நிலக்கரிச் சுரங்கம்;
கருப்பில் தோய்த்த நெல் – கருப்பு நுரையீரல்:
ஒரிசா சுந்தர்கர் பகுதியில் பேரழிவு!
மேற்கு வங்கம் பிர்பூம் வட்டாரத்தில் நாசம்!


விவசாயிகள் கருப்பு நெல்லை விதைக்கிறார்கள்; காசநோயை அறுவடை செய்கிறார்கள்; முழுவதும் நிலக்கரித் தூசு நிரம்பிய ஆகாயம். எல்லா லாபமும் சுரங்க முதலாளிக்கே; ஆனால் தாறுமாறாகிப்போன வேலையில்லாத வட்டார இளைஞர் வாழ்க்கையோ சுக்கான் இல்லாத படகு.

***

ஒரிசாவின் சுந்தர்கர் வட்டாரம் ‘கருப்புப்பூமி’யாகிவிட்டது. இது தமிழகத்தில் நாமறிந்த தெற்குப்பகுதியின் இயற்கை கரிசல் பூமியல்ல, செயற்கையாக முதலாளிகள் கொண்டுவந்த பேரழிவு.

உள்ளூர்வாசிகள் நாள்தோறும் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை அழிப்பதற்காகவே நிலக்கரிச்சுரங்கங்கள் சுற்றிக் கும்மியடிக்கின்றன. காடியா மலைவாசி, பூயான்-கோண்டு பழங்குடிகள் இயற்கையின் நீட்சியாக நிம்மதியாக வாழ்ந்த இடத்தில் செயற்கைச் சூறாவளிகள்.

சுரங்கங்களிலிருந்து கருப்பு நிலக்கரித்தூசு மூட்டம் போட்டுக் கிளம்புகிறது. 45 கிராமங்கள். அதன் வழியாகச் செல்லும் சுமார் 3500 டிரக் வண்டிகள்; திறந்தவெளிச்சுரங்கங்களிலிருந்து அவை ஓயாது வரும்போகும். அந்த வண்டிகளிலிருந்து நிலக்கரித் தூசு ஓயாது கிளம்பிச் சூழ்ந்து பரவிக்கொண்டேயிருக்கிறது.

அருகே சுரங்கத் தொழிலாளர் குடியிருப்புகள். காற்றில் கலந்த தூசு காரணமாக நுரையீரல் நோய்கள், சுகாதார-காற்றோட்டமில்லாத சூழலில் வேலை செய்ததால் உடல் வலியோடு சேர்ந்துகொண்ட நியூமோ-கொனோசிஸ்-சளி, காய்ச்சல் (COPD) நோய். பாதிப்பு இல்லாத ஒரு குடும்பம்கூட இல்லை.

கரித்தூசி மட்டுமல்ல, படிக மண் துகளால் சிலிகோசிஸ் என்ற நோய் முடமாக்கியதால் இளைஞர்கள் முதுமை வராமலேயே சாவு. ரத்தன்பூர், சாட்டாபர், லுவா பகல் போன்ற கிராமங்கள் வட்டாரத்தின் நிரந்தரமான வடுக்கள்.

இங்கெல்லாம் நெல் கருப்பாகவே விளைகிறது, இது கருப்புரக நெல் அல்ல. கருப்பு-ஊதா கலர்களில் வெள்ளை அரிசியை ஊற வைத்தது போல மல்டிகலர்-சாப்பிடுவதா, தூர எறிவதா? இதில் கலந்துள்ள ‘அன்டோ சயனின்’ என்ற சாயப்பொருள் விஷம். இது ஆக்சிஜனைத் தடுக்கிறது. நிச்சயம் கேன்சரைத் தூண்டும் பொருள் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

