அமெரிக்காவின் புதிய அதிபராக குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளரான கமலா ஹாரிசை தோற்கடித்து ட்ரம்ப் வெற்றிப் பெற்றுள்ளார். இருவருக்குமான ஓட்டு வித்தியாசம் 47 லட்சம் என்ற அளவில் இருந்தது.
2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ட்ரம்பை என்ன காரணத்திற்காக மக்கள் தூக்கியெறிந்தார்களோ அந்த பிரச்சினை பைடன் காலத்திலும் தீர்க்கப்படாததால் தனது எதிர்மறை பிரபலத்தால் மீண்டும் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முட்டாள் ட்ரம்ப்!
2017 தேர்தலில் ட்ரம்பின் இனவெறியூட்டும் கூச்சல்கள் மக்களால் தேர்ந்தெடுக்க தூண்டின எனலாம். அமெரிக்காவில் குற்றங்கள் அதிகரித்திருப்பதற்கு மெக்சிகோ மக்கள்(மெக்சிகன்கள்) எல்லைத் தாண்டி வருவதும், முஸ்லீம்களும் தான் காரணம் என்றும், மெக்சிகன்கள் பிரச்சினையை தீர்க்க அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் பிரமாண்ட சுவர் ஒன்றை கட்டினால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று உளறினார். இதற்கு அதிகம் செலவாகுமே என்றால் அதையும் மெக்சிகோவிடமே வாங்கிடலாம் என்கிறார் ட்ரம்ப்.
மெக்சிகோ பிரச்சினைக்கு தீர்வு சொன்ன ட்ரம்ப் முஸ்லீம்களை என்ன செய்யலாம் என்பதயும் கூறுகிறார். அமெரிக்காவின் மிகப்பெரிய பிரச்சினையே முஸ்லீம்கள் தான் என சங்பரிவார் கும்பலை பிரதிபலிக்கும் ட்ரம்ப், அதற்கு என்ன ஆதாரம் எனக் கேட்டால் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பொழுது நியூஜெர்சி மகாணத்தில் கூடி முஸ்லீம்கள் ஆரவாரம் செய்ததாகவும் அதனை நேரில் பார்த்த சாட்சி தான் தான் என்றும் கூறினார். அதனால் வெளிநாட்டில் இருந்து முஸ்லீம்கள் அமெரிக்காவில் நுழைவதை தடுப்பதாக கூறினார். உள்ளே இருக்கும் முஸ்லீம்களை அவர்களது மசூதிகளை கண்காணித்துக் கொண்டே இருப்பதன் மூலம் பிரச்சினையை சரிசெய்ய முடியும் என்கிறார்.
பாசிஸ்டுகள் பெரும்பாலும் ஒரே மாதிரியான முறையையே கையாளுகிறார்கள். ஹிட்லர் யூதர்களுக்கு எதிரான இனவெறி அரசியலை முன்னெடுத்தான். ட்ரம்பின் உற்ற நண்பரான மோடியோ இஸ்லாமியர்களுக்கு எதிரான மதவெறி அரசியலை செய்கிறார். நெதன்யாகு பாலஸ்தீனத்தில் ஜியோனிச இனவெறி படுகொலையை நிகழ்த்தி வருகிறார். இவர்கள் யாவரும் வெறுப்பு அரசியலின் மூலம் ஒரே நேர்கோட்டில் இணைகிறார்கள்.
அதனால் தான் ட்ரம்ப் வெற்றி பெற்ற உடனேயே வாழ்த்துச் செய்தியை மோடி, நெதன்யாகு, ஜெலன்ஸ்கி ஆகியோர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர். அமெரிக்காவில் யார் அதிபராக வந்தாலும் அவர்களது கட்டளையை நிறைவேற்ற வேண்டிய இட்த்தில் தான் இவர்கள் இருக்கிறார்கள் என்றாலும் ட்ரம்ப் இவர்களுக்கு நெருக்கமான நபர். பாசிஸ்ட்.
தோல்வியும், வெற்றியும்!
2020-ல் ட்ரம்ப் தோற்றதற்குக் கொரோனாவை ட்ரம்ப் சரியாக கையாளாததால் அமெரிக்க மக்கள் 2,30,000 பேர் கொல்லப்பட்டார்கள். அதோடு சேர்ந்து பொருளாதாரமும் பாதாளத்திற்கு சென்றது. சென்ற தேர்தலில் பைடன் வெற்றி பெற்ற நிலையில் ஜனவரி 6 2020 அன்று பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிக்க வேண்டிய நாளில் தனது ஆதரவாளர்களை நாடாளுமன்றம் முன்பு திரட்டி கலவரமாக மாற்றி தோல்வியை ஒப்புக் கொள்ளாத பாசிஸ்ட் தான் ட்ரம்ப்.
படிக்க: டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு! பயங்கரவாதிகளின் கூடாரத்தில் வேட்டுச் சத்தம்!
தோல்விக்கு பிறகான காலத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் ட்ரம்ப் மீது தொடுக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் 34 கிரிமினல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. வணிக மோசடி மற்றும் பாலியல் வல்லுறவு குற்றத்திற்காக பலநூறு மில்லியன் டாலர் தண்டம் கட்ட உத்தரவிட்டது நீதிமன்றம்.
