ழனி முருகன் கோவிலுக்குள் இந்து அல்லாதவர்கள் கோவில் கொடிமரம் தாண்டி நுழைய தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. தமிழ்நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கும் இந்த தீர்ப்பு தமிழக மக்களிடையே அதிர்ப்தியையும், நீதிமன்றத்தின் மீதான அவநம்பிக்கையையும் அதிகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு மதவேறுபாடு கடந்து தனித்து நிற்கிறது. இந்து, முஸ்லீம், கிறித்துவம் மதத்திற்கு அப்பால் ஒருவரை ஒருவர் மாமன், மச்சான் உறவுக் கொண்டு அழைக்கும் பழக்கமும் தமிழ்நாட்டில் தான் உண்டு.

இதுவே எத்தனை கருப்பு ஆடுகளை அனுப்பினாலும் தமிழ்நாடு மதவாத கும்பலிடம் சிக்காமல் பாஜக சங்பரிவார் கும்பலை அடித்து துவைத்து அனுப்புகிறது. ஆனால் எப்படியாவது தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் சங்பரிவார் கும்பல் அதிகார மையங்களை பயன்படுத்தி மத மோதலை உருவாக்கி மக்களை பிளவுபடுத்த பல்வேறு வழிகளை யோசித்து ‘இந்து’க்களின் ஒரு பிரிவினரை தூண்டி விடுகிறது.

அதில் ஒன்று தான் பழனிக் கோவிலுக்குள் மாற்று மதத்தினர், கடவுள் நம்பிக்கை இல்லாதோர் கோவிலுக்குள் அனுமதி இல்லை என்ற பதாகையை கோவிலுக்கு வெளியே வைக்கும் முடிவு. முதல் முறை முயன்று அறநிலையத்துறையால் அகற்றப்பட்ட பதாகையை அதிகார மையத்தை பயன்படுத்தி வைப்பதற்கான முடிவில் வெற்றியும் பெற்றுள்ளது.

மற்ற மாநிலங்களை போல தமிழ்நாட்டின் நீதித்துறையும் சங்பரிவார் கும்பலின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்காக வளைத்து வரும் போக்கு ஆபத்தானது. உச்சநீதிமன்றத்தின் மூலம் தான் இல்லாத ராமன் கோவிலுக்கு நம்பிக்கையின் அடிப்படையில் நீதிபதிகளை வளைத்து இடிக்கப்பட்ட பாபர்மசூதிக்கு நியாயம் கற்பித்தது சங்பரிவார் கும்பல். இன்று பழனிக் கோவிலுக்குள் நுழைந்த இந்த கும்பல் நாளை அனைத்து கோவிலுக்கும் இதனை செய்ய முற்படும்.

ஆனால் நீதிமன்றங்களுக்கோ, நீதிபதிகளுக்கோ அந்த கவலை இல்லை. அவர்கள் சொன்ன வேலையை செய்கிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி யோசிப்பதில்லை. பழனி கோவிலுக்குள் இந்துக்கள் மட்டும் நுழைய வேண்டும் என்ற நீதிமன்றம், கருவறைக்குள் நுழைய அனுமதிப்பதில்லை. அதில் மட்டும் ஆகமவிதியை கடைபிடிக்கிறது. இதில் கருவறைக்குள் நுழைபவர்கள் இந்துக்களா? அல்லது கோவிலுக்குள் மட்டும் அனுமதிக்கபடுபவர்கள் இந்துக்களா? என்பதை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்.

பழனி கோவிலின் தீர்ப்பில், இந்துக்கள் அல்லாதவர்கள் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்ய விரும்பினால் அவர்களுக்காக ஒரு பதிவேடு வைக்க வேண்டும், அதில்  கடவுளின் மீது நம்பிக்கைக் கொண்டு தரிசனம் செய்ய வந்துள்ளேன் என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டு தான் உள்ளே அனுப்ப வேண்டும் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஸ்ரீமதி கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அறநிலையத்துறை ஆணையரை கோவிலின் ஆகம விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதிகள் பஜனை மடங்களின் தலைவர்களை தீர்ப்பு வழங்குவதும், சனாதனத்தின் பாதுகாவலர்கள் போல் நடந்து கொள்வதும் இந்துத்துவ பாசிஸ்டுகளின் ஆட்சியின் சாபக்கேடு.

கோவிலுக்குள் நுழைபவர்கள் இந்துக்களா என்பதை உறுதி செய்ய என்ன வழிமுறைகளை கையாளப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை யூதர்களுக்கு ஸ்டார் அடையாளம் இட்டது போல் மாற்று மதத்தினருக்கும் அடையாளமிட திட்டமிட்டுள்ளார்களா என்பது போகப்போகத் தான் தெரியும்.

தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான கோவில், மசூதி, தேவாலயங்களுக்குள் மதம் கடந்து அனைத்து மதத்தினரும் சென்று வருவது தமிழர்களின் பண்பாடாகவே உள்ளது. வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு கிறித்துவர்களை விட இந்துக்களே அதிகம் சென்று வருவார்கள். நாகூர் தர்காவிற்கு இந்துக்கள் அதிகம் சென்று வருகிறார்கள். இங்கு செல்பவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது.

இதுவரை தமிழ்நாட்டில் உள்ள எந்த இந்துக் கோவிலுக்கும் மாற்று மதத்தினர் செல்ல எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிக் கோவிலுக்குள் இதுவரை மதம் கடந்து சென்று வந்த தமிழர்களிடையே நீதிமன்றத்தின் துணையுடன் இன்று பிரிவினையை உருவாக்கியுள்ளது சங்பரிவார் கும்பல்.

இதையும் படியுங்கள்:

சங்பரிவார் கும்பலின் வெறுப்பை விதைக்கும் செயலை தமிழ்நாட்டின் அனைத்து கோவிலுக்கும் பரவாமல் செய்ய தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும். இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947-ன் படி இயற்றப்பட்ட சட்டம் இந்து அல்லாத மாற்று மதத்தினரை கோவிலுக்குள் நுழைவதை தடுக்கிறது. இதனை பயன்படுத்திக் கொண்டே பிரிவினையை விதைத்துள்ளது சங்பரிவார் கும்பல். தமிழக அரசு உடனடியாக இந்த சட்டத்தில் திருத்தத்தை உருவாக்கி அனைத்து மதத்தினரும் கோவிலுக்குள் நுழைவதை உறுதி செய்து தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்தை காக்க வேண்டும்.

தமிழர்களின் கடவுளாக கதைகளின் வழியே வர்ணிக்கப்படும் முருகனை ஸ்ரீ தண்டாயுதபாணியாக  மாற்றி கோவிலை கைப்பற்றிய பார்ப்பன கும்பல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களையும் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இருந்து கைப்பற்றத் துடிக்கிறது. அதிகார மையங்களை பயன்படுத்தி அறநிலையத்துறையை செயலிழக்க செய்வதன் மூலம் காவிகளின் கூடாரங்களாக கோவில்கள் மாறும் அபாயம் உள்ளது.

தமிழர்களின் பன்முகத்தன்மையை சிதைத்து மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பதன் மூலம் தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் மதவெறி கும்பலை விரட்டியடித்து நமது ஒற்றுமையை நிலைநாட்டுவோம். மற்ற மாநிலங்களுக்கு மதநல்லிணக்கத்திற்கு உதாரணமாய் திகழ்வோம்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here