நெல் விளைந்து வந்தாலும் மில்கள் வாங்கி அரைக்காது. ‘ஆதிவாசி பன்னோக்கு கூட்டுறவு சொஸைட்டியும்’ வாங்காது. நெல்லோடு ஒட்டிப் பிறக்கும் கருப்பு கழுவினாலும் போகாது. ஆப்பிரிக்காவில் எண்ணெய்க் கழிவு கலந்த, விஷம் போல அடர்த்தியான தார் போல் பூசிய மண், தண்ணீரில் மீன் வளர்த்துச் சாப்பிட்டு நோய்வந்து செத்துப்போகும் தாய்மார்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கு ஒரிசாவில் விஷ நெல் – விஷ அரிசி. ஆப்பிரிக்க ஏழைகள் பற்றி ஆட்சியாளர் கவலைப்படுவதில்லை. “இங்கெல்லாம் ஒவ்வொரு குடும்பத்திலும், சுரங்க மண், பாறைச் சரிவில் வேலை இடத்திலேயே செத்துப் போனவர்களைக் கணக்கிட்டால் அதில் பல ஆயிரம் இளைஞர்கள், குழந்தை உழைப்பாளிகள் இருப்பார்கள்.” இங்கே சுந்தர்கர் வட்டார ஆபீசர்களுக்கும் கவலை இல்லை. ஒரு நிவாரணமும் இல்லை.

***

வட்டா நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து 2 கோடி டன்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. சுற்றுச் சூழலைப் பாதுகாக்க ஒன்றிய அமைச்சகம் எத்தனையோ கட்டளை போட்டுள்ளது. “அகலமான இலை கொண்ட பெரிய மரங்களை, 50,000 மரங்களை வழிநெடுக வளர்க்க வேண்டும்” என்பது ஒரு கட்டளை. ஆனால் நடப்படவில்லை. வட்டாரம் முழுக்க தூசு-மாசு அளவு ஆண்டு முழுக்க கணக்கெடுக்கப்பட வேண்டுமென்று சொன்னார்கள் – அது இன்னொரு கட்டளை. எல்லாம் ஏட்டளவில். நடைமுறைக்கு எதுவும் போகவில்லை.

சுரங்க முதலாளிகளும் போக்குவரத்து (டிரக்) முதலாளிகளும் அங்காளி பங்காளிகளாய் அப்படி ஒரு நெருக்கம். நிலம் வாங்கப்படுகிறது, வேலை முடிந்தபிறகு நோயாளிகளான பழங்குடிகள் விரட்டப்படுகிறார்கள். லஞ்சம், ஊழல், ரவுடித்தனம், கொலை, கற்பழிப்பு – அத்தனையும் சேர்ந்து சுற்றுப்புறம் விஷமாக்கப்படுகிறது. கட்டளை போட்டார்களே, அவற்றை யார் கண்காணிப்பார்களாம்? ஆக, கண்காணிப்புமில்லை, தண்டனையும் இல்லை.

ஒரு சின்ன எடுத்துக்காட்டு – ரத்தன்பூர் கிராமத்தில் அண்மையில் 25 ஏக்கர் விளைநிலங்கள் சுரங்கத்துக்காக வாங்கப்பட்டன. சட்டப்படி அது குற்றம். சட்டப்படியே வாங்கினார்கள். காடுகளில் பயிரிட்டுவந்த ஏழை (பழங்குடி) விவசாயிகள் வாயில் மண். அந்த விவசாயிகளுக்குச் சட்டப்படியான பட்டா தரப்படாததால் அவை விளை நிலங்களாகக் காட்டப்படவுமில்லை; சட்டத்தில் ஓட்டை, நிர்வாகத்தில் ஓட்டை. எனவே புதுச்சுரங்கம் முளைப்பதை யாரும் தடுக்கமுடியாது. சுரங்கம் அமைத்தபிறகு, அந்தக் கம்பெனி சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக என்று குறிப்பிட்ட சதவீதம் நிதிகொடுக்கவேண்டும். சுரங்கக் கம்பெனி நிதியும் தருவதில்லை, அதையும் சேர்த்து லாபமாகக் கம்பெனிகள் விழுங்கிவிடுகிறார்கள்.

