தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணி ஆட்சி! பார்ப்பனக் கும்பலும், கருப்பு பார்ப்பனக் கும்பலும் போடும் வெறிக் கூச்சல்!

தேர்தல் அரசியலில் தோற்கடிப்பது மட்டுமல்ல ஆர்எஸ்எஸ் பாஜகவின் அரசியல் அடித்தளத்தை முற்றாக வீழ்த்துவதற்கு பொருத்தமான மாற்றுத் திட்டத்தை முன்வைத்து மக்களிடையே தொடர்ந்து பிரச்சாரத்தை முன்னெடுப்போம்.

தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணி ஆட்சி! பார்ப்பனக் கும்பலும், கருப்பு பார்ப்பனக் கும்பலும் போடும் வெறிக் கூச்சல்!
இனவெறி மற்றும் மதவெறி கும்பலான ஆர்.எஸ்.எஸ் பாஜகவை முறியடிப்பதற்கு மக்களை தயார்படுத்துவோம்.

“2024 ஆம் ஆண்டு பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்றார். ஒடிசா, ஹரியானாவிலும் வென்றோம். மகாராஷ்டிராவிலும் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 2025-இல் டெல்லி கெஜ்ரிவால் ஆட்சி முடிவுக்கு வந்தது. கடந்த 27 ஆண்டுக்குப் பிறகு அங்கு பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. டெல்லியைப் போல 2026-இல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி கண்டிப்பாக மலரும்” என மதுரையில் நடந்த பாஜகவின் பொதுக்குழுவில் திருவாளர் அமித் ஷா பேசியுள்ளார்.

மிஸ்டர் கிளீன் ஆட்சி என்றும், நேர்மையான ஆட்சியை நடத்துவார்கள் என்றும் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரால் உயர்த்திப் பிடிக்கப்பட்ட பாசிச மோடி கும்பல் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் தன்னை ஆதரித்தவர்கள் முகத்தில் கரியை பூசியது.

நாட்டின் பெரும்பான்மை மக்களான, பட்டியலின மக்கள், பழங்குடி மக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மீது வெறுப்பு அரசியலையும், ஆதிக்க சாதியினர் பக்கம் நின்று ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சாதிய அடக்குமுறையையும், பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களின் மீது தேசிய இன ஒடுக்கு முறையையும், ராணுவ பயங்கரவாத ஆட்சியையும் ஏவி வருகிறது.

பாலியல் குற்றவாளிகள் முதல் நடுரோட்டில் நிற்க வைத்து சூலத்தால் சொருகி கொலை செய்த படுகொலை குற்றவாளிகள், சிலிண்டரை திறந்து விட்டு நெருப்பை கொளுத்தி போட்டு கொலை செய்த கொலைகாரர்கள் வரை கடைந்தெடுத்த கிரிமினல் குற்றக் கும்பலின் கூடாரமாக விளங்குகின்ற பாசிச பாஜக தமிழகத்தின் ஆட்சியைப் பிடிப்பதற்கு துடித்துக் கொண்டுள்ளது. இதற்கு அமித்ஷா பார்முலாவை கடைப்பிடிக்க தயாராகியுள்ளது.

மாநிலங்களில் நிலவுகின்ற பாஜகவிற்கு எதிரான ஆட்சியை கவிழ்ப்பதற்கு அந்தக் கட்சியில் உள்ளவர்களை பிளவுபடுத்தி தன் பக்கம் இழுப்பது அல்லது அந்த மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள சாதியினரை தன் பக்கம் இழுப்பதற்கு பல்வேறு சலுகைகள் கொடுப்பது அல்லது தனக்கு பணியாத கட்சியினர் மீது அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை மூலம் ரெய்டுகள் நடத்தி பணிய வைப்பது போன்ற வழிமுறைகளை கையாள்வதற்கு ஆர் எஸ் எஸ் முன்வைக்கும் அரசியல் சர்ஜிகல் ஸ்ட்ரைக் பெயர்தான் ‘அமித்ஷா பார்முலா’.

அமித் ஷாவின் கிரிமினல் குற்றப் பின்னணி!

நரேந்திர மோடியின் வலதுகரம் என்றழைக்கப்படுகின்ற குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும், தற்போதைய இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சருமான திருவாளர் அமித் ஷா குஜராத்தில் அமைச்சராக இருந்தபோது ஷோரப்தீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர், மோடிக்காக இளம் பெண் வேவுபார்க்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர் என பல கிரிமினல் குற்ற செயல்களில் ஈடுபட்டு பாசிச பாஜகவின் அதிகாரத்தினால் வெளிவந்த ‘உத்தமர்’.

