அநீதியே சட்டமாகும் போது, அதனை எதிர்த்துப் போராடுவதே எங்கள் கடமை”

உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் நகரில் அஃப்ரீன் ஃபாத்திமா என்கிற மாணவியின் வீட்டை காவல்துறை ஞாயிற்றுக்கிழமையன்று இடித்துத் தரைமட்டமாக்கி இருக்கிறது.

வீட்டை இடித்ததற்கான காரணம் என்ன?

ஒருபுறம், அந்த வீடு சட்டவிதிகளுக்கு மீறி கட்டப்பட்டிருப்பதாகக் கூறி அதனை இடித்ததாக அலகாபாத் அரசு நிர்வாகம் தெரிவிக்கிறது.

மற்றொருபுறம், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி மாணவியாக இருக்கிற அஃப்ரீன் ஃபாத்திமா, அங்கு மாணவர் போராட்டங்களில் கலந்துகொண்டதாலும் மாணவர் அமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பதாலும் தான் அவரைக் குறிவைத்து அவரது வீட்டை அலகாபாத்தில் பாஜக திட்டமிட்டே இடித்துத் தள்ளி இருக்கிறது என்பது இன்னொரு வாதமாக இருக்கிறது.

இதில் எது உண்மை? நடந்தது என்ன? என்பதை இதுவரை நடந்த சம்பவங்களை ஒவ்வொன்றாக சரிபார்த்தால் நமக்குப் புரிந்துவிடும்.

ஜாவித்துக்கு இரண்டு மகள்கள். சுமையா ஃபாத்திமா என்கிற ஒருமகள் அலகாபாத்தில் பெற்றோருடனே இருக்கிறார். இன்னொரு மகளான அஃப்ரீன் ஃபாத்திமா டெல்லியில் இருக்கும் ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருக்கிறார். வெல்ஃபேர் கட்சியின் உள்ளூர் தலைவராக ஜாவித் இருக்கிறார். அவருடைய மகளான அஃப்ரீன் ஃபாத்திமாவோ அக்கட்சியுடைய மாணவர் அமைப்பின் தேசிய செயலாளராக இருக்கிறார். தானொரு இந்தியர் தான் என்று 50 ஆண்டுகால ஆதாரத்தைக் காட்டமுடியாமல் போகிற முஸ்லிம்களின் குடியுரிமையை பறித்து, அவர்களை சிறையில் அடைத்து நாடுகடத்தும் சிஏஏ சட்டத்தை எதிர்த்து கடுமையாகப் போராடியவர் அஃப்ரீன் ஃபாத்திமா. அது மட்டுமின்றி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் பாஜகவுக்கு எதிரானவர்களை எல்லாம் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தியபோது அங்கேயும் போராடியவர் அஃப்ரீன் ஃபாத்திமா. அத்துடன், நூல்களை வாசிப்பது தான் உலகின் பல கதவுகளைத் திறக்கும் என்று உறுதியாக நம்பிய அஃப்ரீன் ஃபாத்திமா, அலகாபாத்தில் பெண்களுக்கென்று ஒரு வாசிப்பு வட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் உருவாக்கி, தொடர்ச்சியாக சந்திப்புகளை நடத்தி பல்வேறு நூல்களை கூட்டாக வாசிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியவர்.

அஃப்ரீன் ஃபாத்திமாவின் தந்தையான ஜாவித்தும் உள்ளூரில் முஸ்லிம் மக்கள் நடத்தப்படுகிற ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை அவ்வப்போது நடத்திவந்திருக்கிறார்.

இப்படியான சூழலில் தான் கடந்த மே மாதம் 26 ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பைக் காட்டும்விதமாக நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினைப் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா பகிர்ந்தார். அதே போல ஜூன் ஒன்றாம் தேதியன்று பாஜகவைச் சேர்ந்த நவீன் ஜிண்டால் என்பவர் டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

இவ்விரண்டு செய்திகளும் அரபுலகத்தின் கத்தார், குவைத் போன்ற நாடுகளில் தெரியவந்ததும், சர்வதேச கவனத்தை ஈர்த்துவிட்டன. இந்திய அரசை மன்னிப்பு கேட்கவைக்கிற அளவுக்கு சர்வதேச அளவில் பாஜகவினரின் செயல்பாடுகள் அவமானத்தை ஏற்படுத்திவிட்டன. இந்தியாவிலும் பாஜகவினரின் இந்த வன்மத்திற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாகத்தான் அலகாபாத்திலும் வெள்ளிக்கிழமையன்று மசூதியில் தொழுகை முடித்ததும் ஒரு அமைதிப் போராட்டத்தை அங்கு வாழும் இஸ்லாமிய மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் ஜாவித்தும் பங்கெடுத்தார். அந்தப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் பணியிலும் முன்னணியில் இருந்தார் ஜாவித்.

