ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் ‘தீ’ பற்றி எரியும் போது- அவருக்கு வெண்சாமரம் வீசும் சொரணை கெட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ்- ஐபிஎஸ்-கள் மற்றும் நீதிபதிகள்! தேர்தல் திருட்டில் பாஜக மோடி -அமித்ஷா கும்பலுக்கு பக்கபலமாக இருந்து கொண்டு அனைத்து வகைகளிலும், தில்லு முல்லு மோசடிகள் மூலமாக தேர்தல்கள் அனைத்திலும் ஆட்சி கட்டிலில் அமர்வதற்கு தனது சங்கித்தனமான அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டவர் இந்த திருட்டு ஞானேஷ்குமார் என்பதை நாடறியும்.
எஸ் ஐ ஆர் பணி தொடங்குவதற்கு முன்பே, இது தொடர்பாக எமது அமைப்புகள் உட்பட, பல்வேறு அமைப்பினரும் அம்பலப்படுத்தல் களையும், சிறு சிறு போராட்டங்களையும் மேற்கொண்டே வந்துள்ளனர்.
தற்போது இரண்டு தேர்தல் ஆணையாளர்கள் சுக் பீர் சிங் மற்றும் விவேக் ஜோஷி எதிர்ப்பையும் மீறி. ஞானேஷ் குமார். நடத்திய திருட்டுத்தனங்கள் சிலவற்றை The Indian Express நாளேடு அம்பலப்படுத்திய பிறகு நாடு முழுவதும் போராட்டங்கள் தீப்பற்றி எரிகின்றன. இதுவே உண்மை.
திருட்டு ஞானேஷ்குமாருக்கு ஆதரவாக கடிதங்கள் அனுப்பிய ஓய்வு பெற்ற அதிகாரிகள் கூறுவது தான் என்ன?
மண்டை முதல் பாதம் வரை முழுவதும் மூளைகள் நிரம்பப் பெற்றவர்கள் எனக் கருதிக் கொண்டிருக்கும் ஓய்வு பெற்ற 47 நீதிபதிகள் மற்றும் 124 IAS, IPS அதிகாரிகள்,ஞானேஷ் குமாருக்கு ஆதரவாக எழுதியுள்ள ‘பகிரங்கக் கடிதத்தில்’ அதிக பிரசிங்கித்தனமாக கூறுவது தான் என்ன?
1) எதிர்க்கட்சிகள் முன் வைக்கும் “வாக்குத் திருட்டு” (Vote theft) போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எந்த விதமான வலுவான ஆதாரங்களும் இல்லை; வெறும் சந்தேகங்களை மட்டுமே வைத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் போன்ற ஒரு தன்னாட்சி அமைப்பின் மீது பழி சுமத்துவது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல;
2) ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த முறை (Special Intensive Revision – SIR) என்பது துல்லியமான வாக்காளர் பட்டியலை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு சட்டபூர்வமான நடவடிக்கை; இது வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் ஒரு நடைமுறை தவிர இதில் எந்தவித முறைகேடுகளும் நடக்கவில்லை;
3) ஜனநாயகத்தில் ஒரு அமைப்பை விமர்சிப்பது என்பது அனைவருக்குமான உரிமை என்றாலும், அந்த அமைப்பையே முழுமையாக கொச்சைப்படுத்துவது (Denigration) மிகத் தவறானது; ஆபத்தானது; …இந்தியாவின் மிக முக்கிய அரசியல் பிரிவான தேர்தல் ஆணையம் முடக்கப்பட்டு விட்டதாக தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்வது, தேர்தல் மற்றும் ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக சிதைத்து, நாட்டில் தேவையற்ற கொந்தளிப்பை ஏற்படுத்துவது பெரும் கேடானதாகும்;
4) அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் ஏதேனும் குறைகளோ அல்லது புகார்களோ இருந்தால் அவற்றை முறையான ஆதாரங்களுடன், தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து தீர்வு காண வேண்டும்; அதை விடுத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் பரப்புவதை ஊடகங்கள் வாயிலாக அரசியல் ஆதாயம் தேடுவதைத் தவிர்க்க வேண்டும்;
