பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளோடும் ஆதார் இணைக்கப்படுவது எதற்காக?
சமீபத்தில் ஒன்றிய அரசானது, பொதுமக்கள் யாரும் ஆதார் அட்டையின் நகலை யாருக்கும் கொடுக்க வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக மாஸ்க் ஆதார் எனும் கடைசி 4 இலக்கம் தெரியும் அட்டையின் நகலை பயன்படுத்தவும் அறிவுறுத்தியது. ஏற்கனவே ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் கசிவதாக நிறைய புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதை முட்டுக் கொடுத்து வந்த அரசே, யாருக்கும் நகலை கொடுக்க வேண்டாம் என அறிவித்தது மக்களிடம் பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை கிளப்பியவுடன், அடுத்த சில மணி நேரத்திலேயே அந்த அறிவிப்பை திரும்பப் பெற்று முன்புபோலவே ஆதாரை பயன்படுத்தலாம் என அரசு அறிவித்துள்ளது.
அறிமுகமானது முதலே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துவரும் ஆதார் அட்டையானது கடந்து வந்த பாதையை சற்றே திரும்பிப் பார்ப்போம்.
ஆதார் அட்டை வழங்கும். பணிகளுக்காக UIDAI எனும் நிறுவனத்தை, Infosys – ஐ சேர்ந்த நந்தன் நிலகேணியை தலைவராகக் கொண்டு 2009 – ல் தொடங்கியது அன்றைய காங்கிரஸ் அரசு. 2010 ல் ஆதார் சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் முன்பே 6 கோடி பேருக்கு ஆதார் வழங்கப்பட்டுவிட்டது. ஆக ஆதாரின் பிறப்பே கள்ளத்தனமானதுதான். உலகிலேயே அதிஉயர்ந்த, மிகப் பெரிய ஜனநாயக நாடாக பீற்றிக் கொள்ளப்படும் இந்தியாவில், நாட்டை ஆள்பவர்களே சட்டத்தை மதிக்காமல், தாங்கள் உயர்வாகக் கருதும் (?) பாராளுமன்றத்தையும் துச்சமென மதித்துதான் நடந்து கொள்கிறார்கள்.
தனிநபர்களின் மிகவும் அந்தரங்கமான கைரேகை மற்றும் கண் கருவிழிப் படலத்தை சேகரிப்பது என்ற மிகமுக்கிய தனிமனித உரிமை மீறல் மற்றும் பாதுகாப்பு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடிய இந்த ஆதார் சட்டத்தை, நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமல் எப்படி அமலாக்க முடிந்தது? அதுவும் ஒரு தனியார் முதலாளியை தலைவராகக் கொண்ட நிறுவனத்திடம் எப்படி ஒப்படைக்க முடிந்தது? எனவேதான் இதற்கெதிராக முற்போக்காளர்கள் மற்றும் ஜனநாயகவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது மக்களைக் கண்காணிப்பதற்காக எடுக்கப்படுகிறது என எச்சரிக்கையும் செய்தனர்.
2011- ல் சமையல் எரிவாயு இணைப்பு பெறவும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறவும், பத்திரப்பதிவுக்கும் ஆதார் அட்டை அவசியம் என அடுத்த கட்டமாக அரசு அறிவித்தது. இப்படி ஆதார் என்பது அனைத்து சேவைகளுக்கும் கட்டாயம் என்ற நிலையை நோக்கி சென்றதால், இதற்கெதிராக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் (PRPC) சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் இரு நபர்களும் வழக்கு தொடுத்தனர். நூறு கோடிக்கு மேல் மக்கள்தொகை கொண்ட நாட்டில், மக்களின் அந்தரங்க உரிமையில் தலையிடும் அரசின் பாசிசப் போக்குக்கு எதிராக வெறும் மூன்றே வழக்குகள்தான் என்பது மாபெரும் சோகம்தான். இவ்வழக்கில் 2013 ஆம் ஆண்டு, ஆதாரை கட்டாயப் படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இருந்த போதிலும் அதை மதிக்காத அரசு, பல சேவைகளுக்கும் ஆதாரை கட்டாயமாக்கிக் கொண்டுதான் உள்ளது. மேலும் ஆதாரை வங்கிக் கணக்கோடும், குடும்ப அட்டையோடும், பான் (PAN) எண்ணுடனும் இணைப்பது கட்டாயம் எனவும் கட்டளையிட்டு நிறைவேற்றி வருகிறது.
