார்” என்று ஒரு அப்பட்டமான பொய்யை மக்களிடையே கூறி ஸ்டாலின் மீதும் திமுகவின் மீதும் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்திட எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்கிறார். இவரது அயோக்கியத்தனமான பொய் பிரச்சாரம் பொதுவெளியில் பரவலான கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

எடப்பாடியின் தலைவரான “மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா” (ஜெயலலிதா) அவர்களின் பிரச்சார முறையை அப்படியே காப்பி அடித்துத்தான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இப்பொழுது இப்படி ஒரு பொய்ப் பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார்.

எம்ஜிஆர் இறந்த பொழுது தானும் அவருடன் உடன்கட்டை ஏறப் போவதாக அறிவித்து, பின்னர் உடன்கட்டை ஏறாமல் விட்டுவிட்ட ஜெயலலிதாவின் பாணியைத்தான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தற்பொழுது கையில் எடுத்திருக்கிறார். அதைப்பற்றி இப்பொழுது பார்ப்போம்.

எம்ஜிஆர் இறந்த பிறகு எம்ஜிஆரின் மனைவி ஜானகி அணி மற்றும் ஜெயலலிதா அணி என்று இரு அணிகளாக அதிமுக பிளவுப்பட்டு போனது. அப்பொழுது நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜானகியை வீழ்த்தி, தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக  “எம்ஜிஆருக்கு மோரில் விஷம் வைத்து ஜானகி கொன்றுவிட்டார்” என்று ஒரு பொய் பிரச்சாரத்தை செய்து அதிமுகவின் தொண்டர்கள் மத்தியில் ஜானகிக்கு எதிரான மனோ நிலையை உருவாக்கி ஜானகியை விட அதிக அளவு வெற்றிகளை ஜெயலலிதா பெற்றார். இதைத் தொடர்ந்து ஜானகி அரசியலில் இருந்தே விலகிக் கொண்டார். அதிமுக முழுவதும் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

படிக்க:

 ஊடகவியலாளர் நிரஞ்சன் குமாரை மிரட்டும் அதிமுக! கண்டன அறிக்கை

 அதிமுக: அடிமைகளின் அக்கப்போர்!!

அந்த சட்டசபை தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக சட்டசபைக்குச் சென்ற ஜெயலலிதா சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும் பொழுது முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் கையில் இருந்த பட்ஜெட்டை பிடுங்கி கிழித்து எரிந்து ரகளை செய்துவிட்டு, தனது முடியை தானே விரித்துப் போட்டுக் கொண்டு தலைவிரிக் கோலமாக சட்டசபைக்கு வெளியில் வந்து பத்திரிக்கையாளர்களிடம் “திமுகவினர் என்னை தாக்கினர்; திமுக அமைச்சர் துரைமுருகன் எனது சேலையை பிடித்து இழுத்தார்” என்று ஒரு அயோக்கியத்தனமான பொய்யை கூறினார். அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதை அப்பொழுது சட்டமன்றத்திற்குள் இருந்த பத்திரிகையாளர்கள் வெளி உலகத்திற்கு கூறினர்.

அந்தக் காலத்தில் அதிமுகவில் முக்கிய புள்ளியாக இருந்த திருநாவுக்கரசரின் திட்டமிடல் படிதான் ஜெயலலிதா செயல்பட்டுக் கொண்டிருந்தார். தலைவிரி கோலமாக வந்து பத்திரிக்கையாளர்களிடம் இப்படிப்பட்ட ஒரு பொய்யை சொல்ல வேண்டும் என்று ஜெயலலிதாவிற்கு கூறி அதை நடைமுறைப்படுத்திய திருநாவுக்கரசர் அவர்களும் பின்னாளில் ‘இது ஒரு பொய் அது எங்களால் வடிவமைக்கப்பட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம்’ என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் பொய் இத்துடன் நிற்கவில்லை. பிறகு வந்த காலத்தில், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த பொழுது தமிழகத்திற்கு ஆளுநராக இருந்தவர் சென்னா ரெட்டி அவர்கள். அப்போதைய முதலமைச்சரான ஜெயலலிதா “என்னை தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி கையைப் பிடித்து இழுத்தார்” என்று ஒரு அப்பட்டமான பொய்யை பத்திரிகையாளர்களிடம் கூறினார்.  ஜெயலலிதா கூறியவை அனைத்தும் பொய்கள் என்று எப்படி முடிவுக்கு வர முடிகிறது?

