
திருப்புவனம் – மடப்புரத்தில் நடந்தது தான் என்ன?
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகில் உள்ள மடப்புரம் காளி கோவில் அப்பகுதியில் பக்தர்களிடம் மிகவும் புகழ் பெற்றதாகும். அதிலும் வெள்ளிக்கிழமை என்றால் கூட்டம் அலைமோதும்.
கடந்த 27-06- 2025 வெள்ளிக்கிழமை அன்று காலையில் திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி என்ற மூதாட்டியும் அவரது மகள் ஜீவிதாவும் மடப்புரம் காளி கோவிலில் சாமி கும்பிட காரில் வந்துள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக அங்கே ஒப்பந்த காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார் (29) என்பவரின் உதவியை நாடிய பெண்கள், தங்களது காரை வேறொரு இடத்தில் நிறுத்துவதற்கு உதவுமாறு கேட்டு கார் சாவியைக் கொடுத்துள்ளனர். அஜித்துக்கு கார் ஓட்டத் தெரியாததால் அவர் வேறு ஒரு கார் ஓட்டத் தெரிந்த நபரிடம் சாவியைக் கொடுத்து காரை வேறு இடத்தில் நிறுத்தச் செய்துள்ளார்.
பின்பு சாமி கும்பிட்டு விட்டு அஜித்திடம் காரை மீண்டும் எடுத்து தருமாறு அப்பெண்கள் கோரிய போது மீண்டும் அவர் முன்பு போலவே கார் ஓட்டத் தெரிந்த நபரின் உதவியுடன் காரை எடுத்து இப் பெண்களிடம் ஒப்படைத்துள்ளார். அத்துடன் அப்பெண்கள் காரில் புறப்பட்டு சென்று விட்டனர்.
அஜித்துக்கு சிவகாமி வடிவில் வந்த மரண அழைப்பு!
காலை 11:00 மணிக்கே சாமி கும்பிட்டு விட்டு காரில் புறப்பட்டு சென்று விட்ட பெண்கள் 27-06- 2025 பகல் 2 மணிக்கு திருப்புவனம் காவல் நிலையத்தில் காளி கோவிலில் சாமி கும்பிட சென்ற பொழுது தங்கள் காரில் இருந்த ரூ. 2500/-ம் பத்துப் பவன் நகையும் திருடு போய்விட்டதாக வாய் மூலமாக புகார் அளிக்கின்றனர். உடனே போலீஸ் கேட்டுக்கொண்டதற்கிணங்க கோவில் நிர்வாக அலுவலர்கள் அதே நாளில் மாலை 7 மணிக்கு அஜித்தை திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கின்றனர்.
‘ஸ்காட்லாந்து யார்ட்’ போலீசுக்கு(?) அடுத்த ‘நம்ம’ தமிழ்நாடு போலீஸ்?) செய்தது என்ன?
திருப்புவனம் ஆய்வாளர் மற்றும் சார் ஆய்வாளர் போலீசுக்கே ‘உரிய’ முறையில் அந்த அப்பாவி இளைஞனை ‘விசாரணை’ செய்து முடித்த கையோடு, மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளரின் சிறப்புப் படையினரிடம் அஜித்குமார், அவரது தம்பி நவீன் குமார், காரை நிறுத்த உதவியவர் மற்றும் இருவரென மொத்தம் ஐவரை விசாரணைக்காக கூட்டிச் சென்று ஒப்படைக்கப்பட்டு, திருப்புவனம் அருகில் உள்ள சீச்சாச்சேரிகளம், மடப்புரம் விலக்கு, மாணவர் விடுதிக்குப் பின்புறம், பேருந்து டிப்போ பின்புறம் ஆற்றோரப் பாதை எனப் பற்பல இடங்களில் வைத்து அடுத்த நாள் மாலை வரை கொடூரமான முறையில் அடித்து சித்திரவதை செய்துள்ளனர்.
சித்திரவதையைத் தாங்க மாட்டாத அந்த அப்பாவி இளைஞன் அஜித், மக்கள் இருக்கும் இடம் சென்று விட்டாலாவது யாராவது தலையிட்டு காப்பாற்றி விடமாட்டார்களா என்ற நப்பாசையில், தன்னை மடப்புரம் கோவில் உதவி ஆணையாளர் அலுவலகம் பின்புறம் கூட்டிச் சென்றால் நகைகளை எடுத்துத் தருகிறேன் எனக் கற்பனையாகக் கூறியுள்ளார்.
