டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு கருப்பு தினம்!


1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலமும், இந்தியாவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளை அமல்படுத்திய காலமும் ஏறக்குறைய ஒன்றுதான்!
மறுகாலனியாக்கத்தை அமுல்படுத்துவதற்கு எதிராக இந்தியாவின் விவசாயிகள்- தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடுவார்கள், அதற்கு மாற்று ஒன்றை உருவாக்கி விடுவார்கள் என்ற அச்சத்தில் முன்கூட்டியே திட்டமிட்டு இந்து-முஸ்லீம் இடையே பேதங்களை பாபர் மசூதி இடிப்பு மூலம் உருவாக்கினர்.

தனது லாப வேட்டைக்கு ‘இந்தியா’ என்ற அகண்ட சந்தையை கைப்பற்ற துடித்த பன்னாட்டு நிறுவனங்கள், ஏகாதிபத்திய முதலாளித்துவ கூட்டு சதிக்கு அப்போதே துணை நின்றவர்கள் இந்த பாபர் மசூதியை இடித்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்.
இந்தியாவில் அவர்கள் உருவாக்கத் துடிக்கும் பார்ப்பன பேரரசின் யோக்கியதை எப்படி இருக்கும் என்பதை அன்றே நமக்கு உணர்த்தி விட்டார்கள்.

ஆனால் இந்திய பாட்டாளி வர்க்கமும், உழைப்பாளிகளும் இதை பார்ப்பன பயங்கரவாதம் என்று புரிந்து கொள்வதற்கு முடியாமல் இன்னமும் குழப்ப படுகின்றனர் என்பதுதான் அவர்களின் வெற்றிக்கு அடிப்படையாக உள்ளது. பார்ப்பனப் பேரரசு (இந்து ராஷ்டிரம்) அமைக்க துடிக்கும் அவர்களின் கனவை கலைக்கும் வகையில் போராடுவோம்!
கார்ப்பரேட் -காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு
டிசம்பர் 6 ல் உறுதி ஏற்போம்!

♦♦♦

டிசம்பர் உறுதி!

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். பாபர் மசூதி 16 ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர் பாபர் ஆணையின் பேரில் அவரது தளபதி மீர் பக்கியால் கட்டப்பட்டதாகும்.

பாபர் மசூதி கட்டப்பட்ட போது இந்தியாவில் இந்து மதம் என்று ஒன்று இருந்ததில்லை. புத்தம், சமணம், சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், காணாபத்யம் போன்ற மதங்களே இந்தியாவில் இருந்தன.

இந்த மதங்களுக்கிடையேயும் இணக்கமில்லை. சதா, சண்டை சச்சரவுகள். இந்தியா முழுவதும் இசுலாமிய மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அக்காலத்தில், மதவெறி, மதமாற்றம், மதச்சார்பின்மை போன்ற சிந்தனை முறை இல்லை.

இவை 18 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிந்தனைப் போக்குகளாகும். அத்வானி போன்ற சங்பரிவார் தலைவர்கள் அரசியலில் மதத்தை கலக்க முயன்றனர்.

பாபர் மசூதி, ராமர் பிறத்த இடத்தில் கட்டப்பட்டது என்றது ஆர் எஸ்.எஸ் . மதச்சார்பற்ற வரலாற்று ஆசிரியர்கள் சான்றுகள் கேட்டனர். இதெல்லாம் நம்பிக்கை! என்று தப்பித்தார்கள்.

அயோத்தியில் கோவில் கட்டாமல், லண்டனிலா ராமருக்கு கோவில்
கட்ட முடியும் ? என இந்துக்களின் உணர்ச்சியைத் தூண்டினார் அத்வானி.

கோர்ட்டுக்கு கடவுளை சாட்சி சொல்ல அழைப்பீர்களா? என இபிகோவை,
மநு வாக்கியத்தால் புறம் தள்ளினார்.

பொய்களை மீண்டும் மீண்டும் உண்மைபோல கூறுவதே ஃபாசிஸ்டுகள் வேலை. அதை திறம்பட அத்வானி அணி செய்தது.

முஸ்லீம் மன்னர்கள் மதவெறியர்கள். இந்தியாவுக்கு அந்நியர்கள். இந்துக்களை மதம் மாறச்செய்தவர்கள். இந்துக் கோவில்களை பல முறை கொள்ளையடித்தவர்கள். என்றெல்லாம் வரலாற்றில் பொய்யைக் கலந்தார்கள்.

முஸ்லீம்கள் அந்நியர்கள் என்றால் ஆரியர்கள் யார்? அவர்களும் இந்த மண்ணில் அகதிகளாகக் குடியேறியவர்கள்தாமே.