சுருக்கமாகக் கூறினால்–போராட்டக்காரா்கள்,ஞானேஷ்மாரின் செயல்பாடுகள் சட்ட விரோதமானவை என பதவி விலகக் கோரும் வேளையில்,- ‘அவருக்கு ஆதரவு தெரிவிப்பதானது தேர்தல் ஆணையத்தின் ‘மதிப்புமிகு’ மாண்பைக் காக்கவும், நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்குத் தடையாக இருக்கும் இத்தகு போராட்டங்களை முறியடிக்கவும், அரசியலமைப்பு நிறுவனங்களின் சுதந்திரத்திற்குத் துணை நிற்கவுமே ஆகும். இத்தகு பகிரங்கக் கடிதத்தை, நாட்டின் நலன் கருதி எழுதி இருப்பதாக’ – பீற்றிக்கொள்கிறார்கள் இந்த ‘மெத்தப் படித்த மேதாவிகள்!’ யாம் அறிந்த வகையில், இவர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தை மதிப்பதிலிருந்தோ, நாட்டின் நலனில் அக்கறை கொள்வதிலி ருந்தோ, தங்கள் கருத்துக்களை வெளியிட வில்லை என்பது முற்றும் முழுதான உண்மை.
படிக்க:
♦ ஞானேஷ் குமாரை பதவியை விட்டு விரட்டியடிக்க கோரி மாநிலம் தழுவிய ரயில் மறியல் போராட்டம்!
♦ ஞானேஷ் குமார் பதவி விலகும்வரை போராட்டம் ஓயாது! குண்டாந்தடிகளைக் கொண்டு நிறுத்த முடியாது!
இப்படிப்பட்ட ‘உயர் பதவி’களில் இருப்போர் பெற்ற கல்வி , பயிற்சி ,மற்றும் மேற்கொண்ட பணிகள்/செயற்பாடுகள் என்பது, நாட்டில் பரந்துபட்ட உழைக்கும் மக்களின் நலன்களுக்கு விரோதமானவையாகவும், அவர்களின் எண்ணற்ற நியாயமான போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதுமாகவுமே இருந்து வந்துள்ளதை மக்கள் நன்றாகவே அறிவர். முதலில் இவர்களுக்கு மக்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் என்றும் இருந்ததில்லை. அதுவும் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், அதிகார வர்க்கமும் குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதிகள், ராணுவம், ஈடி, ஐடி, சிபிஐ…இவ்வாறான கேந்திரமான அனைத்து நிறுவனங்கள் முழுமையும் கார்ப்பரேட் – காவிப் பாசிசமயம் ஆகிவிட்டன.
இப்படிப்பட்ட இழிந்த நிலை அதிகார வர்க்கம், கீழ்க்கண்டனவற்றுக்குத் தக்க பதில் கூறுமா?
தேர்தல் ஆணையாளர்களை நியமனம் செய்யும் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு கேபினட் அமைச்சரை இணைத்து பாராளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டது சரியா? இவ்வித நடவடிக்கை சட்டத்திற்கு மாறானதாக இல்லையா? காவிச் சிந்தனை உடையோரை மட்டுமே தேர்தல் ஆணையாளர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்ற நோக்கம் தவிர இதில் வேறு எந்த நியாயம் இருக்க முடியுமா?
தேர்தல் ஆணையாளர்கள் மீது குறைபாடு உள்ளதாக – அவர்கள் பணியில் இருந்தாலும், ஓய்வு பெற்று விட்டாலும் – எவரும் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாது; தண்டிக்கவும் முடியாது என்று பாராளு மன்றத்தில் சட்ட திருத்தம் செய்து கொண்டது ஜனநாயக மாண்புடையதா? இது தேர்தல் ஆணையாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்பட்டிகிறார்கள் என்பதையும், எப்பாடுபட்டேனும் அவர்களை பாதுகாத்தே ஆக வேண்டும் என்ற பாசிச மோடி, அமித்ஷா கும்பலின் நரித்தந்திரமன்றி இதில் எள்ளளவும் சட்டரீதியான நியாயம் இருப்பதாகக் கருத முடியுமா?