அங்கே சென்று மாட்டுக் கொட்டையில் வைத்து போலீசார் கேட்டபோது ‘உங்கள் சித்திரவதைக் கொடுமைகளைத் தாங்க மாட்டாமல் தான் அவ்வாறு கூறினேன்; திருட்டுக்கும் எனக்கும் துளி அளவு எவ்விதச் சம்பந்தமும் இல்லை’ என்று கதறி அழுதுள்ளார். அப்போது தண்ணீர் கேட்டு கதறி அழும் பொழுது தண்ணீரில் மிளகாய் பொடியை நிறைய கலந்து கொடுத்து இருக்கிறது இந்த ஈவிறக்கமற்ற அராஜகப் போலீஸ் கும்பல்.
‘வீர தீரப் போலீஸ்’ விட்டு விடுமா என்ன?
ஆத்திரத்தை வலிய வரவழைத்துக் கொண்ட போலீஸ், அஜித் குமார் காலில் ஒருவரும், தலைப்பகுதியில் ஒருவரும் குப்புறப் படுக்க வைத்து ஏறி நின்று பலம் கொண்ட மட்டும் இரும்பு ராடால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
படிக்க:
♦ இது தான் காவல்துறை! இது தான் அரச வன்முறை!
♦ லாக்கப் மரணம் – காவல்துறையின் அதிகாரத்திமிர்!
இதனால் 28-06-2025 மாலை 7 மணிக்கு அஜித்தின் சிறுநீரில் ரத்தம் கொட்டத் துவங்கி விட்டது. அதன் பின் அச்சம் கொண்ட போலீசார் அஜித்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு கெட்டிக்காரத்தனமாக நகன்றனர்.
பின்பு தனியார் மருத்துவமனையில் சேர்க்க முனைந்த போது நிலைமையின் கடுமையை உணர்ந்து அஜித்தை அனுமதிக்க மறுத்துவிட்டனர். அதன்பின் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது அங்கே இருந்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.
உடனடியாக சமூக. ஊடகங்களில் இப்படுகொலை கடும் விமர்சனத்திற்குள்ளானவுடன் ஆளும் திமுக அரசுக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக இக்கொலைபாதக நிகழ்வில் மூக்கை நுழைத்து, அஜித்குமாரின் தாய் மற்றும் உறவினர்களை இழுத்துச் சென்று சமரசப்படுத்துவதற்கு முயன்று உள்ளனர் திமுக பிரமுகர்கள்.
திமுக அரசின் பாராமுகம்!
அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட கோவில் இது என்ற போதிலும், ‘நாடு முழுவதும் எத்தனை எத்தனை கோவில்களில் எத்தனை எத்தனை குட முழுக்கு நடத்தினோம்’ என்று ஜம்பம் அடிக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர் சேகர்பாபு, போலீஸ் செய்த படுகொலை விவகாரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்? காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இதற்கு அரசோ நீதிமன்றமோ துளியளவும் இடம் அளிக்கக் கூடாது.!
அதிமுக ஆட்சியில் சாத்தான்குளத்தில் – காவல் நிலையத்தில் வைத்து அப்பாவி ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இருவரும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான காட்டுமிராண்டி போலீசார் ரத்தம் சொட்ட சொட்ட அடித்தே கொலை செய்த பொழுது எவ்வளவு கண்ணீர் வடித்தீர்கள்? அதனை அரசியலுக்குப் பயன்படுத்தினீர்கள்?
இப்போது சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் ஒப்பந்தக் காவலாளி அப்பாவி அஜித் போலீசாரால் படுகொலை செய்யப்பட்டதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள்? தங்கள் ஆட்சி காலத்தில் இதுவரை 24 காவல் நிலைய படுகொலைகள் நிகழ்ந்துள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்? இத்தகைய படுமோசமான சம்பவங்களைத் தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்?
மடப்புரம் காளிக் கோவில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்டதாயினும், அஜித் குமார் அங்கே நிரந்தர காவலாளியாக கூட அல்ல; அற்ப கூலிக்கு நியமனம் செய்யப்பட்ட ஒப்பந்தக் காவலாளி(out-sourcing labour). இதுதான் அரசின் நிலை; உழைக்கும் மக்களின் நிலை!
