ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக பார்ப்பன (இந்து) மத கொடுங்கோன்மையின் கீழ் அடக்கி ஒடுக்கப்பட்ட சூத்திர, பஞ்சம சாதிகளை சார்ந்த உழைப்பாளி மக்கள் தாங்கள் இந்து மதத்திலேயே கீழ் நிலையில் வைத்து அடக்கி ஒடுக்கப்படுவது; இழிவுபடுத்தப்படுவது; சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவது போன்றவற்றை சகித்துக் கொள்ள முடியாமல் பார்ப்பன (இந்து) மதத்தில் இருந்து வெளியேறி இஸ்லாம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் சென்றனர். தங்களுக்கு சமத்துவத்தையும், மரியாதையையும், சுயமரியாதை உணர்வையும் போதிக்கின்ற, வழங்குகின்ற, மதங்களுக்கு மாறிச்சென்றனர் என்பதுதான் வரலாறு.

“இந்து மதத்தில் இருந்தபோது, சமூக அந்தஸ்தின் அடிப்படையில் ஒருவர் பெற்று வந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு உரிமையை, அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிறகு பெற முடியாது” என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அக்டோபர் 15 அன்று உறுதி செய்துள்ளது.

மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு அவர்கள் ஏற்கனவே அனுபவித்து வரும் இட ஒதுக்கீடு உரிமைகளை வழங்க முடியாது என்று நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி அவர்களின் முதுகெலும்பை அடித்து நொறுக்கியுள்ளது.

இதன் மூலம் எந்த விதமான சாதி தீண்டாமை இழிவுகளும், அடக்குமுறைகளும் ஏவப்பட்டாலும் வாழ்நாள் முழுவதும் நீ ஒரு இந்துவாக வாழ்ந்து சாக வேண்டும் என்பதுதான் இந்த தீர்ப்பின் சாராம்சமாகும்.

“நான் ஒரு இந்துவாக பிறந்தேன்.. ஆனால் ஒரு இந்துவாக சாக மாட்டேன்” என்று பகிரங்கமாக அறிக்கை விடுத்து பௌத்த மதத்தை தழுவினார் டாக்டர் அம்பேத்கர். அரசியலமைப்புச் சட்டத்தை முன்வைத்த அவர் மதம் மாறுகின்ற உரிமையை அடிப்படை உரிமையாக மாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மதம் மாறிய இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ஒருவேளை மீண்டும் தாய் மதம் என்று சொல்லக்கூடிய இந்து மதத்திற்கு திரும்பினால் எந்த இடத்தில் வைப்பார்கள் என்ற கேள்விக்கு இதுவரை எந்த இந்து சனாதனவாதிகளும் சரி! பார்ப்பன பிரசங்கிகளும் சரி! உச்சநீதிமன்றமும் சரி! நேர்மையான முறையில் பதில் கூறியது இல்லை.

படிக்க: தேர்தல் திருடன் ஞானேஷ் குமாருக்குச் சாமரம் வீசும் முன்னாள் அரசு அதிகாரிகள், நீதிபதிகள்!

சாதி தீண்டாமை கொடுமைகளாலும், ஒடுக்குமுறைகளாலும், பார்ப்பன (இந்து) மதத்தை விட்டு வெளியேறியவர்கள் சலுகைகளை பெற முடியாது. இட ஒதுக்கீடு பெற முடியாது என்பதை ஏற்றுக் கொண்டு தாய் மதத்திற்கு திரும்பினால் பார்ப்பன சாதியாக ஏற்றுக் கொள்வீர்களா என்று திருப்பி அடிக்க வேண்டும்?

இந்துமத கொடுங்கோன்மையில் இருந்து தப்பி ஓடி கிறிஸ்தவ மதத்திற்கு செல்பவர்களையும் பழைய சாதி சாத்தான்களைப் போல தொடர்கிறது என்பது மட்டுமின்றி இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்களும் அந்த வகையிலேயே நடத்தப்படுகிறார்கள். மதம் என்ற வழிபாட்டு உரிமையை மாற்றிக் கொள்வதால் பிறப்பு என்ற அடிப்படையில் அவர்கள் மீது திணிக்கப்படுகின்ற சாதி தீண்டாமை வன்கொடுமைகள் ஒருபோதும் ஒழிவதில்லை.

