அமெரிக்க – ஈரான் போர் கடந்த பிப்ரவரி 28 இலிருந்து தொடர்ந்து வரும் நிலையில், மார்ச் 13-ஆம் தேதி அன்று ஈரானின் ஒரு அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியர்களால் கொண்டாடப்பட வேண்டியதாகவும் அமைந்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு – அதிகரிக்கும் பதற்றம்!
இந்தியாவெங்கும் வாகன ஓட்டிகளும், குடும்பத் தலைவர்களும் தமது வண்டிகளை எடுத்துக்கொண்டு பெட்ரோல் சிஎன்ஜி நிலையங்களில் வரிசையில் குவிவதும், காலி சிலிண்டர்களை எடுத்துச் சென்று கேஸ் ஏஜென்சிகளை முற்றுகையிடுவதும் நடந்து வருகிறது.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திக் புரியோ, இந்தியாவில் தேவையான அளவு எரிபொருள் இருப்பு உள்ளது தற்போதைய நெருக்கடி என்பது தற்காலிகமானது தான் அதை சமாளித்து விடுவோம் என்று மீடியாக்களில் பேட்டி தருகிறார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “விறகடுப்பில் சமையுங்கள்” என்கிறார். தமிழ்நாட்டின் திருச்சியில் பேசிய மோடியோ வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் எரிவாயு இணைப்பு தரவுள்ளோம் என்று திருவாய் மலர்ந்துள்ளார். நாளை “சாணத்தை அப்படியே சாப்பிடலாம்; கோமியத்தை காய்ச்சாமலே குடிக்கலாம்” என்றும் கூட ஆலோசனை தருவார்கள்.
பொதுவில் மக்களிடம் தட்டுப்பாடு குறித்த அச்சமும், ஹோட்டல் உரிமையாளர்கள் உணவகங்களை மூடுவது குறித்த அறிவிப்புகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு நீடித்தால், ஜெனரேட்டர்கள் முடங்கினால் அனைத்து இயக்கங்களுமே படிப்படியாக நிறுத்தப்படும். உதாரணத்திற்கு செல்போன் டவர்கள் கூட வேலை செய்யாது; செல்போன் சிக்னலும் கிடைக்காது என்றும் கூட அறிவிப்புகள் வருகின்றன.
வயிற்றில் பால் வார்க்கும் ஈரான்!
அமெரிக்கா பெரிய மனதுடன் 30 நாட்களுக்கு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ளுங்கள் என்று இந்தியாவிற்கு ‘அனுமதி’ தந்துள்ளது. ஆனால் ரஷ்யாவோ “நட்பு நாடாக உங்கள் தேவைக்கு எங்களுடன் வணிகம் செய்யவில்லை; அமெரிக்காவின் ஒப்புதலை பெற்று தான் வருகிறீர்கள்; எனவே சந்தை விலையை விட அதிக விலைக்கு தான் தருவேன்” என்று கூறிவிட்டது. அந்தக் கப்பல்களும் இந்தியாவுக்கு வந்து சேர 25 நாட்களுக்கு மேல் பிடிக்கும்.
இந்நிலையில் தான் மார்ச் 13ல் வந்துள்ள ஈரானின் அறிவிப்பு இந்திய மக்களின் வயிற்றில் பாலை வார்க்கும் விதமாக அமைந்துள்ளது. அதாவது, “ஹார்முஸ் நீரினை வழியாக இந்தியாவுக்கான கப்பல்கள் செல்வதை அனுமதிக்கிறோம்” என்று அறிவித்துள்ளது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பொக்ரானில் அணுகுண்டு சோதனையை செய்தது இந்தியா. அதைக் கண்டு கொதித்த அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவின் மீது பொருளாதாரத் தடை போட்டு தனிமைப்படுத்த ஐநாவில் முயற்சித்தது. அன்று அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களித்து நம்மை காப்பாற்றிய நாடு ஈரான்தான்.
