வெனிசுலா அதிபர் மதுரோ கடத்தல்;
ஆட்சிக் கவிழ்ப்புச் சதியில்
அமெரிக்க மேல்நிலை வல்லரசு!


தென் அமெரிக்கா கண்டத்து நாடுகளின் மீது அமெரிக்க மேல்நிலை வல்லரசு தொடுத்து வரும் அரசியல், பொருளாதாரத் தாக்குதல்கள் கியூபாவிற்கு அடுத்து தற்போது வெனிசுலாவின் மீது மாறியுள்ளது.

சமீபத்தில் வெனிசூலாவின் எண்ணெய் கப்பல்கள் மூன்றை கைப்பற்றியுள்ள அமெரிக்காவின் அதிபரான டொனால்ட் டிரம்ப், “இந்த கப்பல்களின் மூலம் போதை மருந்து மற்றும் சட்டவிரோதமான எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும்; அதன் காரணமாக உலகில் போதை மருந்து மற்றும் பயங்கரவாதம் போன்றவை பரவி வருவதாகவும்; அவற்றை தடுப்பதற்கு இத்தகைய நடவடிக்கைகள் அவசியம்” என்று தனது ட்ரூத் சோசியல் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.

அமெரிக்க அதிபரான பாசிச டிரம்ப்பின் மேலாதிக்க திட்டப்படி, வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் இன்று (03-01-2026) அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. தாக்குதல் காரணமாக வெனிசுலா ராணுவ தளத்திற்கு அருகில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து நாடு கடத்தியுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

மேலோட்டமாக பார்க்கும் போது வெனிசுலா கடந்த கால் நூற்றாண்டு காலமாகவே அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராக போராடி வருகிறது என்ற காரணத்தினால் அதனை கட்டுப்படுத்துவதற்கு செய்யப்படுகின்ற நடவடிக்கை என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

நுழைவாயிலிலேயே அமெரிக்காவுக்கு
எதிரான போர் முழக்கம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெனிசுலாவிற்குள் நுழைந்து வெளியேறும் தடை செய்யப்பட்ட எண்ணெய் டேங்கர்களைத் தடுப்பதாக டிசம்பர் மாதம் அறிவித்தார். தனது ட்ரூத் சோஷியலில், வெனிசுலாவில் நடக்கும் மதுரோ ஆட்சியை “ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு” என்று அறிவித்தார். அந்த ஆட்சியில் சொத்துக்கள் திருட்டு, பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனித கடத்தல் போன்றவை அதிகரித்திருப்பதாக செய்திகளை வெளியிட்டு இருந்தார். மதுரோவின் அரசாங்கம் பற்றி ஆதாரங்களை முன்வைக்காமல், கார்டெல் டி லாஸ் சோல்ஸ் குற்றவியல் அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதாக வாஷிங்டன் குற்றம் சாட்டுகிறது .

கடந்த பல மாதங்களாக, கரீபியனில் போதைப்பொருள் கடத்தல் என்று குற்றம் சாட்டும் அமெரிக்கா பல வெனிசுலா படகுகளை அழித்துள்ளது. இந்த தாக்குதல்களில் குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர். டிசம்பர் 20 அன்று வெனிசுலாவுக்கு அருகில் ஒரு எண்ணெய் டேங்கரை அமெரிக்க கடலோர காவல்படை கைப்பற்றியது. டிசம்பர் மாதத்தில் வாஷிங்டன் கைப்பற்றிய இரண்டாவது கப்பல் இதுவாகும், முதல் டேங்கர் அதற்கு முந்தைய வாரம் கைப்பற்றப்பட்டது .

இந்த தாக்குதல்களை நியாயப்படுத்த, “ஏற்கனவே அமெரிக்காவை ஆண்ட கையாலாகாத அமெரிக்க அதிபர் இரண்டாம் புஷ் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் என்றும், தான் அமெரிக்காவின் அவமானங்கள் அனைத்தையும் துடைத்தெறிகின்ற இரட்சகராக அவதரித்துள்ளேன்” என்ற திமிர்த்தனத்தில் அலைந்து வரும் டிரம்ப் வெனிசுலாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

வெனிசுலா தென்னமெரிக்கா கண்டத்தில் உள்ள ஒரு சின்ன சிறிய நாடாகும். அமெரிக்க மேல்நிலை வல்லரசை எதிர்த்து போராடிய ஹியூகோ சாவேஸ் என்ற தேசபக்த அதிபரின் ஆட்சியின் கீழ் வெனிசூலாவின் எண்ணெய் வளங்கள் அனைத்தையும் தேச உடமையாக்கியது அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்கு மிகப்பெரும் எரிச்சலை உண்டாக்கி இருந்தது.