ஒரு தலைமுறை, இரு தலைமுறைக்கு முன்பாக சூத்திரர்களாக, பஞ்சமர்களாக அடக்கு முறைக்கும், ஒடுக்குமுறைக்கும் இழிவு படுத்தப்படுதல்களுக்கும் ஆளான பெரும்பான்மை மக்கள் மதம் மாறியதால் அவர்களின் இட ஒதுக்கீடு உரிமை பலியாகிறது என்பதை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது.

ஏனென்றால், பிறப்பின் அடிப்படையில் ஒருவர் மீது திணிக்கப்படுகின்ற சாதி, வாழ்நாள் முழுவதும் அழியாத கறையாகவும், அவமான சின்னமாகவும் அவர் மீது திணிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றது. மதம் மாறினாலும் அவர்களது மீதான பிறப்பின் அடிப்படையிலான இந்த சாதி தீண்டாமை வன்கொடுமைகள் அழிவதில்லை.

படிக்க: நீதித்துறையில் ஊழல்: கரடியே காரித் துப்பியது போல் நீதிபதிகளே ஒப்புதல் வாக்குமூலம்!

அப்படி இருக்கும் பட்சத்தில் இவற்றையெல்லாம் ஒரு முடிவுக்கு கொண்டு வரும் வரை வழிபாட்டு உரிமை என்ற முறையில் மதம் மாறி செல்கின்ற, சொல்லிக் கொள்ளப்படும் இந்து மதத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடி இன மக்கள் அவர்களின் உரிமைகளை பெறுவதற்கு எந்த விதமான தடையும் இருக்கக் கூடாது.

இதனை எதிர்த்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் தொடர்ச்சியாக பிரச்சாரங்களையும், பல்வேறு கருத்தரங்கங்களும் நடத்தி வருகிறது. “இந்து மதத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறும்போது, அவரது முந்தைய சமூகப் பின்தங்கிய நிலை ஒரே நாளில் மாறிவிடுவதில்லை. எனவே, மதம் மாறிய காரணத்திற்காக அவர்களுக்கு இட ஒதுக்கீட்டு உரிமையை மறுப்பது சமூக நீதி மற்றும் அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் முன்வைத்து போராடுகிறது.

தமிழ்நாடு அரசு கடந்த மார்ச் 2024 இல் கொண்டு வந்த அரசாணையை (மதம் மாறியவர்களுக்கும் BC-Muslim சான்றிதழ் வழங்கலாம் என்று நடைமுறைப்படுத்த தொடங்கியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மற்றும் அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஆகியவைகள் அனைத்தும் இந்த அரசாணைக்கு எதிராக மாறி உள்ளது.

படிக்க: ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதி பதவிக்கு தகுதியானவர் தானா?

குறிப்பாக திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த அரசாணை மீதான மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றபோது உரிய முறையில் வழக்கறிஞர்களை வைத்து தமிழக வெற்றி கழகம் வாதாட வில்லை என்பது அவர்களின் சனாதன சார்பை பச்சையாக வெளிப்படுத்துகிறது.

உச்சநீதிமன்றத்தில் திறமையான வழக்கறிஞர்களை வைத்து வாதாடவில்லை என்பது மட்டுமல்ல! ஒருவேளை அப்படி வாதாடி இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தில் பார்ப்பன பாசிசத்தை ஆதரிக்கின்ற நீதிபதிகள், சொல்லிக் கொள்ளப்படும் நீதி அரசர்கள் இதுபோன்ற வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் மதம் மாறுகின்ற மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டு உரிமையை ரத்து செய்வதையே அவர்கள் நிரந்தரப்படுத்தி இருப்பார்கள்.

