2014 ஆம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாநிலங்களின் உரிமைகளை நசுக்குவதை தனது முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமான அம்சமாக பொருட்கள் மற்றும் சேவை வரி (GST) அமல்படுத்தப்பட்டது. அதுவரை பொருட்கள் மற்றும் சேவை மீது வரி விதிக்கும் மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டது. நிதி வருவாயை தன்னளவில் தீர்மானிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. அதை தொடர்ந்து வெவ்வேறு துறைகளிலும் மாநில உரிமைகளை வழக்கமாக்கி கொண்டுள்ளது.

வேளாண் துறை மாநில அரசின் பொறுப்பாக இருந்த போதும் அதனை எள்ளளவும் மதிக்காமல், நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது.‌ அதற்கு எதிராக பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்றத்தில் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக டெல்லி விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்து கடுமையாக போராடியதன் விளைவாக அந்த சட்டங்கள் திரும்ப பெறப்பட்டன.

மாநில பட்டியலில் இருந்து வந்த கல்வித்துறை இந்திரா காந்தி அவசரநிலை பிரகடனம் செய்த பிறகு பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. தற்போதைய மோடி ஆட்சி காலத்தில் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை என மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து முழுமையாக அபகரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான்கு முறை சட்டம் இயற்றி அனுப்பப்பட்ட போதும் அது தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது. அதுவும் தற்போதைய திமுக அரசாங்கம் நீட் தேர்வு ஏற்படுத்தும் பாதிப்புகளை ஆராய மேனாள் நீதிபதி A.K . ராஜன் தலைமையில் அந்த குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அனுப்பப்பட்ட போதும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒரு மாநில மக்களின் வரி பணத்தில் கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்கான விதிமுறைகளை அந்த மாநில அரசு செய்ய முடியாது என்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மின்சார சட்டத்திருத்தம் 2022 மூலம் மாநிலங்களில் மின்சார வாரியத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை ஆணையங்ளின் அதிகாரங்களை ஒன்றியத்திலுள்ள ஒழுங்குமுறை ஆணையம் முழுவதும் பறித்துக்கொள்கிறது. மாநில அரசின் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லாமல் ஒன்றிய அரசின் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அந்த அதிகாரங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. ஒன்றிய அரசின் ஒழுங்குமுறை ஆணையம் என்ன சொல்கிறதோ அதனை மாநில அரசின் ஒழுங்குமுறை ஆணையங்கள் பின்பற்றி நடக்க வேண்டும் என்பது இதில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு மாநிலமும் தனது நிலைமைகளுக்கு ஏற்றவகையில் தனக்கான விதிமுறைகளை பின்பற்றுவதே சரியானது. அப்படியிருக்கும்போது ஒன்றிய அரசின் ஆணையம் சொல்வதை கடைபிடிக்க வேண்டும் என இதில் உள்ளதுடன் ஒன்றிய அரசின் ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவை மாநில அரசு கடைப்பிடிக்கவில்லை என்றால், மாநில அரசு செலுத்தும் அபராதத்தொகை 100 மடங்கு உயர்த்தப்படுவதாக மசோதாவில் உள்ளது. அதாவது முன்பு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் என்றால், இனி 1 கோடி ரூபாய் அபராதமாக இருக்கும்.

தேச பாதுகாப்பு என்ற பெயரில் மாநில அதிகார வரம்பில் உள்ள காவல்துறையில் ஒன்றிய அரசின் தலையீட்டை அதிகப்படுத்த‌ NIA சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தது மோடி அரசு. அதனை மாநில உரிமைகள் குறித்து தொடர்ந்து பேசி வரும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளே ஆதரித்தன. PFI அமைப்பை தடை செய்வதற்கு முன்பான நூற்றுக்கணக்கான சோதனைகளும் அப்படிதான் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களின் நிதியில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் உள்ள பல்வேறு துறைகளை தனியார் பங்களிப்புடன் நடத்துவது என்ற பெயரில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இப்படி ஒவ்வொரு துறையாக மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்ட நிலையில் தற்போது மாநிலங்களின் பொது சொத்துக்களையும் தனியாருக்கு தாரைவார்க்க வழிகாட்டுகிறது.

