B.J.P – இந்து முன்னணி மதுரை முருகன் மாநாடு!
தமிழகத்தில் மத கலவரத்திற்கான ஏற்பாடு!

ந்த முழக்கத்தின் கீழ் தருமபுரி மாவட்டம் அஞ்செட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் மாவட்ட செயலர் தோழர் சுரேஷ் அவர்கள் தலைமை தாங்கினார். தலைமை உரையில், ”B.J.P இந்து முன்னணி நடத்துகின்ற மாநாடு முருகன் மீது கொண்ட பக்தி உணர்வில் நடத்தப்படவில்லை. மாறாக தமிழகத்தில் மத கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சி பிடிப்பதற்காக ’முருகபக்தர்கள்’ மாநாட்டை நடத்துகிறது. தமிழகத்தில் கடந்த காலங்களில் மண்டைக்காடு கலவரம் தொடங்கி கோவை, திருநெல்வேலி என பல மாவட்டங்களில் இவர்கள் கலவரங்களை நடத்தியுள்ளார்கள். கலவரத்தை நடத்தித்தான் கட்சியை வளர்க்கிறார்கள். ஒரு தாய் மக்களாக வாழ்ந்த இந்து நாடார் கிறிஸ்துவ நாடார் மக்களுக்கு இடையில் பெரும் கலவரத்தை நடத்தியது இந்து முன்னணி. கடவுளின் பெயரால் பக்தியின் பெயரால் விநாயகர் ஊர்வலத்தை கலவர ஊர்வலமாக நடத்துகிறார்கள். நம்மிடம் இருக்கின்ற பக்தியை பயன்படுத்தி இந்தப் பகுதியில் இருக்கின்ற முஸ்லிம் சகோதரர்கள் இடையே பிளவை ஏற்படுத்துவார்கள். எனவே நாம் B.J.P கட்சியை புறக்கணிக்க வேண்டும்” என்று பேசினார்.

அடுத்தாக, வி.வி.மு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர். ராமலிங்கம் கண்டன உரையில், ” B.J.P – R.S.S அமைப்புகள் மக்கள் பிரச்சினை பற்றியோ, அல்லது விவசாயிகள் பிரச்சனை பற்றியோ என்றைக்கும் போராடியது கிடையாது. மாநாடு நடத்தியது கிடையாது. மாறாக தமிழகத்தில் கலவரத்தை தூண்டுவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறார்கள். ஆளுநர் ரவி, அண்ணாமலை போன்றோர்கள் திமுக மீது குறைகளைச் சொல்லி எப்படியாவது கட்சியை பலப்படுத்துவதற்காக பேசினார்கள். இப்பொழுது நயினார் நாகேந்திரன் பிஜேபி தலைவராக வந்த பிறகு பொய்யான பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார். இவர்களை மக்கள் நம்ப வேண்டாம்” என்று கண்டித்து பேசினார்.

தோழர் மாயாண்டி மக்கள் அதிகாரம் மாவட்ட இணை செயலரது கண்டன உரையில், ”அஞ்செட்டி பகுதியில் காவல் துறை தொடர்ந்து ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் போன்றவற்றிற்கு அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து பேசினார். குறிப்பாக அஞ்செட்டி பகுதி தமிழகத்தில் இணைக்காமல் தனி தீவாக உள்ளது. இதற்கான ஆட்சி அதிகாரம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே தமிழக முதல்வர் விரைவில் இந்தப் பகுதியை தமிழகத்தோடு இணைக்க வேண்டுமென உங்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்று அஞ்செட்டி காவல்துறையை எள்ளி நகையாடினார். மேலும் பிஜேபி நடத்துகின்ற முருகன் மாநாடு பக்தியின் நோக்கம் அல்ல. ஓட்டுக்கான நோக்கம். முருகனுக்கு மாநாடு நடத்தினால் மூன்று ஓட்டு தான் விழும். ராமனின் அப்பனான தசரதனுக்கு மாநாடு நடத்தினால் 60,000 ஓட்டு கிடைக்கும்” என்று R.S.S – B.J.P நோக்கத்தை கிண்டலும் கேலியுமாக வெளிப்படுத்தினார்.