தேர்தல் ஆணையம்,குற்றச் செயல்களில் ஈடுபடாத தேர்தல் ஆணையமாக செயல்படுகிறது எனில் ஆணையத்திற்கு பாதுகாப்பு வளையம் ஏன்? தேர்தல் ஆணையருக்கு Z+ பாதுகாப்பு மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டது ஏன்? எதற்காக இந்த அச்சம்?
முந்தைய SSR முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பிற்கு பதிலாக SIR எனும் திருட்டுத்தனமான – 13 கோடி வாக்காளர் களின் வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு ஏன்? படிவம் 6-ல் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களைக் கலந்து ஆலோசிக்காமலேயே தன்னிச்சையாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மக்களை குழப்பும் புதிய புதிய வினாக்களைத் தொடுத்தது ஏன்?
படிக்க:
♦ ஞானேஷ்குமார் இனியும் தலைமை தேர்தல் ஆணையர் பதவியில் நீடிக்கக் கூடாது!
♦ பாஜக எதிர்ப்பு வாக்குகளை திட்டமிட்டு நீக்கும் இந்திய தேர்தல் ஆணையம்! எதிர்த்து களம் காணும் மக்கள்!!
இதுவரை இல்லாத முறையில் வாக்காளர்களுக்கே படிவம் கொடுத்து மூன்று பகுதிகளாக கேள்விகள் தொடுத்து சம்மந்தமே இல்லாத இறந்து போன பெற்றோர் / தாத்தா எங்கே வாக்குரிமை பெற்றிருந்தார்கள்? எந்த பட்டியலில் அவர்கள் பெயர் இடம் பெற்றிருந்தன? வாக்காளர் பட்டியலில் அவர்களின் வரிசை எண் என்ன? போன்ற அதிசயக்கத்தக்க கேவலமான வினாக்களை எல்லாம் கேட்டு வாக்காளர்களையே தமது வாக்குரிமையை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்ற பாணியில் திணிக்கப்பட்ட வடிவத்தை/ படிவத்தை அறிமுகப்படுத்தியது ஏன்?
கடந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை விட பல லட்சம் வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட காரணமாக இருந்ததற்கான மோசடிகள் எவை?
CCTV FOOTAGE, 45 நாட்களுக்குள் அழிக்கப் படல் வேண்டும் என்ற புதிய விதிமுறைகளை புகுத்தியது ஏன்?
ஒரு தேர்தல் நடந்து முடிந்து விட்டால் அதன் மறு தேர்தல் வரும்வரை அனைத்து தேர்தல் தொடர்பான ஆவணங்கள் & வாக்குகள் முழுமையாகப் பாதுகாக்கப்படல் வேண்டும் என்ற விதிமுறைகளுக்கு மாறாக மூன்றே மாதங்களில் அனைத்தையும் அழித்துவிட உத்தரவிட்டிருப்பது ஏன்?
EVM – கணினி வாக்கு இயந்திரங்களில் தில்லு முல்லு மோசடிகள் பல அம்பலப் படுத்தப்பட்டும், அந்தத் திருட்டுத்தனமான வாக்கு இயந்திரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்திட முன்வர மறுக்கும் மோசடித்தனமான காரணம் என்ன?
இதற்கு முன்பு தேர்தல் ஆணையத்தின் மீது உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு, சுட்டிக்காட்டப்பட்ட பாரதூரமான குறைபாடுகள் குறித்து, தீர்க்க விசாரித்து தனது நீதிமன்ற பரிபாலன முறையை நிலைநாட்டி தீர்ப்புகள் வழங்குவதற்குப் பதிலாக பாராமுகமாக கடந்து சென்றதன் மர்மங்கள் யாவை?
கர்நாடகா, அரியானா, மேற்குவங்கம், பீகார் என பல்வேறு மாநிலங்களில் ஒரே முகவரியில் நூற்றுக்கணக்கானோர் வசிப்பது போன்று வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெற்றது எப்படி? குறிப்பாக அரியானாவில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி லாரிசா நேரி (Larissa Nery)யின் புகைப்படத்துடனான பெயர் 22 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது எப்படி?
