லகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக் கொள்ளப்படும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள தருணத்தில் வேட்பாளர்களுக்கு எதிராக துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் பேசத் துவங்கி விட்டன.

உலகின் கொடிய பயங்கரவாதி அமெரிக்காவின் ஆட்சியாளர்கள் கடந்த ஒன்றரை தசாப்தமாக பாசிச சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகின்றார்கள் என்பதும், உலகில் எந்த மூலையில் வெடிகுண்டோ அல்லது ஏவுகணையோ துப்பாக்கி ரவையோ வெடித்தால் அது அமெரிக்க ஆயுத தளவாட கார்ப்பரேட்டுகளின் தயாரிப்புதான் என்பதும் பலருக்கும் தெரியாத உண்மையாகும்.

உலகம் முழுவதும் மக்களுக்குள் தீராத பகை உணர்ச்சியையும், இனவெறி, மதவெறி, நிறவெறி உள்ளிட்ட பிற்போக்குத்தனங்களையும் உருவாக்கி தன்னை மேம்படுத்திக் கொண்டு திரியும் அமெரிக்கா பயங்கரவாதிகளுக்கு, சாதாரண பள்ளிக்கூட பையன் உயிர் பயத்தையும், அச்சத்தையும் காட்டிவிட்டார்.

அமெரிக்காவில், 2024 நவம்பர் மாதம் 47-ஆவது அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தற்போது அதிபராக உள்ள ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பைடனும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிட உள்ளனர். இதற்காக இருவரும் பல்வேறு மாகாணங்களில் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பட்லரில் பரப்புரையில் ஈடுபட்ட ட்ரம்ப் தனது பரப்புரையை துவங்குமுன்னர் அமெரிக்காவை ’கடவுள் காப்பாற்றட்டும்’ என்று கூறிக் கொண்டே பேசத் துவங்கினார். திடீரென்று மேத்யூஸ் க்ரூக்ஸ் என்ற இளைஞர் தனது AR-15 ரக துப்பாக்கியின் மூலம் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ’கடவுளின் அருளால்’ அவரது காதில் மட்டுமே குண்டு உரசிச் சென்றது. இதனால் அவருக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதையடுத்து, அமெரிக்க பாதுகாப்பு படையினர் ட்ரம்ப்பைக் கொல்ல முயற்சித்த மேத்யூஸ் க்ரூக்ஸ் என்னும் இளைஞரைச் சுட்டு வீழ்த்தினர். அதி பாதுகாப்பு வாய்ந்த அமெரிக்க முன்னாள் அதிபரும், இப்போதைய அதிபர் வேட்பாளருமான ட்ரம்ப்பைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் பென்சில்வேனியாவின் சிறிய நகரான பிட்ஸ்பர்க்கில் பெத்தேல் பார்க் என்ற உயர்நிலைப் பள்ளியில் 2022 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவர் என்று கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக தேசிய கணிதம் மற்றும் அறிவியல் முன்முயற்சி பாடத்தில் சிறந்த மாணவர்களுக்கான 500 டாலர் நட்சத்திர அந்தஸ்து பட்டத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலின் போது 17 வயதான மேத்யூஸ் க்ரூக்ஸ் இடதுசாரி மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கு நிதி திரட்டும் குழுவான ஆக்ட் ப்ளூ ( ACT BLUE) என்ற அமைப்பிற்கு சுமார் 15 டாலர் நன்கொடை கொடுத்துள்ளார் என்கிறது அவரைப் பற்றிய புலனாய்வு குறிப்பு. அது மட்டுமல்ல அவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள நர்சிங் ஹோம் ஒன்றில் சமையல் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.

அதே சமயத்தில் அவர் குடியரசு கட்சியின் உறுப்பினராகவே தன்னை பதிவு செய்து கொண்டுள்ளார் என்பதும், கிளேர்டன் ஸ்போர்ட்ஸ்மென் கிளப் என்ற துப்பாக்கி சுடும் பயிற்சி பள்ளியில் படித்து வரும் போது மனஅழுத்தம் காரணமாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பதும் தற்போது ’அமெரிக்க புலனாய்வு புலிகளான’ FBI மூலம் புலனாயப்படுகிறது.

