மாவோயிஸ்டுகள்- பழங்குடிகள் மீதான உள்நாட்டுப் போரை உடனே நிறுத்து! ஜூன் 5 பொதுக்கூட்டம்

கார்ப்பரேட்களின் கனிமவள கொள்ளைக்காக சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல் நாளை பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்பதே உண்மை

ஜீன் 5 திருச்சி கண்டனப் பொதுக்கூட்ட பிரசுரம்!
மாவோயிஸ்டுகள்- பழங்குடிகள் மீதான உள்நாட்டுப் போரை உடனே நிறுத்து!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

இந்தியாவின் ஜார்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களின் புதைந்து கிடக்கும் இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் அதானி,அம்பானி, ஜிண்டால்,வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பல்கள் சூறையாடுவதற்கு மிகப்பெரும் தடையாக இருந்து வருகின்ற பழங்குடியின மக்களையும் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து வந்த மாவோயிச அமைப்பபு போராளிகளையும் நரவேட்டையாட பாசிச பாஜக கும்பலால் கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவாதத் திட்டமே ஆபரேஷன் காகர்.

அதாவது,கடந்த 10 ஆண்டுகளில் ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கனிம வளங்களை சூறையாடுவற்கு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் 270 – ற்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டாலும் கார்ப்பரேட்டுகளால் கனிம வளங்களை தங்கு தடையின்றி சூறையாட முடியவில்லை. இதனால் ஒன்றிய அரசை கார்ப்பரேட்டுகள் நெருக்குகின்றனர். கார்ப்பரேட்டுகள் நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க தடையாக இருக்கும் சொந்த நாட்டு மக்கள் மீதே ஆபரேஷன் காகர் என்ற பெயரில் உள்நாட்டு போரை தொடுத்துள்ளது பாசிச பாஜக அரசு.

இந்த கார்ப்பரேட் நலன்களுக்கான திட்டத்திற்கு, இந்திய மக்களின் வரிப் பணத்தால் கட்டியமைக்கப்பட்டுள்ள துணை இராணுவப் படைகள் சொந்த நாட்டு மக்களான பழங்குடி மக்களை கொல்லும் கார்ப்பரேட் கூலிப்படைகளாக மாற்றப்பட்டுள்ளன. துணை ராணுவம் ஒரு மாவோயிஸ்ட் போராளியையோ அல்லது பழங்குடி மக்களையோ மாவோயிஸ்ட் என்று கூறி படுகொலை செய்தால் அந்த படைக்கு ரூபாய் 02 லட்சம் முதல் 25 லட்சம் வரை பணத்தை கூலிப்படைக்கு தருவது போல் அள்ளி வீசி வருகிறது.இதனால் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் துணை ராணுவப் படை அப்பாவி பழங்குடி பெண்களை கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி கொன்றுவிட்டு மாவோயிஸ்ட் என்று கணக்கு காட்டும் கொடுமையும் பஸ்தரில் நடந்துகொண்டிருக்கிறது.

எதிரி நாட்டு படைகள் மீது பயன்படுத்தவே யோசிக்க வேண்டிய வெடிபொருட்களை சுமந்து சென்று வெடிக்கும் ஆள் இல்லா ட்ரோன்களை சொந்த நாட்டு மக்கள் மீது பயன்படுத்தி அப்பாவின் பழங்குடியின மக்களை கொன்று குவித்து வருகிறது பாசிச பாஜக.ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 07 ஆம் தேதி பிஜாப்பூர் மாவட்டத்தின் மோர்கெமெட்டா மலைகளில் அமைந்துள்ள நான்கு கிராமங்களில் ட்ரோன்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டு பழங்குடி மக்கள் கொல்லப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளியாகி கடும் கண்டனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதும் வெடிமருத்து சுமந்து செல்லும் ஆளில்லா ட்ரோன்களை பயன்படுத்தி வருகிறது என்பதால் அப்பகுதி முழுவதும் நாள்தோறும் துப்பாக்கி மற்றும் குண்டு வெடிச் சத்தங்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன என்கின்றனர் மனித உரிமை அமைப்புகள் மற்றும் நாட்டுப்பற்றுள்ள சமூக ஆர்வலர்கள்.

கடந்த ஏப்ரல் முதல் பஸ்தாரின் அபுஜ்மத் மற்றும் நாராயண்பூர் பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள், உதவியாளர்கள், மாவோயிஸ்டுகளுக்கு தகவல் கொடுப்பவர்கள், உணவு உதவி செய்பவர்கள் என்று பல்வேறு பெயர்களில் முத்திரை குத்தப்பட்டு நூற்றுக்கணக்கான பழங்குடி மக்கள் தங்களது சொந்த நிலத்திலிருந்தும், காடுகளிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர், கடந்த சில ஆண்டுகளில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்கிறார் பழங்குடி மக்களுக்காக போராடுகின்ற சமூக செயற்பாட்டாளர் சோனி சோரி.

படிக்க:

🔰 மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் கொலைகளை எதிர்த்துப் போராடுவோம்!

காந்திய ஆர்வலரான ஹிமான்ஷு, ப்ரண்ட்லைன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,”சத்தீஸ்கரில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 140-க்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்கள் மாவோயிஸ்டுகள் என்ற முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார் என்பதிலிருந்து மாவோயிஸ்ட் என்ற பெயரில் பழங்குடி மக்கள் மீது உள்நாட்டு போர் நடத்தப்பட்டு வருகிறது என்பது தெளிவாகிவிட்டது.

