கோட்சேவை புகழ்ந்த  பேராசிரியருக்கு விதிமுறைகளை மீறி பதவி உயர்வு தந்த கோழிக்கோடு NIT!

0
கோட்சேவை புகழ்ந்த  பேராசிரியருக்கு விதிமுறைகளை மீறி பதவி உயர்வு தந்த கோழிக்கோடு NIT!
கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் சைஜா அந்தாவன்

காந்தியை சுட்டுக்கொன்ற ஆர்.எஸ்.எஸ். கொலை வெறியன் நாதுராம் கோட்சேவை பெருமைப்படுத்தும் வகையில் சமூக ஊடகத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து ஜாமீனில் வெளிவந்த போதிலும் கேரளாவின் கோழிக்கோடு தேசியத் தொழில்நுட்ப கழகத்தின்(NIT)  பேராசிரியரான சைஜா மத்திய  நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை தேர்ந்தெடுத்ததில் பணிமூப்பு விதிமுறைகள் மீறப்பட்டதாக விமர்சனங்கள் வருகின்றன.

கோழிக்கோட்டில் உள்ள NIT யில் இயந்திரப் பொறியியல் துறையின் மூத்த  ஆசிரிய உறுப்பினரான சைஜா காந்தியின் நினைவு தினமான தினமான ஜனவரி 30, 2024 அன்று பேஸ்புக்கில் “இந்தியாவை காப்பாற்றியதற்காக கோட்சேவை பற்றி பெருமைப்படுகிறேன்” என்று ஒரு கருத்தை பதிவிட்டார்.

பேராசிரியர் சைஜாவுக்கு எதிராக இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு (DYFI) இளைஞர் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு (MSF) உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகளால் நகரின் பல காவல் நிலையங்களில் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டன.

ஷைஜா மீது வழக்கு

புகார்களைத் தொடர்ந்து குன்னமங்கலம் காவல்துறையினர் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி பிரிவு 153 கீழ் வன்முறையை தூண்டும்  நோக்கத்துடன் பதிவிட்டதாக வழக்கு பதிவு செய்தனர்.

பிப்ரவரி 2024 அன்று குன்னமங்கலம் நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெறுவதற்கு முன்பு அவர் தனது வீட்டிலும் காவல் நிலையத்திலும் விசாரிக்கப்பட்டார்.

அந்த பதிவு உருவாக்கிய சர்ச்சையை தொடர்ந்து அவர் அந்த கருத்தை நீக்கிய போதிலும் அதன் ஸ்கிரீன்ஷாட்கள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின.

சைஜாவின் கருத்தை விசாரிக்க NIT-C ஒரு குழுவையும் அமைத்தது.

“மகாத்மா காந்தி பின்பற்றிய கொள்கைகள் மற்றும் மதிப்புகளுக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் நிறுவனம் ஆதரிக்கவில்லை என்று நிறுவனத்தின் நிர்வாகம் கூறியிருந்தது.

கேள்விக்குரிய கருத்து தொடர்பான புகார்களை தீர்க்க சம்பவத்தின் பல்வேறு அம்சங்களை முழுமையாக விசாரிக்க நிறுவனம் ஒரு குழுவை  அமைத்துள்ளது. இது ஒரு விரிவான அறிக்கையை தயாரிக்கும் மேலும் அதன் ஆய்வுகளின் அடிப்படையில் உயர் அதிகாரிகளால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டது.

கோட்சேவால் ‘ஞானம்’ பெற்ற பேராசிரியர்!

அதே நேரத்தில் சைஜா தனது கருத்து பொருத்தமற்றது அல்ல என்று கூறியிருந்தார்.

காந்தியின் கொலையை பாராட்டுவதற்காக நான் கருத்து தெரிவிக்கவில்லை. நான் ஒருபோதும் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. கோட்சேவின் ‘நான் ஏன் காந்தியை கொன்றேன்’ என்ற புத்தகத்தை படித்திருந்தேன். கோட்சேவும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் தான்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“அவரது புத்தகத்தில் சராசரி மனிதனுக்கு தெரியாத ஏராளமான தகவல்களும், வெளிப்பாடுகளும் உள்ளன. கோட்சே தனது புத்தகத்தில் நமக்கு அறிவூட்டி உள்ளார். இந்த பின்னணியில் வழக்கறிஞரின் பேஸ்புக் பதிவில் நான் கருத்து தெரிவித்தேன். மக்கள் எனது கருத்தை திரித்துக் கூற தொடங்கியதை உணர்ந்ததும் அதை நீக்கிவிட்டேன்” என்று அவர் மேலும் கூறினார்.

படிக்க:

🔰  காந்தி படுகொலை: திகாம்பர் பாட்கேயின் ஒப்புதல் வாக்குமூலம் | மீள்பதிவு
🔰  மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லும் ஐஐடி இயக்குநர்!

கடந்த 25 ஆண்டுகளாக NIT-C ஆசிரிய உறுப்பினராக இருக்கும் பேராசிரியர் சைஜா தனது பதவி குறித்த பரபரப்பு தலித் மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டதால் வளாகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட அமைதியின்மையுடன்  தொடர்பு உடையது என திசைதிருப்புகிறார்.

இதுவரை நிறுவனத்தில் இருந்து யாரும் தன்னிடம் விளக்கம் கேட்கவில்லை என்று அவர் கூறினார். நான் எந்த அரசியல் கட்சியின் ஆதரவாளரும் அல்ல நான் ஒரு கல்வியாளர் என்று அவர் கூறினார்.

இனிமேலும் அவரிடம் விளக்கம் கேட்டாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்பதே உண்மை.

ஆர்.எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொள்ளாமல் பல்வேறு கல்வி நிறுவனங்களில் உட்புகுந்துள்ளனர். அல்லது பாசிச பாஜகவால் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அதற்கான நோக்கம் கல்வி நிறுவனங்களை இந்துத்துவமயமாக்குவதும் கல்விப் பயிலும் மாணவர்களை மதவெறியர்களாகவும், பகுத்தறிவற்றவர்களாகவும் உருவாக்குவதுமே.

ஏற்கனவே கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தை காவி மயமாக்குவதை எதிர்த்து மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். தற்போது ‘கோட்சே ஆதரவு’ பேராசிரியர் சைஜாவுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வு போராட்டத்தின் அவசியத்தை உணர்த்துகிறது. கல்வி நிறுவனங்களில் புகுந்திருக்கும் காவி கும்பலை வெளியேற்ற நாடு தழுவிய அளவில் மாணவர்கள் போராட்டம் அவசியம்.

மூலம்: SOUTHFIRST

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here