துப்பாக்கிச் சூடும் பயிற்சியில் இருந்தபோதும், எப்போதும் தனியாகவே இருந்துவந்துள்ளார் எனவும், அவர் ஏதோ விரக்தியில் இருந்து வந்தது புலனாய்வுத் துறையால் உறுதி செய்யப்பட்டாலும், முதற்கட்ட விசாரணையின்படி, டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடுக்கு இதுவரை எந்தக் காரணமும் கண்டறியப்படவில்லை என்று அமெரிக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இனிமேல் இதைப் பற்றிய சதிக் கோட்பாடு அல்லது எதிரிகளின் சதித்திட்டம் என்று ஏதாவது ஒன்று வெளியாகலாம்.

படிக்க: ஜூலியன் அசாஞ்சே  விடுதலை! அமெரிக்க பயங்கரவாதிகளின் உண்மை முகம்.

ஆனால் எது எப்படியோ ஜனநாயக கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும் இடையில் நடந்து வந்த பிரச்சார பரப்புரைகளில் பின் தங்கியிருந்த டொனால்டு டிரம்பிற்கு இது சாதகமான சூழலை உருவாக்கப் போகிறது. இதையே அமெரிக்காவின் அரசியல் விமர்சகர் ரீனா ஷா, ”இங்கிருந்து எல்லாம் மாறுகிறது” என்று அறிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் அதிபர் வேட்பாளரை கொலை செய்வதற்கு முயற்சி செய்த 20 வயது மாணவர் 150 மீட்டர் தூரத்தில் இருந்து அவரை கொலை செய்வதற்கு முயற்சித்ததும், அவரது குறி தவறி ட்ரம்பின் காதுகளை கிழித்துக்கொண்டு சென்றதும். அவரை சுற்றியிருந்த பார்வையாளர் ஒருவர் படுகொலையானதும் அமெரிக்க ஜனநாயகவாதிகளுக்கு கடுமையான அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலின் போது எவ்வாறு ஓலமிட்டபடியே ஓடினார்களோ அதே போன்று நேற்றைய நிகழ்ச்சியிலும் நடந்தது. பத்து ரவுண்டு துப்பாக்கி சூட்டின் போது ஏற்பட்ட பீதியின் காரணமாக இவ்வாறு அலறுகிறார்களே என்பது பரிதாபத்திற்குரியது தான்.

ஆனால் உலக மேலாதிக்கத்திற்கு தன்னை தக்க வைத்துக் கொள்வதற்காக நேற்று வரை பாலஸ்தீனியர்கள் மீது வீசப்பட்ட ஏவுகணைகளில் அமெரிக்காவின் ராணுவ கார்ப்பரேட்டுகளின் லட்சிணை பொறிக்கப்பட்டுள்ளது என்பது அவர்கள் காதுகளில் விழவில்லை.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடுகின்ற மாணவர்களுக்கு துணையாக வீதிகளில் இறங்கி இஸ்ரேலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் ஜனநாயக உணர்வு அவர்களுக்கு உரைக்கவில்லை.

உலகம் முழுவதும் கடந்த இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக பல்வேறு நாடுகளில் நடக்கின்ற போர்களுக்கு பின்னணியில் இருந்து கொண்டு ஆயுத பலத்தையும், பல கோடி ரூபாய் பண உதவியும் செய்து வருகின்ற கொடிய பயங்கரவாத ஆட்சியாளர்களுக்கு எதிராக எந்த அலறல் குரலும் எழவில்லை.

நமது ஊரில், ’அரிவாளை எடுத்தவன் அரிவாளாளேயே வீழ்வான்’ என்று பழமொழி ஒன்று உலவுகிறது. இதை அப்படியே எடுத்துக் கொள்ளலாம். உலகை வன்முறைக்காடாக மாற்றத் துடிக்கும் அமெரிக்க பயங்கரவாதிகளின் கூடாரத்தில் வன்முறை செய்வதற்கு இளைய தலைமுறை துணிந்து விட்டது என்பதுதான்.