ஒன்றிய மோடி‌ அரசு தனது கட்டுப்பாட்டில் இருந்து வரும் பொதுத்துறை நிறுவனங்களை வேகமாக விற்று வருவது மட்டுமல்லாமல் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் விற்க வழிகாட்டுகிறது. ஒன்றிய அரசின் நிறுவனங்களுக்கான மாநில அரசுகளால் கையகப்படுத்தி வழங்கப்பட்டவை தான். நிலக்கரி சுரங்கம், விளையாட்டு மைதானங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், தொழிற்சாலைகள், மருத்தவமனைகள் என பல துறைகளுக்கும் தேவைகளுக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தி அளிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனம் என்ற அடிப்படையில் நாட்டு நலனுக்காக வழங்கப்பட்ட நிலங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதே அப்பட்டமான துரோகம். அதே சமயம், நிலங்களை கையகப்படுத்தி தந்த மாநில அரசுகளிடம் எந்த ஒப்புதல் இல்லாமல் அதனை‌ விற்பது நடந்து வருகிறது. இது 90களில் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கை நடந்தேறி‌ வருகிறது. அதன் உச்சமாக தற்போது மாநிலங்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் விற்க வழிகாட்டி வேகமாக முன்னேற அறிவுறுத்துகிறது. கடந்த ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன் “மாநிலங்களின் பொதுத்துறை நிறுவனங்களில் தேவையற்ற வகையில் அதிகமான நிலங்கள் உள்ளது. அவற்றை விற்க மாநில அரசுகள் திட்டமிட வேண்டும்” எனப் பேசினார். ஒன்றிய அரசு விற்பனைக்கு கொடுக்கும் பொதுத்துறை நிறுவனங்களை மாநில அரசுகள் வாங்க வேண்டும் எனில் ஒன்றிய அமைச்சரவையிடம் அனுமதி பெற வேண்டும் என விதியை கொண்டு வந்துள்ளது. இதன்படி நம் மாநிலத்தில் இருக்கும் NLC நிறுவனத்தின் பங்குகளை மாநில அரசு வாங்க விரும்பினால் ஒன்றிய அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஒன்றிய மோடி அரசோ நிச்சயம் அனுமதிக்கும். ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு உள்ள உரிமைகூட மாநில அரசுக்கு இல்லை.ஏற்கனவே மாநிலங்கள் உள்ள ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்தியதன் விளைவாக இட ஒதுக்கீடு, நிரந்தர வேலை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது.

நிதி விநியோகத்தை பொறுத்தவரை மோடி 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும் முன்பு பெயரளவிற்காவது மாநில அரசுகளின் கருத்துக்கு மதிப்பளித்த திட்ட கமிஷன் கலைக்கப்பட்டு அந்த இடத்தில் நிதி அயோக் என்ற அமைப்பு நிறுவப்பட்டது. மாநிலங்களின் நிதி தொடர்பான கொள்கை, கோரிக்கைகளை பரிசீலித்து நிதி அயோக் தன்னிச்சையாக வழிகாட்டுவது நடக்கிறது. மாநில தேர்தல்களின் போது அறிவிக்கப்படும் “இலவசங்களை” சுட்டி ரெவ்டி கலாச்சாரம் ஒழிக்க வேண்டும் என பேசிய மோடி அரசு, மக்கள் நலத் திட்டங்களுக்கு மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை இந்திய அரசியலமைப்பு சட்டம் – இயல் 282 ஐ பயன்படுத்தி நேரடி‌ ஒன்றிய நிதியில் நடக்கும் திட்டங்களாக (CSS) அறிவிக்கிறது.‌ 2014-15 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 7.5 சதவீதம் மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டது. அது 2022-23 பட்ஜெட்டில் 47 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. மாநிலங்கள் இருந்து பெறப்படும் நிதியில் இருந்து நடத்தப்படும் திட்டங்களில் தன்‌ ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்கிறது ஒன்றிய ‌மோடி அரசு. கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மோடியின் படம் வைக்கப்படவில்லை என அந்த மாவட்ட ஆட்சியரிடம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூச்சலிட்டதை பார்த்தோம். பாசிஸ்டுகள் எந்தளவுக்கு தரம் தாழ்ந்து விளம்பரம் தேடுகின்றனர் என்பதை அந்த சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியது.

இதையும் படியுங்கள்:  படிப்படியாக பறிபோகும் கிசான் சம்மான் நிதி; சிறு, குறு விவசாயிகளை  ஒழித்து வரும் மோடி அரசு!

