குஜராத் வன்முறைகளும் திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டமும்!

இஸ்லாமியர்களுக்கு எதிரான கொடிய நச்சுக் கருத்துக்களை பரப்பிய ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி குண்டர் படையின் வேலைபாணி வேறு எந்த கட்சிகளிடமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் மலையின் மேல் அமைக்கப்பட்டுள்ள சிக்கந்தர் தர்கா கந்தூரி வழிபாட்டுக்கு செல்பவர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு மழையின் புனிதத்தை கெடுக்கின்றனர் என்றும், விரைவில் அயோத்தி பாபர் மசூதி போல சிக்கந்தர் தர்கா இடிக்கப்படும் என்று பார்ப்பன மத வெறியன் எச் ராஜா கூச்சலிடுகின்ற அளவிற்கு நிலைமை மாறி இருக்கிறது.

“பெரியார் பிறந்த மண்” என்று இந்தியாவில் தலைநிமிர்ந்து நிற்கின்ற தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணி குண்டர் படையினரால் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

திடீரென்று ஒரு மணி நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் திருப்பரங்குன்றத்தில் ஒன்று கூடினார்கள். முருகனுக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறிக் கூச்சல்களும் முழக்கங்களும் போடப்பட்டன. இறுதியில் நிகழ்ச்சி ‘அமைதியாக’ முடிந்திருக்கிறது.

ஆர்எஸ்எஸ் மற்றும் பார்ப்பன மதவெறி கும்பலால் நடத்தப்படுகின்ற கலவரங்களின் வரலாற்றை பின்னோக்கி திரும்பிப் பாருங்கள்.

குஜராத் குல்பர்க் சொசைட்டியில் நடந்தது என்ன?

“2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று, ஒரு கும்பல் இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் குல்பர்க் சொசைட்டியைத் தாக்கினர். இந்த வன்முறையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சான் ஜாஃப்ரி உட்பட மொத்தம் 69 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க பல இஸ்லாமியர்கள் எஹ்சான் ஜாஃப்ரியின் வீட்டில் தஞ்சம் புகுந்தனர்.

ஆனால், குல்பர்க் சொசைட்டியை சுற்றி வளைத்து எல்லா பக்கங்களிலிருந்தும் அந்த கும்பல் தாக்கியது. இதில் பலர் உயிருடன் எரிக்கப்பட்டனர்.

அப்போது குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி மற்றும் பலரை, அவரது கணவர் எஹ்சான் ஜாஃப்ரி தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் யாரும் அவருக்கு உதவவில்லை என்றும் ஜாகியா ஜாஃப்ரி தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 2006 ஜூன் மாதம், அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி உட்பட 63 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய குஜராத் காவல்துறை தலைமை இயக்குநரிடம் ஜாகியா ஜாஃப்ரி மனு அளித்தார். இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க நரேந்திர மோதி உட்பட அனைவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

ஜாகியாவின் மனுவை மாநில காவல்துறையின் டிஜிபி நிராகரித்தார். இதையடுத்து இந்த விஷயத்தை சட்ட ரீதியாக தொடர்ந்த ஜாகியா, குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

2007-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றமும் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. நீதி கேட்டு போராடி மன உலைச்சலுடன் வாழ்ந்து வந்த ஜாகியா சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார்.

“குஜராத்தில் நடந்தது நாடு முழுவதும் நடக்காதா என்ன?… 2002-ல் என்ன நடந்தது என்பதை நாடு மறந்துவிட்டதா? ஏற்கனவே இது மே.வங்கத்தில் நடக்கத் தொடங்கிவிட்டது. வேண்டுமானால் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அவர்கள் உருவாக்கும் இந்து ராஷ்டிரத்துக்கு முன்மாதிரிதான் குஜராத்” என்று சொல்கிறார் 2002-ல் நரோதா காம் கொலைக்களத்திலிருந்து உயிர் தப்பிய இம்தியாஸ் குரேஷி.

படிக்க:

🔰  திருப்பரங்குன்றத்தை கலவர குன்றாக்க முயலும் காவிகள்!

2002-ல் நடைபெற்றதைப் போன்ற வெளிப்படையான வன்முறை மீண்டும் ஒரு முறை குஜராத்தில் நடக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதைச் சான்றுகள் காட்டுகின்றன. அல்ப சங்கியா அதிகார் மஞ்ச் என்ற குஜராத்தை சேர்ந்த மனித உரிமை அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கை, அந்த மாநிலமே எங்ஙனம் மதரீதியாகப் பிளவுபட்டிருக்கிறது என்பதைத் தரவுகளுடன் விளக்குகிறது.

இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்துவதிலும் சகிப்பின்மையை அதிகரிப்பதிலும் சிறு அளவிலான கலவரங்கள்தான் பெரும்பங்கு வகிக்கின்றன. அதே நேரத்தில் குஜராத்தில் மதக் கலவரமே நடப்பதில்லை என்பது போன்ற ஒரு பொய்த்தோற்றத்தையும் இந்த உத்தியின் மூலம் வெளியுலகிற்குக் காட்ட முடிகிறது என்று கூறுகிறது அந்த அறிக்கை.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் அளிக்கும் புள்ளி விவரங்களின்படி 1998 முதல் 2016 வரையிலான காலத்தில் குஜராத்தில் 35,568 மதக் கலவரங்கள் நடந்துள்ளன. 2014-ம் ஆண்டு மட்டும் 164 கலவரங்களில் 305 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தக் கலவரங்கள் நடைபெற்ற இடங்கள் எல்லாம் 2002 படுகொலையின்போது அமைதியாக இருந்தவை என்பதும், சமூக ஊடகங்கள்தான் மதத் துவேசத்தைப் பரப்புவதில் பெரும்பங்கு வகித்திருக்கின்றன என்பதும் கவனிக்கத்தக்கவை”. என்று 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத புதிய ஜனநாயகத்தில் எழுதியிருந்தோம்.

மேலே குறிப்பிட்டதை போல மனித கறியை தின்று, பச்சை ரத்தத்தை குடிக்க துடித்துக் கொண்டுள்ள பார்ப்பன (இந்து) மதவெறி பாசிஸ்டுகள் வடக்கில் காஷ்மீர் முதல் தெற்கில் திருப்பரங்குன்றம் வரை தனது பயங்கரவாத நடவடிக்கைகளை அமுல்படுத்த துவங்கி விட்டனர்.

“வடக்கில் தலைக்கு (அதாவது காஷ்மீருக்கு) பாடம் புகட்டி விட்டோம். தெற்கில் காலுக்கு (அதாவது தமிழகத்திற்கு) பாடம் புகட்ட வேண்டியது பாக்கியுள்ளது” என்று கொக்கரித்த மோடி அமித்ஷா கும்பல் தமிழகத்தை குறிவைத்து ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளின் நிகழ்ச்சி நிரலை அமல்படுத்துகிறது.

இஸ்லாமிய மக்கள் வடமாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் தனது உயிரைப் பிடித்துக் கொண்டு நடமாடுகின்ற கொடூரமான சூழல் படிப்படியாக தமிழகத்திலும் உருவாக்கிக் கொண்டுள்ளது என்பதின் நேரடி சாட்சி தான் திருப்பரங்குன்றம்.

இஸ்லாமியர்களும் தவறு செய்கிறார்கள். இந்துக்களும் விடாமல் போராடுகிறார்கள் என்ற கருத்தை முன்வைக்கின்ற வகையில் பொதுவாக மத நல்லிணக்கம் என்று பேசுவது பார்ப்பன மதவெறி பாசிச கும்பலை வளர்க்க உதவுமே தவிர நல்லிணக்கத்தை ஒருபோதும் உருவாக்காது.

திருப்பரங்குன்றம் மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக முகாமிட்டு படிப்படியாக வீடு வீடாக பிரச்சாரம் செய்து இஸ்லாமியர்களுக்கு எதிரான கொடிய நச்சுக் கருத்துக்களை பரப்பிய ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி குண்டர் படையின் வேலைபாணி வேறு எந்த கட்சிகளிடமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிறுவ துடிக்கின்ற ஆர்எஸ்எஸ் பாஜக பாசிச பயங்கரவாதிகளுக்கு எதிராக தமிழகம் முன்னிலையில் நிற்கிறது என்று பெருமைப்பட்டுக் கொள்வதற்கு பொருத்தமான சூழல் தற்போது இல்லை என்பது வெட்கித தலை குனிய வேண்டிய நிலைமையாகும்.

பாசிச பயங்கரவாதிகளை என்ன விலை கொடுத்தேனும் நேருக்கு நேர் எதிர்த்து முறியடிப்பதற்கு தயாராக வேண்டிய அவசரமான, அவசியமான காலகட்டத்தில் தமிழகம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

  • தமிழ்ச்செல்வன்

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here