அவர்கள் நாட்டில் இருந்த எண்ணெய் வளத்தை, அவர்கள் அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்வது என்பது மட்டுமல்ல. அதுவரை வெனிசூலாவின் எண்ணெய் வளங்களை கொள்ளையடித்து வந்த அமெரிக்காவின் மிகப்பெரும் பன்னாட்டு எண்ணெய் கார்ப்பரேட் நிறுவனங்களான எக்ஸான், மொபில் மற்றும் சோனோகோ பிலிப்ஸ் போன்ற நிறுவனங்களின் சொத்துக்களையும் எந்தவிதமான நிபந்தனையுமின்றி பறிமுதல் செய்தது மேலும் ஆத்திரத்தை தூண்டி இருந்தது.

இதனைப் பற்றி, “வெனிசுலா மீது அமெரிக்கா இந்த அளவிற்குத் தீராப்பகை கொள்ளக் காரணங்கள் பல உள்ளன. எக்ஸான், மொபில் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலிருந்த எண்ணெய் வயல்களை வெனிசுலா நாட்டுடைமையாக்கியுள்ளது; பொதுத்துறை நிறுவனங்கள் முதற்கொண்டு இயற்கை வளங்கள் வரை அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்குத் திறந்துவிடக் கோரும் உலகவங்கி மற்றும் ஐ.எம்.எப். போன்ற ஏகாதிபத்திய நிதிநிறுவனங்களிலிருந்து வெனிசுலா விலகிக் கொண்டதுடன், மின்சாரம், தொலைத்தொடர்பு மற்றும் சிமெண்ட் உற்பத்தியை அரசுடைமையாக்கியுள்ளது; அமெரிக்காவின் வர்த்தக வலையத்தில் சிக்கித் தவித்த தென் அமெரிக்க நாடுகளுக்கென்று தனியான வர்த்தக வலையத்தையும் வெனிசுலா உருவாக்கியுள்ளது; அமெரிக்காவின் தடைகளை மீறி ஈரானுடன் இணைந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் புதிய கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க மேலாதிக்கத்துக்குச் சவால் விடும் இந்த நடவடிக்கைகள்தான், வெனிசுலாவில் எப்படியேனும் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை அரங்கேற்றுவதற்கு அமெரிக்கா வெறிபிடித்து அலைவதற்குக் காரணம்.” என்று புதிய ஜனநாயகம், மே-2014 இதழில் குறிப்பிட்டு எழுதியிருந்தோம்.

வெனிசூலாவின் அரசு நிறுவனமான PVDSA அமெரிக்காவின் எண்ணெய் கார்ப்பரேட் நிறுவனமான செவ்ரான் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு 15 சதவீத எண்ணெய் வளத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. மீதமுள்ள எண்ணெய் வளத்தில் சுமார் 80 சதவீதம் எண்ணெயை குறைந்த விலைக்கு சீனாவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெனிசுலாவின் பொருளாதார உயிர்நாடியாக எண்ணெய் வளம் உள்ளது, இது நாட்டின் ஏற்றுமதி வருவாயில் சுமார் 88% ஆகும். இது மட்டுமின்றி சுரங்கப் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் கடல் உணவு தொடர்பான தொழில்கள் ஆகியவற்றின் மூலமே வெனிசுலாவின் பொருளாதாரம் சமாளிக்கப்பட்டு வருகிறது. இதனால் உள்நாட்டு நெருக்கடிகள், அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏ உளவாளிகள், கைக்கூலிகள் அனைவரையும் எதிர்கொண்டுதான் மதுரோவால் ஆட்சி நடத்த முடிகிறது.

