ந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடமாக உள்ள நாடு; இன்னொரு புறம் 2000 ஆண்டு காலமாக பார்ப்பனிய வர்ணாசிரம தர்மத்தால் பெரும்பான்மை உழைக்கும் மக்களை சாதிய ரீதியாக ஒடுக்கி வரும் நாடு.

இந்தியா பிரிட்டன் காலனி ஆதிக்க காலகட்டத்தில்தான் ஒரே நாடாக இணைக்கப் பட்டது. அதற்கு முன் பல்வேறு சமஸ்தானங்கள், பாளையங்களாகப் பிரிந்து ஒற்றுமையின்றியும், ஒன்றோடொன்று போரிட்டுக்கொண்டும் இருந்தது. இந்தியா என்ற அடையாளமோ, ஒத்த தன்மையோ இன்று இந்தியா என்று அறியப்படும் பரப்புக்குள் எங்குமே இருந்ததில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சங்கப்பரிவாரங்களோ, பாரதம் என்ற ஒன்று பட்ட நாடு பல ஆயிரம் ஆண்டுகளாக நீடிப்பதாகவும், அது வேதங்களாலும், ரிஷிகளாலுமஉருவாக்கப்பட்டு காலம் காலமாக தொடர்வதாகவும் கதையளக்கின்றனர்.

மத்திய ஆசியாவிலிருந்து நாடோடிகளாக வந்தேறிய இந்த கும்பல் தங்கள் மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்வதற்காக வேதங்கள், இதிகாசங்கள் என்று சரடு விட்டனர். இந்த மண்ணில் தோன்றிய பவுத்தம், சமணம், சாக்தம், வைசேடிகம், மீமாம்சம், சாருவாகம், ஆசீவகம், சன்மார்க்கம் போன்ற எண்ணற்ற தத்துவங்களை அழித்தும் செரித்தும் தங்கள் வைதீக – சனாதன தர்மத்தை திணித்தனர். அதற்கு இந்து மதம் என்று பெயர் சூட்டி நம்மை ஏய்க்கின்றனர்.


இதையும் படியுங்கள் : இந்து மதம் – பார்ப்பனீயம் | உபநயம் | பகுதி 2


சனாதன தர்மத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்ட கொடிய மனு நீதியின் படி, பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்று பிற வர்ணங்கள் அடிபணிந்து நடக்க வேண்டும். பார்ப்பனர்களுக்கு அடிமைச்சேவை செய்வதே பிற வர்ணத்தாரின் கடமை. சூத்திரன் படிக்கக்கூடாது. வேதத்தை உச்சரித்தால் அந்த சூத்திரனின் நாக்கை அறுக்க வேண்டும். பார்ப்பனர்கள் வேதம் படிக்கும் போது தப்பித்தவறி அதைக் காதால் கேட்டு விட்டால், அந்த குற்றத்திற்காக காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற சட்டங்களை வகுத்து நமது மூதாதையரை படிப்பின் வாடையே தெரியாமல் தடுத்து வைத்தார்கள்.

தற்போதுதான் சற்று விழிப்புணர்வு பெற்று இடஒதுக்கீடுகள் மூலம் கல்வி கற்க ஆரம்பித்துள்ளோம். ஓரிரு தலைமுறைகளாக கீழ் நிலை அரசு வேலைக்குப் போக ஆரம்பித்துள்ளோம். இதையே சகித்துக்கொள்ளாமல் இட ஒதுக்கீட்டு முறையை எதிர்த்தும் இழிவு படுத்தியும் வந்தது இந்த சனாதன கும்பல். தற்போது மோடி தலைமையில் ஆட்சி அதிகாரம் கிடைத்தவுடன் அரசியல் சட்டத்தில் 103 வது திருத்தம் செய்து “முன்னேறிய சாதிகளில் உள்ள பொருளாதார வகையில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு சட்டம்” கொண்டு வந்து இடஒதுக்கீட்டு முறையின் நோக்கத்தையும் அடித்தளத்தையும் ஆட்டம் காணச்செய்துள்ளனர். இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் முயற்சி. எனவே, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்களுக்கு மட்டும்தான் இடஒதுக்கீடு இருக்க வேண்டும்; பொருளாதார அளவு கோல் கூடாது என்ற அரசமைப்புச் சட்டத்தின் விதியை மீறியுள்ளனர்.