மறுபுறம்,அரசு படைகளால் படுகொலை செய்யப்படும் பழங்குடியின மக்களின் உடல்கள் யாருக்கும் தரப்படாமலும், அடக்கம் செய்யப்படாமலும் அப்படியே போடப்படுகிறது. இதனால் மக்களின் உடல்கள் அழுகி புழு புழுத்து நாறுகிறது. ஆனால் நாம் இதனை ‘நக்சல் ஒழிப்பு’ என்று அங்கீகரித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

பாசிச பாஜக உள்நாட்டு போர் நடத்தும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகள் முழுவதும் இராணுவ மயமாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பஸ்தாரில் மட்டும் 182 இடங்களில் தற்காலிக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்கிறது அரசின் புள்ளி விவரங்கள்.இந்த இராணுவ முகாம்கள் மூலம் ட்ரோன்கள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களுடன் மக்களைத் தொடர்ந்து கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்து எதிரி நாட்டுப் படைகளை கண்காணிப்பதைப் போல சொந்த நாட்டு பழங்குடி மக்களை கண்காணித்து அகதிகள் போல் நடத்துகிறது பாசிச பாஜக அரசு.

பஸ்தார் பிரதேசத்தில் உள்ள மலைப்பகுதியில் என்ன நடக்கின்றது என்பதை பகிரங்கமாக வெளியில் அறிவிப்பதற்கு எந்த வழியும் இல்லை. அரசாங்கம் முன்வைக்கின்ற தகவல்கள் மற்றும் இந்தியா டுடே, தி வீக் உள்ளிட்டு ஓரளவு நேர்மையான பத்திரிக்கையாளர்கள் வெளிப்படுத்துகின்ற செய்திகள் அடிப்படையிலேயே இந்த படுகொலை மற்றும் அடக்குமுறை பற்றிய செய்திகள் நமக்கு வெளி வருகின்றன.

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடி மக்கள் மீது அரசின் தாக்குதல் மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதை உணர்ந்த மாவோயிஸ்ட் கட்சி, கடந்த மார்ச் 28 ஆம் தேதி “அரசு மாவோயிச எதிர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்துவதாகவும், புதிய இராணுவ முகாம்களை நிறுவுவதையும் நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்” என கடிதம் வெளியிட்டிருந்தது. ஆனால், பாசிச பாஜக அரசு,மாவோயிஸ்டுகளி்ன் பேச்சுவார்த்தைக்கு தயார் எனும் கோரிக்கையை நிராகரித்து விட்டது. மாறாக, ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என உத்தரவிட்டதுடன் உள்நாட்டு போரை தீவிரப்படுத்தியது. இதன் உச்சகட்டமாக மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பசவராஜ் உள்ளிட்டு 400-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 7000க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இன்று கார்ப்பரேட்களின் கனிமவள கொள்ளைக்காக சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல் நாளை பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்பதே உண்மை.

இதனை வேடிக்கை பார்த்தால் தமிழகத்தில் அகர்வால் எனும் முதலாளிக்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராடிய மக்கள் மீது போலீசு நடத்திய துப்பாக்கி சூடு போன்ற நடவடிக்கைகள் மட்டுமின்றி துணை ராணுவமும் இணைந்து கார்ப்பரேட் முதலாளிகளின் மூலதனத்தை பாதுகாப்பதற்கு படுகொலை செய்யும் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும்.

எனவே நாட்டின் கனிம வளங்களை பாதுகாக்கும் சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் பழங்குடி இன மக்களின் மீதான உள்நாட்டுப் போரை நிறுத்து என்ற முழக்கத்தை இந்தியா முழுக்க ஒலிக்கச் செய்வோம். கார்ப்பரேட் நலன்களுக்காக சொந்த நாட்டு மக்கள் மீது போர் தொடுத்த பாசிச பாஜக அரசின் மீது விசாரணை நடத்த வேண்டும் என முழங்குவோம்.நாட்டு வளங்களையும் மக்களையும் பாதுகாக்க உரிமை குரல் எழுப்புவோம்.

பழங்குடி மக்களை காடுகளில் இருந்து விரட்டியடித்து, கனிம வளங்களை கார்ப்பரேட் கொள்ளையடிக்கவே பாஜக மோடி அரசின் ஆப்ரேஷன் ககர்!

மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பசவராஜ் மற்றும் நூற்றுக்கணக்கான தோழர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மீது நடத்தப்பட்ட நாராயண்பூர் படுகொலை உள்ளிட்ட படுகொலைகள் குறித்து நீதி விசாரணை நடத்து!

மாவோயிஸ்டுகள் எனும் பெயரில் அப்பாவி மலைவாழ் மக்கள் மீதான தாக்குதலை நிறுத்து!

மாவோயிஸ்டுகள் மீதான ராணுவத் தாக்குதலை நிறுத்தி, பேச்சுவார்த்தை நடத்து!

இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதை நிறுத்து, மலைவாழ் மக்கள் விரோத ஒப்பந்தங்களை ரத்து செய்!

மக்கள் அதிகாரம்இந்திய பொதுவுடமைக் கட்சி  (எம் எல்) லிபரேசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here