சிவகாமி அம்மையாரும் அவரது மகள் ஜீவிதாவும் உண்மையாகவே நகை கொண்டு வந்தார்களா ? பணம் கொண்டு வந்தார்களா? அவற்றை ஏன் அவர்கள் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவில்லை? இவற்றையெல்லாம் ஆழமாக பரிசீலிக்க போலீசாருக்கு நேரம் போதவில்லை போலும். இது மட்டுமல்ல; எழுத்துப்பூர்வமான புகார் மனுவைப் பெறாமலேயே இவ்வளவு அட்டூழியங்களையும் நடத்தி இருக்கிறார்கள் திருப்புவனம் காவல்துறையினர். பின்பு மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான அதிரடிப்படையினரும் மனித நேயம் என்பது எள்ளின் முனை அளவு கூட இல்லாமல் காக்கிச்சட்டைக் கயவர்கள் அஜித் விடயத்தில் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
‘அடேங்கப்பா! திருட்டை ஒழிக்க தமிழ்நாட்டு போலீஸ், மாய்ந்து மாய்ந்து உழைப்பதை எண்ணும் பொழுது நமக்கு மெய் சிலிர்க்கிறது!?’…
குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞனை தீர்க்கமான முறையில் விசாரித்து உண்மையை கண்டறிய முற்படாமல் காக்கிச்சட்டை போட்டு விட்டதாலேயே, கையிலே தடியும், துப்பாக்கியும் தேவைப்படும் நேரங்களில் இன்ன பிற ஆயுதங்களையும் கொண்டிருக்கின்ற ஒரே காரணத்தால் இப்படி ஏழை பாழைகளை நியாயத்திற்கு புறம்பாக கொன்று குவிக்கின்றீர்களே, ‘நீங்கள் நன்றாக இருப்பீர்களா? உங்கள் குடும்பம் உருப்படுமா?’… என்று மண்ணை வாரி தூற்றி விட்டுப் போகும் காலம் அல்ல இது. உழைக்கும் வர்க்கம் நிச்சயமாக இதற்குப் பழி தீர்க்கும்.
கொலையின் பின்னணியாக வெளிப்படும் முக்கிய தகவல்!
நகை பணம் திருட்டுப் போய்விட்டதாக புகார் அளித்த பெண்மணியின் உறவினர் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் பணிபுரிவதாகவும், அங்கிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே இவ்வளவு விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஒரு சாதாரண பத்து பவன் நகை திருட்டுக்காக திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்து மானாமதுரை உதவி காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு தனிப் படைக்கு அனுப்பி விசாரிக்கும் அளவிற்கான தேவை காவல்துறைக்கோ இந்த அரசுக்கோ ஏன் ஏற்பட்டது? எல்லா திருட்டு சம்பவங்களிலும் இப்படித்தான் போலீஸ் நடந்து கொள்கிறதா?
பெரிய நடிகர்கள் சம்பந்தப்பட்ட போதைப் பொருள் வழக்குகள் இப்படித்தான் கையாளப்படுகிறதா? அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டின் போது இப்படித்தான் கையாள்கிறார்களா?
இக்கொலை தொடர்பாக – பிரச்சனையை எவ்வாறு அணுகுவது?
“சமூகம் இணக்கம் காண முடியாத அளவிற்கான வர்க்கங்களாக பிளவுபட்டு நிற்கும் பொழுது அங்கே நிலவுகின்ற அரசு என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவான அரசாக என்றைக்குமே இருக்காது; அது வர்க்க சார்புடைய அதாவது சுரண்டும் வர்க்க சார்புடைய அரசாகவே நீடிக்கும்…” என்பது ஆசான் லெனினின் கூற்று.