தற்போது இந்த தீர்ப்பை வழங்கிய இரு நபர் நீதிபதிகள் கொண்ட அமர்வு மதம் மாறிய இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு உரிமையை பறித்தது போல, மதம் மாறிய கிறிஸ்தவர்கள், மதம் மாறிய பிற மதத்தைச் சார்ந்தவர்கள் அனைவரின் உரிமையை படிப்படியாக பறித்து விடுவார்கள்.

இதன் மூலம் ஆர்எஸ்எஸ் பார்ப்பன பாசிச கும்பலின் சித்தாந்த குருவான கோல்வால்கர் முன் வைத்தது போல இந்து மதத்தை அதாவது பார்ப்பன இந்து தர்மத்தை ஏற்றுக் கொண்டு இந்துவாக வாழ வேண்டும். இல்லையென்றால் இந்த நாட்டை விட்டு வெளியேறி ஓட வேண்டும் என்பதை வேறு வேறு கோணங்களில் படிப்படியாக அமல்படுத்துவார்கள் அமல்படுத்துகிறார்கள்.

படிக்க: இந்தி திணிப்பு, உயர்சாதி ‘ஏழை’களுக்கான 10% இடஒதுக்கீடு! இந்திய மக்கள் மீதான இரு பெரும் தாக்குதல்கள்!

ஆர் எஸ் எஸ் சித்தாந்த குருமார்களில் முக்கியமானவரான கோல்வால்கர், “நாம் அல்லது நமது தேசம் வரையறுக்கப்பட்டது (We or Our Nationhood Defined – 1939) என்ற புத்தகத்தில்,, இந்து அல்லாத சிறுபான்மையினரை “வெளிநாட்டு இனங்கள்” என்று குறிப்பிட்டார்., அது மட்டுமின்றி இஸ்லாமியர்கள் குறித்து எச்சரிக்கும் வகையில் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்:

• இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் இந்து கலாச்சாரம் மற்றும் மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

• இந்து மதத்தை மதிக்கவும் வழிபடவும் பழக வேண்டும்.

• இந்து தேசத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழ வேண்டும்.

• எந்தவொரு சலுகைகளோ, சிறப்புரிமைகளோ, ஏன் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கூட கோராமல் அவர்கள் வாழ பழகிக்கொள்ள வேண்டும்.” என்பதுதான் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளின் இனவெறுப்பு மதவெறுப்பு அரசியலாகும்.

இதனைத் தான் ஆரிய பார்ப்பனிய சாம்ராஜ்யம் என்றும், இந்து ராஷ்டிரம் என்றும் முன்வைக்கின்றனர். இந்த இந்து ராஷ்டித்தில் நிரந்தர சூத்திர, பஞ்சம அடிமைகளாகவும், சாதி ரீதியாக சுமத்தப்படுகின்ற அனைத்து இழிவுகளையும், அவமானங்களையும், அடக்குமுறைகளையும் ஒடுக்கு முறைகளையும் சகித்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் இந்துவாகவே வாழ்வது என்பது வெட்கக்கேடானது.

தமிழா நீ இந்துவா என்ற கேள்வியையும்? தமிழை நீச பாசை என்று சொல்கின்ற பார்ப்பன இந்து மதத்தில் உனக்கு என்ன வேலை என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டும்? இந்து மதத்திலேயே அடக்கி ஒடுக்கப்படுகின்ற ஆதிசைவம், மாலியம், ஆசீவகம், வள்ளலார் வழிபாடு, ஐயா வைகுண்டர் வழிபாடு உள்ளிட்ட பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக போராடிய மத வழிபாட்டு முறைகளை உயர்த்திப் பிடிப்பததன் மூலம், “நாங்கள் இந்துக்கள் அல்ல”! என்று பகிரங்கமாக அறிவித்து அதனை நடைமுறைப்படுத்துவதும் தான் தற்போதைய தேவையாக மாறியுள்ளது.

◾கணேசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here