இந்த ஆட்சியைக் கலைப்பதற்காக, “எங்கள் நாட்டில் இருந்து திருடப்பட்ட எண்ணெய் வளம் உள்ளிட்ட அமெரிக்க சொத்துக்களை திரும்பிப் பெற வேண்டும்.” “நமக்கு இருந்த நிலம், எண்ணெய் உரிமைகள், அனைத்தையும் திரும்பப் பெறுதல் வேண்டும். நம்மைப் பார்க்காமல் இருந்த ஒரு ஜனாதிபதி இருந்ததால் அவர்கள் அதை எடுத்துக் கொண்டனர்,” “நாங்கள் அதைத் திரும்பப் பெற விரும்புகிறோம். அவர்கள் எங்கள் எண்ணெய் உரிமைகளைப் பறித்தார்கள். எங்களிடம் நிறைய எண்ணெய் இருந்தது. அவர்கள் எங்கள் நிறுவனங்களை வெளியேற்றினர், நாங்கள் அதைத் திரும்பப் பெற விரும்புகிறோம்.” என்ற நோக்கத்தில் தான் இந்த தாக்குதல்களை துவங்கியுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதாவது 2007 ஆண்டு வாக்கில் வெனிசுலாவின் அதிபராக இருந்த ஹியூகோ சாவேஸ் அமெரிக்காவின் எண்ணெய் கார்ப்பரேட் நிறுவனங்களான எக்ஸான், மொபில் மற்றும் சோனோகோ பிலிப்ஸ் போன்ற நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தது மட்டுமின்றி அவர்கள் கொள்ளையடித்து வந்த எண்ணெய் வளத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது பற்றி தற்போதுவரை ஆத்திரம் தணியாமல் பேசிக் கொண்டுள்ளார்.

வெனிசுலா பணியவில்லை!
ரசிய, சீன ஆதரவுடன் திருப்பியடித்து வந்தது!

இந்தச் சூழலில் அமெரிக்காவின் மிரட்டலுக்கு வெனிசுலா பணியவில்லை. தென் அமெரிக்க நாட்டில் வர்த்தகம் மற்றும் வர்த்தகத்திற்கு இடையூறாக இருக்கும் எண்ணெய் டேங்கர்களைக் கைப்பற்றுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை குற்றமாக்கும் மசோதாவை வெனிசுலாவின் சட்டமியற்றும் அதிகாரம் கொண்டவர்கள் டிசம்பர் மாதம் நிறைவேற்றினர்.

தென் அமெரிக்க நாட்டில் செயல்படும் வணிக நிறுவனங்களுக்கு எதிரான “திருட்டுச் செயல்கள், முற்றுகைகள் அல்லது பிற சர்வதேச சட்டவிரோத செயல்களை” ஊக்குவிக்கும், கோரும், ஆதரிக்கும், நிதியளிக்கும் அல்லது பங்கேற்கும் எவருக்கும் 20 ஆண்டுகள் வரை அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று திருத்தப்பட்ட சட்டம் கூறுகிறது.

அமெரிக்காவின் நடவடிக்கைகள டிரம்ப்புக்கு எதிரான அமெரிக்கர்களே எதிர்க்கின்றனர். கென்டக்கியைச் சேர்ந்த அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் ராண்ட் பால், டேங்கர் பறிமுதல் ஒரு “ஆத்திரமூட்டல் மற்றும் போருக்கு ஒரு முன்னோடி” என்று ஏபிசியின் “திஸ் வீக்” நிகழ்ச்சியில் கூறியுள்ளார். “வெனிசுலா மீது இராணுவ நடவடிக்கையை விட தடைகள் மற்றும் பிற கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.” என்று வர்ஜீனியாவைச் சேர்ந்த அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் டிம் கைன் NBCயின் “Meet the Press” நிகழ்ச்சியில் கூறினார். “நாம் நிச்சயமாக காங்கிரஸின் வாக்கு இல்லாமல் எந்தவிதமான போரையும் நடத்தக்கூடாது,” என்றும் கைன் கூறியுள்ளார்.

“வெனிசுலா நான்கு மடங்கு அல்லது ஐந்து மடங்கு அதிக எண்ணெயை உற்பத்தி செய்யலாம் – குறைந்தபட்சம் தொழில்நுட்ப ரீதியாக. இதற்கு பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர் முதலீடுகள் தேவைப்படுகின்றன.” என்று அமெரிக்க ஓநாய்கள் உபதேசிக்கின்றன. இத்தகைய முதலீடுகள் செய்வதற்கு அமெரிக்காவின் எண்ணெய் கார்ப்பரேட்டுகள் மற்றும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு தயாராக உள்ளது என்பதுதான் இந்த நடவடிக்கைகளின் பின்னே உள்ள கார்ப்பரேட் கொள்ளை அரசியலாகும்.

