2021 ஆகஸ்டு 15 – 75-வது சுதந்திர தினத்தை அறிவித்து, கொண்டாடி வருகிறது பாசிச மோடி தலைமையிலான இந்திய அரசு. நமது நாடு ஜனநாயக நாடு அல்ல, மக்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக நம்ப வைத்து, அவர்களது கையைக் கொண்டே கண்ணைக் குத்திக் குருடாக்கி கொள்ளும் ஏமாற்று வித்தை தான் இந்தக் கொண்டாட்டங்கள். ஏனெனில், முக்கால் நூற்றாண்டுகள் தொடும் வேளையிலும் மக்கள் பிரச்சினைகள் ஏன் தீரவில்லை – நெருக்கடிகள் ஏன் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது? என்பதற்கான கேள்விக்கு ஏன் என்று விடை தேடினாலேயே புரிந்து கொண்டு விட முடியும். ஏனெனில், இந்த நிலவுகின்ற இந்த அரசு கட்டமைப்பில் மக்களுக்கு அதிகாரம் கிடையாது.

இரண்டாம் உலகப் போரில், அதுவரை சூரியன் அஸ்தமிக்காத ராஜ்ஜியத்தை நடத்தி வந்த பிரிட்டன், போருக்கான தனது இராணுவ செலவுகள் காரணமாக பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவைச் சந்தித்தது. தனது காலனி நாடுகளைத் தொடர்ந்து அடிமைப்படுத்தி வைத்துக் கொள்ள முடியாத சூழலில் தவிர்க்க முடியாமல் தனது காலனியாதிக்க கொள்கைகளில் இருந்து பின் வாங்க நேர்ந்தது.

அதே நேரம், இந்தியா வெடிகுண்டு நிரப்பப்பட்ட கப்பலைப் போல போராட்டங்களால், தகித்துக் கொண்டிருந்தது. இதற்கு மேலும் நேரடி காலனி ஆட்சி விலக்கப்படவில்லை என்றால், தனது அதிகாரம் துடைத்தெறியப்படும் என்பதை உணர்ந்து, தனது விசுவாசிகளிடமும், அடியாட்களின் கையிலும் அதிகாரத்தை மாற்றிக் கொடுத்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்.

அமெரிக்கா விடுதலை அடைந்த போது இங்கிலாந்து சட்டங்கள் அனைத்தையும் உடைத்தெறிந்து, புதிய ராணுவம், புதிய போலிசு, புதிய அரசுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டன. ரசியாவில் புரட்சிக்குப் பிறகு, ஜார் மன்னனின் டூமா கலைக்கப்பட்டு, சட்டங்களை இயற்றி மக்கள் மத்தியில் சுற்றுக்கு விட்டு பல்வேறு திருத்தங்களுக்குப் பிறகு அவை அமலுக்கு வரப் பட்டது. நமது நாட்டிலோ, இன்று நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டம், பிரிட்டிஷ் காலனிய சட்டங்களையும், அடிப்படை உரிமைகள் பற்றி பிரான்சிலிருந்தும், நிர்வாக சட்டங்களை கனடாவிலிருந்தும் ‘இறக்குமதி’ செய்து உருவாக்கப்பட்டது.

பார்ப்பன மத தலைவன் சங்கராச்சாரியின் மிரட்டலின் கீழ், வருண – சாதி வெறியுடன் கூடிய ஆர்.எஸ்.எஸ் பிதாமகர்களின் சனாதன ஆதிக்கத்தை முன்னிறுத்தியும்,  பழக்க வழக்கம் என்ற பெயரில் பல்வேறு குருட்டு நம்பிக்கைகளை உள்ளே சொருகியும் உருவாக்கப்பட்டது. எனவே, ஆகஸ்டு 15-ல் நிகழ்ந்தது, அடித்தட்டு மக்களுக்கான ஆட்சி மாற்றம் அல்ல, மேல்மட்டத்தில் நிகழ்த்தப்பட்ட அதிகார மாற்றமே.

Mahatma Gandhi with Lord and Lady Mountbatten, 1947

இப்படிப்பட்ட அரசுக் கட்டமைப்பில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. அவர்கள் அதிகாரமற்ற அலங்கார பொம்மைகள் மட்டுமே. இந்தப் பொம்மைகளை ஆட்டுவிக்கும் உண்மையான எஜமானர்கள், கார்ப்பரேட் பெரு முதலாளிகள் தான். அதனால் தான் யார் ஆட்சியில் இருந்தாலும், கார்ப்பரேட்டுக்கள் மீதான நேரடி வரி விகிதங்கள் மேலும் மேலும் குறைக்கப்பட்டே வருகின்றன. கொரானா நெருக்கடியால் மக்களின் வாழ்க்கை சின்னாபின்னமாக அடித்து நொருக்கப்பட்டாலும், ஒரு வேளைச் சோற்றுக்கே அடுத்தவனை அண்டிப் பிழைக்கும் நிலை வந்தாலும், முதலாளிகளின் சொத்து மதிப்பு மட்டும் தங்கு தடையின்றி உயர்ந்து கொண்டே வருகிறது.