குறிப்பாக பீகாரில், மேற்கு வங்கத்தில், உ.பி., ம.பி., குஜராத், மகராஷ்டிரா இன்னும் பல மாநிலங்களில் குறி வைத்தே கொத்துக் கொத்தாக இஸ்லாமியர்களின் வாக்குகள் நீக்கப்பட்டது ஏன்?
உயிரோடு வாழும் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயரை இறந்தோர் பட்டியலில் சேர்த்தது ஏன்? அவ்விதப் பட்டியலை மக்கள் பார்வைக்கு தர தேர்தல் ஆணையம் மறுத்தது ஏன்? உச்சநீதிமன்றம் பெயரளவிற்கு சில வழிகாட்டுதல்களை மட்டும் கொடுத்துவிட்டு அதனைப் பாராமுகமாகக் கடந்து சென்றது ஏன்?
ஆதார் அட்டையை வாக்காளர் சேர்ப்புக்கான அல்லது வாக்குப் பதிவிற்கான அடையாள அட்டையாக எடுத்துக் கொள்ள முடியாது என்று அறிவித்தது ஏன்?
குறிப்பிட்ட வாக்குச்சாவடி எல்லைக்குள் வாழவே இல்லாத போலி வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் பல்லாயிரக்கணக்கில் சேர்த்தது எப்படி?…
….இப்படியாக, சாக்ரடீஸ் கூறிய வார்த்தைகள் போல மேற்கண்டவாறு ஏன்? எதற்கு? எப்படி? என்ற நூற்றுக்கணக்கான கேள்விகள் தேர்தல் ஆணையத்தை நோக்கியும், குறிப்பாகத் திருட்டுத் தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார், பாசிச பாஜக மோடி – அமித்ஷா-க்களை நோக்கியும் பரந்து விரிந்து கிடக்கின்றன என்பதே உண்மை.
இவை யாவற்றுக்கும் இப்பொழுது ஞானேஷ் குமாருக்கு முட்டுக்கொடுத்து தாங்கி நிற்கக் கிளம்பி இருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மானம் உடையவர்களாக இருந்தால் பதில் அளித்தே ஆக வேண்டும்.
போராட்டங்களைக் கேவலமாக ஒடுக்க எத்தனிக்கும் பாஜக அரசின் இழிந்த போக்குகளை இந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆதரிக்கிறார்கள்!
தேர்தல் திருட்டு ஞானேஷ்குமார் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்; கைது செய்யப்பட வேண்டும்; சிறையில் தள்ளப்பட வேண்டும் என்பதனை நோக்கிய போராட்டப் பயணம் நாடு முழுவதும் வீறு கொண்டு, புயல் என சீற்றமெடுத்துள்ளது.
அக்டோபர் 10 தொடங்கி, டெல்லி போராட்டத்தில் CJP யினர் உட்பட மாணவர் இளைஞர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆயிரம் ஆயிரமாய் டெல்லியைக் குலுங்கச் செய்து கொண்டிருக்கிறார்கள். அக்டோபர் 9-லேயே மோடி அரசு தனது ஏவல் படையாம் துணை ராணுவம், பாதுகாப்பு படை, போலீஸ் என 40000-க்கும் அதிகமான அடியாள் படையை டெல்லியில் குவித்து விட்டது. 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. இணைய சேவை முற்றாக முடக்கப்பட்டது.
படிக்க:
♦ தேர்தல் திருட்டு: தேர்தல் ஆணையத்தில் ஆழமாக ‘அகழாய்வு’ செய்ய வேண்டும்!
♦ ஞானேஷ்குமார்: தேர்தல் ஆணைய வரலாற்றில் மாபெரும் கரும்புள்ளி…!
ஜந்தர் மந்தரில் ஆயிரம் ஆயிரம் போராட்டக் காரர்களை காக்கிச்சட்டை ரவுடிகள் ஆண் பெண் வேறுபாடுகள் இன்றி விரட்டி விரட்டி அடித்ததைப் பார்த்தோம். மாணவியரின் – பெண்களின் தொடக்கூடாத அவயங்களைத் தொட்டு அவமானப்படுத்திய காக்கி உடை கேடிகளின் கேவலச் செயல்களைப் பார்த்தோம்! பெண் ஊடகவியலாளரை கடுமையாக தாக்கியதைப் பார்த்தோம்!
