இஸ்ரேல் பாலஸ்தீன மக்கள் மீதான ஆக்கிரமிப்பு போரை தொடங்கி 1 ஆண்டை கடந்து விட்டது. இதுவரை 50 ஆயிரம் மக்கள் இஸ்ரேலிய ஜியோனிச இனவெறியர்களால் இரக்கமின்றி வேட்டையாடப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள். அடுத்த தலைமுறையே இல்லாத அளவுக்கு திட்டமிட்டு இந்த வேட்டையை நடத்தியுள்ளான் பாசிச கொடுங்கோலன் பெஞ்சமின் நெதன்யாகு.
இந்த படுகொலையை ஒரு சில நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகள் அனைத்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஒரு புறம் போரால் மக்கள் வேட்டையாடப் படுகிறார்கள் என்றால் மறுபுறம் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தடுத்து நிறுத்தி திட்ட மிட்ட பஞ்சத்தை ஏற்படுத்தி மக்களை கொன்று குவிக்கிறார்கள்.
உதவி செய்யவரும் தன்னார்வலர்களையும், ஊடகவியலாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவரையும் பாரபட்சமின்றி கொல்கிறது இனவெறி கும்பல். இப்போது காசா மக்களுக்கு ஆதரவாக ஆரம்பத்திலிருந்தே உதவி வந்த லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பை ஒழித்துக் கட்டும் நோக்கத்தோடு தற்போது லெபனான் மக்களையும் கொன்று குவிக்க ஆரம்பித்துள்ளது.
இதனை கண்டிக்கும் விதமாகவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மக்கள் அதிகாரம் அமைப்பு அதன் தோழமை அமைப்புகளுடன் இணைத்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டங்களில் முற்போக்கு அமைப்புகளும் ஜனநாயக சக்திகளும் கலந்துக் கொண்டு தங்கள் கண்டன உரையை பதிவு செய்தனர்.