தோழர் சத்யா கண்டன உரையில், ”R.S.S – B.J.P கும்பல் ராமன் கோயிலை கட்டுவோம் என்று 90-களில் அத்வானி தலைமையில் ரத யாத்திரை நடத்தி இந்தியா முழுமைக்கும் கலவரத்தை தூண்டியது. அப்பாவி இஸ்லாம் மக்களை படுகொலை செய்தது. 92 இல் பாபர் மசூதியை இடித்தது. 2002-ல் குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாம் மக்களை கொன்று குவித்தது.  ஒப்பீட்டளவில் தமிழகத்தில் மதக் கலவரங்களுக்கு இடம் தராத தமிழ்நாட்டில் மண்டைக்காடு கோவை பிறகு திருப்பரங்குன்றம் முருகனை வைத்து கலவரத்தை ஏற்படுத்தி 2026 இல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று பகிரங்கரமாக பிஜேபி பேசிக் கொண்டிருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா திருப்பரங்குன்றம் பிரச்சினையை பேசுகிறார். சிக்கந்தர் மசூதியை அகற்றுவோம் என்று பேசுகிறார். எனவே அவர்களின் நோக்கம் மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பது அல்ல. பெட்ரோல், டீசல், கேஸ், உள்ளிட்டவை மட்டுமின்றி அரிசி, காய்கறிகளின் விலையை முருகன் உயர்த்தவில்லை. எனவே அவர்களின் நோக்கம் மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பது அல்ல. கலவரத்தை உருவாக்குவது, மக்களை பதற்றத்துடன் வைத்திருப்பதுதான். உண்மையான முருக பக்தர்கள் இந்த மாநாட்டை நிச்சயம் புறக்கணிப்பார்கள்” என்று இந்த மாநாட்டை கண்டித்து இறுதி உரை ஆற்றினார்.

சென்னையில் மக்கள் அதிகாரம் எச்சரிக்கை ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தை மதவெறி கலவர பூமியாக மாற்ற துடிக்கும் ஆன்மீக மாநாடான இந்து முன்னணியின் மதுரை முருகன் மாநாட்டை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற வகையில் இன்று 19.6.2025 மாலை 5 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மக்கள் அதிகாரம் தலைமையில் எச்சரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் அதிகாரத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஆனந்தன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ் தேச மக்கள் முன்னணி, மே 17 இயக்கம், தமிழ் வழி கல்வி இயக்கம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம் ஆகிய அமைப்புகளின் முன்னணியாளர்கள் கலந்துக் கொண்டு கண்டன தமிழக மக்களுக்கு எச்சரிக்கை உரையாற்றினார்கள்.

பெரம்பலூர் கண்டன ஆர்ப்பாட்டம்!

பெரம்பலூரில் மக்கள் அதிகாரம் சார்பாக நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தை மாவட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைத்து நடத்தினர். இதில் பல்வேறு ஜனநாயக சக்திகளும் மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் செழியன் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர் லதா அவர்களும் கலந்துக் கொண்டனர். கண்டன முழக்கத்துடன் தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் உரையாற்றினர்.

கடலூர் ஆர்ப்பாட்டம்

நீலகிரியில் ஆர்ப்பாட்டம்

மதுரையில் ஜீன் 22 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ், பாஜக நடத்த உள்ள முருகன் மாநாடு மத நல்லிணக்கத்திற்கு ஊருவிளைவிக்கும் என்கிற அடிப்படையில் நீலகிரியில் மக்கள் அதிகாரம் சார்பாக இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் தோழர் ஆனந்தராஜ் தலைமை உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். இதில் பல்வேறு ஜனநாயக சக்திகள் மற்றும் தோழமை அமைப்புகள் கலந்துக் கொண்டனர்.

இறுதியாக, கார்ப்பரேட் – காவி பாசிஸ்டுகளான இந்துத்துவா சக்திகளை வீழ்த்துவது என்பது களத்தில் மோதி தான் வீழ்த்த வேண்டும் என்ற புரிதலோடு ஆர்ப்பாட்டம் நிறைவு செய்யப்பட்டது.

தொடர்புடைய கட்டுரைகள்:

🔰 சங்கிகளின் முருகன் மாநாடு: தடி ஊர்வலம் மூலம் முறியடிப்போம்!

🔰 அயோத்திக்கு ராமன்! மதுரைக்கு முருகன்! மீண்டும் எரியூட்டப்படும் அபாயத்தில் மதுரை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here