காதிபத்திய நாடுகளின் மேலாதிக்க வெறியால் நடத்தப்படும் போர்கள், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து, அவர்களை வறுமையின் பிடியில் தள்ளியுள்ளது என்பதை ஐநா மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. எங்கோ ஒரு மூலையில் நடக்கும் போர் நமக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்று உழைக்கும் மக்கள் ஒதுங்கி இருக்க முடியாது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் மிகத் தெளிவாகப் பறைசாற்றுகின்றன.

ஏகாதிபத்தியப் போரின் கோர விளைவுகள் குறித்த விரிவான தொகுப்பு

ஈரான் மீதான போர் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் உலகம் முழுவதும் சுமார் 3.2 கோடி (32.5 மில்லியன்) மக்கள் வறுமையில் தள்ளப்படும் அபாயம் உள்ளதாக ஐநா வளர்ச்சித் திட்டம் (UNDP) எச்சரித்துள்ளது. இதில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மட்டும் சுமார் 88 லட்சம் மக்கள் வறுமையின் பிடியில் சிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியா தனது உரம் மற்றும் எரிசக்தித் தேவைகளுக்குப் பெருமளவில் மத்திய கிழக்கு நாடுகளைச் சார்ந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவின் உரம் தயாரிப்புக்குத் தேவையான திரவ இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் பாதியளவு கத்தாரிலிருந்து வருகிறது.

ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்துப் போரினால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியா இறக்குமதி செய்யும் யூரியா, DAP போன்ற உரங்களின் வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வு மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது ஏற்கனவே பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள உழைக்கும் மக்களின் குடும்ப வரவு செலவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, அவர்களை வறுமைக்குள்ளாக்குகிறது.

ஈரான்: சிதைக்கப்பட்ட வாழ்வாதாரமும் பொருளாதார வீழ்ச்சியும்

ஈரான் மீது நடத்தப்பட்ட ஆறு வார காலப் போர் அந்த நாட்டின் சாதாரண மக்களின் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கியுள்ளது. போரின் விளைவாக சுமார் 35 முதல் 41 லட்சம் ஈரானியர்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டுள்ளனர். ஈரானின் மொத்த உழைக்கும் மக்கள் சுமார் 50% (10 முதல் 12 மில்லியன் வேலைகள்) தற்போது பறிபோகும் அபாயத்தில் உள்ளன.

படிக்க:

 ‘நவீனமயமாதல்’ என்பது வறுமை ஒழிப்பல்ல! – பேரா.பிரபாத் பட்நாயக்

 இந்தியாவின் துரோகத்தை புறந்தள்ளி இந்திய எண்ணெய் கப்பலை பாதுகாப்பாக அனுப்பும் ஈரான்!

மருத்துவமனைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் எனப் பொதுமக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டதில் சுமார் 300 பில்லியன் டாலர்(30,000 கோடி)  சேதம் ஏற்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை 134% வரை உயர்ந்துள்ளது, இது உழைக்கும் வர்க்கத்தினர் ஒருவேளை உணவிற்கே வழியின்றித் தவிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

சூடான்: ஒரு தலைமுறையின் எதிர்காலம் கேள்விக்குறி

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் உள்நாட்டுப் போரால் சூடான் நாடு மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. போருக்கு முன் 38 சதவீதமாக இருந்த வறுமை நிலை, தற்போது 70 சதவீதமாக உயர்ந்துள்ளது.  2023 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 70 லட்சம் மக்கள் தீவிர வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்

சுமார் 2.1 கோடி மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர். மேலும், 1.1 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். நாட்டின் வருமானம் 1992 ஆம் ஆண்டு இருந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, இது ஒரு தேசத்தின் எதிர்காலத்தையே சிதைக்கும் செயலாகும்.

ஏகாதிபத்தியப் போரின் கோர முகம்: உழைக்கும் மக்கள் ஏன் விழிப்புடன் இருக்க வேண்டும்?