இன்று நேற்றல்ல! அமெரிக்க அதிபர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக தாக்குதல் நடைபெற்று வருகின்ற போதிலும் தனது கொள்கையில் இருந்தோ உலக மேலாதிக்க சித்தாந்தத்திலிருந்து அமெரிக்க பயங்கரவாதிகள் பின்வாங்கவில்லை.

துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள அமெரிக்க அதிபர்கள் பட்டியல் இதுதான். ஆபிரஹாம் லிங்கன் (Abraham Lincoln)- 1865, ஜேம்ஸ் ஏ. கர்ஃபீல்ட் (James A. Garfield )- 1881, வில்லியம் மெக்கின்லி (William McKinley) – 1901, ஜான் எஃப் கென்னடி (John F. Kennedy)- 1963, துப்பாக்கி குண்டு தாக்குதலில் காயத்துடன் தப்பித்தவர்கள் பட்டியலும் இதுதான். தியோடர் ரூஸ்வெல்ட் (Theodore Roosevelt) – 1912, ரொனால்ட் ரீகன் (Ronald Reagan) – 1981, டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) – 2024 உள்ளிட்ட நான்கு பேர்கள் தான்.

அதேபோல, ஆண்ட்ரூ ஜாக்சன், வில்லியம் ஹாவர்ட் டஃப்ட், ஹெர்பெர்ட் ஹூவர், ஃப்ராங்க்ளிக் ரூஸ்வெல்ட், ஹாரி ட்ரூமேன், ஜான் கென்னடி, ரிச்சர்ட் நெக்ஸன், ஜெரால்ட் ஃபோர்டு, ஜிம்மி கார்ட்டர், ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ், பில் கிளிண்டன், , ஜார்ஜ் டபிள்யூ புஷ், பாரக் ஒபாமா, ஜோ பைடன் ஆகிய அமெரிக்க அதிபர்கள் மீதும் தாக்குதல் முயற்சிகள் நடந்துள்ளன. இதுதான் ’அமெரிக்க ஜனநாயகத்தின்’ காவலர்களுக்கு நேர்ந்த கதி!

அனைத்து மக்களுக்கு ஆயுதம் ஏந்தும் உரிமை வேண்டும் என்று பிரச்சாரம் செய்தாலே ’பயங்கரவாதிகள்’ என முத்திரை குத்தப்படுவோம். ஆனால் அமெரிக்காவில் லைசென்சு பெற்று ஆயுதம் வாங்கலாம். கள்ளச் சந்தையிலும் ஆயுதம் வாங்கலாம். குரூக்ஸ் பயன்படுத்திய அரை தானியங்கி துப்பாக்கி AR-15 அவர் அப்பா ஆறு மாதங்களுக்கு முன்னர் வாங்கிய துப்பாக்கியாம்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்ட ட்ரம்பை ஒழித்து கட்ட முயற்சிப்பதை பற்றி கண்டிக்காமல், வன்முறையாளர்கள் செய்ததை நியாயப்படுத்துவதைப் போல தங்களது கட்டுரை இருக்கிறது என்று யாராவது புலம்பினால், காசாவின் முனையில் அன்றாடம் நடந்து கொண்டிருக்கும் மரண ஓலங்களை காது கொடுத்து கேட்டுப்பாருங்கள். இவர்களின் கூச்சல் மிகவும் சன்னமாக மாறிவிடும்.

எனினும் பயங்கரவாதிகளின் கூடாரத்தில் எதிரொலித்த வேட்டு சத்தத்திற்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள பாசிச ’ஜனநாயகவாதிகள்’ ’பாரத பிரதமர்’ மோடி உட்பட கண்டித்திருக்கிறார்கள். ”அரசியலிலும், ஜனநாயகத்திலும், வன்முறைக்கு இடமில்லை” என்று தனது எக்ஸ் பக்கத்தில் குதித்துள்ளார் பிரதமர் மோடி. ’நம்புங்கள் ஜனநாயக சாம்ராஜ்ஜியம் சமீபத்திலிருக்கிறது’ என்று!

மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here