இதிலிருந்து நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டுமெனில்,ஒரு சமூகம் முதலாளியாகவும்- தொழிலாளியாகவும், நிலப்பிரபுவாகவும்- கூலியாகவும், பணக்காரனாகவும்- ஏழையாகவும், மொத்தத்தில் சுரண்டுபவனாகவும்- சுரண்டப்படுபவனாகவும் அமைந்துவிட்ட சூழலில், இப்படி இரு வேறுபட்ட வர்க்கங்களுக்கும் மொத்த நலன் காக்கும் வகையிலான பொதுவான ஒரு அரசு என்பது அமைந்திருக்க முடியாது; முடியவே முடியாது… என்பதே ஆசான் லெனின் கூற வருவதாகும்.
ஜனநாயக ஆட்சி, சட்டத்தின் ஆட்சி என்று பேசுவதெல்லாம் வெறும் மாய்மாலம் என்பதை இத்தகைய சம்பவங்கள் அம்பலப்படுத்தி விடுகிறது. எனினும், தங்களை தேர்ந்தெடுத்தால் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்று பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் மக்கள் முன் பதிலளிக்க கடமைப்பட்டவர்களாவர். அந்த வகையில் திமுக அரசு இந்த படுகொலைக்கு முழு பொறுப்பேற்று பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது.
காவல்துறை சீரமைப்புக் குறித்தும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை காவல்துறை கையாள வேண்டிய முறைகள் குறித்தும் பல நீதிமன்றத் தீர்ப்புகளும், சட்ட விதிமுறைகளும் உள்ளன. இருந்தும் அவை கழிப்பறை காகிதமாகவே மதிக்கப்படுகிறது. அனைத்து காவல்நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதற்கு எது தடையாக உள்ளது? காவல்துறைக்கு ஏன் இந்த வானளாவிய அதிகாரம்?
இவற்றையெல்லாம் செய்யாமல், பொதுவாக பிரச்சினைகள் வரும் போது எடுக்கப்படும் பெயரளவிலான நடவடிக்கைகள் காவல்துறையின் இத்தகைய போக்கை தடுத்து நிறுத்தாது. காவல் நிலைய அடக்குமுறைகளை, கொலைகளை தடுக்க முடியாது.
மடப்புரம் காளிக் கோவில் அஜித்குமார் படுகொலைக்கு நீதி கிடைக்கப் போராடுவோம்!
தமிழ்நாடு அரசே,
- சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் பதிலாக வேறொரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரை விசாரணையில் ஈடுபடுத்த உத்தரவிடு!
- வழக்கினை உடனடியாக சிபிசிஐடி-க்கு மாற்றுவதோடு மனித உரிமை ஆணையம், மக்கள் உரிமை அமைப்புகள் முன்னிலையில் விசாரணை மேற்கொள்!
- குற்றவாளி காவல் அதிகாரிகள்/ காவலர்கள் அனைவரையும் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடை!
- தக்க தண்டனை வழங்கு!
- அஜித் குமார் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி நிவாரணம் வழங்கு!
- அஜித் குமார் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரமான பணி நியமனம் வழங்கு!
- நீதித் துறையே, தாமாக முன்வந்து வழக்கினை எடுத்து முழு நேர்மையான விசாரணை நடத்து! குற்றவாளிகள் எவரையும் தப்பிக்க விடாதே! தக்க தண்டனை வழங்கு!
- காவல்துறை அத்துமீறல் வழக்குகளை தனி நீதிமன்றம் அமைத்து வழக்குகளை விரைவாக விசாரணை செய்!
எழில்மாறன்






இந்த கட்டுரை காவல்துறை மேல்தட்டு வர்க்கம் குற்றம் செய்தாலும் கூலகும்பிடு போட்டுக்கொண்டு அவர்களை காப்பாற்ற நினைப்பதும்,சாதாரண ஏழை மக்கள் என்றால் ஜெய்பீம் படத்தில் வருவது போல செய்யாத குற்றத்தை வலி தாங்காமல் ஒத்துக்கொள்ள வைப்பதும் எழுதப்படாத சட்டமாகும். இந்த காவல்துறை திருந்தாது ,துறை ரீதியான நடவடிக்கை இந்த கொலைகாரர்களுக்கு பொருந்தாது,எனவே சட்டம் தெரியாத மக்கள் தவறு செய்தால் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் போது, அனைத்து சட்டங்களையும் தெரிந்து வைத்துள்ள காவல்துறைக்கு மற்ற காவல்துறையினருக்கு ஒரு பாடமாக இனி இதுபோல் விசாரனை செய்ய நினைக்காத வகையில் அந்த காவல்துறையை சேர்ந்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.கட்டூரை சிறப்பாக உள்ளது.