அமித்ஷாவின் சொத்து மதிப்பு 2014 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் தேர்வுக்கு அவர் முன்வைத்த சொத்து பட்டியல் கணக்குப்படி அதற்கு முன்பிருந்த ஐந்தாண்டுகளில் முன்னூறு சதவீதம் அதிகரித்துள்ள விவரம், அவர் மாநிலங்களவை வேட்பாளராக மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து வெளியானது. அதன் பிறகான இந்த பத்தாண்டுகளில் அவரது சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா எந்த தகுதியும் இல்லாமல் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமித்ஷா பார்முலா என்றால் என்ன?

“அமித் ஷாவை உத்தரப்பிரதேசத்தில் போய்த் தங்குமாறு குஜராத் முதல்வரான மோடி உத்தரவிட்டார். அதோடு, உத்தரப்பிரதேசத் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். சாதி அரசியல் ஆதிக்கம் உள்ள உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்கள், தலித்துகள் வாக்குகளைக் கவர வேண்டும் என்பதே அமித் ஷாவுக்கு மோடி கொடுத்த பணி.

கடந்த ஓராண்டு காலமாக அங்கு தங்கி, கிராமங்கள்தோறும் சென்று பா.ஜ.க. தொண்டர்களை உசுப்பிவிட்டார். உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிட வேண்டும் என்று ஆலோசனை வழங்கி, அதைச் செய்தும் காட்டினர் அமித் ஷா.

மோடி போட்டியின் மூலம் உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாசம் அடைந்ததோடு புலிப் பாய்ச்சல் பிரச்சாரத்தில் ஈடுபட இந்த உத்தி அமித் ஷாவுக்கு உதவியது.

அயோத்தி பிரச்சினையைத் தூசுதட்டி, ராமர் படத்துடன் கூடிய பிரச்சாரத்தையும் இந்தத் தேர்தலில் அமித் ஷா முன்னெடுத்தார். இடையே முசாபர்நகர் கலவரத்துக்குப் பழிவாங்க வேண்டும் என்று வெறுப்பு அரசியலை பா.ஜ.க-வினர் மத்தியில் அமித் ஷா தூண்டிவிட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், அவை வாக்குகளைப் பெறவும் உதவியது. குறிப்பாக, சமாஜ்வாடி ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சிகளின் வாக்குகளைக் கவர வேண்டும் என்றால் எவ்வளவு கஷ்டம்? அதைத் திறம்படச் செய்து களப்பணியாற்றிய வகையில் அமித் ஷாவுக்கு இப்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது.” என்று அமித்ஷா அரசியலுக்கு அறிமுகமான காலத்தில் தமிழ் இந்து அவரைப்பற்றி எழுதியது.

அயோத்தியில் ராமர் படத்தை வைத்து வெறுப்பு அரசியல் உருவாக்கி அதன் மூலம் நீண்ட காலம் உத்தரப்பிரதேசத்தை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிந்த அனுபவம் முதல் சமீபத்தில் டெல்லியில் நீண்ட காலமாக ஆட்சி புரிந்து வந்த ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை தூக்கி எறிந்தது வரையிலான நீண்ட ‘அரசியல் அனுபவம்’ கொண்டவரான திருவாளர் அமித்ஷா தமிழகத்திலும் தனது கலவரபாணி அரசியலைத் துவங்கியுள்ளார். இதையே அமித்ஷா பார்முலா என்கிறோம்.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பாஜகவின் நிழல் அதிகாரத்தில் உள்ள பார்ப்பனர்களான குருமூர்த்தி, எச் ராஜா முதல் கருப்பு பார்ப்பனர்களான அண்ணாமலை, நைனார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் இந்து முன்னணி கிரிமினல்களான காடேஸ்வரா சுப்ரமணியம், கருப்பு முருகானந்தம் வரை மிகப்பெரிய கிரிமினல் குற்றக் கும்பல்கள் அமித்ஷா உத்தரவுக்கு ஏற்ப கலவரத்தை நடத்துவதற்கும் வெறியாட்டம் போடுவதற்கும் தயாராகி உள்ளனர்.

இது மட்டுமின்றி கவுண்டர்கள் ஓட்டு வங்கியை பெறுவதற்கு அடிமை பழனிச்சாமி, வன்னியர்கள் ஓட்டு வங்கியை பெறுவதற்கு பச்சோந்தி ராமதாஸ், முக்குலத்தோர் ஓட்டுகளை பெறுவதற்கு நைனார் நாகேந்திரன், முத்தரையர்கள் ஓட்டுக்களை பெறுவதற்கு செல்வகுமார், தலித்துகளில் ஒரு பிரிவினரான பள்ளர்களின் ஓட்டை பெறுவதற்கு ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி இன்ன பிற சாதி சங்கத் தலைவர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதில் அமித்ஷா பார்முலா பாசிச ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பலுக்கு உதவியாக உள்ளது.

