டந்த புதன் கிழமை பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்திய ஆயத்த ஆடை தொழிலாளர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வங்கதேச பெண் தொழிலாளி கொல்லப்பட்டார். இந்த போராட்டத்தில் இதுவரை 4 பேர் காவல்துறையால் கொல்லப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 30 ஆம் தேதி தொடங்கிய ஆயத்த ஆடை தொழிலாளர்களின் போராட்டம் இன்று வரை சமரசமில்லாமல் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் பங்களாதேஷின் ஏற்றுமதியில் 55 பில்லியன் டாலர் அதாவது 85 சதவீதம் கொண்டுள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத்தில் ஆயத்தஆடை நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் கிட்டத்தட்ட 40 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இந்த தொழிலாளர்கள் தான் அந்நாட்டின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கிறார்கள்.

கடந்த 2019 டிசம்பர் மாதம் இதேபோல் அரசு உயர்த்தி வழங்கிய அடிப்படை ஊதிய உயர்வு போதாது எனக் கண்டித்து போராட்டம் நடத்தியதில் 1 பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்று வழங்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் 8300 டாக்கா தான் இன்று வரை தொடர்கிறது. 8300 டாக்கா என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 6318 ரூபாய்.

இவ்வளவு சொற்ப சம்பளத்தை வைத்து எப்படி குடும்பத்தை நடத்த முடியும். அதனாலேயே தொழிலாளர்கள் போராட்டக்களத்தில் குதித்துள்ளார்கள். சரியான ஊதிய உயர்வை வலியுறுத்தி கடந்த மாதம் இறுதியில் போராட்டத்தை தொடங்கினார்கள்.குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க அரசாங்கம் நியமித்த குழு கடந்த வியாழன்று இத்துறையின் ஊதியத்தை 56.25 சதவீதம் உயர்த்தி 12,500 டாக்காவாக அறிவித்தது. ஆனால் இந்த ஊதிய உயர்வை ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் ஏற்கவில்லை. மாறாக 23,000 டாக்கா(இந்திய மதிப்பில் 17,500 ரூபாய்) குறைந்த பட்ச ஊதியத்தை கோரியுள்ளனர்.

தொழிலாளர்களின் இந்த ஊதிய உயர்வு கோரிக்கை நியாயமானதே!

கடந்த 5 வருடங்களாக இவர்களுக்கு ஊதிய உயர்வை அறிவிக்கவில்லை. குறைந்தபட்ச ஊதியமும் நிர்ணயிக்கவில்லை. அதனால் இந்தமுறை தொழிலாளர்கள் ஏமாற தயாராயில்லை.

உலகின் மிக விலை உயர்ந்த பிராண்டுகளான லெவிஸ், ஜாரா மற்றும் எச்&என் உள்ளிட்ட உலகின் பல சிறந்த பிராண்டுகளை பங்களாதேஷ் ஆயத்த ஆடை நிறுவனங்கள் தயாரிக்கிறது.

பங்களாதேஷை ஸ்தம்பிக்க வைத்த தொழிலாளர்களின் இடைவிடாத போராட்டம்

கடந்த வியாழக்கிழமை ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் 15,000 தொழிலாளர்கள் கூடினர். அங்கு நடந்த போராட்டத்தில் போலீசுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து பெரிய ஆலையான துசுகாவை சூறையாடினர். இந்த தாக்குதல் தொடர்பாக 11,000 தொழிலாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தலைநகர் டாக்காவில் முக்கிய தொழில் நகரங்களான அசுலியா மற்றும் காசிபூரில் மட்டும் 150 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் கர்நாடகா கார்மெண்ட் தொழிலாளர்கள்!

அசுலியாவில் பங்களாதேஷின் மிகப்பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. அடுக்குமாடி ஆலைகளில் 15,000 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.

அசுலியாவில் 10,000 தொழிலாளர்கள் செங்கல் மற்றும் கற்களால் தொழிற்சாலையின் மீதும் அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தியதால் போலீசார் ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கினர்.

நாட்டின் மிகப்பெரிய தொழிற்மண்டலமான காசிப்பூரில் 20 தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது.

கடந்த 2 வாரங்களாக நடைப்பெற்று வரும் குறைந்தபட்ச ஊதிய உயர்வுக்கான போராட்டம் கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு நடந்து வருகிறது.

தொழிலாளர்களுக்கு அற்ப கூலி

பங்களாதேஷில் 4000 ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் உள்ளன. இதில் வேலைப் பார்க்கும் 40 லட்சம் தொழிலாளர்களின் நிலைமையும் மோசமாக உள்ளது. இதுநாள் வரை இவர்கள் கொடுக்கும் அற்ப கூலியைக் கொண்டு தான் குடும்பத்தை பராமரித்து வந்தார்கள்.

அன்றாடம் உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அவர்களின் ஊதியம் இல்லை. ஆயத்த ஆடை நிறுவனங்களில் வேலை செய்யும் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தையே நிறுவனங்கள் கொடுக்கிறது.

மிரட்டும் அரசதிகாரம்

கடந்த வாரம் நவம்பர் 9 ஆம் தேதி ஆளும் அவாமி லீக் கட்சியின் கூட்டத்தில் பேசிய பங்களாதேஷ் பிரதமர் ஹசீனா “நான் ஆயத்த ஆடை தொழிலாளர்களிடம் கூறுவேன்; அவர்களின் சம்பளம் எந்த அளவுக்கு அதிகரிக்கப்படுகிறதோ, அதைக் கொண்டு அவர்கள் பணியைத் தொடர வேண்டும். ஒருவரின்(தொழிற்சங்கம்) தூண்டுதலின் பேரில் அவர்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினால், அவர்கள் வேலையை இழந்து, தங்கள் கிராமத்திற்கே திரும்ப வேண்டியிருக்கும்” என்றார்.

