“நான் கடந்த காலத்தில் ஒரு கொலை செய்துள்ளேன்” – இது தண்டனை பெற்ற குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் அல்ல. மாறாக இதுவரை எந்த கொலைக் குற்ற வழக்கும் பதிவு செய்யப்படாத பிரிஜ் பூஷன் எனும் பாஜக எம்.பி கடந்த வருடம் திமிராகக் கொடுத்த வாக்குமூலம்தான் இது. இத்தகையக் கிரிமினல்தான் உ.பி மாநிலத்தில் ஆறாவது முறையாக மக்களவை எம்பி யாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
கடைசியாக நடந்த 2019 தேர்தலில் தனது பிரமாணப் பத்திரத்தில் தன் மீது கொலை முயற்சி உட்பட 4 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக அவரே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இத்தகைய ‘பெருமை’ பெற்ற இவர், 2011 ஆம் ஆண்டு முதல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின்(WFI) தலைவராக நீடித்து வருகிறார்.
மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் செய்வதாக புகார்கள் பல அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால் அவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜனவரி மாதம் போராட்டம் நடத்த தொடங்கினர். சில வீரர்கள் மட்டும் தனக்கு எதிராக காங்கிரசால் தூண்டி விடப்பட்டு போராடுவதாக கூறும் பிரிஜ் பூஷன், இந்தப் போராட்டத்தை குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஷகீன்பாகில் நடந்த தொடர் போராட்டத்தோடு ஒப்பிட்டும் பேசினார். தனக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கவும் தயார் என சவடால் அடிக்கும் இவர், தான் குற்றம் செய்யவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்து விட்டு விசாரணையை எதிர்கொள்வதை விடுத்து, அடம்பிடித்து அப்பதவியில் நீடித்துக் கொண்டே சவால் விடுகிறார்.
இவரது குற்றப் பின்னணி!
1980-களில் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பது தொடங்கி மதுக்கடைகள் நடத்துவது என்பது வரை இவரது தொழில் ‘வளர்ச்சி’ அடைந்தது. உ.பி-யின் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டிட் சிங் இவருக்கு உறுதுணையாக இருந்தார். நண்பர்களாக இருந்த இவர்கள் பிறகு எதிரிகளாக மாறினர்.
1993ல் பண்டிட் சிங்கை நோக்கி பூஷன் சரமாரியாக சுட்டுள்ளார். இதற்காக கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. 29 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கு போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி கடந்த ஆண்டு ஊத்தி மூடப்பட்டது.
பண்டிட் சிங்கின் சகோதரரான ரவீந்தர் சிங்கும் பூஷனின் நெருங்கிய கூட்டாளிதான். இருவரும் இணைந்து பல ஒப்பந்த வேலைகளை எடுத்து செய்துள்ளனர். ஒருமுறை பஞ்சாயத்துக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போது அவர்களை நோக்கி சுட்டதில் ரவீந்தர் சிங்கின் மீது குண்டு பாய்ந்தது. உடனே பிரிஜ் பூஷன் பாய்ந்து சென்று சுட்டவரின் கைகளில் இருந்து துப்பாக்கியை பிடுங்கி அவரையே சுட்டுக்கொன்றார். இந்த சம்பவத்தைதான் ஒரு பேட்டியில் பெருமையாக விவரித்தார். மேலும் இச்சம்பவத்துக்கு அயோத்தி மாவட்டம் பைசாபாத் மக்களவைத் தொகுதியின் பாஜக எம்.பி லல்லு சிங்கே சாட்சி எனவும் கூறியுள்ளார்.
ICYMI brij bhushan singh, honourable mp- i have killed only one man pic.twitter.com/GxmSYM6HDg
— sunetra choudhury (@sunetrac) April 28, 2023
1990களின் மத்தியில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் “தடா”வில் கைதாகி பல மாதங்கள் சிறையில் இருந்தார். பிறகு அதற்கான ஆதாரம் இல்லை எனக் கூறி விடுவிக்கப்பட்டார்.
இவரது அரசியல் பின்னணி!
ராமஜென்ம பூமி விவகாரத்தைக் கிளப்பி ர(த்)த யாத்திரையை அத்வானி தொடங்கிய போது, அயோத்தியின் பிரபலமான நபராக விளங்கிய பிரிஜ் பூஷனை பாஜக அரவணைத்தது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் ஆகியோரோடு முக்கிய குற்றவாளியாக வழக்கில் இவரும் சேர்க்கப் பட்டார்.