தமிழகத்தில் அயோத்தி ராமர் கோவில் பாணியில் கலவரத்தை துவங்குவதற்கு இந்து முன்னணி ஜூன் 22-ல் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறது. “மாநாட்டில் லட்சக்கணக்கானோர் ஒன்றிணைந்து கந்த சஷ்டி கவசம் படிக்க இருக்கிறார்கள்”. என்று இந்து முன்னணி தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியம் கொக்கரிக்கின்றார்.

தற்போது மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்பதில் துவங்கி 2026 ஆட்சியில் சட்டமன்றத்தை பிடிக்க போவதாக அறிவித்துள்ள அமித்ஷா மோடி கும்பலுக்கு எதிராகவும், அதன் ஆட்சியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதற்கு அடிமைத்தனமாக வேலை செய்வதற்கு தயாராகியுள்ள அதிமுக முதல் பல்வேறு கட்சிகள் வரையிலான கூட்டணி தயாராகியுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கு எச்சரிக்கை விடுத்துள்ள சூழலிலும் பிரதான எதிரியாக பாசிச பாஜகவை முன்னிறுத்தி புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவதற்கு பதிலாக தனது எதிர்ப்பையும் பிரச்சாரத்தையும் காங்கிரஸ், திமுக, பாஜக அனைவரையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கின்ற வகையில் அணுகுவது தமிழகத்தை கருப்பு அத்தியாயத்தின் கீழ் கொண்டு விட்டு விடும் என்பதை மட்டும் எச்சரிக்கையாக முன் வைக்கின்றோம்.

படிக்க:

🔰 உருவாகின்றது அனைத்திந்திய அமித் ஷா திமுக!

🔰 அயோத்திக்கு ராமன்! மதுரைக்கு முருகன்! மீண்டும் எரியூட்டப்படும் அபாயத்தில் மதுரை!

தேர்தல் அரசியலில் பாசிச பாஜகவை தோற்கடிப்பது என்பது அதன் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கையான கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதாக பொருளாகாது என்பதெல்லாம் அரசியலைப் பற்றிய அரிச்சுவடி அறிந்த பாமரனுக்கும் புரிந்த உண்மை.

எனவே, தேர்தல் அரசியலில் தோற்கடிப்பது மட்டுமல்ல ஆர்எஸ்எஸ் பாஜகவின் அரசியல் அடித்தளத்தை முற்றாக வீழ்த்துவதற்கு பொருத்தமான மாற்றுத் திட்டத்தை முன்வைத்து மக்களிடையே தொடர்ந்து பிரச்சாரத்தை முன்னெடுப்போம்.

பாசிசத்தை வீழ்த்துவதற்கு வெறும் பிரச்சாரம் மட்டும் போதாது. மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகின்ற அரசியல், பொருளாதார பண்பாட்டு மாற்று ஒன்றையும் முன் வைக்க வேண்டும் என்பதை ஜனநாயகக் கூட்டரசு என்பதன் மூலமாக கொண்டு செல்வோம்.

“குறிப்பிட்ட தருணத்தில் எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்பதை சரியாக தீர்மானிப்பது தான் புரட்சியை முன்னெடுத்து செல்வதில் முக்கியமான பங்காற்றுகிறது” என்று சீனாவின் அனுபவத்திலிருந்து தோழர் மாவோ முன்வைத்த அரசியல் போராட்ட அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டு முன்னேறுவோம்.

அத்தகைய மகத்தானதொரு புரட்சிக்கு தயாரிப்பு கட்டத்தில் ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் கொடூரமான, பயங்கரவாத, கட்டுப்பாடற்ற, இனவெறி மற்றும் மதவெறி கும்பலான ஆர்.எஸ்.எஸ் பாஜகவை முறியடிப்பதற்கு மக்களை தயார்படுத்துவோம்.

கூட்டணி ஆட்சி என்ற பெயரில் பாசிச கும்பல் தமிழகத்தில் ஊடுருவுவதை வரவேற்று முன்னிலையில் இருக்கும் பார்ப்பன கும்பலுக்கும், கருப்பு பார்ப்பன கும்பலுக்கும் தக்க பதிலடி கொடுப்போம்.

மருது பாண்டியன்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here