இது மட்டுமின்றி ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தது முதல் ‘புதிய மன்றோ கொள்கை’ என்று சொல்லப்படுகின்ற அதாவது டோன்ரோ கோட்பாடு ஆகியவைதான் அவற்றை வழி நடத்துகிறது என்று அமெரிக்க முதலாளித்துவ பொருளியல் அறிஞர்கள் பெயர் சூட்டுகிறார்கள். அதாவது வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட பிராந்தியங்களில் கிடைக்கின்ற மூலப்பொருள்கள் உற்பத்தியின் கட்டுப்பாடு-ஆதிக்கம் அனைத்தும் அமெரிக்காவின் கையில் இருக்க வேண்டும் என்பதும், உலகின் அதற்கு போட்டியாளராக உள்ள சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு பொருத்தமாக இந்த கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பதுதான் டோன்ரோ கோட்பாடு ஆகும்.

இது மட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளில் அதாவது குறிப்பாக OPEC என்று அழைக்கக்கூடிய ஓபெக் நாடுகளின் கட்டுப்பாடு மற்றும் ரஷ்யாவின் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு வெளியில் எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்துவதற்கு தனக்கு தேவையான எண்ணெய் வளத்தை தென் அமெரிக்கா கண்டத்தில் இருந்து சூறையாடுவது என்று முடிவெடுத்துள்ளது.

இதற்காகவே எக்ஸான், மொபில், மற்றும் செவ்ரான் ஆகிய நிறுவனங்களை களத்தில் இறக்கிவிட்டு தென்னமெரிக்காவின் எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் அங்கமாகவே வெனிசுலா மற்றும் ஓரினாகோ எண்ணெய் வளையத்தை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு அமெரிக்கா துடித்துக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் புவிசார் அரசியலின் அக்கம் பக்கமாகவே தென் அமெரிக்கா கண்டத்தில் அமெரிக்க மேல்நிலை வல்லரசு எதிர்ப்பு என்ற பெயரில் உருவான ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கங்கள் அல்லது சொல்லிக் கொள்ளப்படும் இடதுசாரி அரசாங்கங்கள் மீண்டும் தலையெடுத்து விடக் கூடாது என்ற அரசியல் ரீதியான திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது டிரம்ப் அரசாங்கம்.

இதற்காக USS Gerald R. Ford விமானம் தாங்கிக் கப்பலை தயார் செய்து அதில் ஏவுகணைகள் மற்றும் வெடி மருந்துகள் அடங்கிய பல்வேறு போர் ஆயுதங்களை ஏற்றி வைத்துக் கொண்டு தற்போது அந்த பிராந்தியத்தில் வலம் வந்து கொண்டுள்ளது. இதன் மூலம் வெனிசுலாவில் அதிபரான மதுரே ஆட்சிக்கு நிர்பந்தம் கொடுப்பது மற்றும் அவரை ஆட்சியில் இருந்து தூக்கியெறிந்து விட்டு அமெரிக்கக் கைக்கூலி ஒருவரை அதிபராகக் கொண்டு வருவது என்ற திட்டத்துடன் இந்த தாக்குதல்களை அமெரிக்கா நடத்தி வருகிறது. இதன் முதல் கட்டமாக இன்று நேரடித்தாக்குதல் நடத்தி மதுரே-வை நாடு கடத்தியுள்ளது.

அதிபர் மதுரே ஆட்சியை கவிழ்ப்பதற்கு இதற்கு முன்னரும் அமெரிக்கா சதி செய்துள்ளது பற்றி, “வெனிசுலாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்க அரசு சதி செய்வது இது முதல் முறையல்ல. சாவேஸ் உயிருடன் இருந்தபோது அவரது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும், அவரைக் கொலை செய்வதற்கும் அமெரிக்கா பலமுறை முயன்றுள்ளது. 2002-ம் ஆண்டில் சாவேஸுக்கெதிராக ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தி அவரைக் கைது செய்யும் அளவிற்குச் சென்றது. ஆனால், சாவேஸுக்கு ஆதரவாக இலட்சக் கணக்கான மக்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் போராடியதன் விளைவாக இரண்டு நாட்களுக்குள் இராணுவம் சாவேஸை விடுவித்துப் பின்வாங்கியது. அதனைத் தொடர்ந்து, 2005-ம் ஆண்டிலும் 2007-ம் ஆண்டிலும் மாணவர் போராட்டங்கள் என்ற பெயரில் சாவேஸுக்கெதிரான சதிகளை அமெரிக்கா அரங்கேற்றியது. ஒவ்வொரு முறையும் அமெரிக்காவின் சதிகளை, மக்களின் ஆதரவுடன் சாவேஸ் முறியடித்தார்.” என்று மே-2014, புதிய ஜனநாயகம் இதழிலேயே எழுதியிருந்தோம்.

