மனித உரிமை போராளியும், பேராசிரியருமான டாக்டர் G.N.சாய்பாபா பாசிச மோடி அரசின் கொடுஞ்சிறையிலிருந்து வெளிவந்த போது சிறுநீரகம், கணையம், மூளை நரம்புகள், இருதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் கடுமையாக பாதிப்படைந்திருந்தது. அதன் தொடர்சியாகவே தற்போது பித்தப்பை, சிறுநீரக தொற்று மற்றும் பிற பாதிப்புகள் காரணமாக ஹைதராபாதில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனது 57 வது வயதிலேயே 12-10-2024 இரவு 9 மணியளவில் மருத்துவ சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
தில்லி பல்கலைக்கழகத்தின் ராம்லால் ஆனந்த் கல்லூரியின் முன்னாள் ஆங்கிலப் பேராசிரியரான டாக்டர் ஜி.என்.சாய்பாபா, சட்ட விரோதச் செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் பொய் வழக்குகளில் பத்து ஆண்டுகள் சிறையில் பெரும் துயரங்களை அனுபவித்தவர். 2014-ஆம் ஆண்டில் மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடா்புபடுத்தி பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கில் சாய்பாபா கைது செய்யப்பட்டார்.
2017-ஆம் ஆண்டில் நாகபுரி செஷன்ஸ் நீதிமன்றம், அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. இத்தீா்ப்புக்கு எதிரான சாய்பாபாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயா்நீதிமன்றம், அவா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் இல்லை என்றும், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை “நீதியின் தோல்வி” என்று குறிப்பிட்டு கடந்த மார்ச்-2024-ல் விடுவித்தது. விடுதலைபெற்று ஏழு மாதங்களில் சாய்பாபா காலமானார். சிறையில் இருந்தகால வேதனை அனுபவத்தை பத்திரிகையாளர் சந்திப்புகளில் கீழ்க்கண்டவாறு பேட்டிகளாக கொடுத்துள்ளார்.
“என் வாழ்க்கையில் முதல்முறையாக ஊனமுற்றவராக சிறை அதிகாரிகள் உணரச் செய்துவிட்டனர். கடந்த 10 ஆண்டுகளை நினைத்து வருத்தப்படாமல் எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கிறேன். என்னால் மீண்டு வர முடியும் என்று நம்புகிறேன்” என்று நம்பிக்கைக் கொண்டிருந்தார்.
தான் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் விவரித்த சாய்பாபா, ”ஆப்ரேஷன் கிரீன்ஹண்ட் பிரச்சாரத்திற்கு எதிரான தனது செயல்பாட்டை ஒடுக்கும் வகையில் மகாராஷ்டிரா போலீசு உட்பட அதிகாரிகளிடமிருந்து மிரட்டல்கள் வந்தது குறித்துப் பகிர்ந்து கொண்டார். இதேபோன்ற கொடூரத்தை, அவருடன் சிறையில் இருந்த கடுமையான உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஹனிபாபுவும் எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டார். சாய்பாபா நீதித்துறையின் மீதான தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். இது சீரழிந்த சமூக நிறுவனங்களின் ஒரு பகுதி” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்திய சிறைச்சாலைகள் புரட்சிகர, ஜனநாயக சக்திகளுக்கு அமெரிக்காவின் குவாண்டனாமோ சிறையைப் போல ஒடுக்குமுறை கருவியாகவும், சித்திரவதைக் கூடமாகவும் மாறியுள்ளது என்பதை அவரது பேட்டிகள் மட்டுமின்றி, அவரது மரணமும் நிரூபித்துள்ளது. டாக்டர் ஸ்டேன் சாமி கடுமையான நோய்களுக்கு உரிய சிகிட்சை இன்றி மரணம் அடைந்ததும், டாக்டர் சாய்பாபா சிறையில் இருந்து வெளிவந்து சில மாதங்களில் மரணம் அடைந்துள்ளதும் இந்தியாவில் நிலவுகின்ற பாசிச ஒடுக்குமுறையை நிரூபிக்கின்றது. இது டாக்டர் சாய்பாபா மீது பாசிச மோடி நடத்தியுள்ள பச்சைப் படுகொலையாகும். இதனை மகஇக வன்மையாக கண்டிக்கிறது.
’அர்பன் நக்சல்கள்’ என்ற பெயரில் மனித உரிமைப் போராளிகள், புரட்சிகர, ஜனநாயக சக்திகள் பலரை பாசிச மோடி அரசு சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதுடன், தனது கார்ப்பரேட் சேவையையும், காவி பயங்கரவாத செயல்களையும் தொடர்ந்து வருகிறது. இதனால் புதிய ஜனநாயக சமூகத்தை விரும்புகின்ற, கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக, பார்ப்பன பாசிசத்திற்கு எதிராக போராடுகின்ற சமூக செயல்பாட்டாளர்களின் மன உறுதியை குலைத்து விட முடியாது என்பதற்கு துலக்கமான சான்றுதான் மனித உரிமைப் போராளி பேராசிரியர் G.N.சாய்பாபா. அவரது தியாகத்தை உயர்த்திப் பிடிப்போம்.
மனித உரிமைப் போராளி டாக்டர் G.N.சாய்பாபாவிற்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் சிவப்பு அஞ்சலியை செலுத்துகிறது.
தோழமையுடன்,,
மக்கள் கலை இலக்கியக்கழகம்
தமிழ்நாடு.
89030 05636 – 94431 57641