உண்மையில் ஒன்றிய மோடி அரசால் கொண்டு வரப்பட்டது பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கான இட ஒதுக்கீடு அல்ல; சாதி ஆதிக்கத்தில் கொழுத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு. 2000 ஆண்டு காலமாக பார்ப்பனிய வர்ணாசிரம (சனாதன) தர்மத்தால் பெரும்பான்மை உழைக்கும் மக்களை சாதிய ரீதியாக ஒடுக்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு என்றே சொல்ல வேண்டும்.

அந்த  உயர் சாதி ‘ஏழை’களுக்கு வைக்கப்பட்ட வரம்பும் கூட மிகவும் அயோக்கியத் தனமானது. ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம், 5 ஏக்கர் நிலம், 1000 சதுர அடி வீடு – இவையெல்லாம் இருப்பவர்கள் ஏழைகளாம்! நாள் வருமானம் 33 ரூபாய் என்றால் அவர் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர் என்ற இந்திய வரையறையுடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள், இந்த “அரிய வகை ஏழைகளின்” கொழுத்த நிலை புரியும்.

ஆக மொத்தத்தில் இந்த இந்த 10 % இட ஒதுக்கீடு என்பது, இட ஒதுக்கீடு உரிமையையே ஒழிப்பதற்கான திட்டமிட்டு சதி! மருத்துவம், IIT, IIM போன்ற படிப்புகளிலும், அதிகார வர்க்கத்திலும் தலைகாட்டும் கொஞ்ச நஞ்ச சூத்திரர்களையும் விரட்டி விட்டு 100 சதவீத மேல் சாதி ஆதிக்கத்தை நிறுவும் முயற்சி!


இதையும் படியுங்கள்: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தடையாக 10% EWS இட ஒதுக்கீடு! கலகம் செய்!


அரசமைப்பு சட்டத்துக்கே புறம்பான இந்த சட்டத்தை எதிர்த்து கடைசிப் புகலிடமென சென்ற உச்சநீதி மன்றமும் இந்த “அரியவகை ஏழைகளுக்கு அளித்த இடஒதுக்கீடு சரிதான்” என்று ஆதிக்க சாதி கும்பலுக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்து விட்டது. அதன் மூலம் பெரியார் கூறியவாறு உச்சிக்குடுமி மன்றம்தான் என்பதை நிரூபித்து விட்டது.

அதே போல, 13 ஆம் நூற்றாண்டுதான் வரிவடிவம் பெற்ற, காலத்தால் பின்தங்கிய தங்களது சமஸ்கிருத மொழியே மூத்தது என்றும் 2600 ஆண்டு பழமையான, மூன்று சங்க காலங்களை கடந்து நிலை பெற்று நிற்கும் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளுக்கெல்லாம் தாய் என்றும் பிதற்றித்திரிகின்றனர். இவை அனைத்தும் பொய் என்பதை வரலாற்று ஆய்வாளர்களும் கீழடி போன்ற வரலாற்று ஆதாரங்களும் மறுத்து நிற்கிறது. ஆனாலும், அவற்றைப்பற்றி விவாதிக்க மறுத்து கள்ள மௌனம் காக்கின்றனர். தங்கள் பொய்க்கோட்பாடுகளைத் திரும்பத்திரும்ப திணித்து நம்மையும் நமது மொழியையும் தொடர்ந்து இழிவு படுத்தி வருகின்றனர்.

