
சமீப காலமாக உணவுப் பொருட்களின் விலைவாசி ஏறிக்கொண்டே போகிறதே ஒழிய குறையவில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்களான எண்ணெய், பருப்பு, மிளகாய், காய்கறிகளில் தக்காளி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தற்போது பூண்டின் விலை 400 கடந்துவிட்டது. தக்காளி, வெங்காயத்தின் விலை 100ஐ தொடுகிறது. பண்டிகை காலம் என்பதால் இந்த பொருட்களை மக்கள் அத்தியாவசியமாக பயன்படுத்துவார்கள் என்பதை அறிந்து இடைத்தரகர்கள் தேவைக்கு ஏற்ப விநியோகம்(demand and supply) என்ற அடிப்படையில் விலையை செயற்கையாக ஏற்றுகிறார்கள்.
அதிகரித்த சமையல் எண்ணெய் விலை
தீபாவளி பண்டிகையை ஒட்டி நடுத்தர மக்கள் எண்ணெய் பலகாரங்கள் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். இந்த நேரத்தில் விலையை உயர்த்தினாலும் மக்கள் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வாங்குவார்கள் என விலையை 37 சதவீதம் உயர்த்தியுள்ளார்கள். குறிப்பாக ஏழை மற்றும் கீழ் நடுத்தர வர்க்கம் அதிகம் பயன்படுத்தும் பாமாயிலின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதில் ஒன்றிய பாஜக அரசின் பங்கும் உள்ளது. ஒருபுறம் demand and supply அடிப்படையில் விலைவாசியை உயர்த்துகிறார்கள் என்றால், மறுபுறம் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியதன் மூலம் உழைக்கும் மக்கள் மீதான பொருளாதார சுமையை அதிகரித்துள்ளது பாசிச பாஜக.
இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் சுமார் 58 சதவீதம் இறக்குமதியை சார்ந்துள்ளது. இந்தோனேசியா மலேசியாவில் இருந்து பாமாயில் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை எட்டுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் இறக்குமதியின் மூலம் முதலாளிகளை வாழ வைக்கிறது மக்கள் விரோத பாஜக அரசு.
படிக்க: இந்திய ராக்கெட் விண்வெளிக்குச் சென்று இறங்குகிறது! விலைவாசியோ ஏறிக்கொண்டே செல்கிறது?
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தக்காளியின் விலை 247 சதவீதமும் உருளைக்கிழங்கின் விலை 150 சதவீதமும் பூண்டின் விலை 128 சதவீதமும் அதிகரித்துள்ளது. இவை அல்லாமல் உப்பு, கோதுமை, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், முட்டைக்கோஸ் ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் இரண்டு வேளை உணவு தயாரிப்பதற்கான செலவானது கடந்த ஒரு வருடத்தில் 53 சதவீதம் அதிகரித்துள்ளது. அம்மாநிலத்தில் ஒருவேளை உணவு சமைக்க 2023-ல் 101 ரூபாய் தேவைப்பட்ட நிலையில், தற்போது 154 ரூபாய் செலவாகிறது. ஒரு மாதத்திற்கு என கணக்கிட்டால் 3053 இல் இருந்து 4631 ஆக அதிகரித்து உள்ளது.
சம்பள உயர்வு இல்லை!
உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் அதனை ஈடு கட்டும் வகையில் நுகர்வோரின் வருமானமும் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி உயரவில்லை என்று புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. ஒருவரின் சராசரி சம்பளம் 9% முதல் 10% வரை மட்டுமே அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
மூலப் பொருட்களின் விலை உயர்வை காரணம் காட்டி அத்தியாவசிய பொருட்களின் விலையை முதலாளிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உயர்த்திக் கொள்ளலாம். ஆனால் விலைவாசி உயர்வை காரணம் காட்டி சம்பளம் அதிகரித்து கேட்டால் தர மாட்டார்கள். இது இந்தியாவில் உள்ள ஏற்றத்தாழ்வு அதிகரிக்க காரணமாய் உள்ளது.
பணவீக்கத்திற்கு ஏற்ப அகவிலை படியை அரசு உயர்த்தி வழங்கினாலும் அது வெறும் ஏழு சதவீதம் ஊழியர்களுக்கே செல்கிறது. மீதமுள்ள பணி பாதுகாப்பற்ற தொழிலாளர்கள் 93 சதவீதம் பேருக்கு கிடைப்பதில்லை.
படிக்க: ரசத்துக்கே நாதியற்றவர்களாக்கும் விலைவாசி உயர்வு!
தினக்கூலிகளாய் பணிக்கு செல்லும் பல அமைப்பு சாரா தொழிலாளர்களின் நிலைமை இதைவிட மோசம். தமிழ்நாட்டோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் பின் தங்கிய மாநிலங்களான ஒடிசா, பீகார், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் கூலி மிக குறைவாகவே வழங்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இரண்டு வேளை உணவை மட்டுமே உண்கிறார்கள். இந்த விலைவாசி உயர்வினால் இது ஒரு வேளையாக குறைக்கப்படும் அபாயமும் உள்ளது.
இந்த விலைவாசி உயர்வானது இத்தோடு நிற்கப் போவதில்லை. மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். FMCG (Fast-moving consumer goods) என்று சொல்லக்கூடிய அதிவேகமாக நுகரக்கூடிய பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் உற்பத்தி செலவுகள் அதிகரித்த காரணத்தினால் பொருட்களின் விலையையும் ஏற்றப் போகிறோம் என இந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஏற்கனவே சத்தான உணவு கிடைக்காமல் அடித்தட்டு மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு நிறைந்தவர்களாய் உள்ளனர். அதிலிருந்து மீள்வதற்கு அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியமும் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் விலைவாசி உயர்வினால் மென்மேலும் துன்பத்திற்கு உள்ளாகும் நிலை இம்மக்களுக்கு ஏற்படும்.
பாசிச மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் இந்தியாவில் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் விலைவாசி உயர்வினாலும் முதலாளித்துவத்தின் சுரண்டலாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக மோடியின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் தான் விலைவாசி உயர்வு அதிகமாக உள்ளது.
இதனை கருத்தில் கொள்ளாமல் I.N.D.I.A கூட்டணி கட்சியினர் கவர்ச்சியான வாக்குறுதிகளை தருவதன் மூலம் பாசிச மோடி கும்பலை அதிகாரத்தில் இருந்து வீழ்த்தி விடலாம் என கனவு காண்கின்றனர். மக்களை வறுமையில் இருந்து மீட்கும் மாற்று பொருளாதார திட்டமோ, குறைந்தபட்ச செயல்திட்டமோ இல்லாமல் பாசிஸ்டுகளை தேர்தலில் வீழ்த்துவதினால் பயனில்லை.
- நலன்