இந்த நிலையில்தான், சமீபத்தில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, இந்தியாவில் வசிப்பவர்கள் ஆதாரை தாமாக முன்வந்து (voluntary) வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும் என மத்திய அமைச்சரவையின் ஒப்புதலோடு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது குறித்து சிவில் சமூக அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும், இது வாக்காளர் பட்டியலில் இருந்து குறிப்பிட்ட வாக்காளர்கள் விலக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும், வாக்காளர்களின் தரவுகள் கசியும் என்பதால் இது தனியுரிமையை மீறும் செயல் என்றும் எச்சரிக்கின்றனர்.
இப்போதாவது இதை முறையாக அறிவிக்கின்றனர். ஆனால் பாஜக ஆட்சியில் அமர்ந்த அடுத்த வருடமே ( 2015 – ல்) எந்தவித அறிவிப்புமின்றி தேர்தல் ஆணையம், வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணியை செய்யத் தொடங்கி விட்டது. இது குறித்த அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், பொது விநியோகத் திட்டம், சமையல் எண்ணெய் மற்றும் எரிவாயு ( LPG) தவிர வேறு எதற்காகவும் ஆதாரை பயன்படுத்தக் கூடாது என இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. ஆனால் அதற்குள் ( மூன்றே மாதத்துக்குள்) 30 கோடி பேர்களின் இணைப்பு முடிந்து விட்டது.
இந்த தீர்ப்புக்குப் பின் ஆதார் சட்டத்தை சில மாற்றங்களோடு நாடாளுமன்றத்தில் 2016 ஆம் ஆண்டு பண மசோதாவாக ( Money bill) தாக்கல் செய்தது மோடி அரசு. மக்களவையில் பெரும்பான்மை இருப்பினும், மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாததால் பிஜேபி அரசு இதை பண மசோதாவாக அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான முறையில் கொண்டு வந்தது. பண மசோதா என்பது வரிவிதிப்பு, கடன் கொள்கை போன்ற பொருளாதாரம் சார்ந்த விஷயங்களுக்காக சட்டம் இயற்ற உள்ளது. இருப்பினும் இதில் சபாநாயகரின் முடிவே இறுதியானது என்ற இத்துப்போன விதியைப் பயன்படுத்தி ஆதார் சட்டத்தை பணமசோதாவாக தாக்கல் செய்து, கொல்லைப்புற வழியாக கள்ளத்தனமாக பாஜக அரசு நிறைவேற்றியது. ஆதார் விசயத்தில் காங்கிரஸின் சட்ட மீறலையே விஞ்சும் வகையில் பாஜக மோடி அரசு செயல்பட்டது.
