
“குன்றம் காப்போம் மதவெறி தவிர்ப்போம்” என்ற தலைப்பில் மதுரையில் மத நல்லிணக்க பேரணி மற்றும் மாநாட்டை நடத்த உள்ளதாக “மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு” அறிவித்துள்ளது.
மார்ச் ஒன்பதாம் தேதி மாலையில் நடக்க இருக்கும் இம்மாநாட்டில் நாட்டு நலனில், மக்கள் நலனில் அக்கறை கொண்ட அனைவரும் அணிதிரள வேண்டியது அவசியம்.
ஏன் இம்மாநாட்டிற்கு நாம் போக வேண்டும்?
இந்தியாவை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல், எஜமான விசுவாசத்தில் எந்த எல்லைக்கும் செல்ல துணிகிறது.
தற்போது திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி மக்களை மத ரீதியாக மோத விட எத்தனிக்கிறது. திருப்பரங்குன்றத்தின் சிக்கந்தர் தர்காவில் கந்தூரி விழாவில் இஸ்லாமியர்கள் ஆடு வெட்டினால் சங்கிகளுக்கு எரிகிறது. மதுரை பாண்டி கோவிலில் இந்துக்கள்தான் ஆடு வெட்டுகிறார்கள். இரு மதத்தினரின் வழிபாட்டு முறையும் ஒன்றாக உள்ளது. நமது கடவுள்களையும் பார்ப்பனமயமாக்க காவிகள் களமிறங்குகிறார்கள். அசைவம் சாப்பிடுபவன் இந்துவே அல்ல என்கிறார் எச். ராஜா.
உணவிலும் தீட்டுப் பார்க்கும் காவி பாசிஸ்டுகளை, திடீரென முருக பக்தராக அரிதாரம் பூசி, ‘இந்துக்களுக்காக’ அவதாரம் எடுக்கும் பாசிச கூட்டத்தை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த மாநாடு நடக்க உள்ளது. அதனால்தான் அமைதியை விரும்பும் அனைவரும் மாநாட்டில் தவறாமல் பங்கெடுக்க வேண்டும்.
கலவரம் நடந்தால் காவிகளுக்கு என்ன பலன்?
ஏற்கனவே மேலூரை சுற்றியுள்ள அரிட்டாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் டங்ஸ்டன் எடுப்பதற்காக வலம் வந்த வேதாந்தாவை அடித்து விரட்டி உள்ளனர் மதுரை மக்கள். மக்களின் பலம் அதன் ஒற்றுமையில்தான் அடங்கியுள்ளது என்பதை புரிந்து வைத்துள்ள காவி கும்பல் மக்களை பிளக்க மத வெறியை, பக்தியை கையில் எடுக்கிறது.
படிக்க:
🔰 தமிழ்நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கும் சங்பரிவார் கும்பல்!
🔰 குஜராத் வன்முறைகளும் திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டமும்!
அயோத்தியில் பாபர் மசூதி ஒரு பிரச்சினையாகவே இல்லாமல் இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரத்துவத்துடன் பழகி வாழ்ந்து வந்த போதிலும், காவி பாசிஸ்டுகள் திட்டமிட்டு வெறுப்பை விதைத்து, காவிக்குண்டர்களையும் பொறுக்கிகளையும் அணி திரட்டி மசூதியை இடித்ததோடு, அங்கு பல்லாண்டுகளாக நிலவி வந்த மத நல்லிணக்கத்தையும் சர்வ நாசமாக்கினார்கள்.
மதவெறி கலவரம் மூலமே வளரும் காவிகள்!
பார்ப்பன இந்து மதவெறியர்களான பாஜகவினர் மசூதி இடிப்பின் விளைவாகவும், பின்னர் சட்டபூர்வமாக நீதிமன்றத்தின் மூலமே அனுமதியும் பெற்று ராமர் கோயிலைக் கட்டி கும்பாபிஷேகத்தையும் நடத்தினர்.
சட்டபூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் தமது கையாட்களை பயன்படுத்தி தாக்குதல்களை தொடுப்பதன் மூலம் காவி பாசிஸ்டுகள் தேசிய அளவில் தமது செல்வாக்கையும் பெருக்கி கொண்டுள்ளனர். இந்துக்களுக்காகவே களம் காண்பதைப் போன்று ஒரு மாயத் தோற்றத்தையும் வடமாநிலங்களில் உருவாக்கி பராமரித்து வருகிறார்கள்.

கலவரங்களின் மூலமே கட்சியை வளர்க்கும் இத்தகைய வழிமுறையை கடந்த காலங்களில் தமிழகத்திலும் மண்டைக்காடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் அமல்படுத்தி உள்ளனர். இதன் பலனாக அப்பகுதியில் மட்டும்தான் தமக்கான அடியார்(ட்)களை உருவாக்கி பராமரிக்கவும் முடிகிறது.
இந்த அனுபவங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு மதுரையில் உள்ள மக்கள் உருவாக்கியுள்ள மதுரை மத நல்லிணக்க கூட்டமைப்பானது சரியான திசையில் பயணிக்கிறது.
சரியான பாதையில் அணிதிரளும் மதுரை மக்கள் !
பகுத்தறிவாளர்களும் கம்யூனிஸ்டுகளும் ஜனநாயகவாதிகளும் முப்போக்காளர்களும் இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது அவசியமானது.
அந்த வகையில் மக்கள் அதிகாரமும் இந்த மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் அறைகூவலை ஏற்று இப்பேரணி மற்றும் மாநாட்டில் பங்கெடுக்க உள்ளது. வாருங்கள்! காவிகள் நடுநடுங்க களம் காண்போம்!
இளமாறன்.