சென்னை அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள அனகாபுத்தூரின் தெருவில் புல்டோசர்களை (JCP) ஏவி வீடுகளை தரைமட்டமாக்கி வருகிறது தமிழக அரசு. 2025 மே மாத்தில் ஏவப்பட்டுள்ள இது இரண்டாம் கட்ட தாக்குதல் ஆகும்.
எதற்காக வீடுகள் இடிக்கப்படுகின்றன? அந்த இடத்தை வேறு எதற்கு பயன்படுத்தப் போகிறார்கள்? என்று எவ்வித விளக்கத்தையும் உள்ளூர் கவுன்சிலர் முதல் எம்எல்ஏ எம்பிக்கள் வரை யாரும் தரவில்லை. கோர்ட் உத்தரவு என்ற பெயரில் போலீசை குவித்து வீடுகளை இடிக்க முனைப்பும் காட்டுகின்றனர் அரசு அதிகாரிகள்.
அரசு முன்வைக்கும் மாற்று திட்டம்!
குறிப்பிட்ட தெருக்களில் சொந்த வீடு வைத்திருப்போர் அல்லது வாடகை வீட்டில் குடியிருப்போர் என அங்குள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மாற்று இடத்தில் வீடு ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்து, வாகனங்களை கொண்டு வந்து அவர்களை இடம்பெயரவும் செய்கிறது தமிழக அரசு. இதற்காக ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, அனகாபுத்தூரின் பேருந்து நிறுத்தத்தில் ஒரு அலுவலகம் அமைக்கப்பட்டு, அனைவருக்கும் டோக்கன்கள் தரப்பட்டு இடமாற்றம் நடந்து வருகிறது.
திமுக அரசின் வாக்குறுதியை நம்பி, அவர்கள் தரும் வீட்டை நம்பி, தனது சொந்த வீட்டை விட்டு வெளியேற விரும்பாமல் மக்கள் கதறுகின்றனர். காரணம், முந்தைய ஆட்சியாளர்களால் ஏற்கனவே இப்படி அப்புறப்படுத்தப்பட்டு கண்ணகி நகரிலும், செம்மஞ்சேரியிலும் கொட்டப்பட்ட மக்களின் வாழ்நிலையை பற்றிய அச்சமே இதற்கு அடிப்படையாக உள்ளது. இதை உணர நேரில் தான் வர வேண்டும் என்பதில்லை. காலா படத்தில் வரும் தாராவி குடியிருப்பை காட்டும் காட்சிகளையோ அல்லது மாவீரன் படத்தில் காட்டப்படும் காட்சிகளையோ ஒப்பிட்டுக் கொள்ளலாம்.
அனகாபுத்தூரில் இருக்கும் மக்களின் வேலைக்கான வாழ்வாதாரங்கள் இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தான் உள்ளன. இதற்கு பொருத்தமே இல்லாமல் இம் மக்களை வலுக்கட்டாயமாக மகாபலிபுரத்தை நோக்கி வீசியடித்தால், அங்கிருந்து பிழைப்புக்காக தினம் தோறும் சென்னைக்குள் வந்து செல்வது என்பது கொடும் தண்டனையாக மாறும். அதே போல் தான் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களையும் இது பாதிக்கும். நோய்களுக்காக சிகிச்சை எடுத்து வரும் முதியவர்களையும் இது கடுமையாக பாதிக்கும்.
அனகாபுத்தூரில் தொடரும் புல்டோசர் அராஜகம்! களத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள்
Posted by Makkal Athikaram on Friday, May 23, 2025
கிள்ளுக்கீரைகளான உழைக்கும் மக்கள்!
தனது வாழ்நாள் கனவான வீட்டை கட்டி, கடன்களை சிறுகிச்சிறுக அடைத்து பெருமூச்சு விடும் வேளையில் வீடு இடிக்கப்படுகிறது.
நேற்று வரை வீட்டிற்கு மின் இணைப்பு தந்து, சாலைகள் அமைத்து கொடுத்து, குடிநீர் இணைப்பு கொடுத்து, வார்டுகளாகப் பிரித்து வாக்குகளை வாங்கி, நிர்வாகத்தையும் நடத்தி வந்துள்ளது அரசு. இதற்கெல்லாம் சேவையாக வீட்டு வரியையும் வசூலித்துக் கொண்டு ஒத்துழைத்த அரசு இன்று மாற்றி பேசுகிறது.
இங்கு இடிக்கப்படுவது அம்பானி, அதானிகளின் ஆண்டலியா பங்களாக்கள் அல்ல. உழைக்கும் மக்களின் சின்னஞ்சிறு வீடுகள்தான். இருக்கும் ஒற்றை வீட்டை இழந்து விட்டு, மீண்டும் ஓரிடத்தில் வீடு கட்டும் வருவாயற்ற மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். உழைக்கும் மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறும் அரசு இதே அடையாறின் அருகில் உள்ள ராஜ்பவனில் 100 ஏக்கரில் ஒற்றை நபரை உட்கார வைத்து சீராட்டுகிறது. அதை என்னவென்று சொல்வது?