***

‘சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவோம்’ என்று உலகம் முழுவதும் உரிமைக்காகப் போராடி சில இடங்களில் ஜெயிக்கிறார்கள், பல இடங்களில் வருடக்கணக்கில் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். இதுவே எதார்த்தம். அதை எல்லாம் பார்த்து இந்தியாவிலும் நிலக்கரி மூலம் எரிசக்தி பெறுவதை நீக்கிவிட்டு புதுப்பிக்கும் ஆற்றல் உள்ள சோலார் (சூரிய ஒளி ஆற்றல்) மின் திட்டங்களைக் கொண்டுவா என்று சில அமைப்புகள் போராடுகிறார்கள். ஒன்றிய முந்தைய-இப்போதைய (மோடி) அரசாங்கங்களும் அறிவிப்பு கொடுத்து வேண்டப்பட்ட ஆட்களுக்குச் சலுகை, வங்கிக்கடன் கொடுக்கிறார்கள். ‘இயற்கைத் தெய்வமான – சூரிய பகவான் அருளாசி எப்போதும் நமக்கு உண்டு’ என்று அண்மையில் சத்தியம் செய்து அறிவிப்பு கொடுத்தார் அம்பானி; போட்டிக்கு மோடி ஆதரவோடு களம் இறங்கி உள்ளார் அதானி.

ஆனால் புரியாத புதிர். 70 சதவீத மின்ஆற்றல் – கார்பன் கரி உமிழ்வைத் தடுக்காத –  நிலக்கரியை ஆதாரமாகக் கொண்ட தனியார் உற்பத்தி ஜோராக நடக்கிறது. ஆஸ்திரேலியா போய் அங்கும் கார்மிகோல் கரிச்சுரங்கம் வாங்கி வியாபாரம் ஆரம்பித்தார் அதானி; மோடி முழு ஆதரவு. சோலார் ஆற்றலுக்கும் அதானி – அம்பானி ஜோடிக்கு மோடி முழு ஆதரவு. கார்பன் கரி உமிழ்வைத் தடுத்து நிறுத்தி ‘பசுமை இந்தியா’ உருவாக்கத்திலும் மோடி முழு ஆதரவு. இதுதான் கட்டமைப்பின் செயல்பாட்டு லட்சணம், முரண்பாட்டு லட்சணம்.

சமீபத்தில் வந்த செய்தி – மேற்குவங்க மம்தா, பம்பாயில் அதானியைச் சந்தித்தார்; கரன் அதானி மம்தாவை கல்கத்தாவில் சந்தித்தார். பிர்பூம் மாவட்ட தியூச்சா-பச்சமி-தேவன் கஞ்ச், ஹரின்சிங்கா (DPDH) நிலக்கரி வட்டாரம் ஏலத்துக்குப் போகிறது – அதானி முக்கிய ஏலப்புள்ளி. மேற்குவங்கத்தை வாழவைக்க துறைமுகங்களை வாங்குகிறார் அதே அதானி. இப்படி உள்கட்டுமானங்களை அங்கே குறிவைத்து காய் நகர்த்தியுள்ளது அதானி குடும்பம்.

பிர்பூம் நிலக்கரிச் சுரங்கம் அதானிக்குப் போனால் 10,000 சந்தால் பழங்குடிகள் இயற்கையான வாழ்விடத்திலிருந்து தூக்கி எறியப்படுவார்கள்; மட்டுமல்ல, அங்கே மீதமுள்ள தலித்துகள், சிறுபான்மை மதம் சார்ந்தவர்கள் (மிகவும் பிற்பட்ட மக்கள்) சேர்ந்து 21,000 பேர் வாழ்வு அழிக்கப்படவிருக்கிறது. சுமார் 5000 குடும்பங்களின் குடியிருப்புக்கள் துடைத்து அப்புறப்படுத்தப்படும்.

இதற்கு மாற்றாக, மாநில காவல்துறையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ஜூனியர் கான்ஸ்டபிள் வேலை கொடுக்கப்படுமாம்; இழப்பீடு 50,000 ரூபாய் அளவு நிச்சயம் உண்டாம். தண்ணீரில் எழுதிய அறிவிப்புக்களா என்பது போகப் போகத் தெரியும்.

