கியான் வாபி மசூதி:
தொடரும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களின் கருத்து & முண்டா வழிமுறைகள்!
உத்திரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள பனாரஸில் உள்ள ஞானவாபி மசூதி பற்றி லக்னோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தலித் அறிஞரான ஹிந்தி இணைப் பேராசிரியர் டாக்டர் ரவிகாந்த், ஆன்லைன் சேனல் நிறுவனமான சத்யா டிவியில் நடந்த விவாதத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையின் காரணமாக அவர் மீது குண்டர்கள் தாக்குதல் தொடுப்பதற்கும், கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியும் உள்ளனர். அவர் வேலை செய்கின்ற பல்கலைக்கழகத்திலேயே அவரை சுற்றி வளைத்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அவர் தன்னை தற்காத்துக் கொள்வதற்கு பல்கலைக்கழகத்தில் உள்ள ப்ராக்டர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தார்.
ஞான வாபி மசூதி பற்றி டாக்டர் பட்டாபி சீத்தாராமையா எழுதியுள்ள ’சிறகுகளும் கற்களும்’ என்ற நூலில் எழுதியுள்ள விவரங்கள் அனைத்தும் கட்டுக்கதை என்று துணிச்சலுடன் கூறியதையடுத்து இந்த கொலை மிரட்டல் வந்துள்ளது.
நாடு முழுவதிலும் ஆர்எஸ்எஸ் பிஜேபி உருவாக்க முனைகின்ற பார்ப்பன பேரரசுக்கு எதிராக எழுகின்ற கருத்து பிரச்சாரங்களை தடுப்பதற்கு பாசிச முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ். ஏபிவிபி என்ற மாணவர் படையில் இருந்து பஜ்ரங் தள், சனாதன் சன்ஸ்தான் போன்ற கொலைகார படை வரை அனைத்தையும் கையில் வைத்துக்கொண்டு சுதந்திரமான கருத்துக்களை பேசுவதற்கு தடை விதித்து வெறியாட்டம் போடுகிறது.
தென்னிந்தியாவில் ஒப்பீட்டு ரீதியாக கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பாஜக அல்லாத அரசு அமைந்துள்ளதால் பாஜகவின் காவி பயங்கரவாதங்களைப் பற்றியும், பாஜக அரசின் பாசிச நடவடிக்கைகள் மீது விமர்சனங்களை வைத்தும் எழுதுவதற்கும் பேசுவதற்கும் குறைந்த பட்ச ஜனநாயக உரிமைகள் உள்ளன. இதை மறுக்கும் சிலரை பற்றியும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
பாஜகவின் தேர்தல் அரசியல் மற்றும் அவர்களின் பாசிச காட்டாச்சியையும் பிற மாநிலங்களில் இருக்கின்ற பாஜக அல்லாத கட்சிகளின் ஆட்சியையும் சமப்படுத்தி பார்ப்பதன் மூலம் பாஜகவை பாதுகாக்க முனைகின்ற பாசிச அடிவருடிகள் நாடு முழுவதும் வெவ்வேறு அலைவரிசைகளில் இருந்து கொண்டு செயல்படுகின்றனர்.
எதிரியை சரியாக வரையறை செய்யாததன்மூலம் அவர்களை தப்ப வைக்கும் ஆளும் வர்க்க கைக்கூலித்தனங்களில் ஈடுபடுகின்ற இப்படிப்பட்ட அதி தீவிரவாதிகளை, அதாவது பாஜகவும் பிற அரசியல் கட்சிகளும் ஒன்றுதான் என்று மட்டை அடியாக பேசுகின்ற அனைவரையும் புறம் தள்ள வேண்டிய காலம் இது. ஏனென்றால் எதிரி தெளிவாக கண்ணுக்கு தெரிகிறான். ஆனால் அவர்களின் ஐந்தாம் படைகள் தெரிவதில்லை.
ஒரு பொருளுக்குள் இருக்கும் இரண்டு எதிரெதிர் தன்மை என்பதை சரியாக புரிந்துகொண்டு கையாளுகின்ற வகையில் தேர்தல் அரசியல் கட்சிகளிலேயே பாஜகவிற்கு எதிராக குறைந்தபட்சம் பேசுகின்ற கட்சிகளை ஒன்றிணைப்பது அவசியமாகிறது. இல்லையென்றால் நீண்டகால சிறைக்குச் செல்வதற்கு ஒட்டுமொத்த நாட்டையும் தயாராக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதே அர்த்தமாகிறது.
- திருச்செங்கோடன்.