“இரு அவைகளும் ஒத்திவைப்பு:, இதனிடையே, மக்களவை இன்று 4வது நாளாக கூடியதும், மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பின. சபாநாயகர் ஓம் பிர்லா அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை அமைதிகாத்து இருக்கையில் அமருமாறும் கூறினார். அவையில் தொடர்ந்து கூச்சலிடுவதால் எந்தத் தீர்வும் கிடைக்காது என்றும், முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கேள்வி நேரத்தை அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பவே, சபாநாயகர் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். அதேபோல் மாநிலங்களவையிலும் அமளி நீடித்ததால் அவையை 12 மணி வரை அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஒத்திவைத்தார்.”

மணிப்பூர் கொடூரம் | அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டம்? என்று தமிழ் இந்து பத்திரிக்கை தலைப்பிட்டு மேற்கண்ட செய்திகளை வெளியிட்டுள்ளது.

மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக வாயை திறக்க மறுக்கின்ற பாசிச மோடி அரசாங்கத்திற்கு எதிராக “இந்தியா” கூட்டணி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. மோடி வாய் திறந்து பேசுவதற்கு இந்த தீர்மானம் உதவும் என்று எதிர்க்கட்சிகள் பேசிக் கொண்டுள்ளனர்.

காங்கிரஸ் எம்பிக்களோ ஒரு படி மேலே சென்று மோடியின் ஆணவத்தையும், அதிகாரத்தையும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கேள்விக்குள்ளாக்கும் என்று கம்பு சுத்துகின்றனர்.

பாராளுமன்றத்தில் நடைபெறுகின்ற ஆட்சியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றால் 50 பேர், அதாவது 50 எம்பிக்கள் கையெழுத்து போட்டுக் கொடுத்தால் போதும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து விட முடியும். ஆனால் வாக்கெடுப்பின்போது அதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால் பெரும்பான்மை உள்ள கட்சிகள் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

குஜராத், காஷ்மீர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என்று தொடர்ந்து நடைபெற்று வரும் பாசிஸ்டுகளின் பயங்கரவாத தாக்குதலுக்கு மணிப்பூர் பலியாகி கொண்டுள்ளது. ‘மதச்சார்பின்மை’ பேசுகின்ற நாட்டில் 250க்கும் மேற்பட்ட சர்ச்சுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. பெண்களின் மீது பாலியல் வன்முறை ஏவப்பட்டு சந்தி சிரித்துக் கொண்டுள்ளது.

“பாசிச மோடியே  பதவியை விட்டு ஓடு”  “மணிப்பூர் வன்முறை இந்தியாவின் அவமானம்!” “எச்சரிக்கை! 2024 இல் பாஜக வெற்றி பெற்றால் இந்தியாவே மணிப்பூர் ஆகும்” என்று முழங்குவதற்கு பதிலாக மோடியே பதில் சொல் என்று மொன்னையாக போராடிக் கொண்டிருக்கின்றன எதிர்க்கட்சிகள்.

பாராளுமன்ற ஜனநாயகத்திற்குள் இவ்வளவுதான் முடியும். இதற்கே இவ்வளவு பாடுபட வேண்டியுள்ளது என்றால் தேர்தலின் மூலம் பாசிசத்தை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல.

மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை வெறியாட்டங்களை இந்தியாவின் மைய ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து வந்தாலும், வடகிழக்கு பகுதிகளில் இருந்து வெளியாகின்ற மணிப்பூர் நியூஸ் ஒர்த்தி, நியூஸ் லாண்டரி, ஈஸ்ட் மோஜோ, த ஒயர் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் தினசரி செய்தித்தாள்கள் மணிப்பூரில் நடக்கும் ஆர் எஸ் எஸ்- பாஜகவின் பாசிச வெறியாட்டத்தை அம்பலப்படுத்தி வருகின்றனர்.

மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இங்கு உள்ள பார்ப்பனக் கும்பலும், பார்ப்பன பாசிச அடிவருடி அரைவேக்காட்டு அறிவு ஜீவிகளும் திரும்பத் திரும்ப மக்களை தூற்றிக் கொண்டுள்ளனர். மற்றொருபுறம்  விவரம் தெரிந்தவர்கள் சிலர் வீட்டுக்குள் அமர்ந்து கொண்டு மக்களை போராட வேண்டும் என்று வீர தீரமாக அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனரே ஒழிய மக்களோடு மக்களாக வீதியிலே இறங்கி போராடுவதில்லை.

ஆனால் நாட்டின் உழைக்கும் மக்கள் மணிப்பூர் வன்முறை வெறியாட்டங்களை கண்டும் வேடிக்கை பார்க்க கூடாது. நமது போராட்டங்களின் மூலம் இந்திய ஒன்றிய அரசிற்கு ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவது, அதில் நாம் மேலே சொன்ன முழக்கங்களை முன்வைத்து அதை மக்களின் முழக்கமாக மாற்றுவது என்ற அடிப்படையில் போராட்டத்தைக் கொண்டு செல்ல வேண்டும்.

இதையும் படியுங்கள்: 

பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த மணிப்பூர் மக்கள் ஆர் எஸ் எஸ் பாஜகவின், பாசிச இனவெறி அரசியலால் ஒற்றுமையை இழந்து தங்களுக்குள் மோதிக் கொண்டுள்ளனர். மணிப்பூரில் வாழ்ந்து வரும் அனைத்து இனங்களையும் சார்ந்த பெரும்பான்மை மக்கள் இந்திய நாட்டின் மீது நம்பிக்கையை இழந்துள்ளனர். மணிப்பூரில் ராணுவ வெறியாட்டத்திற்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த ஐரோம் ஷர்மிளா, “இந்தியாவின் பிரதமர் மோடி மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி என்று நினைக்கிறாரா இல்லையா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மணிப்பூருக்காக போராடுகின்ற எதிர்க்கட்சிகள் தங்களுடைய மாநிலங்களில் மக்களை திரட்டி வீதியில் இறங்கி போராடுவதும், நாடு முழுவதும் ஒரே குரலில் “பாசிச மோடியே பதவியை விட்டு ஓடு” என்று ஆர்ப்பரித்து நிற்பதும்தான் மணிப்பூர் பிரச்சனையில் உடனடி தீர்வை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட கோரிக்கைகள் எப்போதும் சிலரை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது. மணிப்பூர் பழங்குடி மக்கள் இந்தியாவுடன் சேர்ந்து வாழ்வதா? இல்லையா என்று தீர்மானிக்கின்ற உரிமை அந்த மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

அனைத்து தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்ற ஜனநாயக கூட்டரசு ஒன்றே தற்போதைய தேவையாகும். தொடர்ந்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் மூலம் போராடுவதும் தான் பாசிசத்தை நிரந்தரமாக வீழ்த்துமே ஒழிய வேறு சுலபமான தீர்வுகள் ஏதும் இல்லை.

  • மருது பாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here