வளைகுடாவில் எடுக்கப்படும் கச்சா எண்ணெயை அமெரிக்க நிறுவனங்கள் மிரட்டி கைப்பற்றிக் கொள்ளும் தொடர் முயற்சியில் இருக்கின்றன. உலக மேலாதிக்க வெறிபிடித்தலையும் அமெரிக்காவின் டாலர்கள் மூலமாகத்தான் அவற்றை வாங்கவும் விற்க வேண்டும் என்றும் உலக நாடுகளை நிர்ப்பந்திக்கின்றன. மிரட்டி பணிய வைக்கவும் செய்கின்றன. அமெரிக்காவுக்கு பணிய மறுத்த சதாம் உசேன் தூக்கில் போடப்பட்டார். வெனிசுலாவின் மதுரோ கடத்திச் செல்லப்பட்டு கைதியாக்கப்பட்டுள்ளார்.
படிக்க:
♦ வெனிசுலா அதிபர் மதுரோ கடத்தல்! | புதிய ஜனநாயகம்
♦ வெனிசுலா விவகாரம் புஜதொமு கண்டன அறிக்கை!
இதன் மூலம் இந்தியாவும் உலக நாடுகளும் அந்நிய செலாவணியாக டாலர் இருப்பை வைத்திருக்க வேண்டும் என்ற நெருக்கடிக்கு உள்ளானது. இந்த தருணத்திலும் ஈரான்தான் நமக்கு உதவியது. இந்திய ரூபாயை தந்து விட்டு கச்சா எண்ணெயை வாங்கிக் கொள்ளுங்கள். அதே ரூபாயை திருப்பித் தந்து விட்டு நாங்கள் பாசுமதி அரிசி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்து கொள்கிறோம் என்று நமக்கு நட்பு கரம் நீட்டியது.
முதுகில் குத்திய இந்தியா!
1998-ல் இரண்டாம் பொக்ரான் அணு குண்டு சோதனைக்கு பின் நம்மை ஆதரித்து நின்றது ஈரான். கச்சா எண்ணெயை இந்திய நாணயமான ரூபாய்க்கு விற்பனை செய்து நம்மை நண்பனாக போற்றியது ஈரான். ஆனால் இந்தியா இத்தகைய நட்புக்கு நேர்மையாக நடந்து கொள்ளவில்லை.
ஈரானின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்க எத்தனித்த போது, ஐநாவில் ஈரானை ஆதரிக்கும் தனது கடமையை கைவிட்டு, செய்நன்றி மறந்து விட்டு, வாக்கெடுப்பில் இருந்து வெளியேறியது இந்தியா. பேரழிவு அணு ஆயுதங்களை தயாரிக்கும் ‘குற்றத்தை’ இழைக்காத போதும், ஏகாதிபத்தியங்களால் ‘குற்றம்’ நிரூபிக்கப்படாத நிலையிலும், ஈரான் மீது அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது.
அதாவது உலகையே பலமுறை அழிக்க கூடிய அளவு அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து, உலகம் முழுக்க நிறுத்தி வைத்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியமானது, ஈரானின் மீது குற்றம் சுமத்தியது. அந்நாட்டின் வளர்ச்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நசுக்கப்பட்டது.
காங்கிரசின் மன்மோகன் சிங் நட்பு நாடுக்கு துணை நிற்காமல், ஏகாதிபத்தியங்கள் திணித்த நெருக்கடியின் போது ஈரான் நாட்டுக்கு உதவாமல் துரோகத்தை செய்தார் என்றால், அகண்ட பாரத கனவு காணும் பாசிச மோடியோ மேலும் ஒரு படி பாய்கிறது. பெரியண்ணன் ட்ரம்ப் மிரட்டியவுடன் ஈரானுடன் எண்ணை வர்த்தகத்தை துண்டித்துக் கொண்டு, ஈரானில் சபஹர் (Chabahar) துறைமுகத் திட்டத்தை ஏறக்குறைய ரத்து செய்துவிட்டது மோடி அரசு. வளைகுடாவின் மிகப்பெரும் இனப்படுகொலை குற்றவாளியான இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கூடிக் குலாவிக் கொண்டு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளார் பாசிச மோடி.