2024 அமெரிக்க தேர்தலில் போட்டியிடாமல் செய்ய பைடன் கும்பல் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் ட்ரம்ப்க்கு சாதகமாக அமைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். இதைவிட உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் நேரடியாகவே ட்ரம்பிற்கு ஆதரவு தெரிவித்தார். அவரின் எக்ஸ் வலைதளம் மூலமாக இணைய பிரச்சாரமும் ட்ரம்ப்க்கு ஆதரவான செல்வாக்கை உருவாக்கியது.
2008-ல் சர்ப்பிரைம் நெருக்கடிக்கு பின்னர் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கியுள்ள அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க முடியாமல் ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா, ட்ரம்ப், பைடன் என தோற்றுக் கொண்டிருந்தாலும் அமெரிக்க மக்களுக்கு சரியான மாற்று இல்லாத காரணத்தினால் பாசிஸ்ட் ட்ரம்பை மீண்டும் தேர்வு செய்துள்ளார்கள்.
மீளமுடியாத நெருக்கடியில் முதலாளித்துவ பொருளாதாரம்!
உலக மேல்நிலை வல்லரசாக தன்னை காட்டிக் கொண்டாலும் தோல்வியடைந்த முதலாளித்துவ பொருளாதாரத்தால் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு பைடனோ அல்லது ட்ரம்போ தீர்வை வழங்க முடியாது.
மாறாக தனக்கு போட்டியாக வளர்ந்துக் கொண்டிருக்கும் சீனாவை எதிர்கொள்ள இந்தியாவையும், தைவானையும் பயன்படுத்தி போர்வெறியை தூண்டவும், அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்குவதன் மூலம் மக்களை மேலும் பொருளாதார சுழலில் சிக்கவைக்கவுமே செய்யும்.
இந்த தேர்தலில் ட்ரம்ப் கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10% உலகளாவிய வரி மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 60% வரி உள்ளிட்ட இறக்குமதி வரிகள் உலகளாவிய அளவில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உள்நாட்டு வர்த்தகத்தையும் பெருமளவு பாதிக்கும். இதனால் அமெரிக்காவின் பணவீக்கம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
படிக்க: காசாவின் மீதான இஸ்ரேலின் பயங்கரவாத போரை நிறுத்த அமெரிக்காவின் பொருள்களை புறக்கணித்து போராடு!
பாசிஸ்டுகள் எப்பொழுதுமே மக்கள் பிரச்சினையை தீர்ப்பதில்லை. மாறாக கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு ஏற்பவே செயல்படுவார்கள். இப்போதும் உலகின் முதல் பணக்காரனாக இருக்கும் எலான் மஸ்க் உள்ளிட்டவர்கள் மேலும் சொத்துக் குவிக்கவே ட்ரம்பின் செயல்பாடுகள் அமைந்திருக்கும். அதற்கேற்ப உலக நாடுகளை சுரண்டும் நடவடிக்கைகளிலும் அமெரிக்கா ஈடுபடும்.
ட்ரம்ப் போன்ற பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க சரியான மாற்று வைக்கக் கூடிய கட்சிகள் தேவை. அது ஜனநாயகக் கட்சியோ அல்லது குடியரசு கட்சியோ அல்ல. மக்களை நேசிக்கக் கூடிய உழைக்கும் மக்களின் நலனில் அக்கறை செலுத்தக் கூடிய போல்ஷ்விக் பாணியிலான கட்சியே மக்களை முதலாளித்துவ சுரண்டலில் இருந்து மீட்கும். அமெரிக்கா போன்ற மேல்நிலை வல்லரசுகளில் நடக்கும் பாசிஸ்டுகள் ஆட்சியினால் அந்நாட்டு மக்கள் மட்டுமல்ல உலக மக்களும் அவதியுறுகிறார்கள். ஏகாதிபத்திய முதலாளித்துவ கட்டமைப்பைத் தகர்த்தெறியாமல் உலக மக்களுக்கு விடுதலை இல்லை.
- நந்தன்
இந்தியாவில் அதானி அம்பானி கார்ப்பரேட் பெரும் பணக்காரர்களுக்கு பாசிச மோடி செல்லபிள்ளை என்றால், அமெரிக்காவில் உலகப் பணக்காரனான எலான் மஸ்க்கின் செல்லப் பிள்ளையாக பாசிச ட்ரம்ப் மீண்டும்
அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளான். இவனது வெற்றி அமெரிக்காவின் உள்நாட்டு மக்களுக்கு மட்டும் அல்ல; உலகு தழுவிய அளவில் அனைத்து நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் குறிப்பாக உழைக்கும் மக்களுக்கும் விரோதமாகவே அமையும். இதனையும் மற்ற பிற அம்சங்களையும், அமெரிக்க மக்களின் வாழ்க்கை பிரகாசம் அடைய போல்ஷ்விச பாணியிலான கட்சியின் தோற்றமும் வளர்ச்சியுமே காரணமாக விளங்க முடியும் என்பதனை கட்டுரையாளர் தோழர் நந்தன் விளக்கி இருப்பது வெகு சிறப்பு. பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!