இந்த அயோக்கியத்தனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு ஆதார் சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி அதிர்ச்சியூட்டியது. அதில் ஒரு நீதிபதி மட்டும் பண மசோதாவாக நிறைவேற்றப் பட்டதை ஏற்க முடியாது என தீர்ப்பு எழுதினார். இது சிறுபான்மை என்பதால் செல்லுபடியாகவில்லை. பெரும்பான்மை தீர்ப்பானது, மானியம் மற்றும் அரசின் நலத்திட்ட சேவைகளைப் பெற ஆதார் கட்டாயம் என்ற பிரிவு 7- ஐ உறுதிசெய்தது. பான் கார்டுடன் ஆதார் இணைப்பதை சட்டப்பூர்வமானது எனக் கூறியது. இருப்பினும் ஆதார் அங்கீகார முறையை (Authentication) தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதித்தது. எனினும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பைப் பற்றி தெளிவாக எதுவும் அறிவிக்கவில்லை. இதன் பிறகுதான் வங்கி கணக்கு தொடங்கவும், மொபைல் இணைப்பு பெறவும் ஆதார் அடையாளத்தை தானாக முன்வந்து பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் 2019 – ல் மீண்டும் ஆதார் சட்டத்தை அரசு மாற்றி அமைத்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இப்போது தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் சில முக்கிய சீர்திருத்தங்களை அரசாங்கம் முன்வைக்கிறது. முதன்முறை வாக்காளர் பதிவு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடப்பதை நான்கு முறை என ஆக்கினால் வாக்காளர் பதிவு செய்வது எளிதாகும் என்பதும், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டால் போலியான வாக்கு அட்டைகளை அகற்ற முடியும் என்பதும் இதில் அடங்கும். இது வெளியில் சொல்லும் காரணம். ஆனால் இதன் உண்மையான நோக்கம், தமக்கு யாரெல்லாம் வாக்களிக்க மாட்டார்களோ, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதுதான். இப்படியான தில்லுமுல்லுகளை அரங்கேற்றவே வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கப்படுகிறது.
வரலாற்று ரீதியாகவே இரண்டின் இணைப்பு முயற்சியும் ஊக்கம் அளிக்கும் விதமாக இல்லை என்பதை நடைமுறையில் ஏற்கனவே பார்த்துள்ளோம். இப்போது வழங்கப்பட்டுள்ள அமைச்சரவை ஒப்புதலானது அச்சமூட்டும் விஷயமாக பார்க்கப்படுவதற்கான காரணம், 2015 – ல் நடந்த இணைப்பின் விளைவுகள் 2018 தேர்தலில் எதிரொலித்தன. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 55 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் ஏறத்தாழ 10% ஆகும். எனவே அரசின் இந்த முன்னெடுப்பு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், 2019 – ல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வசிக்கும் 7.8 கோடி மக்களின் ஆதார் தகவல்கள் கசிந்தன. தெலுங்கு தேசம் கட்சிக்காக பணியாற்றிய ஒரு நிறுவனத்திடம் இந்த தரவுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இவை தேர்தல் பிரச்சாரத்திற்கு பெரிதும் பயன்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2015 உச்சநீதிமன்ற தடைக்குப் பின்னும் வாக்காளர் சேர்க்கையின்போது ஆதார் விவரங்களை தேர்தல் ஆணையம் தொடர்ந்து சேகரித்து வந்தது. இந்தியாவில் தரவுப் பாதுகாப்புச் சட்டம் என்பது செயல்பாட்டில் இல்லை என்ற நிலையில் தனிமனிதரின் அந்தரங்கத் தகவல்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?
படிக்க:
♦ கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை இறுக்கும் அரசுகள்!!
♦ சிஸ்டம் சரியில்லை! என் வி ரமணா தலைமை நீதிபதி.
ஆதாரை கட்டாயமாக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அரசாங்கம் அதை தன்னார்வம் எனக் கூறிக்கொண்டே நடைமுறையில் பல சேவைகளுக்கு கட்டாயமாக்கி கொண்டு தான் உள்ளது. (கட்டாயமில்லை , ஆனா கட்டாயம்) 2019 -ல் கொண்டுவரப்பட்ட திருத்தம் தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் விபரங்களை வழங்க விரும்புகிறீர்களா? என்பதை தேர்வு செய்யலாம் எனக் கூறியது. ஆனால் நடைமுறையில் சேவை வழங்கும் தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் ஆதாரை வலியுறுத்தி பெறுகின்றன. அம்பானியின் ஜியோ மொபைல் சிம் கார்டை பெறுவதற்கு ஆதாரை கட்டாயமாக்கியது. கூடவே கைரேகை பதிவையும் பெற்றது. இப்படியாக, தனிநபர் சார்ந்த ரகசியங்கள் அனைத்தும் தனியார் பெருமுதலாளிகளின் கையில் சிக்கினால், அதை வைத்து அவர்கள் கொழுத்த லாபம் ஈட்டவே உதவும்.