இந்து மன்னர்கள் கோவில்களை கொள்ளையடித்ததே கிடையாதா?

இந்து மன்னனான சிவாஜி வங்கத்தின் மீதும் ஒடிசா மீதும் படையெடுத்தபோது அங்குள்ள கோவில்களை கொள்ளை அடிக்கவில்லையா?

திருமங்கையாழ்வார் நாகப்பட்டினத்திலிருந்த தங்கத்தாலான புத்தர் சிலையைத் திருடி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொடுத்தவர்தானே!

அவ்வளவு ஏன் பௌத்தத்தை அழிக்க இசுலாமியர்களின் உதவியை நாடியவர்களே பார்ப்பனர்கள். இதற்காக இசுலாமியர்களை போதிச்சத்துவர்கள் என்று அழைத்தவர்கள் .

இந்துத்துவாவாதிகள் சொல்கிறபடி இசுலாமிய மன்னர்களுக்கு சமய வெறி இருந்திருந்தால் பாபர், ஹுமாயூர், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான் காலத்திலேயே இந்தியா இசுலாமிய நாடாக மாறியிருக்கும்.

பாபர் இந்தியாவை ஆட்சி செய்தபோது துருக்கியை கலீபா சுலைமான் ஆண்டார். ஜெர்மனியை 5 ஆம் சார்ல்ஸ் ஆண்டார். இங்கிலாந்தை 8 ஆம் ஹென்றி ஆண்டார்.

ஒப்பீட்டளவில் இவர்களைவிட சிறந்த நிர்வாகத்தை தந்தவராக பாபர் வரலாற்றாசிரியர்களால் பாராட்டப்படுகிறார். வின்சன் ஸ்மித் போன்றவர்கள் ஆசியாவிலேயே பாபர் ஆட்சிதான் சிறந்து விளங்கியதாகக் கூறுகிறார்கள்.

பாபர் கவிதைகள் எழுதும் மென்மையான இலக்கிய மனம் படைத்தவர். ‘ பாபர் நாமா’ எனும் சுயசரிதை நூலை எழுதியவர். சிறந்த பேச்சாளர். நாட்டு மக்களோடு நல்லுறவு வைத்திருந்தவர்.

இவரது பேரனான அக்பர் மிகுந்த சமையப் பொறையுடையவர். இதற்காகவே தீன் இலாஹி எனும் புது மார்க்கத்தை உருவாக்கியவர். இந்தியாவில் இசுலாத்தை பிற மதங்களோடு இணக்கமாக்கியவர்.

இந்தியாவில் பௌத்தம் தழைத்தோங்கிய மௌரிய ஆட்சியை சூட்சியால் ஒழித்தவர்கள் ஆரியர்கள். பௌத்தர்களின் தலைக்கு தங்கக் காசுகள் தருவதாகச் சொன்னவன் ஆரியமன்னன் புஷ்யமித்ர சுங்கன்.

இந்த துரோகத்தை இந்து மன்னர்கள் வரலாற்றில் தொடர்ந்து நடத்தினார்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராக தீரத்துடன் போராடிய திப்புசுல்தானைக் காட்டிக் கொடுத்தார்கள் இந்து மன்னர்களான மராட்டியர்களும் நிஜாம்களும்.

டிசம்பர் 6, இந்திய மத நல்லிணக்கத்தின் மீது படிந்த அழிக்க முடியாத வரலாற்று கறை.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், முத்தலாக் தடை, மாட்டிறைச்சி தடை, குடியுரிமைச் சட்டம், குடியேற்றப்பட்டிவேடு என வலதுசாரி ஃபாசிச அரசு இசுலாமியர்கள் மீது தொடர்ந்து வெறுப்பு உமிழ்ந்து வருகிறது.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு நமது மௌனத்தை அது ஆதரவாகப் புரிந்து கொள்ளும் ஆபத்து உள்ளது.

இந்திய அரசியல், இந்தியப் பண்பாடு, இந்திய மெய்ஞானம், இவையனைத்தும் இந்திய மக்களின் பன்மைத்துவம் வழியாகவே செழித்து வளர்ந்தது.

அப்பன்மைத்துவத்தை அழித்து, இந்தி -இந்தியா,
எனும் ஒற்றைக் கட்டுமானத்தில் தேசத்தை உருவாக்கத் துடிக்கிறது சங்பரிவார் கும்பல்.

இத்தகைய முயற்சிகளை முறியடிக்க ,
டிசம்பர் 6 நமக்கு விழிப்பை, ஒற்றுமையை, வலிமையை, உருவாக்கட்டும்!

நன்றி:
கரிகாலன் .

முகநூல் பதிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here