மடப்புரம் காளி கோவில் காவலாளி அஜித் குமார் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பான இக்கட்டுரையில், நாம் மேற்கொண்டு புரிந்து கொள்ள வேண்டியது யாதெனில், மக்களிடம் வக்கணையாக வாக்குறுதிகளை அளித்து வாக்குகளைப் பெற்றுச்சென்று ஆட்சி அதிகாரத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கக் கூடிய நாடாளுமன்ற சட்டமன்ற ஜனநாயக வடிவ முறையிலான அரசு ஒன்று. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நிரந்தர உறுப்புகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ ஆர் எஸ், ஐஎஃப்எஸ, ராணுவம், போலீஸ்… இன்ன பிற நிரந்தர உறுப்புக்களான அதிகார வர்க்க அரசு என்பது வேறு. அரசு வடிவத்தில் இதுதான் நிரந்தரமானது. இதுதான் ஒட்டுமொத்த மக்களையும் கையாள்வது; அடக்கி ஆள்வது! இவை என்றுமே மக்களுக்கு கட்டுப்பாடு உடையவை அல்ல.
மாறாக அனைத்து மக்களுக்கும் மேலாக – இன்னும் சொல்லப்போனால் உழைக்கும் மக்களுக்கு மேலாக தம்மை நிலை நிறுத்திக் கொண்டு வானளாவிய அதிகாரம் படைத்தவர்களாக தம்மை நிரூபிக் கொண்டு தொடர்ச்சியாக உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதையே தொழிலாகக் கொண்டவர்கள். அனைத்து விதமான உரிமைப் போராட்டங்களையும் அடக்கி ஒடுக்கி நசுக்குபவர்கள். இவர்களை எதிர்கொள்வது எப்படி? இவர்களை சமாளித்து உழைக்கும் மக்கள் தமக்கான அரசியல் சுதந்திரத்தையும் அரசையும் நிறுவுவது எப்படிப்பட்ட வழிமுறையில் சாத்தியம் என்பதுதான் நம் முன் உள்ள அறிவியல் சார்ந்த கேள்வியாகும்.
இதனை வாசவர்களின் கவனத்திற்காகவும், முடிவுகளுக்காகவுமே விட்டு விடுகிறேன்.
நன்றி.
கொலை செய்யப்பட்ட இளைஞர் அஜித்குமார் பற்றிய மேலும் சில தகவல்கள்:- அஜித் குமார் தமது மூன்று வயதிலேயே தந்தையை இழந்தவர். என்னுடைய தம்பி நவீன் குமார் என்ற ஒருவரும் உள்ளார். கைம்பெண்ணான இவருடைய தாய் வறுமையின் பிடியிலிருந்து பிள்ளைகளை காப்பாற்றி உள்ளார். அஜித் குமார் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். மடப்புரத்தில் நாடார் தெருவில் வசிக்கும் இவர்களுக்கு சொந்த வீடு கிடையாது. அங்குள்ள பணக்காரர் ஒருவரின் பெரிய வீடு ஒன்றில் புறக்கடை பக்கம் தங்கிக் கொண்டு அவ்வீட்டையும் பராமரித்துக் கொண்டு, பெயருக்கு மிகக் குறைந்த வாடகை செலுத்தி வருகின்றனர். இவர்களின் தாய் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். அஜித் குமாருக்கு இந்த ஒப்பந்த காவலாளி பணி கிடைத்தது என்பது மூன்று மாதத்திற்கு உள்ளாகத் தானாம். அதிலும் இதுவரை ஒரு மாத அற்ப சம்பளம் மட்டுமே பெற்றுள்ளதாகத் தகவல்.