எம்ஜிஆர் விசம் வைத்துக் கொல்லப்பட்டார் என்பதற்கு சாட்சி யார்? என்று கேட்டால் பதில் இல்லை. துரைமுருகன் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தார் என்பதற்கு சாட்சி யார்? அப்பொழுது சட்டசபையில் இருந்த பத்திரிக்கையாளர்கள் எல்லாம் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறியுள்ளனரே இதற்கு என்ன பதில் என்று கேட்டால் உருப்படியான பதில் இல்லை. கவர்னர் கையைப் பிடித்து இழுத்தார் என்பதற்கு என்ன சாட்சி இருக்கிறது? என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை.

ஜெயலலிதா ஏராளமான பொய்களை சொல்லி உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு பத்திரப்பதிவின் போது போடப்பட்ட தனது கையெழுத்தை தனது கையெழுத்தே இல்லை என்று நீதிமன்றத்தில் ஜெயலலிதா கூறினார். ஆனால் அது அவரது கையெழுத்து தான் என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு ஜெயலலிதா மூக்குடைபட்டு நின்றதை இந்த உலகமே பார்த்து கைகொட்டிச் சிரித்தது – சபித்தது. ஆனால், அதிமுக அடிமைகளின் சிந்தனை ஓட்டம் எப்படி இருக்கிறது?

படிக்க:

 தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணி ஆட்சி! பார்ப்பனக் கும்பலும், கருப்பு பார்ப்பனக் கும்பலும் போடும் வெறிக் கூச்சல்!

 அதிமுக என்ற கொள்ளை கூட்டத்திற்கு முடிவு கட்டும் நாள் எந்நாளோ?

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவியே சொல்லிவிட்ட பிறகு வேறு சாட்சி வேண்டுமோ? அதாவது தெய்வமே கூறிவிட்ட பிறகு அதை உண்மை என்று நம்ப வேண்டியது தான் அனைவரின் கடமை என்பதுதான் அதிமுக அடிமைகளின் நிலைப்பாடு.

அதே போன்று தான் அப்போதைய புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வழியில் இப்பொழுது புரட்சித் தமிழரான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறுவதையும் உண்மை என்று அப்படியே நம்பிக் கொள்ள வேண்டியதுதான் அனைவரின் கடமை என்று எடப்பாடி நினைக்கிறார்.

கலைஞரின் கடைசி காலத்தில் அதாவது அவர் இறக்கும் ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட பலர் சென்று அவரை சந்தித்து விட்டு வந்துள்ளனர் என்பதற்கு அதாவது கலைஞர் வீட்டுத் சிறையில் வைக்கப்படவில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

அதேசமயம் ஜெயலலிதாவின் இறுதிக்காலம் எப்படி இருந்தது? அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த 75 நாட்களில் பிரதமரோ ஆளுநர் கூட சென்று ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை. ஜெயலலிதாவின் இறப்பு என்பது சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தது என்பதை அனைவரும் அறிவர்.

ஜெயலலிதா கண் திறந்து பார்த்தார்… பழரசம் குடித்தார் என்றும் சட்டினி தொட்டு இட்டிலி சாப்பிட்டார்…. என்றும் (அந்த இரண்டு இட்டிலிக்கு கோடி ரூபாய் செலவு என்பது வேறு கதை) பல்வேறு பொய்களை  பொதுவெளியில் உலாவவிட்டவர்கள் தான் அதிமுக – வினர். அப்படிப்பட்ட அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இப்பொழுது கருணாநிதியை ஸ்டாலின் வீட்டுச் சிறையில் வைத்திருந்தார் என்று ஒரு பொய்யை கூறி இருக்கிறார்.

அதிமுக என்ற ஒரு பெரிய கட்சியை தனது சுயநலத்திற்காக உடைத்து அந்தக் கட்சியை பாஜகவிடம் அடகு வைத்து விட்டார் என்றும், அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் அது பாஜகவின் ஆட்சியாகத்தான் இருக்கும். அதன் மூலம் தமிழகத்தின் எதிர்காலமே பாழ்பட்டு விடும் என்றும் திமுக கூட்டணி கட்சிகள் கூறிவரும் குற்றச்சாட்டுகள் மக்களிடம் பெரும் தாக்கத்தை செலுத்துகின்றன.

இந்த நிலையில் மக்களின் கவனத்தை திசை திருப்பி மக்களை ஏமாற்றி எப்படியேனும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி இனிவரும் நாட்களிலும் இதுபோன்ற அப்பட்டமான பொய்களை அவிழ்த்து விடுவார் என்று எதிர்பார்க்கலாம். இதைத் தவிர அவருக்கு வேறு என்ன வழி இருக்கிறது?

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here