அம்பானி-அதானி-மோடி கணக்குகள் வேகமாக நாடெங்கும் அழிப்பு வேலையைத் திட்டம்போட்டு நடத்துகின்றன. இப்போதுதான் அதானி மோடிக்கு நெருக்கமாக இருக்கிறாரோ என்று தப்புக் கணக்குப் போடவேண்டாம். 2000த்தில் குஜராத் இன அழிப்பை மோடி நடத்தியபோது ‘இந்திய முதலாளிகளின் விமர்சனங்களின்’ நடுவே மோடிக்கு ஆதரவாக நின்றது அதானிதான். ஒருவருக்கொருவர் அவர்கள் தோஸ்துஜிக்களே! இந்த நட்புகள், இந்த நடப்புகள் பீகார், ஒரிசா, மேற்குவங்கம் என்று ஒவ்வொரு மாநிலமாக அங்குள்ள இயற்கையை, மக்களை அழிக்கிறதே என்பதுதான் நமது விசாரணை.

உலகமெங்கும் கார்பன் உமிழ்வில் பூமி சூடேற்றப்படுவதை சொரணை உள்ள மக்கள் எதிர்க்கிறார்கள்; நிலக்கரிச் சுரங்க வியாபாரத்தில் அதானி-அம்பானி முதலீடு செய்து இதற்கு எதிராக வேலை செய்கிறார்கள்.

இங்கே நாடெங்கும் புதிய ‘தூய்மை ஆற்றல்’-பசுமைச் சக்தி-சூரிய சக்தியில் மின்சாரம் எடுக்கும் நாடகம் அரங்கேறுகிறது; இதிலும் அதானி-அம்பானி முதலீடு செய்து எதிர்காலத்தை விலை பேசுகிறார்கள்.

அதுவும் இதுவும் இரண்டும் உண்மை என்றால், எது உண்மையான உண்மை?

 ***

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சாட்சியாக, இந்நாள் பிரதமர் மோடி சாட்சியாக திறந்வெளி நிலக்கரிச் சுரங்கங்களும், பெருச்சாளி வளை – நிலக்கரிச் சுரங்கங்களும் (‘Rat hole mining’ என்றழைக்கப்படும் திறந்த வெளி சுரங்கங்கள்)  லட்சக்கணக்கில் பூமியைச் சுரண்டுகின்றன என்பது நிச்சயமான உண்மை; இதில் 90 சதவீதம் சட்டவிரோதமானவை என்றால் நீங்கள் நம்புவீர்களா? அதுபோலவே லட்சக்கணக்கான பழங்குடிகள் பசுமையான வாழ்விடத்திலிருந்து மாற்று வாழ்வு-வீடு இல்லாமல் துரத்தப்படுவதும், அவர்கள் நாட்டின் கோடிக்கணக்கான மக்களில் கூலி ஆட்களாகக் கரைந்துபோகிறார்கள்  என்பதும் பச்சையான உண்மை.

உங்கள் ஊர் ரயில்நிலையத்தில், சந்தையில் ‘கடந்து போகிறவர்கள்’ அப்படி ஒரு பழங்குடியாக இருக்கலாம். இப்போது ஊடகங்களில் ‘எல்லாம் கடந்துபோகும்’ என்ற ஒரு புதுமொழி உலவுகிறது. நன்றாக ஊன்றிக் கவனியுங்கள். எல்லாம் கடந்துபோகவில்லை, நாம்தான் கண்டும் காணாமல் நகர்ந்து போகிறோம், ஓடுகிறோம்.

பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்கு இப்படியும் ஒரு பெயர் — வெட்கப்படுவோம்!

  •  இராசவேல்

ஆதாரம்: சாருதத்தா பாணிக்கிராகி, 24.2.2022, Down To Earth (DTE) ஆய்வுகள்;

 திவ்யேந்து சவுத்திரி, பாரிஜாத கோஷ் 29.12.2021, DTE ஆய்வுகள். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here