இவர் கிராமத்தில் அக்கம் பக்கத்தில் எவரிடமும் கெட்ட பெயர் ஈட்டியவர் இல்லையாம். இதற்கு முன் இவ்வித குற்றச்சாட்டுகள் எதிலுமே பங்கு வகித்த வரும் இல்லையாம். இந்த அப்பாவியான ஏழை இளைஞனைத்தான் நெஞ்சில் ஈரம் இன்றி மிருகத்தனமான முறையில் போலீசுக்கே உரிய காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகளை பணக்காரர்கள் நலன்/ அதிகார வர்க்க நலன் சார்ந்து எடுத்து இருக்கின்றார்கள். ஆனால் இந்த அரசோ, நீதிமன்றமோ, காவல்துறையோ குற்றவாளி ஒருவனைக் கூட இதுவரை கைது செய்து சிறையில் அடைக்க வில்லை. காரணம் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? மதுரை ராஜாஜி மருத்துவமனிலிருந்து போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இதுவரை கிடைக்கவில்லையாம். பெரும் பணக்காரர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், எம் எல் ஏ எம்பிக்கள், அதிகாரிகள் விடயங்களில் ஒரு அரசோ காவல்துறையோ இவ்வித மெத்தனப் போக்கினை கடைப்பிடிப்பார்களா என்பதே நமது கேள்வி! மக்கள் அணி திரண்டு எவனது அனுமதியையும் எதிர்பார்க்காமல் வீதியில் இறங்கி போராடித்தான் நீதியை நிலை நாட்ட வேண்டும். வேறு வழி ஏதுமில்லை.
தான் இதற்கு முடிவு கட்ட வேண்டும்.
இது தொடர்பாக அண்மைச் செய்தி கேளீர்!
நகை திருட்டு தொடர்பாக ஐவர் கைது செய்யப்பட்டதில் நால்வரை திருப்புவனம் போலீசார் விடுதலை செய்து விட்டதாகவும், அஜித் குமாரை மட்டும் வைத்து விசாரணை செய்து கொண்டிருந்த பொழுது, அவர் தப்பி ஓட முயற்சிக்கையில் கால் இடறி விழுந்து அடிபட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்கையில் இறந்து விட்டதாகவும் காவல்துறை தரப்பில் முதலில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படித்தான் லாக்கப் மரணங்கள் அனைத்துமே நடைபெறுகின்றன என்பது கண்கூடு. விசாரணைக்கென அழைத்துச் செல்லப்படும் பலரும் காவல் நிலைய பாத்ரூமில், கழிவறையில் இடறி விழுந்து கால் முறிந்தது, கை முறிந்தது, இடுப்பு முறிந்தது என்ற காவல் துறையின் அறிவிக்கைகள் யாவும் இவ்வகைப்பட்டதே.
அஜித் குமார் விடயத்தில் தற்போது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், அவரின் உடலில் வெளி காயங்கள் 28 இருந்து உள்ளதாக தெளிவுபட அறிக்கை வந்ததன் காரணமாகத்தான் ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் கைது செய்யப்பட வேண்டிய பல போலீஸ் அதிகாரிகள் கீழ அதிகாரிகள் முதல் மேல் அதிகாரிகள் வரை நிரம்பியுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மைகள். விசாரணைகளும் தொடர் நடவடிக்கைகளும் எப்படிச் செல்கின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அனைத்திற்கும் பரிகாரம் உழைக்கும் மக்கள் கரங்களில் தான் குனிந்து கிடக்கின்றது.
அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் திமுகவில் திருபுவனம்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அதிகாரம் மாற்றம், ஏற்படுவதில்லை அதிகாரங்கள் அனைத்தும் ஒற்றை சர்வாதிகார புள்ளியில் இணைந்து பாசிசமயமாகி உழைக்கின்ற மக்களை பயங்கரமாக துன்புறுத்துகிறது.
அதில் ஸ்காட்லாண்டுக்கு இணையாக தமிழ்நாடு அரசு காவல்துறை சாதாரண மக்கள் மீது காட்டக்கூடிய கடமையை பல கோடி கொள்ளை அடிக்கக் கூடிய,
ஊழல் செய்யக்கூடிய பெரும் பணக்காரர்கள் இடமும் அதிகார வர்க்கத்திடமும் காட்டுவதற்கு துணிவும் தைரியமும் இல்லை..
கட்டுரை சிறப்பு தோழர் அருமை வாழ்த்துக்கள் நன்றி ,
இக்கட்டுரையில் நகை காணாமல் போனதாக புகார் கொடுத்துள்ளவர் நிகிதா என்பதே சரி. ஆனால் நான் ஜீவிதா என்று தவறாக பதிவிட்டுள்ளேன். திருத்தி வாசிக்கவும்.