பங்களாதேஷ் பிரதமர் ஹசீனா

இது வழமையான, முதலாளிகளுக்கு ஆதரவாக எல்லா நாட்டு அரசுகளும் விடுக்கும் மறைமுக மிரட்டல் தான். இதையே தொழிலாளர்கள் “நாங்கள் உழைப்பதனால் தான், நீங்கள் எங்களை சுரண்டுவதால் தான் முதலாளிகள் செழிக்க முடிகிறது. நீங்கள் பிரதமர் நாற்காலியில் அமர்ந்து சொகுசாக வாழ முடிகிறது.” என சொல்ல ஆரம்பித்தால் முதலாளிகளும் அவர்களது ஜால்ராக்களும் தடம் தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள்.

ஹசீனா விடுத்த மிரட்டலை கண்டுக்கொள்ளாத தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறது.

ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் சட்டங்களின் பிரிவு 13/1 பயன்படுத்தி சட்டவிரோத வேலைநிறுத்தங்களை காரணம் காட்டி 130 தொழிற்சாலைகளை மூடிவிட்டனர்.

தொடர் போராட்டம் ஏன்?

தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதற்கான அடிப்படை காரணம்; விலைவாசி உயர்வும், அவர்களின் குழந்தைக்கான உணவு, வாடகை, சுகாதாரம் மற்றும் பள்ளி கட்டணங்கள் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு ஏற்ப ஊதிய உயர்வு பொருந்தவில்லை என்பதே. இதனால் தான் ஊதிய உயர்வுக்கான அரசுக் குழுவின் முடிவை தொழிலாளர்கள் நிராகரித்தனர்.

பங்களாதேஷில் தயாரிக்கப்படும் ஆயத்த ஆடைகள் வாங்குவதில் அமெரிக்காவே முதன்மை நாடாக உள்ளது. உலகம் முழுக்க பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிக லாபம் கொழிக்கும் தொழிலாகவும் இருந்து வருகிறது. ஆனால் இதற்காக உழைக்கும் தொழிலாளர்களை கொத்தடிமை போல் நடத்துகின்றன நிறுவனங்கள்.

அரசும் காவல்துறையும் போராட்ட அமைப்பாளர்களை கைது செய்து மிரட்டி வருவதாகவும், தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறைந்தபட்சம் 6 தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெதர்லாந்தை தளமாகக் கொண்ட கிளீன் கிளாத் கேம்ப்பைன் ஜவுளித் தொழிலாளர்களின் உரிமைக் குழுவும் புதிய ஊதிய அளவை ‘வறுமை ஊதியம்’ என்று நிராகரித்துள்ளது.

ஆம் தொழிலாளர்கள் கேட்கும் குறைந்த பட்ச ஊதியமும் அவர்கள் வழங்கும் ஊதியமும் இந்திய மதிப்பில் கணக்கிட்டு பாருங்கள் உண்மை புரியும்.

அரசு குழு உயர்த்திய ஊதியம் இந்திய மதிப்பில் வெறும் 9516 ரூபாய் தான்.

தொழிலாளர்கள் கேட்கும் குறைந்த பட்ச ஊதியம் 17500 ரூபாய். இது ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு அடிப்படையான ஊதியம். ஆனால் முதலாளிகளுக்கு கிடைக்கும் லாபத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் இதுவும் அற்ப ஊதியமே!

தொடர்ந்து போராடும் பங்களாதேஷ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்.

பங்களாதேஷ் தொழிலாளர்களிடம் பாடம் கற்போம்!

நமது நாட்டிலும் தொழிலாளர்கள் ஒட்ட சுரண்டப்படுகிறார்கள். சொற்ப எண்ணிக்கையில் நிரந்தர தொழிலாளர்களை வைத்துக் கொண்டு 80 சதவீதம் ஒப்பந்த, பயிற்சி தொழிலாளர்களை வைத்துக் கொண்டு ஆலைகளை நடத்துகிறது நிறுவனங்கள். இதில் வேலை செய்யும் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு 10,000 தான் கூலியாக வழங்கப்படுகிறது.

பங்களாதேஷுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்தியாவில் விலைவாசி அதிகம். முதலாளித்துவ நுகர்வு வெறியால் செலவும் அதிகம். ஆனால் தொழிலாளர்கள் போராட்டக் களத்திற்கு வர மறுக்கிறார்கள். தான் சுரண்டப்படுகிறோம் என்பது தெரியாமலேயே அது இயல்பானது என்பது போல் கடந்து விடுகிறார்கள்.

இந்தியாவில் இன்று நிரந்தர தொழிலாளர்களை விட எண்ணிக்கையில் அதிகமாக இருப்பவர்கள் இவர்கள் தான். இவர்கள் ஒன்றிணைந்தால் அனைத்தையும் மாற்றி விடலாம். பங்களாதேஷ் தொழிலாளர்கள் களத்தில் நமக்கு முன்னுதாரணமாய் நிற்கிறார்கள். அவர்களிடமிருந்து பாடம் கற்போம். தொழிலாளர் வர்க்கத்தை தட்டியெழுப்புவோம்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here