முழு நாடே ஊரடங்கில் இருந்த போதும், தொழிற்கூடங்கள் செயலற்று நின்றிருந்த போதும், உற்பத்திப் பொருட்கள் விற்பனையின்றி தேங்கிக் கிடந்த போதும், முதலாளிகளின் சொத்து மதிப்பு எப்படி உயர்ந்தது என்பதை நாம் யோசித்திருப்போமா? உற்பத்தி செய்து, அப்பொருளை விற்று அதன் மூலம் லாபமீட்டுவது என்பதெல்லாம் காலாவதி ஆகிவிட்டது என்பதும், மக்களிடமிருந்து பிடுங்கப்படும் வரிகள் மூலம் சேரும் சேமிப்புக்களை முதலாளிகளுக்குத் திருப்பி விடுவதில் தான் முதலாளிகள் கொழிக்கிறார்கள் என்பதும் கொரானா மீண்டுமொரு முறை அம்பலப்படுத்தி உள்ளது.

இப்படி தேசங்கடந்த தரகு முதலாளிகள், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்வதற்கு ஏற்பவே இந்த அரசுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பில் அரசு, அரசாங்கம் என இரண்டு அமைப்புக்கள் உள்ளன. இதில் அரசு என்பது, வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார், மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலர் மற்றும் போலிசு, இராணுவம், நீதிமன்றம் வரையிலான அதிகார வர்க்கம் ஒரு பிரிவாகவும், வார்டு கவுன்சிலர் தொடங்கி, எம்.எல்.ஏ., எம்.பி., முதல்வர், பிரதமர் வரையிலான ‘மக்கள் பிரதிநிதிகளின்’ அரசாங்கம் ஒரு பிரிவாகவும் இருக்கின்றனர்.

இவர்களில், மக்கள் மீது சட்டங்களைத் திணிப்பது முதல் மக்களது ஒவ்வொரு உரிமையிலும் தலையிடும் அரசு முத்திரையை அதிகார வர்க்கமே செயல்படுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் என சொல்லப்படும் எம்.எல்.ஏ., எம்.பி.-க்கள், கிராமசபையிலோ, சட்டமன்றம், நாடாளுமன்றத்திலோ மக்கள் பிரச்சினைகளைத் தீர்மானங்களாகப் போட்டு துறை சார்ந்த அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு கிளம்பி விடுவது தான் இவர்களுக்கு இருக்கும் அதிகபட்ச அதிகாரமாகும். அவ்வளவு ஏன், தேர்தல் வெற்றிக்கு எம்.எல்.ஏ. சான்றிதழ் கொடுப்பதே அரசு அதிகாரி தான். எனவே, அதிகாரிகளின்றி ஒரு அணுவும் அசையாது என்பதே நிதர்சனம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு இல்லையென்றாலும், அரசின் துறைகள் இயங்குவதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். 2013 டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது சுமார் 06 மாதத்திற்கு மேலாக, ‘மக்கள் பிரதிநிதிகள்’ இல்லாமலேயே டெல்லி வழக்கமாக இயங்கிக் கொண்டு தானே இருந்தது.

புதுச்சேரியில் கவர்னரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 03 எம்.எல்.ஏ.-க்களின் நியமனம் செல்லும் என நீதிமன்றமும் தீர்ப்பளித்தது. யூனியன் பிரதேசங்களில் கவர்னரின் அதிகாரம் என்றால், தமிழ்நாட்டில் அதிகாரிகளின் புடைசூழ கவர்னர் பன்வாரிலாலின் ஆய்வை மக்கள் பிரதிநிதிகளால் தடுக்க முடியாமல் போனதே? முதல்வரான ஜெயலலிதா 07 மாதங்கள் மரணப் படுக்கையில் இருந்த போதும், அரவங்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் எம்.எல்.ஏ.-க்கள் இல்லாத போதும், 18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகும் அந்தத் தொகுதிகளில் வழக்கம் போல அரசு இயந்திரம் செயல்பட்டுக் கொண்டு தான் இருந்தது.

ஜெயலலிதா இறப்பிற்குப் பிறகு அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் சசிகலாவை சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுத்த போதும், அவரை முதல்வராக்க கவர்னர் விடவில்லை என்பதுடன், அவரை ஊழல் வழக்கில் தண்டித்தது நீதிமன்றம். எனில், அதிகாரம் படைத்தவர் மக்கள் பிரதிநிதிகளல்ல, மக்களின் ஓட்டுக்களும் அல்ல, மக்களின் அரசாங்கமுமல்ல, கவர்னர், நீதிமன்றம் உள்ளிட்ட அரசு தானே? எனவே, நமக்கு விருப்பமானவர்களை நாம் (SELECTION) தேர்வு செய்வதில்லை. ஏற்கனவே கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிமினல் கும்பலில் ஒருவரை (ELECTION) தேர்ந்தெடுக்கிறோம்.