படிக்க:
♦ ஈரான் மீதான போரை நிறுத்து | மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்
♦ ஈரான் மீது கொலை வெறியாட்டம்! இஸ்ரேல்-அமெரிக்கா-இந்தியா பாசிச கொலைகார கூட்டணி!
இந்தியாவின் அழைப்பின் பேரில் ஈரானிய நாட்டு போர்க்கப்பல் இந்தியாவிற்கு வந்து விழாவில் பங்கெடுத்தது. அக்கப்பல் தன் நாட்டுக்கு செல்லும் தகவல்களை இந்திய கடற்படை அமெரிக்காவிற்கு தந்துள்ளது. அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தனது டார்பிடோவை ஏவி ஈரானிய போர்க்கப்பலை இந்திய பெருங்கடலில், இலங்கைக்கு அருகே மூழ்கடித்துள்ளது. ஈரானின் அதிஉயர் தலைவர் படுகொலை செய்யப்பட்டதற்கு ஒரு இரங்கல் தெரிவிக்க கூட ஆறு நாட்கள் யாருடைய அனுமதிக்காகவோ காத்திருந்தது.
ஈரானின் மீதான இந்தியாவின் அணுகுமுறையானது துரோகத்தனமானதாக மாறியதற்கான சான்றுகள் இவ்வளவு இருந்தும் கூட, தற்போது ஈரான் இந்தியாவிற்கான கப்பல்களை அனுமதிப்பதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. முதுகெலும்பற்றவர்களான நம்மை – இந்திய அரசை – வெட்கி தலைகுனிய வைக்கும்படியானது.
வளைகுடாவின் பல நாடுகளில் குண்டுகள் வீசப்பட்டு எண்ணெய் கிடங்குகள் பற்றியெரிந்து கொண்டும், எண்ணெய் கிணறுகள் தகர்க்கப்பட்டும் உள்ளது. இந்த போர்ச்சூழலில், அங்கிருந்து கச்சா எண்ணெய்யோ, எரிவாயுவோ எந்த அளவு விநியோகமாகும் என்பது கேள்விக்குறிதான். வந்தவரை லாபம் என்று தான் இந்தியா முயற்சிக்க வேண்டும்.
இந்தியாவை ஆளும் காவி பாசிஸ்டுகள் தமது விசுவாசத்தை ஏகாதிபத்தியங்களிடமிருந்து ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கத்தை எதிர்க்கும் உலக நாடுகளின் பக்கம் திருப்ப வேண்டியுள்ளது.
அப்படி மாறத் தவறினால், இந்திய உழைக்கும் மக்கள் மோடி தலைமையிலான கார்ப்பரேட்-காவி பாசிஸ்டுகளை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். அமெரிக்க-இஸ்ரேலின் போர் குற்றங்களுக்கு துணைபோனதற்கு மோடி உள்ளிட்ட உயர் பொறுப்பில் உள்ளவர்களை தண்டிக்க களத்தில் இறங்க வேண்டும். புதிதாக அமையும் அரசானது ஈரானுடன் உறவுகளை புதுப்பிக்கவும் வேண்டும். போரின் நெருக்கடியை ஏகாதிபத்தியங்களும் அந்நாடுகளின் கார்ப்பரேட்டுகளும் சுமக்கலாம். உலக உழைக்கும் மக்கள் ஏன் சுமக்க வேண்டும். ஏகாதிபத்தியங்கள் திணிக்கும் ஆக்கிரமிப்பு போர்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள் உலக அளவில் ஒன்று திரள்வோம்.
- இளமாறன்






தமிழ்நாட்டிற்கு வந்தால் திருக்குறள் திருவள்ளூவரை மேற்கோள் காட்டும் மோடி உட்பட சங்கிகள் சிலர் திருக்குறளில் உள்ள ” நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.” (குறள் 110) என்ற குறளுக்கான அர்த்தம் அறிய அற்ப பதர்கள் பாசிஸ்டுகள் எனவே மக்கள் போராட்டம் தான் இந்த கும்பலுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.