நோபல் பரிசு பெற்றவரும், 1999 -ல் வாஜ்பாய் அரசினால் பாரத ரத்னா விருது பெற்றவருமான பொருளாதார அறிஞர் அமர்தியா சென், மோடி அரசாங்கம் உலகின் மிகவும் பயங்கரமான ஒன்று என கூறியுள்ளார். இந்த அரசு தனது சொந்த மக்களை மிகவும் கேவலமாக நடத்துவதால், தான் இந்த முடிவுக்கு வந்ததாக விளக்குகிறார்.

மோடி அரசு, முஸ்லிம்களை நடத்தும் விதம் மற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அக்கட்சியின் முஸ்லிம் எம்பி ஒருவர் கூட இல்லை என்பதும் ஏற்கவே முடியாத காட்டுமிராண்டித் தனமானது என்கிறார். காட்டுமிராண்டித்தனம் என்ற வார்த்தை எனது நாவில் ஏன் வருகிறது என்றால், இந்த அரசு நியாயமற்றதாகவும், தவறானதாகவும் மட்டுமல்ல, அது மக்களின் வாழ்க்கையை முற்றிலும் ஆபத்தானதாக மாற்றுவதாகவும், இந்தியப் பண்பாட்டை சீர்குலைப்பதாகவும் இருக்கிறது என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

தி வயர்” இணையப் பத்திரிகைக்காக கரண் தாப்பருக்கு கொடுத்த நேர்காணலில், பேராசிரியர் சென் கடந்த டிசம்பரில் பிரெஞ்சு செய்தித்தாளான லீ மோன்டேக்கு ( Le Monde) அளித்த பேட்டியின் கருத்துக்களைப் பற்றி விரிவாகப் பேசினார். “இந்திய அரசாங்கம் முஸ்லிம்களை தாக்குகிறது மற்றும் இது இந்துக்களின் தேசம் என்ற கருத்தை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது” என்றார்.

“இந்தியா எப்போதுமே பல தேசிய இனங்களைக் கொண்ட நாடாகவே இருந்து வருகிறது. மோடியின் மதவாத மற்றும் பெரும்பான்மை வாதக் கொள்கைகள், இந்தியாவின் நிலையைக் குறைக்கவும், நாட்டின் ஒரு பகுதியை சிதைக்கவும்தான் செய்கின்றன. இது ஒரு தேசியப் பேரழிவு மற்றும் கொடூரமான, மோசமான அசிங்கம்” என்றும் விமர்சிக்கிறார்.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான தப்பெண்ணம் வளர்ந்து வருவதாகவும் அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்படுவது குறித்தும் கவலைப்படுகிறீர்களா? எனக் கேட்டதற்கு, “நான் கவலைப்படுவது மட்டுமல்ல, பல்வேறு கூறுகளை கொண்டுள்ள நாடு திடீரென பேரழிவு தரும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தள்ளப்படுவது குறித்தும் அஞ்சுகிறேன். இந்த நாட்டின் சிறுபான்மையினரை மோசமாக நடத்துவது இந்த தேசத்தின் மிகப்பெரிய முட்டாள்தனங்களில் ஒன்றாகும்” என்கிறார்.

மேலும்,” இப்படியாக முஸ்லிம்களை நடத்துவது, நாட்டின் வரலாற்றையும் அதன் நிகழ் காலத்தையும் மோசமாக இழிவு செய்வதும், நாசம் செய்வதும் ஆகும். இந்துக்களை மட்டுமே இந்தியர்களாக கருதுவது மற்றவர்களை இந்தியர்கள் இல்லை என சொல்வது கொடூரத்தின் உச்சம். நாட்டின் இயல்பில் இது பயங்கரமான குழப்பத்தை ஏற்படுத்தும். இதுகாறும் நிலவி வந்த நாட்டின் பன்முகத்தன்மையை புறக்கணிப்பது படுபயங்கரமானதும் முட்டாள்தனமுமாகும்” என்கிறார்.

பாஜக – வின் மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் கூட, முஸ்லிம்களை “கரையான்கள்” என்றும் “பாபரின் பிள்ளைகள்” என்றும், அவர்களை பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் எனவும் தொடர்ந்து கோஷம் எழுப்புவது பற்றியும் கேட்டதற்கு, பேராசிரியர் சென், “இது இந்திய தேசத்தின் சிதைந்த புரிதலின் பிரதிபலிப்பாகும். அவர்களுக்கு (மோடி அரசுக்கு) தேசம் என்றால் என்ன என்று புரியவில்லை” என்றார்.

இராணுவம் மற்றும் துணை ராணுவப் பணிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற மத்திய, மாநில அரசுப் பணிகளிலும் மற்றும் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருப்பது பற்றியும், 28 மாநிலங்களில் முஸ்லிம் முதல்வர்கள் இல்லை, மேலும் 15 மாநிலங்களில் முஸ்லிம் அமைச்சர்கள் ஒருவர் கூட இல்லை என்கிற கசப்பான உண்மைகள் குறித்தும் கேட்டதற்கு, “15 சதவிகிதம் உள்ள முஸ்லிம்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. மனிதப் பிறவியாக கூட இருப்பதற்கு சொந்த உரிமையற்று, பெரும்பான்மையினரின் சகிப்புத்தன்மையால் மட்டுமே அவர்கள் இந்த தேசத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள்” என்றும் வேதனையோடு கூறுகிறார்.

இதையும் படியுங்கள்: டாலருக்கு நிகரான பணமதிப்பு வீழ்ச்சியும்! அதல பாதாளத்தில் தள்ளிய அன்னிய பொருளாதாரமும்!

பேராசிரியர் சென், மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போதும், கொரோனா பேரிடர் பாதிப்பு காலத்திலும், ஏழைகளின் நலனில் அக்கறை செலுத்தாமல் அலட்சியம் செய்ததை கடுமையாக விமர்சித்தார். ஸ்டேன் சாமியின் சிறை மரணத்துக்கு மோடி அரசும், நீதித்துறையும்தான் காரணம் எனக் குற்றம் சாட்டினார்.

இவரைப் போன்ற உலகப் புகழ் வாய்ந்த அறிவுஜீவிகள் வைக்கும் விமர்சனத்தை காவிப் பாசிஸ்டுகள் புறங்கையால் புறக்கணிப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். இருப்பினும் இதை மக்களிடம் கொண்டு சென்று, இவர்களை அம்பலப்படுத்த வேண்டியது நமது கடமையாகும்.

ஆதாரம் : The wire

ஆக்கம் : குரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here