மக்கள் பிரதிநிதிகள் சொன்னால் அதிகாரிகள் செய்கிறார்கள் என்ற தோற்றம், இரு தரப்புக்குமான கள்ளக் கூட்டில் உள்ள போலியான அதிகாரமாகும். முரண்பாடுகள் ஏற்படும் போது தான் யார் அதிகாரம் மிக்கவர்கள் என்பது தெரியும். டெல்லி, புதுச்சேரி மட்டுமல்லாது, தமிழ்நாட்டிலும் முதல்வருக்கும், கவர்னருக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட போது, இறுதியில் வென்றது கவர்னர் அதிகாரம் தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அதிகாரத்தை விட அரசு உறுப்புக்களின் அதிகாரம் தான் செல்லுபடியாகும் என்பதற்கு இப்படி பல்வேறு உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த தேர்தல் கேலிக்கூத்தை புதிய பரிமாணத்திற்குக் கொண்டு சென்றது பாஜக கும்பல், கோவா முதல் புதுச்சேரி வரையிலும், எம்.எல்.ஏ.-க்களை மிரட்டியும், விலைக்கு வாங்கியும், ஆட்சியில் அமர்ந்தது. எம்.எல்.ஏ.-க்களுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிந்து தான், பாஜக-வின் சித்தாந்த மூலவரான ஆர்.எஸ்.எஸ். தனது ஆட்களை நீதிபதி, போலிசு உயர் அதிகாரிகள் முதல் உள்ளூர் அரசுப் பணிகள் வரை நியமித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும், மக்களாட்சி என்பதை நம்ப வைக்க தேர்தல் தகிடுதத்தங்கள் செய்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்கிறது.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் ஏழு ஆண்டு காலத்தில், தொழிலாளர் சட்டங்கள், வேளாண் சட்டங்கள், மீன்பிடி சட்டம், புதிய கல்விக் கொள்கை, சமஸ்கிருத திணிப்பு என தனது பாராளுமன்ற பெரும்பான்மையை ஜனநாயகம் என்ற பெயரில், விவாதங்களின்றி நிறைவேற்றி வருகிறது. கார்ப்பரேட்டுக்களின் லாபத்திற்காக மக்களை மெல்லக் கொன்றது காங்கிரசு ஆட்சி என்றால், அதே கார்ப்பரேட்டுக்களின் நலன்களுடன், இந்துத்துவத்தை நிலைநாட்ட, இசுலாமியர்கள், தலித்துக்களையும், கொடூரமாகத் தாக்கியும், பெண்களையும் பாலியல் வன்புணர்வு செய்தும் பயத்தை உருவாக்கி, சித்திரவதை செய்து ரசித்துக் கொல்லும் பாசிச அரசாக ஆர்.எஸ்.எஸின் பாஜக ஆட்சி இருக்கிறது.

இப்படிப்பட்ட பாசிச கொடுங்கோன்மை ஆட்சியில், மக்கள் உரிமைகளுக்காக போராடிய அறிவுஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்களை சிறையில் அடைத்து, சித்திரவதை செய்து கொல்லும் இந்த ஆட்சியில், மக்களுக்கு சுதந்திரம் என்று சொல்லி, கொண்டாடுவது கேலிக்கூத்தில்லையா?

எனவே தான் கட்சிகளை மாற்றுவதால் மக்கள் பிரச்சினைகள் தீராது, ஒட்டு மொத்த அரசுக் கட்டமைப்பையே மாற்ற வேண்டும். கிரிமினல்கள், மாபியாக்களில் ஒருவரையோ அல்லது நல்லவரையோ கூட தேர்ந்தெடுப்பதை விடுத்து, இந்த அரசமைப்பை அடித்து நொறுக்கி புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

கார்ப்பரேட்டுக்களின் நலன்களை பாதுகாப்பதற்கு, ஒத்திசைவாக, பார்ப்பன – ஆர்.எஸ்.எஸ் கும்பலால் முன்வைக்கப்படும் காவி திட்டமும் இருப்பதால், கார்ப்பரேட்டும், காவியும் ஒன்றிணைந்த கொடூரமான பாசிசமாக வளர்ந்து நிற்கிறது. அதை எதிர்கொள்ள, ஒன்றுபட்ட மக்கள் போராட்டங்களும், அதனை வழிநடத்திச் செல்லும் பாசிச எதிர்ப்பு முன்னணியால் மட்டுமே முடியும். அதற்கான போராட்டங்களைக் கட்டியமைப்பதன் அவசியத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது தான் இன்றைய மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முதற்படியாக இருக்க முடியும். இந்த திசையில் முன்னேறிச் செல்வோம்.

 சமர்வீரன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here