வெள்ளிக்கிழமை மாலை ஜாவித்தின் வீட்டிற்கு கோட்வாலி காவல்நிலையத்தில் இருந்து ஒரு காவலர் வந்திருக்கிறார். காவல்துறை துணை ஆய்வாளர் அழைத்ததாக சொல்லி இருக்கிறார். உடனே ஜாவித் தன்னுடைய ஸ்கூட்டரிலேயே காவல்நிலையத்திற்கு சென்றிருக்கிறார். சில மணி நேரங்கள் ஆகியும் ஜாவித் வீட்டிற்கு வரவில்லை. அதன்பிறகு காவல்நிலையத்தில் இருந்து சில காவலர்கள் ஜாவித்தின் வீட்டிற்கு வந்து, ஜாவித்தின் மனைவி பர்வீன் ஃபாத்திமாவையும் மகள் சுமையா ஃபாத்திமாவையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கே சென்றபின்னர் தான், இது ஏதோ சாதாரண விசாரணை இல்லையென்பதையே அவர்கள் உணர்ந்திருக்கின்றனர்.

ஜாவித்தை ஒரு பயங்கரவாதியாக சித்தரிக்கும் முயற்சியில் அங்கிருந்த காவலர்கள் முயன்றுகொண்டிருப்பது அவர்களுக்கு புரிந்திருக்கிறது. திட்டமிட்டு மக்களைத் தூண்டி ஒரு கலவரத்தை நிகழ்த்த ஜாவித் முயன்றதாகவும், அவருக்கு மூளையாக டெல்லியில் படித்துவரும் அஃப்ரீனா ஃபாத்திமா இருந்துவருவதாகவும் காவல்நிலையத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

இப்படியே சனிக்கிழமை இரவுவரையிலும் அவர்கள் காவல்நிலையத்தில் தான் வைத்திருக்கின்றனர். வழக்கெல்லாம் எதுவும் பதியவும் இல்லை. இதற்கிடையில் சனிக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் அவசர அவசரமாக ஒரு அறிவிப்பை எழுதி அச்சடித்து, ஜாவித்தின் வீட்டு வாசலில் ஒட்டிச் சென்றிருக்கிறது அலகாபாத் அரசு நிர்வாகம்.

அந்த அறிவிப்பின்படி, சட்டவிரோதமாக அந்த வீடு கட்டப்பட்டிருப்பதால், மறுநாள் ஞாயிற்றுக்கிழமையன்று அந்த வீட்டை இடிக்கப்போவதாக எழுதியிருந்தது. அதாவது ஒரு வீட்டில் இருக்கிற அனைவரையும் சட்டவிரோதமாக காவல்நிலையத்தில் அடைத்துவைத்துவிட்டு, அந்த நேரத்தில் அவர்கள் படிக்கமுடியாதபடி ஒரு அறிவிப்பை அவர்கள் வீட்டிலேயே ஒட்டிவிட்டு, அடுத்த 12 மணி நேரத்திற்குள்ளாக அந்த வீட்டையே இடிக்கப் புறப்பட்டிருக்கிறது உத்தரப்பிரதேச அரசு.

செய்தி கேள்விப்பட்டதும் அக்கம்பக்கத்து மக்கள் கோட்லா காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். ஆனால் ஜாவித்தையோ மற்றவர்களையோ பார்க்கக் கூட எவரையும் அனுமதிக்கவில்லை.