2003 ஆம் ஆண்டு உயிரியல் ஆயுதங்கள் வைத்திருந்தார் என்ற காரணத்தைக் காட்டி ஈராக்கின் அதிபராக இருந்த சதாம் உசேனை தூக்கியெறிந்து விட்டு தனது கைக்கூலி ஆட்சியை அங்கு நிறுவியதைப் போல நவீன காலனியாதிக்கத்தின் ஒரு வடிவமாக பொம்மையாட்சியை நிறுவுவதற்கு நேற்றுவரை தயாராகிக் கொண்டு இருந்த்து. இதனை புரிந்துக் கொண்டு பொருத்தமான வகையில் வெனிசுலா தயாராகவில்லை என்பதையே தற்போதைய நிலவரங்கள் காட்டுகின்றன.

அது மட்டுமல்ல, “21-ம் நூற்றாண்டின் சோசலிசம் என்ற பெயரில் தரகு முதலாளிகள் உள்ளிட்ட அனைத்து வர்க்கங்களையும் உள்ளடக்கிய பல கட்சி ஜனநாயக அரசுதான் வெனிசுலாவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, அமெரிக்க ஆதரவு தரகு முதலாளி வர்க்கம் பொருளாதாரத்திலும் சமூகத்திலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு செல்வாக்கு செலுத்துகிறது. இவற்றையெல்லாம் மீறி, மக்களிடம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்து, அந்த அதிகாரத்தின் மூலம்தான் பல சீர்திருத்தங்களை அமலுக்குக் கொண்டு வந்திருக்கிறார் சாவேஸ். ஆகவே, கீழிருந்து மக்களைத் திரட்டி நடத்தப்பட்ட புரட்சி, அதிலிருந்து உருவாக்கப்பட்ட தொழிலாளர் – விவசாயிகள் கமிட்டிகளின் அரசியல் அதிகாரம் என்ற நிலை அங்கு இல்லை.

வெனிசுலாவில் தற்போது நடைபெற்றுவரும் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கோட்பாட்டின் சரியான தன்மையை மீண்டும் நிரூபித்திருக்கிறது. ஏகாதிபத்திய கைக்கூலிகள் மற்றும் தரகு முதலாளிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்யாமல், ஆலைகள், தொழில்கள் முதல் ஊடகங்கள் வரையிலானவற்றை அவர்கள் கட்டுப்பாட்டிலேயே விட்டுவைத்து, நாடாளுமன்ற அதிகாரத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டு அரசு அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பதற்கு வெனிசுலாவின் நிகழ்வுகள் சான்று பகர்கின்றன.” என்று மே 2014, புதிய ஜனநாயகம் இதழில் முன் வைக்கப்பட்டதை தாண்டி இந்த பத்தாண்டுகளில் இந்த ஆட்சி முறையில் பாரிய மாற்றம் ஏதும் நிகழவில்லை. அமெரிக்காவின் சதிக் கோட்பாடுகளை மக்கள் எழுச்சியின் மூலமாக முறியடிக்கவும் வெனிசுலா தயாராகவில்லை.

எனினும்,உலகை சூறையாடுவதற்கு தனக்கே அனைத்து அதிகாரங்களும் உள்ளது என்று கொக்கரித்துக் கொண்டுள்ள அமெரிக்க மேல்நிலை வல்லரசின் அடாவடித்தனங்களையும், வெனிசுலா உள்ளிட்ட தென் அமெரிக்கா கண்டத்து மக்கள் மீதான தாக்குதல்களையும் எதிர்த்து முறியடிப்பதற்கு பாட்டாளி வர்க்கம் தயாராக வேண்டியுள்ளது. அமெரிக்க மேல்நிலை வல்லரசை முறியடிக்கும் வகையிலான வலுவான ஆட்சி வெனிசுலாவில் உருவாக்கப்பட வேண்டும். இந்த வழியில் வெனிசுலா மக்கள் கிளர்ந்தெழுவார்கள்; சர்வதேசப் பாட்டாளி வர்க்கம் இதற்கு உதவ வேண்டும். தனது நாட்டு அரசாங்கத்தை அமெரிக்காவுக்கு எதிராக போராடும்படியும் அமெரிக்காவின் அடாவடியைக் கண்டிக்கும்படியும் நிர்பந்திக்க வேண்டும்.