தற்போது அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு அறிக்கை ஒன்றை குடியரசுத் தலைவரிடம் அளித்து உள்ளது. அந்த அறிக்கை பல்வேறு தேசிய, இன மொழிகளின் உரிமைகளை குழிதோண்டிப்புதைத்து விடும். அந்த அறிக்கை சட்டமாக்கப்பட்டால் ஒன்றிய அரசு வேலைக்கான தேர்வுகள் அனைத்தும் இந்தி மொழியில்தான் நடத்தப்படும். ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான தொடர்பு மொழி இந்தி மட்டுமே என மாற்றப்படும். இப்படி பல்வேறு அநீதியான அம்சங்களைக் கொண்டுள்ள அந்த அறிக்கை, முழுக்க முழுக்க பல்வேறு தேசிய இனங்களுக்கும், இனங்களின் மொழி உரிமைக்கும் எதிரானதாக உள்ளது. இதைத் தற்போது தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களும் எதிர்த்து வருகின்றனர்.

மொழியுரிமைக்காகவே பெரும் போராட்டத்தை நடத்திய வரலாறு கொண்டது தமிழ்நாடு. அதனால்தான் தமிழைப்பெருமைப்படுத்துவதாக ஏமாற்றிக்கொண்டே தமிழை அழித்துவிடத்துடிக்கிறது மோடி தலைமையிலான பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பல். திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் பேசுவதும், காசியில் தமிழ்ச்சங்க விழா நடத்துவதும் தமிழை உயர்த்த அல்ல. இவர்கள் உயர்த்திதான் தமிழ் உயர வேண்டுமென்ற அவலமும் தமிழுக்கில்லை.

இவர்கள் தமிழையும் திருவள்ளுவரையும் பெருமைப்படுத்திய லட்சணத்தை எம்.பி.தருண்விஜய் மூலம் முன்பே பார்த்து விட்டோம். கங்கைக்கரையில் திருவள்ளுவருக்கு சிலை வைப்பதாகக்கூறி தமிழகத்திலிருந்து பெரும் ஆரவாரத்துடன் கொண்டு சென்று மூலையில் வீசியதை தமிழ் மக்கள் எக்காலத்திலும் மறக்க மாட்டார்கள். தாய் மொழியாம் தமிழை அழித்து இந்தியைத்திணிக்க எத்தகைய கபட நாடகம் போட்டாலும் நாம் மயங்கிவிடக்கூடாது.

தங்கள் மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ள பார்ப்பன கும்பலுக்கும், பனியா முதலாளிகளுக்கும் ஒற்றைத் தன்மை கொண்ட ஒரே நாடு தேவைப்படுகிறது. இதற்காகத்தான் ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே வரி, ஒரே மொழி, ஒரே மதம் என ஒற்றைத்தன்மையை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதன் அடையாளம்தான் இந்து – இந்தி – இந்தியா! அகன்ட பாரதம் என்ற இந்து ராஷ்டிரம்! இதன் அர்த்தம் பார்ப்பனப்பேரரசு என்பதுதான்.

இதற்கான முதல் பலி இசுலாமிய சிறுபான்மையினர் என்றால், அடுத்தடுத்து பலியாவது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உழைப்பாளி மக்களும் பல்வேறு தேசிய இனங்களும்தான். 21 ஆம் நூற்றாண்டிலும் நாம்மை ஏய்த்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிக்கிறது ஆரிய – மனுவாத – சனாதன பார்ப்பன கும்பல். மூன்று தலைமுறைக்கு முந்தைய தற்குறிகள் அல்ல நாம் என்பதை நிரூபிப்போம். இந்து, இந்தியன் என்ற பித்தலாட்டத்திற்கு மயங்காமல் மொழி, இன உரிமையுடன் கல்வி, வேலை வாய்ப்பில் நமது உரிமையையும் பாதுகாத்து வரும் தலைமுறையிடம் ஒப்படைப்போம்! கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!

RSYF – tamilnadu-1

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here