மாநில உரிமைகளை பறிப்பது ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் ஒரே நாடு- ஒரே மின்சார ஆணையம்- ஒரே கல்விக் கொள்கை- ஒரே தேர்வு- ஒரே வரி என‌ ஒற்றைத் தன்மை ஆக்கும் கொள்கை ஒரே சமயத்தில் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் இந்துராஷ்டிர கனவுக்கும் தளம் அமைத்துக் கொடுக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.கவின் ஒற்றை மேலாதிக்க அரசியலை நடைமுறைபடுத்துவதற்கான அடிப்படை இந்திய அரசியலமைப்பு சட்டத்திலேயே இருக்கிறது என்பதே எதார்த்தம். சமீபத்தில் தி வயர் இணையத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கரண் தப்பார் ஒன்றிய மோடி அரசு இந்திய அரசியலமைப்பு முன்வைக்கும் கூட்டாட்சிக்கு எதிராக செயல்படுவது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் “இந்திய அரசியலமைப்பு இந்த கூட்டாட்சிக்கு எதிரான அடிப்படையை கொண்டுள்ளது. அது ஒற்றை ஆட்சியை நோக்கியே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை தற்போதைய ஒன்றிய அரசு மேலுப் மோசமாக்கி வருகிறது” எனத் தெரிவித்தார். அது உண்மையே. இந்திய அரசியலமைப்பு அதன் உள்ளடக்கத்திலேயே தேசிய இனங்களை அடக்கி ஒடுக்குவதற்கான கூறுகளை அதிகம் கொண்டுள்ளது. இந்திய நாடு – தேசிய இனங்களின் சிறைக்கூடமாக உள்ளது என்பதே அதன் சாரம்.

காலனியாதிக்க காலக்கட்டத்திற்கு முன் பல்வேறு சிறு குறு மன்னர்களின் நாடுகளாகவும் சிதறுண்டு கிடந்த பல பகுதிகள் பிரிட்டன் காலனியாதிக்க ஆட்சியாளர்களால் துப்பாக்கி முனையில் ஒன்றிணைத்து பிரிட்டன் இந்தியாவை கட்டமைத்தனர். இந்த நிலையில் சுதந்திரத்திற்கு பின்பு அதனை நீடிக்க செய்யவும் காஷ்மீர் போன்ற பகுதிகளை இணைத்துக் கொள்ள பல்வேறு வாக்குறுதிகளை அளித்தும் ஒற்றை இந்தியாவை கட்டமைத்தனர்.

இதையும் படியுங்கள்: காஷ்மீர்: இப்படியும் அழிக்கலாம் ஜனநாயகத்தை! -ரியாஸ்

ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் ஆர்ட்டிகிளில் “இந்தியா மாநிலங்களின் ஒன்றியம்” என்று எழுதப்பட்டிருந்தாலும் அதன் பின் பகுதிகள் அதற்கு எதிராக ஒன்றிய அரசிடம் அதிகாரத்தை குவிப்பதாகவே உள்ளது. இந்தியாவின் மாநிலங்களை அரை இறையாண்மை கொண்ட அரசுகள் என்றே பலரும் குறிப்பிட்டனர். அதிகாரம் படைத்த துறைகள் என்பதை பொருத்தவரை

நாம் இந்திய அரசை “ஒன்றிய அரசு” என பெயரளவில் அழைத்தாலும் அதன் தன்மையில் அது ஒன்றுகுவிக்கப்பட்ட மத்திய அரசாகவே உள்ளது. அது இந்திரா காந்தி அறிவித்த மாநிலங்களின் வசம் இருந்த பல துறைகள் ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டது. United States of America என்று அழைக்கப்படும் ஒரு முதலாளித்துவ ஏகாதிபத்திய நாட்டில்கூட இராணுவம், வெளியுறவு உள்ளிட்ட ஒரு சில துறைகள் தவிர்த்து பிற‌ துறைகள் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

தற்போதைய நிலையில் இந்தியாவில் கவர்னர்களின் அதிகார அத்துமீறல், ஒன்றிய மோடி அரசின் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகள் பெரும்பாலும் அரசியல் அமைப்பு சட்டத்தின் வரையறைக்கு உட்பட்டே நடைபெறுகிறது. இதனை பல எதிர்க்கட்சிகளும் புரிந்து கொள்ள தொடங்கியுள்ளனர்.

அதனால் தான் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மாநிலங்களிடம் அதிகாரம் கிடைக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும் எனப் பேச‌த் தொடங்கியுள்ளனர்.

அது இன்றைய கார்ப்பரேட்-காவி பாசிச மோடி அரசுக்கு எதிரானது மட்டுமல்ல, மாநிலங்களுக்கு, தேசிய இனங்களுக்கு உரிமை, ஜனநாயகம் என்பது‌ மக்களுக்கு ஜனநாயக உரிமைகளுக்கு இன்றியமையாதது ஆகும். அந்த மாநில கூட்டாட்சி என்பதை தாண்டி தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ற கோரிக்கை எழுப்பப்பட வேண்டும்; எழுப்புவோம்

  • திருமுருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here