நீதிமன்றத்திற்கும் போகவில்லை, வீட்டை இடிக்கிறோம் என்று வீட்டு உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கவில்லை, ஏன் இடிக்கிறோம் என்று கூட எவரிடமும் சொல்லவில்லை. ஆனால் ஞாயிறு காலை புல்டவுசர்களைக் கொண்டுவந்து ஜாவித் குடும்பத்தின் இருபதாண்டு கால வாழ்க்கையை அரவணைத்து வைத்திருந்த அந்த வீட்டினை தரைமட்டமாக இடித்துத் தள்ளியது உத்தரப்பிரதேச அரசும் காவல்துறையும்.

24 மணி நேரத்தில் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை குப்பைக்கூளமாக்கி இருக்கிறது இந்த அரசு.

அவர்கள் அவசர அவசரமாக அச்சிட்டு ஒட்டிய அறிவிப்பில், அந்த வீட்டை சட்டவிரோதமாகக் கட்டியிருப்பதாக ஜாவித்துக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அந்த வீடே ஜாவித்துக்கு சொந்தமானது கிடையாது. அது ஜாவித்தின் மனைவியான பர்வீன் ஃபாத்திமாவுக்கு சொந்தமானது. இடித்துத் தள்ளவேண்டும் என்கிற அவசரத்தில் அது யாருடைய வீடு என்பது கூடத் தெரியாமல் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இடித்துத் தள்ளியிருக்கிறார்கள்.

இனி எவரும் எங்களை எதிர்த்துப் போராடவோ, கேள்வி கேட்கவோ அல்லது நிமிர்ந்து பார்க்கவோ கூட கூடாது என்கிற எச்சரிக்கையைக் கொடுப்பதற்காகத் தான் போராட்டத்தை ஒருங்கிணைத்த ஜாவித்தின் வீட்டை இடித்துத் தள்ளியிருக்கிறார்கள். போராட்டத் தலைவருக்கே இந்த நிலையென்றால், நாமெல்லாம் எம்மாத்திரம் என்கிற பயம் மற்ற அனைவருக்கும் வரவேண்டும் என்பது தான் இந்தக் கொடுங்கோலர்களின் திட்டம்.

இன்னமும் ஜாவித் காவல்நிலையத்தில் தான் இருக்கிறார். இரண்டு மாடிக் கட்டிடமாக இருந்த அவரது வீடு இருந்த இடத்தில், வெறும் இடிக்கப்பட்ட செங்கல்களும் மணலும் தான் இருக்கிறது என்பதை யாராவது சொல்லியிருப்பார்களா என்று கூடத் தெரியவில்லை.

இனிமேலாவது, எல்லாம் சட்டப்படி தான் நடக்கிறது என்கிற வாதத்தை பாஜகவுக்கு முட்டுக்கொடுப்போர் எவரும் சொல்லாதீர்கள்.

படிக்க

இவ்வளவையும் செய்துவிட்டு, அந்த வீட்டை முன்னின்று இடித்த எஸ்பி அஜய் குமார் என்ன சொன்னார் தெரியுமா?
“இந்த வீட்டை இடிக்கும்போது தான் உள்ளே பயங்கரவாதத் துப்பாக்கிகளும் ஆயுதங்களை இருந்ததைப் பார்த்தோம்” என்று ஊடகங்களில் தெரிவித்தார்.

ஆனால், அந்த வீட்டை இடித்தபின்னர், அதன் இடிபாடுகளில் என்ன இருந்தது தெரியுமா?

“When injustice becomes law, resistance becomes duty.”

என்கிற வாசகம் எழுதப்பட்ட ஒரு அட்டை தான் இருந்தது.

இது ஏதோ அலகாபாத்தில் இருக்கிற சில முஸ்லிம்களின் பிரச்சனை தானே என்று பொதுச்சமூகம் அமைதியாக இருக்கப் போகிறதா?

அல்லது “அநீதியே சட்டமாகும் போது, அதனை எதிர்த்துப் போராடுவதே எங்கள் கடமை” என்று நாம் சொல்லப் போகிறோமா?

வரலாறு நம்மை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது. நாம் அமைதியாக இருக்கிற ஒவ்வொரு நொடியும் கொடூர இந்துத்துவக் (பார்ப்பனிய) கொலைகாரர்களுக்கு மறைமுகமாக அல்லாமல் நேரடியாகவே ஆதரவளிக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வோமாக….

Chinthan Ep

முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here