இனிமேல் காசாவில் பஞ்சம் வரப்போகிறது என அச்சுறுத்த தேவையில்லை அது ஏற்கனவே வந்துவிட்டது. இதனை கடுமையாக்கும் வேலையை தான் தற்போது இஸ்ரேல் ஜியோனிச அரசு செய்து வருகிறது.
2023 அக்டோபர் மாதம் தொடங்கிய காசா மீதான இஸ்ரேலின் போர் இன்று வரை முடிவுக்கு வராமல் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் இதுவரை 50,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாலஸ்தீனத்தில் மக்கள் வாழ்ந்த கட்டிட்டங்கள் குண்டுகளால் சிதறடிக்கப்பட்டு கான்கிரீட் சவக்காடாய் காட்சியளிப்பதை நாம் தொலைக்காட்சிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் கண்டிருப்போம். அதற்கு இணையாக மக்களும் ஜியோனிச இனவெறியர்களின் குண்டுகளுக்கு சிதறடிக்கப்பட்டுள்ளார்கள். உறவுகளால் அடையாளம் காண முடியாதபடி சிதைக்கப்பட்டுள்ளார்கள்.
காசா மக்கள் மீதான இந்த போரை உலகமே கண்டித்தாலும், அமெரிக்க மேலாதிக்க கும்பலின் துணையுடன் இஸ்ரேலின் நெதன்யாகு அரசு போர் விதிமுறைகளை மீறி இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச நீதிமன்றத்தால் இனவெறியன் நெதன்யாகு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டாலும் அதை மயிரளவுக்கு கூட மதிக்கவில்லை என்பதையே காசா மீதான தொடர் தாக்குதல் நிரூபிக்கிறது.
இதுவரை இஸ்ரேலின் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளே!. இரக்கமற்ற நிலையில் கொத்துக்கொத்தாக குழந்தைகள் இஸ்ரேலின் இனவழிப்பு போருக்கு பலியாகியுள்ளார்கள். அதனாலேயே இதனை திட்டமிட்ட இனப்படுகொலை என்கிறோம். யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் நடத்திய இனப்படுகொலை போன்றே ஜியோனிச நெதன்யாகு அரசு பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வருகிறது.
இந்த படுகொலைக்கான மொத்த காரணத்தையும் ஹமாஸ் போராளிகள் மீது சுமத்துவதன் வாயிலாக பொதுச்சமூகத்தில் தன்னை பயங்கரவாதத்திற்கு எதிரானவனாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது நெதன்யாகு அரசு. ஒருவேளை ஹமாஸ் போராளிகள் தவறிழைத்திருந்தாக இருந்தாலும் கூட ஒன்றுமறியாத பெண்களையும் குழந்தைகளையும் குறிவைத்து முகாம்களில் குண்டு வீசுவதின் நோக்கம் என்ன என்பதை இஸ்ரேல் சொல்வதில்லை. உலகம் முழுவதும் உள்ள இடதுசாரிகளும் ஜனநாயக சக்திகளுமே இதனை இனப்படுகொலை என கண்டித்து பேசுகிறார்கள், போராட்டம் நடத்துகிறார்கள்.
இந்நிலையில் இஸ்ரேல் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சுமார் 20 லட்சம் பாலஸ்தீன மக்கள் வாழும் பகுதிகளுக்குள் உணவு, மருந்து மற்றும் பிற தேவையான பொருட்கள் எல்லாம் நுழைய தடையிட்டு வருகிறது. அதே நேரத்தில் விமான குண்டு வீச்சுகள் மற்றும் தரைவழி தாக்குதலையும் தொடுத்து வருவதால் அங்கு வாழும் மக்களுக்கு பெரும் ஆபத்து நெருங்கி வருகிறது.
இஸ்ரேல் குண்டுகள் கொன்றது போக மீதி பட்டினிக்கு!
மக்கள் தங்கள் அடிப்படை தேவையான உணவை உற்பத்தி செய்யும் நிலையில் தற்போதைய பாலஸ்தீனம் இல்லை. வெளிநாடுகளின் உதவியையே முழுமையாக நம்பி இருக்கிறார்கள். இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் கடந்த 2 வருடங்களாக நடந்து வரும் போரில் சரிவிகித உணவு கிடைக்காமல் அல்லது உணவே இல்லாத காரணத்தால் கிட்டத்தட்ட 14100 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாட்டால் அவதிப்படுவதாக ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு கட்ட வகைப்பாடு ( Integrated Food Security Phase Classification – IPC ) அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. இதில் ஆறு முதல் 59 மாத வயதுடைய குழந்தைகளே உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் உணவு மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் கிடைக்காவிட்டால் 48 மணி நேரத்திற்குள் 14000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறக்க நேரிடும் என்று ஐ.நா சபையின் டாம் பிளெட்சர் கூறியுள்ளார். ஆனால் இந்த அறிக்கையை கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத இஸ்ரேல் ஆதரவாளவர்களின் மிரட்டலால் இந்த அறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. அவர் கொடுத்த காலக்கெடு துல்லியமாக இல்லை என்று சப்பைக்கட்டு கட்டியுள்ளது. இஸ்ரேலின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஐலான் லெவி இந்த எண்ணிக்கையை புரளி என்கிறார்.
படிக்க:
🔰 களவாடப்பட்ட காஸாவின் வாரிசுகள் ! பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை கொன்ற இஸ்ரேல் !
🔰 காசா வின் மீதான தாக்குதல் 400 பேர் பலி: இனப்படுகொலையாளர்கள் கோழைகள்!
ஆனால் இது தற்போது விவாதத்திற்கு தேவையில்லாதது. அந்த மக்களுக்கு உணவும் மருந்தும் அவசியம். அதனை உடனடியாக வழங்குவதாகவோ அல்லது உதவி செய்யும் நாடுகளை அனுமதிப்பதாகவோ இஸ்ரேல் கூறவிரும்பவில்லை. அம்மக்களின் அழிவையே இனவெறியர்கள் விரும்புகிறார்கள். அதனால் தான் தேவையில்லா விவாதத்தினை கிளப்பி பிரச்சினையை திசை திருப்புகிறார்கள்.
ஊட்டச்சத்தான உணவுகள் கிடைக்காத காரணத்தால் அழக்கூட உடலில் வலுவில்லாத குழந்தைகளின் பேரொலி மருத்துவமனையை நிரப்புகிறது. இதனை கண்டு இரக்கப்பட இஸ்ரேலோ அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியமோ தயாராக இல்லை. உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின் ஒன்று திரட்டப்பட்ட போராட்டமே இவர்களுக்கு முடிவுக்கட்டும்.
- நந்தன்
மேலாதிக்க வெறி கொண்ட அமெரிக்காவின் ஆதரவுடன் இன அழிப்பு போரை நடத்தும் இஸ்ரேல் அரசு
காசா மீது தொடுக்கும் ஆயுதப்போர் பட்டினி போரை முடிவுக்கு கொண்டு வர உலக அளவில் போராட்ட தீயை பற்ற வைப்பது தான் தீர்வு