கோவையில் வீடு, ஊட்டி குன்னூரில் எஸ்டேட் என்றெல்லாம் சொகுசாக வாழ்க்கை அனுபவிக்கும் மேட்டுக்குடிகளுக்கு இந்த வலி புரியாது. தமது வாரிசுகளுக்கு வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவிக்கும் அதிகார வர்க்கம் மற்றும் ஆட்சியாளர்களுக்கு, உழைக்கும் மக்களை பார்த்தால் மதிக்கவும் தெரியாது.
ஒதுங்கி இருப்பது புத்திசாலித்தனமா!
இது அனகாபுத்தூரில் முதல் கட்ட புல்டோசர் தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களைத் தவிர மற்ற அனைவரும் வேடிக்கைதான் பார்த்தனர். பக்கத்து வீட்டை இடிக்கும் பொழுது என் வீடு தப்பித்தால் போதும் என ஒதுங்கி வேடிக்கை பார்த்தனர்.
இன்று தன் வீடு இடிக்கப்படும் பொழுது உதவிக்கு யாரும் வர மாட்டார்களா என ஏங்கி கதறுகிறார்கள்! இவர்களின் தெருவை அடுத்துள்ள வீட்டு மக்கள் வேடிக்கை பார்ப்பவர்களாக ஒதுங்கி நிற்கிறார்கள்.
இப்படி ஒதுங்கி நிற்பது புத்திசாலித்தனமானதா என்பதை பாதிக்கப்பட்டவர்களும், அடுத்ததாக பாதிக்கப்பட இருப்பவர்களும் சிந்திக்க வேண்டும். முதல் கட்டத்திலேயே பாதிக்கப்பட்டவர்களுடன் களத்தில் ஒற்றுமையாக இறங்கிப் போராடி இருந்தால் இரண்டாம் கட்ட தாக்குதலை தடுத்திருக்க முடியும்.
தொடரும் அத்துமீறல்கள்!
ஏழைகளை வசிப்பிடத்திலிருந்து அப்புறப்படுத்துவது என்பது எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின் என அனைவரின் ஆட்சியிலும் தொடரவே செய்கிறது. சிங்காரச் சென்னையில் உழைக்கும் மக்கள் குடியிருக்க கூடாதோ!
யாரின் நலனுக்காக எங்கள் வீடுகள் இடிக்கப்படுகின்றன? அருகில் உள்ள காசா கிராண்ட் நிறுவனம் அடையார் ஆற்றின் கரையில்தான் பிரமாண்டமான கட்டுமானங்களை எழுப்பி வருகிறது. அவர்களின் தேவைக்காக எங்கள் வீடுகளை இடித்து இடத்தை ஒப்படைக்க போகிறதா திமுக அரசு? என்று கேள்வி பாதிக்கப்பட்ட மக்களிடம் கொதிப்புடன் வெளிப்படுகிறது.
சென்னையின் ஆற்றுக் கரையோரங்கள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே பட்டா போட்டு தரப்படுகிறதா? இதை அமல்படுத்தத்தான் போலீசு படையை குவித்து கோர்ட்டு உத்தரவு என்று சொல்லி அச்சுறுத்தி சாதிக்கிறீர்களா?
பாதிக்கப்பட்ட மக்களின் கேள்விகளுக்கு உரிய விளக்கம் தந்து தெளிவுபடுத்த வேண்டிய அரசு மவுனம் சாதிக்கிறது. ஆளும் வர்க்கத்தின், அதிகாரிகள் கூட்டத்தின், ஆட்சியாளர்களின் இத்தகைய அணுகுமுறை கடும் கண்டனத்துக்குரியது.
- இளமாறன்
கட்டுரை சிறப்பு மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையிலும் திமுக மற்றும் ஆட்சியாளர்களை கேள்விக்குள்ளாக்கும் படியும் மக்களை சிந்திக்கும் படியான ஒரு சிறப்பான கட்டுரை இது ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
பாதிக்கப்படும் மக்கள் ஒன்றுபட்டு போராடினால் தான் அதிகார வர்க்கத்தையும் ஆட்சியாளர்களையும் முறியடிக்க முடியும்!
என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது கட்டுரை சிறப்பு!
சுருக்கமாக இருப்பினும் கட்டுரையாளர் கச்சிதமாக அரசினுடைய அராஜகத்தன்மையை அம்பலப்படுத்தி உள்ளார்.
என்னதான் திராவிட மாடல் அரசு – பார்ப்பன சனாதன எதிர்ப்பு அரசு என்றெல்லாம் திமுக அரசு கூவிக் கொண்டாலும் இதுவும் கார்ப்பரேட் முதலாளிகள் நலம் பேணும் அரசுதான் என்பதற்கு இத்தகைய உழைக்கும் மக்களுக்கு எதிரான அராஜக நடவடிக்கைகள் மூலமாக தெள்ளத் தெளிவாக உணர முடிகிறது. உழைக்கும் மக்கள் அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்து போராட முன்வர வேண்டும். கட்டுரையாளருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!