(கருத்து சுதந்திரம், அரசின் தணிக்கை போன்ற விவகாரங்களை ஏகாதிபத்திய முதலாளித்துவ நிறுவனமான ட்விட்டர் தயவில்தான் நாம் விவாதிக்க வேண்டியுள்ளது. நாடுகள், தேசங்கள் போன்றவற்றின் எல்லைகளைக் கடந்து அனைத்திற்கும் மேலாக நிதிமூலதன திமிங்கிலங்கள் உலகை கட்டுப்படுத்தி வருகின்றன என்பதை தான் டுவிட்டர் நிறுவனத்தின் பகிரங்கமான இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம் தன்னை ஒரு மிகப்பெரும் ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்ள ட்விட்டர் நிறுவனம் முயல்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. என்றபோதிலும் ஏகாதிபத்திய நிறுவனங்கள் தங்களுக்குள் கழுத்தறுப்பு சண்டையில் ஈடுபடும் போது அதை பயன்படுத்திக்கொண்டு ஏகாதிபத்திய கட்டமைப்பை அம்பலப்படுத்தும் வாய்ப்பை நாம் முன்கொண்டு செல்ல வேண்டும். அந்தக் கண்ணோட்டத்தில் ட்விட்டரின் இந்த அறிக்கையை வெளியிடுகிறோம்).

பத்திரிக்கையாளர்களின் மற்றும் செய்தி நிறுவனங்களின் பதிவுகளை நீக்கச்சொல்லி  உலக நாடுகளின் அரசுகள் கேட்டுவருவது கடந்த ஆண்டிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருவதாக ட்விட்டர் (Twitter) நிறுவனம் முதல் முறையாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறது.

ட்விட்டரில் இயங்கும் பத்திரிக்கையாளர்களில் 199 பேரின் கட்டுரைகள் மற்றும் செய்தி நிறுவங்களின் செய்திகளையும் சேர்த்து சுமார் 361 பதிவுகளை நீக்குமாறு உலக நாடுகளின் அரசுகள் 2020-ஆம் ஆண்டின் பிற்பாதியில் கேட்டுள்ளதாகவும் இது அந்த ஆண்டின் முதல் பாதியைவிட 26 சதவீதம் அதிகம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை அந்நிறுவனம் வெளியிட்ட ஆவணங்களில் இவ்வாறு கூறப்பட்டிருப்பதாக ராய்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இருந்தாலும் எந்தெந்த பத்திரிக்கையாளர்களின், செய்திநிறுவனங்களின் எந்தெந்த கட்டுரைகள் மற்றும் செய்திகள், எந்தெந்த நாடுகளின் அரசுகள் என்ற குறிப்பான தகவல்களை வெளியிட ட்விட்டர் நிறுவனம் மறுத்துவிட்டது.

ட்விட்டர் நிறுவனம் “கொள்கை விதிகள் அமலாக்கம்” பற்றிய தனது அரையாண்டு அறிக்கையில் இவ்விவரங்களை தெரிவித்துள்ளது. அதுபோக ‘முகநூல்’ (Facebook) மற்றும் ‘யூடுயூப்’ (Youtube) போன்ற நிறுவனங்களும் தங்களது தளத்தில் வெளியாகும் பதிவுகளைப் பற்றி அரசுகளின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த திங்களன்று கியூபா அரசு  தனக்கு எதிராக தற்போது நடந்துவரும் போராட்டம் நாடு முழுவதும் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் முகநூல், டெலிக்ராம் (Telegram) போன்ற தளங்களை முடக்கியுள்ளது. அதேபோல் நைஜீரியா அரசும் ட்விட்டர் தளத்தை நாடுமுழுவதும் முடக்கியதோடு தனது தொலைகாட்சி மற்றும் வானொலி நிலையங்களை இந்தத் தளத்தை தகவல் சேகரிப்புக்காகப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

பதிவுகளைப் பற்றிய தகவல்களைக் கேட்பதில் இந்திய அரசு அமெரிக்காவைப் பின்னுக்குத்தள்ளி 2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முதலிடதிற்கு வந்திருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவிக்கிறது.

உ. பி. யின் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையை பற்றி செய்தி சேகரித்ததற்காக சிறையிலடைக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர் சித்திக் காப்பான்.

சென்ற ஆண்டின் பிற்பாதியில் அதாவது ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் உலக நாடுகளின் அரசுகள் சுமார் 14,500 பதிவுகளை பற்றிய தகவல்களை கேட்டுள்ளதாகவும் அதில் சுமார் 30 சதவீதத் தகவல்களை அரசுகளுடன் பரிமாறிக்கொண்டுள்ளதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவிக்கிறது.

அரசுகள் மற்றும் இதர அமைப்புகளின் வேண்டுகோள்களில் புனைப்பெயரில் (pseudonyms) பதிவிடும் நபர்களை பற்றிய விபரங்களை கேட்பதும் உண்டெனவும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

சட்டபூர்வ கோரிக்கைகளை பொறுத்தவரையில் 2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுமார் 38,500 கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் இது அவ்வாண்டின் முற்பகுதியைவிட 9 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அவற்றில் சுமார் 29 சதவீத கோரிக்கைகளை நிறைவேற்றியதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவிக்கிறது.

ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் திஷா ரவி.

உலகம் முழுவதிலும் பல நாடுகளில் ட்விட்டர் நிறுவனம் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்தியாவில் ஒன்றிய அரசு சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவந்த சட்ட திருத்தம் ட்விட்டர் நிறுவனத்தை குறிவைத்தது. இந்த புதிய சட்ட விதிகளை கடைபிடிக்கும் நோக்கில் சென்ற வாரத்தில் அந்நிறுவனம் புதிதாக முதன்மை கடப்பாடு அதிகாரியை (Chief Compliance Officer) பணியமர்த்தி உள்ளதாகவும் மற்ற செயல் அலுவலர்களையும் பணிக்கு அமர்த்த இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

ட்விட்டர் நிறுவனம் முதல் முறையாக வெளியிட்ட “வெளிப்படைத்தன்மை அறிக்கையில்” அதன் தளத்தில் வெளியான மொத்தப்  பதிவுகளில் அந்நிறுவன விதிகளை மீறும் வகையில் வந்த பதிவுகளின் எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டின் பிற்பாதியில் 0.1 சதவீதம் என தெரிவிக்கிறது.

மற்ற சமூக வலைதளங்களை போலவே, ட்விட்டரும் காவல்துறையினரின் வெறுப்புக்கும், தவறான தகவல்களுக்கும், அதன் சேவைகளை தவறாக பயன்படுத்துவது போன்ற பல பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளது. அதன் செயல் தலைவரான ஜாக் டார்சி (Jack Dorsey) சென்ற மார்ச் மாதத்தில் அமெரிக்க பாராளுமன்றத்தில் ஆஜராகியது கூட நடந்துள்ளது.

இந்த வாரத்தில் முன்னணி சமூக வலைத்தளங்கள் இங்கிலாந்து கால்பந்து அணியில் விளையாடும் கறுப்பினத்தவர்க்கு எதிரான பதிவுகளால் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

(Reuters)

நன்றி: தி வயர் இணைய இதழ்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here