போதாக்குறைக்கு ஆர்எஸ்எஸ் ரவுடிகள் போராட்டத்திற்குள் புகுந்து தாக்கியும், தனியே இழுத்துச் சென்று மாணவ மாணவியர்களை இரக்கமின்றி கொடுமையாகத் தாக்கிய காட்சிகளையும் கண்டோம்.
தற்போது போராளிகள் டெல்லியில் நுழைந்து போராட்டம் நடத்துவதைத் தடை செய்யும் விதமாக டெல்லியின் முக்கிய வீதிகள் அனைத்திலும் கார்ப்பரேஷன் லாரிகள் மூலமாக டன் கணக்கில் குப்பைகள் நிரவி விடப்பட்டு நகரையே அசிங்கப்படுத்துகிறார்கள் பாஜக காவிக் கும்பல் அரசு. இந்த கேடுகெட்ட தனத்தை என்னவென்று பகர்வது?
மேலும் இனி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் எவரும் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்ற அவசர உத்தரவை பிறப்பித்திருக்கிறது அரசு. பாஜகவே எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் எண்ணற்ற போராட்டங்களை ஜந்தர் மந்திரில் தான் நடத்திருக்கிறார்கள். தற்போது போராட்டம் இவர்களுக்கு எதிராக மாறியவுடன் போராட்டக் களத்தையே மூடுகிறார்கள். ஜனநாயக உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கிறார்கள்.
ஓய்வு பெற்ற அதிகாரிகள் தங்களது கடிதத்தில், இத்தகைய போராட்டங்கள் முறியடிக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தையும் பதிவிட்டு இருந்தார்கள். அதனால் மேற்கண்ட கேவலமான அடக்குமுறைகளை அவர்கள் நியாயம் என்றே கூறுவார்கள். அவர்களது சகோதர சகோதரிகள், குடும்பப் பெண்கள் இப்படிப்பட்ட மாணவ சங்கத்திற்கு உள்ளானால் இப்படித்தான் கருத்துக் கூறுவார்கள் போலும்!
ஆக, ஓய்வு பெற்ற அதிகார வர்க்கத்தினரும் சரி; தற்போது பதவியில் இருக்கும் அதிகார வர்க்கத்தினரும் சரி; மக்களின் எதிரிகளாகவே – போராடுவோரை
ஒடுக்குபவர்களாகவே இருப்பார்கள்! இனி எக்காலத்திலும் அவ்விதமே நடந்து கொள்வார்கள்!
இந்நேரத்தில் ஆசான் லெனின் வாசகங்களை மனத்தில் இருத்துவோம்!
“சமூகம் இணக்கம் காண முடியாத அளவிலான வர்க்கங்களாகப் பிளவு பட்ட பிறகு அங்கே நிலவக்கூடிய ‘அரசு’ அனைவருக்கும் பொதுவானதாக இயங்க முடியாது; அது சுரண்டும் வர்க்கத்தின் அடியாள் படையே…!”
எனவே, அந்த ‘அரசை’ எதிர்த்து நாம் மூர்க்கமாகத் தான் போராடியாக வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தற்போது தொடுக்கப்பட்டுள்ள போரில் – இறுதி வெற்றி அடையும் வரை – ஆர்எஸ்எஸ் – பாஜக இந்துத்துவக் காவிக் கும்பலுக்கு எதிரான – அதிகாரவர்க்கத்திற்கு எதிரான போரில்
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. அனைத்து அரசியல் கட்சிகள், புரட்சிகர இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், தொழிலாளர்கள்,விவசாயிகள்,
அரசு ஊழியர்கள், அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்கள்…என அனைவரும் ஒருங்கிணைந்து போர்க்களம் பூணுவோம்!
இறுதி வெற்றி அடையும் வரை பெரும் போராட்டத்தைத் தொடர்வோம்!
– எழில்மாறன்.