இந்தப் போர்கள் வெறும் ராணுவ ரீதியான மோதல்கள் மட்டுமல்ல, இவை திட்டமிட்டு ஒரு நாட்டின் பொருளாதார முதுகெலும்பையும், சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தையும் தகர்க்கின்றன. ஐநா அதிகாரி அலெக்சாண்டர் டி குரூ (Alexander De Croo) கூறுவது போல, “இத்தகைய போர்கள் வளர்ச்சியைப் பின்னோக்கித் தள்ளுகின்றன” (Development in reverse).

உழைக்கும் மக்கள் உணர வேண்டிய முக்கியமான உண்மைகள்: நவீன பொருளாதாரத்தில் எரிசக்தி மற்றும் உணவு விநியோகச் சங்கிலி உலகம் முழுவதும் பிணைக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் வெடிக்கும் ஒரு குண்டு, இந்தியாவில் உள்ள ஒரு விவசாயியின் உர விலையையும், ஒரு தொழிலாளியின் உணவு தேவையையும் நேரடியாகப் பாதிக்கிறது.

போரைத் தீர்மானிக்கும் அதிகார வர்க்கத்தினர் அல்லது ஏகாதிபத்திய நிதிமூலதன கும்பல் இந்தப் பாதிப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்கின்றனர். ஆனால், அடித்தட்டு மக்களும், அமைப்புசாரா தொழிலாளர்களுமே வறுமையின் முதல் பலிகளாகின்றனர்.

படிக்க:

 குறையும் வறுமை: புள்ளிவிவர மோசடியில் இறங்கியுள்ள மோடி கும்பல்!

 இன அழிப்பு-பட்டினிச்சாவுக்குள் தள்ளப்பட்டிருக்கும் பாலஸ்தீன மக்கள்: தேவை பாட்டாளிகளின் சர்வதேச நடவடிக்கை!

வளர்ந்த நாடுகள் அல்லது இந்தியா போன்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பணிந்த நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை ஏற்று வறுமை ஒழிப்பு மற்றும் மேம்பாட்டு உதவிகளுக்கான நிதியைக் குறைத்துக் கொண்டு, தங்கள் இராணுவ செலவினங்களை (ஆயுதங்கள் வாங்குவது) அதிகரித்து வருகின்றன.

பாசிச மோடியை சங்பரிவார் கும்பல் விஸ்வகுரு, உலகத்தலைவர் எனவும் மோடி நினைத்தால் எந்த நாட்டில் நடைபெறும் போரையும் தடுக்கும் வல்லமை பெற்றவர் எனவும் வெட்கமே இல்லாமல் புழந்துதள்ளுபவர்கள் எவருமே ஈரான் போரினால் இந்திய மக்களுக்கு இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டும், மோடி அமெரிக்காவின் கொடூர செயலை கண்டிக்காது அமைதி காப்பதை, இந்திய மக்களை வறுமையில் தள்ளுவதை கண்டும் காணாமல் மோடிக்கு பஜ கோவிந்தம் பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் அப்படி இருக்க முடியாது.

போர் என்பது எங்கோ ஒரு நிலப்பரப்பில் நடக்கும் நிகழ்வு அல்ல; அது ஒவ்வொரு உழைக்கும் மக்களின் தட்டிலும் உள்ள உணவைப் பறிக்கும் செயலாகும். எனவே, உலக அமைதிக்கும் ஏகாதிபத்தியப் போர்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பது என்பது உழைக்கும் மக்களின் தார்மீகக் கடமை மட்டுமல்ல, அது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான அவசியமுமாகும்.

  • நலன்

1 COMMENT

  1. அமெரிக்க இஸ்ரேல் vs ஈரான் போர் குறித்தான தோழர் நலன் அவர்களின் கட்டுரை உலகம் முழுமையும் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை எப்படிப் பறித்துக் கொண்டிருக்கிறது; இன்னும் எவ்வளவு மனித விரோத செயல்கள் காத்திருக்கின்றன என்பதனை விரித்து எழுதியுள்ளார். ஒற்றைத் துருவ அமெரிக்கா மற்றும் அதன் எடுபிடி இஸ்ரேலை சவக்குழிக்குத் தள்ளும் வகையில் உலக மக்கள் போர்ப் பரணி பாட வேண்டிய – களமாட வேண்டிய தருணம் இது. கட்டுரையாளருக்குப் பாராட்டுக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here