மருது பாண்டியன்.

புதிய ஜனநாயகம் தினசரி 

3 COMMENTS

  1. வெனிசுலா அதிபர் மாதுரோ கடத்தல்!

    தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்று வெனிசுலா என்னைய் வளமிக்க நாடு போதைப் பொருள் கடத்துவதாக பொய் குற்றம் சுமத்தி வெனிசுலா அதிபர் மாதுரோ நாடு கடத்தல் !

    அமெரிக்கா ஏகாதிபத்திய கொள்ளை கூடாரத்திடமிருந்து தனது நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை நாட்டுடைமையாக்கி பாதுகாப்பதை உறுதி செய்துள்ளார் அதிபர் மாதுரோ

    இதை பொறுத்துக் கொள்ளாத உலக ரவுடி அமெரிக்கா வெனிசுலா அதிபரை கடத்தி அங்கு ஒரு பொம்மைய ஆட்சியை நிறுவி இயற்கை வளங்கள் கொள்ளையடக்க கதுடிக்கிறது

    ஈராக்கில் சதாம் உசேன் கொலைசெய்தது அதேபோல் பல நாடுகளில் வளங்களை கொள்ளை அடிக்க ஆட்சி கவிழ்ப்பு போர் நடத்தியது போன்ற அட்டூழியத்தில் அமெரிக்கா ஈடுபட்டது

    ஒற்றை துருவ உலகை சூறையாடும் மேலாதிக்க வெறி பிடித்த உலக ரவுடி அமெரிக்காவை விழுத்த உலகப் பாட்டாளிவர்க்கம் தயாராக வேண்டிய தருணம் இது என்ற அறைகூலை இந்த கட்டுரை தெளிவுபடுத்தி உள்ளது

    கட்டுரை ஆசிரியருக்கு
    நன்றி

  2. வெனிசுலா அதிபர் மாதுரோ கடத்தல்!

    தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்று வெனிசுலா என்னைய் வளமிக்க நாடு போதைப் பொருள் கடத்துவதாக பொய் குற்றம் சுமத்தி வெனிசுலா அதிபர் மாதுரோ நாடு கடத்தல் !
    அமெரிக்கா ஏகாதிபத்திய கொள்ளை கூடாரத்திடமிருந்து தனது நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை நாட்டுடைமையாக்கி பாதுகாப்பதை உறுதி செய்துள்ளார் அதிபர் மாதுரோ
    இதை பொறுத்துக் கொள்ளாத உலக ரவுடி அமெரிக்கா வெனிசுலா அதிபரை கடத்தி அங்கு ஒரு பொம்மைய ஆட்சியை நிறுவி இயற்கை வளங்கள் கொள்ளையடக்க கதுடிக்கிறது
    ஈராக்கில் சதாம் உசேன் கொலைசெய்தது அதேபோல் பல நாடுகளில் வளங்களை கொள்ளை அடிக்க ஆட்சி கவிழ்ப்பு போர் நடத்தியது போன்ற அட்டூழியத்தில் அமெரிக்கா ஈடுபட்டது ஒற்றை துருவ உலகை சூறையாடும் மேலாதிக்க வெறி பிடித்த உலக ரவுடி அமெரிக்காவை விழுத்த உலகப் பாட்டாளிவர்க்கம் தயாராக வேண்டிய தருணம் இது என்ற அறைகூலை இந்த கட்டுரை தெளிவுபடுத்தி உள்ளது
    கட்டுரை ஆசிரியருக்கு
    நன்றி

  3. உலகின் பேட்டை ரவுடியாக அமெரிக்கா இருக்க வேண்டும். அவர்கள் சொல்வதுதான் உலக நாடுகள் கேட்க வேண்டும் என்ற ஆண்டைத்தனம் தான் பல்வேறு உலக நாடுகளிலேயே போர் உருவாக்குவதையும் அதில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதும் கோடிக்கணக்கான மக்கள் அகதியாக அளகழிக்கப்படுவதையும் கண்டு மகிழ்ச்சி அடைகிறது.

    இதன் பின்னணியில் இருக்கக்கூடிய அமெரிக்க முதலாளிகள் இந்த ஒற்றைத் துறவ அமெரிக்க அரசின் அடக்கு முறையை வீழ்த்த உலக பாட்டாளி வர்க்கம் ஒன்று திரளாக வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here