1991, 99 மற்றும் 2004 மக்களவைத் தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரிஜ் பூஷன் 2008ல் கட்சி விரோத நடவடிக்கை எனக் காரணம் கூறி பாஜகவில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரை சமாஜ்வாதி கட்சி அரவணைத்து 2009 இல் சமாஜ்வாதியின் சார்பாக வெற்றி பெற வைத்தது. பிரிஜ் பூஷன் மீண்டும் 2014ல் தாய்க்கட்சிக்கே திரும்பினார். 2004 – ல் இவரது தொகுதியான கோண்டாவில் வேறு ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டு தேர்தல் நாளன்று அவர் ஒரு விபத்தில் பலியானார். அப்போது வாஜ்பாய்க்கு பிரிஜ் பூஷன் மீது சந்தேகம் ஏற்பட்டது என்பதை இவரே சொல்கிறார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் கூற்றுப்படி, தன்னை “சக்தி வாய்ந்தவர்” எனக் குறிப்பிடப்படுவதை இவர் விரும்புகிறார். மேலும் பாஜகவுக்கு தான் தேவைப்படுவதை போல தனக்கு பாஜக தேவையில்லை எனவும் நம்புகிறார். உ.பி-யில் தனது சொந்த மாவட்டமான கோண்டாவிலும் அருகில் உள்ள ஆறு மாவட்டங்களிலும் மிகுந்த செல்வாக்குடன் இருக்கும் இவர், அங்கு 50க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
“நான் கல்லூரிகளை அரசியல் உள்நோக்கத்துடன் உருவாக்கவில்லை. மக்கள் என்னை “மாபியா” என்கிறார்கள். ஆனால் எனது மாணவர்கள் என்னை வணங்குகிறார்கள். முன்பு நான் பிராமணர்களின் கால்களை தொட்டேன். இன்று இளம் பிராமண மாணவர்கள் எனது கால்களை தொட்டு குருஜி என வணங்குகிறார்கள்” என்கிறார்.
2004-ல் பிரிஜ் பூஷனின் 22 வயது மகன் சக்தி சிங் தற்கொலை செய்து கொண்டான். அவன் தனது தற்கொலை குறிப்பில், “உங்களால் ஒரு நல்ல தந்தையாக இருக்க முடியவில்லை. என்னையும் எனது சகோதர, சகோதரிகளையும் நீங்கள் கவனிக்கவில்லை. எப்போதும் உங்களைப் பற்றியே நினைத்தீர்கள். எங்களைப் பற்றி கவலைப்படவில்லை. எதிர்காலம் இருளாக இருப்பதால் வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளான்.
பிரிஜ் பூஷன் கொடுங்கோன்மை மனப்பான்மை மற்றும் தன்னையே அதிகம் விரும்பும் ஒரு “நார்சிஸ்ட்” என்று சொன்னால் மிகையில்லை. இது அவரது பேட்டிகளிலும் வெளிப்பட்டு உள்ளது. “அவர்கள் (மல்யுத்த வீரர், வீராங்கனைகள்) வலிமையானவர்கள். அவர்களை கட்டுப்படுத்த என்னைப்போல் ஒரு வலிமையானவர் தேவை” என்று கூறியிருக்கிறார். மல்யுத்த வீரர்களை மேடையிலேயே தாக்கும் அளவுக்கு ஒரு ரவுடியை போல செயல்பட்டதையும் ராஞ்சியில் 2001-ல் பார்த்தோம்.
மல்யுத்த வீராங்கனைகளிடமும் தனது “கை”வரிசையை காட்டத் தொடங்கிய இவருக்கு எதிராக சாக்ஷி மாலிக், வினேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகிய இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்களின் தலைமையில் ஐந்து மாத காலமாக உறுதியான போராட்டமாக தொடர்கிறது. சென்ற மாதம் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை மோடி திறந்து வைத்தபோது, அதை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அமித்ஷாவின் போலிசு அவர்களை கொடூரமாக இழுத்துச் சென்று கைது செய்தது.
இதையும் படியுங்கள்
- மல்யுத்த வீராங்கனைகள் மீதான அடக்குமுறை! பல்லிளிக்கும் ஜனநாயகம்!
- பாலியல் ஜல்சா கட்சிக்கு எதிராக களத்தில் இறங்கிய இந்திய மல்யுத்த வீராங்கனைகள்!
இதனைத் தொடர்ந்து வெகுண்டெழுந்த அவர்கள், தாங்கள் கடினமாக உழைத்துப் பெற்ற கனவுப் பதக்கங்களை கங்கை நதியில் வீசிவிடத் துணிந்து சென்றனர். அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் திகாயத் தலையிட்டு, தான் பொறுப்பேற்பதாக வாக்குறுதி அளித்து அவர்களை தடுத்தார்.
இப்போது மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பிறகு தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளனர். வரும் 15-ம் தேதிக்குள் விசாரணை முடிவடைந்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார். ஆனாலும் “போக்சோ” சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட இவர் இதுவரை ஏன் கைது செய்யப்படவில்லை என்பது மாபெரும் கேள்வியாக உள்ளது. இப்படி ஒரு கேடுகெட்ட கொலைகாரனை காப்பாற்ற காரணம் என்ன, இப்படியான பாலியல் குற்றவாளியை பாசிச பாஜக பாதுகாப்பதன் நோக்கம் என்ன?
உ.பி யின் 7 மாவட்டங்களில் இந்த கிரிமினலுக்கு உள்ள செல்வாக்குதான் காரணமாக இருக்கக் கூடும். வருகின்ற தேர்தலில் ஓட்டுப் பொறுக்க வேண்டுமே. பிரிஜ் பூஷனைப் போன்ற பொறுக்கிகளும், ரவுடிகளும், பாலியல் குற்றவாளிகளும்தான் பாஜக- வின் பலமாக உள்ளனர். சட்டத்தால் இவர்களை தண்டித்து விட முடியாது என்பதைத் தான் நடைமுறை நமக்கு உணர்த்துகிறது. இந்தக் கிரிமினல் தண்டிக்கப்படும் வரை போராட்டம் தொடர வேண்டும். அவர்களுக்குத் துணை நிற்போம்.
தகவல் உதவி : தி ஒயர்.
ஆக்கம்: குரு