ங்க நகையை அடகு வைத்து கடன் பெறுவதற்கு மே 20 அன்று இந்திய ரிசர்வ் வங்கி  புதியதாக 9 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ரிசர்வ் வங்கி இப்பொழுது கொண்டு வந்துள்ள விதிமுறைகளும் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று கொண்டு வந்த விதிமுறையும் தங்க  வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட்டுகள், மக்கள் பணத்தை பயன்படுத்தி கொள்ளைலாபம் சம்பாதிப்பதற்காகவும், மக்களிடம் உள்ள தங்க நகைகளை கொள்ளையடிப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டவை. இது எப்படி சாத்தியம் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

நகையை அடமானம் வைத்து கடன் பெற்ற ஒவ்வொருவரும் ஒரு ஆண்டின் முடிவில் அந்த கடனுக்கான வட்டியையும் அந்தக் கடன் தொகையையும் முழுமையாக செலுத்தி நகையை மீட்டுக் கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் மீண்டும் அடமானம் வைத்து கடன் பெற முடியும் என்ற விதிமுறையை ரிசர்வ் வங்கி இப்பொழுது உருவாக்கியுள்ளது. இது ஏழை மக்கள் தங்களிடம் உள்ள நகைகளை தனியார் நகை வியாபாரிகளிடம், தனியார் கார்ப்பரேட் நகை வியாபாரிகளிடம் விற்று விட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு கொண்டு போய் விடுகிறது.

ஒரு குடிமகன் தன்னிடம் உள்ள தங்க நகையை ஒரு வங்கியில் அடகு வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். தங்க நகையை அடகு வைத்த நபரால் அந்தக் கடனை அடைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடலாம். அல்லது அந்த நபருக்கு மேலும் கூடுதலாக பணம் தேவைப்படுகிறது என்ற நிலையில் அடகு வைத்த நகையை விற்றால் பணம் கிடைக்கும் என்பதால் அடகு வைத்த நகையை விற்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இந்த நிலையில், இங்கு ஒரு சிக்கல் எழுந்து விடுகிறது. ஏற்கனவே அடகு வைத்துள்ள நகைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தினால் தான் அந்த நகையை பெற முடியும். அதன் பிறகு தான் விற்பனை செய்ய முடியும். ஆனால் அந்த நபரிடம் நிலுவையை செலுத்துவதற்கான பணம் இல்லை என்ற நிலையினை பயன்படுத்திக் கொண்டு இது போன்ற குடிமகன்கள் இடம் உள்ள நகைகளை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் குவிப்பதற்கான ஒரு ஏற்பாடாகத்தான் ரிசர்வ் வங்கியின் இந்த விதிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முத்தூட் பைனான்ஸ், மணப்புரம் பைனான்ஸ், கொசமட்டம் பைனான்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ் தங்கக் கடன் போன்ற பல நிறுவனங்கள் தங்கத்திற்கு கடன் வழங்கி வருவதை அனைவரும் அறிவர்.

இப்படிப்பட்ட நிறுவனங்களில் சில ஏற்கனவே வேறு இடங்களில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைக்கு கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுத்து மீட்டு அந்த தங்க நகைக்கு ஒரு தொகையை விலையாக நிர்ணயித்து தங்க நகையை மீட்பதற்கு செலுத்திய தொகையைக் கழித்துக் கொண்டு மீதியை நகையின் உரிமையாளருக்கு கொடுக்கின்றன. இது பற்றி தொலைக்காட்சிகளில் கூட பல விளம்பரங்கள் வருவதை மக்கள் அறிவர்.

இந்த நிலையில் தான், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அன்று ரிசர்வ் வங்கி நகை கடன் பெற்று ஓராண்டு முடியும்  பொழுது அந்த கடனுக்கான வட்டி முழுவதையும் மேலும், பெற்ற கடன் தொகை முழுவதையும் செலுத்திவிட வேண்டும். அப்படி செலுத்திய பிறகு அதே நகையை மீண்டும் அடங்க வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

வட்டி கூட கட்ட முடியாமல் நிலுவையில் வைத்திருக்கும் ஒரு நபர் நிலுவையில் உள்ள வட்டியையும் பெற்ற கடனையும் செலுத்தி மீண்டும் அதே கடனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறை என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

பணத்தை ஏற்பாடு செய்ய முடியாதவர்கள் நகையை விற்று விடலாம் என்ற முடிவிற்கு தான் வருவார்கள். அப்படி முடிவிற்கு வருகிறவர்கள் அந்த நகைகளை தனியார் தங்க நகை கடன் வழங்கும் நிறுவனங்களிடம் விற்றுவிடுவார்கள். இதுதான் நடக்கும்.