ஆதார் தொடர்பான வழக்குகளில் ஆதாரின் அவசியத்தை தெளிவாக முன்வைக்க முடியாததாலும், இது அரசின் கொள்கை முடிவு என அறிவிக்க திராணியின்றியும், ஏற்கனவே இத்தனை கோடி பேருக்கு ஆதாரை வழங்கி விட்டோம் என்றும் அரசின் நலத்திட்டங்கள் சரியான நபர்களுக்கு சென்று சேரவே இது தேவைப்படுகிறது என்றும் அரசு நைச்சியமாக வாதாடியது. ஆனால் அரசின் உண்மையான நோக்கம் அதுவல்ல. வங்கி உள்ளிட்ட அனைத்து சேவைகளுடனும் ஆதாரை இணைத்துவிட்டால், எளிதில் அனைவரது செயல்பாடுகளையும் கண்காணிக்கலாம். அரசுக்கு எதிராக போராடுபவர்களை கண்டறிந்து ஒடுக்கலாம். பெரு முதலாளிகளுக்கு தனிநபர்களின் அந்தரங்கத் தகவல்கள் எனும் பொக்கிஷங்களை வாரி வழங்கலாம். இதற்காகவே அரசு இதில் முனைப்பு காட்டுகிறது.
ஆதார் குறித்தான வழக்கில் நீதிமன்றங்கள் ஒருபுறம் கடுமை காட்டுவது போலவும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும், தடைவிதிப்பது போலவும் பாவ்லா செய்து கொண்டே மறுபுறம் ஆதாரை சட்டப்பூர்வமானது என அங்கீகரித்து இரட்டைவேடம் போடுகிறது. முதலில் ஆதார் அட்டையே அவசியம் இல்லை எனும் போது அதனோடு அனைத்து சேவைகளையும் இணைப்பதன் மூலம் சொந்த நாட்டு மக்களையே கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வருவது, மக்களின் ஜனநாயக உரிமையை நசுக்கும் பாசிச நடவடிக்கையாகும்.
இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் தகவல்( Data)கள்தான் அதிக பணத்தை ஈட்ட போகின்றன.
செயற்கை நுண்ணறிவுதான் ( Artificial Intelligence) உலகில் ஆளுமை செலுத்த போகிறது. அதற்கு தேவையானது மில்லியன் கணக்கான தகவல்கள். அதை வைத்து ஒரு நபர் எங்கு சென்று எதை நுகர்கிறார், எதற்காக எவ்வளவு செலவழிக்கிறார், அவருடைய விருப்பத்தேர்வுகள் என்ன என்பதையெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும். மறுபுறம் அரசுக்கும் அவரை கண்காணிப்பது எளிதாகும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
இதற்காகத்தான் ஆதார் அத்தனை சேவைகளோடும் இணைக்கப்படுகிறது. பொதுமக்களின் தனிப்பட்ட விபரங்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்களிடம் இருப்பது மக்களுக்கு பாதுகாப்பின்மையையும், பெரு நிறுவனங்களுக்கு கொள்ளை இலாபத்தையும் அளிக்கப் போகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளையை, விதிமீறல்களை கண்காணிக்க வேண்டிய அரசு, மாறாக சொந்த நாட்டு குடிமக்களை கண்காணிப்பதன் மூலம், பெயரளவில் உள்ள உரிமைகளையும் பறிக்கிறது. மக்களின் பாதுகாப்பை, ஜனநாயக உரிமைகளை உறுதிசெய்ய வேண்டிய நீதிமன்றங்களும் அரசுக்கு ஆதரவாக இருக்கும்போது, பொதுமக்களுக்கு இந்த பாசிசத்துக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஆக்கம்: குரு