மக்கள் தங்கள் நகைகளை குறைந்த வட்டியில் அரசு வங்கிகளில் அடகு வைத்தால் தனியார் அடகு நிறுவனங்கள் எப்படி லாபம் சம்பாதிக்க முடியும்? என்பதற்காகத்தான் இப்பொழுது ரிசர்வ் வங்கி மேலும் பல விதிமுறைகளை விதித்துள்ளது. அந்த விதிமுறைகள் குறித்து இப்பொழுது பார்ப்போம்.

அடகு வைக்க வேண்டிய தங்க நகை தனக்கு சொந்தமானது தான் என்ற ஆதாரத்தை காட்டினால் தான் ஒரு நபர் நகையை அடகு வைக்க முடியும் என்ற ஒரு விதிமுறையை ரிசர்வ் வங்கி இப்பொழுது கொண்டு வந்து உள்ளது.

தனது பெற்றோர் இடமிருந்து பெறப்பட்ட பழைய நகைகளுக்கு அந்த நகை தங்களுடையது தான் என்று கூறுவதற்கான ஆதாரம் யாரிடமும் இருக்கப் போவதில்லை. இந்த நிலையில் அந்த தங்க நகையை  அடமானம் வைக்க முடியாது. அதற்கு பதிலாக தனியார் நகை கடையில் அந்த பழைய நகையை விற்றுவிட்டு அதில் கிடைக்கும் தொகையில் புதிதாக நகை வாங்கி அந்த நகைக்கான ஆவணத்தையும் இணைத்து வங்கியில் சமர்ப்பித்தால் தான் நகை கடன் தர முடியும் என்ற நிலையை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ளது.

படிக்க:

அமெரிக்கா ஆரம்பித்துள்ள வரிப் போர்- வஞ்சிக்கப்படும் வளரும் நாடுகள்!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் நம் கண் முன்னே தகவல் தர மறுக்கும் சட்டமாக மாற்றப்படுகிறது!

தங்க நகை வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களின் வியாபாரம் செழித்து கொள்ளை லாபம் அடிப்பதற்கான வாய்ப்பினை இதன் மூலமும் ரிசர்வ் வங்கி உருவாக்கிக் கொடுத்துள்ளது.

இந்த விதிமுறைகள் எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தார் போல ஒரு ‘அருமையான’ விதிமுறையை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர், தான் பெற்ற கடனை திருப்பி செலுத்திய பிறகு ஏழு நாட்களுக்குள் அவரது நகையை திருப்பிக் கொடுத்தால் போதும் என்று விதியை வரையறுத்துள்ளது. பணத்தைப் பெற்றுக் கொண்டவுடன் அடமானமாக வைக்கப்பட்ட நகையை திருப்பிக் கொடுப்பதுதானே நியாயம் ஆனால் ஏன் அப்படி செய்யத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி வரையறுத்து இருக்கிறது?

இதன் மூலம் நகையை அடமானம் பெற்ற நிறுவனம் ஏழு நாட்கள் அந்தத் தொகையை பயன்படுத்திக் கொண்டு லாபமடைய முடியும் என்ற நிலையை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனலை கிளிக் செய்து இணைந்துக் கொள்ளுங்கள்

ஒரு தனி நபரின் நகை கடன் என்பது மிகவும் சிறு அளவுடையதாக இருக்கலாம். ஆனால் நாடு முழுக்க ஒட்டுமொத்தமாக மக்கள் பெற்றுள்ள நகை கடனையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் அது பல்லாயிரம் கோடி ரூபாயை தாண்டும். அதில் அடமானத் தொகையை திருப்பி செலுத்துபவர்களின் தொகையானது ஒவ்வொரு நாளும் சில நூறு கோடிகளில் இருந்து ஆயிரம் கணக்கான கோடிகள் வரை இருக்க வாய்ப்புண்டு. இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை நகை அடகு வைத்தவருக்கு திருப்பிக் கொடுக்காமல்  5, 6 நாட்கள் அந்த நிறுவனங்களே பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது மிகப்பெரும் கொள்ளைக்கு வழிவகுக்கிறது.

மேலும் ஏழு நாட்கள் முடிவதற்குள் நகையை திருப்பிக் கொடுத்தால் போதும் என்ற விதிமுறை இருப்பதால் நகையை அடமானம் பெற்று கடன் கொடுத்த அந்த நிறுவனம் அந்த நகையை அரசு வங்கியில் மறு அடமானம் வைத்து பணம் பெற்று அதையும் வட்டிக்கு விட்டு கொள்ளை லாபம் பார்க்க முடியும் என்ற நிலையை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படை எங்கிருக்கிறது? நாட்டு மக்களின் சொத்துக்களை கொள்ளை அடித்து கார்ப்பரேட்டுகள் வளம்பெற வேண்டும் என்ற பாசிச பாஜகவின் நோக்கத்தில் தான் இதற்கான அடிப்படை அடங்கியுள்ளது.

மக்கள் விழித்துக் கொண்டு இந்த அடிப்படையை தகர்ப்பதற்காக போராடாத வரை இந்த நிலை நீடிக்கவே செய்யும்.

தங்கசாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here