நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்கி ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் முடியும். அதேபோல் இந்த ஆண்டும்  ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. 23 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 23 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. வெறும் 17 அமர்வுகளில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதில், 20 மசோதாக்கள் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்திலேயே விவாதித்து நிறைவேற்றப்பட்டன. அதிலும், டெல்லியில் துணைநிலை ஆளுநர் விருப்ப அதிகாரங்களை விரிவுபடுத்தும் மசோதா,  கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் (மேம்பாடு & ஒழுங்குமுறை) திருத்த மசோதா, தனிப்பட்ட தரவுகளை ஒழுங்குபடுத்துதல் மசோதா ஆகிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட வெறும் ஏழு நாட்களுக்குள் படித்து கருத்துக்கள் தெரிவிக்கக் கூட கால அவகாசம் பெரிதும் தராமல் நிறைவேற்றப்பட்டன. அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா, அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்து நாட்களுக்குள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய மேலாண்மை நிறுவனங்கள்-IMM (திருத்தம்) மசோதா, சேவைகளுக்கு இடையேயான அமைப்பு- ISO (கட்டளை, கட்டுப்பாடு, ஒழுக்கம்) மசோதா உட்பட ஒன்பது மசோதாக்கள் மக்களவையில் 20 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டன. தேசிய செவிலியர் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி ஆணையம் மற்றும் தேசிய பல் மருத்துவ ஆணையத்தை உருவாக்குவதற்கான மசோதாக்கள் வெறும் மூன்று நிமிடங்களில் மக்களவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. CGST மற்றும் IGST திருத்த மசோதாக்கள் மக்களவையில் இரண்டு நிமிடங்களில் ஒரே நேரத்தில் நிறைவேற்றப்பட்டன.

மக்கள் விரோத – கார்ப்பரேட் நலன் சார்ந்த மசோதாக்கள், நாட்டிற்கும் இயற்கைக்கும் பேராபத்தை விளைவிக்கும் மசோதாக்கள், மாநில உரிமையை கேள்விக்குள்ளாக்கும் மசோதாக்கள் என மிக முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் கார்ப்பரேட் – காவி பாசிச சக்திகளின் திட்டப்படி எந்தவித விவாதங்களும் நடத்தப்படாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையோடு, மிருக பலத்துடன் இருக்கும் பாசிச பாஜக எம்.பிகள் பெரும்பான்மையினர் அரசியல் கிரிமினல் ரவுடிகளாகவும், கடைந்தெடுத்த தற்குறிகளாகவும் இருப்பதால் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் பற்றிய அறிவு ஏதுமற்ற பூஜ்ஜியமாக இருக்கின்றனர். இத்தற்குறிகளை எல்லாம், தான் கொண்டுவரும் மசோதாக்களை ஆதரித்து ஓட்டுப்போடவும், எதிர்க்கட்சிகள் மீது அவதூறு பரப்பவும், கட்சியில் லும்பன்களைச் சேர்த்து வன்முறைக்கு வழிநடத்தவும் மட்டுமே பயன்படுத்திக்கொள்கிறது பாசிச பாஜக. இதற்கு கூடுதல் பலம் சேர்க்கும் அதிமுக அடிமையாக இருப்பது தமிழ்நாட்டிற்கு சாபக்கேடு. மறுபுறம் தெலுங்குதேசம், பிஜு ஜனதாதளம், YSR காங்கிரஸ் போன்ற மதில்மேல் பூனைகளும் இருப்பதால் பாஜக சட்டங்களாக மாற்றத்துடிக்கும் மசோதாக்களை விவாதங்களின்றி வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது.

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் மசோதாக்கள் மற்றும் புதிய திட்டங்களை முன் கூட்டியே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தரப்பட்டு அவையில் கேள்வி- பதிலுக்கு முறையான நேரம் ஒதுக்கி விவாதித்து இறுதியில் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தியே மசோதாக்கள் மற்றும் புதிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் இயங்க வேண்டும் என மக்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கும் விதமாக 2009 முதல் 2014 வரை கொஞ்சம் கொஞ்சமாக மீறப்பட்டு வந்தது.

2014 பாசிச பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தனக்கு இருக்கும் பெரும்பான்மையை கொண்டு நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமும் நடத்தாமல் மசோதாக்கள் நிறைவேற்றும் வழிமுறை பாசிச மோடி ஆட்சியில் அதிகரித்து வருகிறது.

மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்ற போது 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 179 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன இதில் 71% நிலைக்குழுவில் விவாதித்து தாக்கல் செய்யப்பட்டன. 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பாசிச மோடி தலைமையிலான ஆட்சியில் 135 மசோதாக்களும் 45 அவசர சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன இதில், வெறும் 24% மட்டுமே நிலைக்குழுவில் விவாதித்து தாக்கல் செய்யப்பட்டது. 2019 மே மாதம் முதல் 2023 ஆகஸ்ட் வரை 190 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் வெறும் 16% மட்டுமே நிலைக்குழுவில் விவாதித்து தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் நாடாளுமன்றத்தின் அரை குறை ஜனநாயகத்தையும் முற்றிலுமாக குழி தோண்டி புதைத்து விட்டது பாசிச பாஜக.

குறிப்பாக, 2021 ஜூலை 19ம் தேதி முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 23 நாட்கள் நடந்தாலும் மொத்தமாக 21 மணி நேரமே நடந்தது. இந்த 21 மணி நேரத்தில் 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

2022 ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 8 வரை 22 நாட்களில் 16 அமா்வுகளாக நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரின்போது, 06 மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன. மழைக்காலக் கூட்டத் தொடரில் 07 மசோதாக்கள் மக்களவையிலும், 05 மசோதாக்கள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டன.

2023 ஆம் ஆண்டில் 23 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தொடரில் 23 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகள் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடர் இரண்டு நாட்களுக்கு முன்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டு முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மூன்று ஆண்டுகளிலும் அவைகள் முடக்கப்பட்டு அமளியாகவே நடந்தேறியது. இதற்கு பாசிச பாஜக முக்கிய காரணம்.

தனது இந்துராஷ்டிர அகண்ட பாரத திட்டத்தையும் கார்ப்பரேட் அடிமை திட்டத்தையும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் செயல்களால் நாட்டில் கலவரங்கள் வன்முறைகள் நடத்துகிறது. இது மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இந்த மிகப்பெரும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய நிகழ்வுகள் வெளிப்படுவதும் அவற்றைப் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் எவ்வளவு கெஞ்சினாலும், போராடினாலும் விவாதம் நடத்தக்கூடாது என்பதற்காகவே நாடாளுமன்றத்தை முடக்கும் விதமாக தொடர்ச்சியாக அமளியை ஏற்படுத்துகிறது. எதிர்க்கட்சிகள் அமளி செய்வதை விட ஆளும் கட்சியான பாஜக பாராளுமன்றத்தை முடக்கும் விதமாக அமளியில் ஈடுபடுவதே அதிகமாக இருந்தன. இதனால் அவைகள் முடக்குவதும், எதிர்க்கட்சிகள் வழிநடப்பு செய்வதும் நடந்தேறின. இதனை பயன்படுத்தியும் விவாதம் இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்றியது பாசிச பாஜக.

இந்த உண்மைகளை மறைத்து தினமணி, தினமலர் போன்ற பார்ப்பன பத்திரிக்கைகள் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அமைதியாக நடக்க எதிர்க்கட்சிகள் அமைதி காத்து உதவ வேண்டும் என தலையங்கம் எழுதி அறிவுரை வழங்கின. நடுநிலை என்ற பெயரில் செயல்பட்டு மறைமுகமாக பாசிச பாஜகவை ஆதரிக்கும் பத்திரிக்கைகள் எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என இருதரப்பினரும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என அறிவுரை வழங்குகின்றன. இதனைப் பத்திரிக்கை சுதந்திரம் என சொல்வதை விட காரி உமிழ்வதே சரியானது.

மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீட்டுவிடலாம் என்று நினைக்கின்றனர் சிலர். இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தினை பாதுகாக்க அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என கருதுகின்றனர் சிலர். பாசிச பாஜக-வின் சித்தாந்தவாதிகளான ஆர்.எஸ்.எஸ். அடியாட்கள் அனைத்து துறைகளிலும் நுழைந்து பாசிசமயமாக்கி விட்ட நிலையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலை தொடரும். இந்திய பாராளுமன்றம் முழு ஜனநாயக தன்மை கொண்டது அல்ல அரைகுறை ஜனநாயக தன்மை கொண்டது மட்டுமே. இதனை மாற்றாமல் யார் ஆட்சிக்கு வந்தாலும் உண்மையான பாராளுமன்ற ஜனநாயகம் உருவாகாது.

இதையும் படியுங்கள்:

♦ ஒன்பது வருட பா.ஜ.க. ஆட்சியின் அலங்கோலங்கள்: சு.வெங்கடேசன் (மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்)

♦ ஒற்றை சர்வாதிகார பாசிச ஆட்சி! பறிபோகும் மாநில உரிமைகள்!

அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி பாசிச சக்திகள் ஊடுருவாத தன்மை கொண்ட புதிய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டால் மட்டுமே பாராளுமன்ற ஜனநாயகத்தை மீட்டெடுக்க முடியும். அதுவும் இப்போதிருக்கும் அரசு வடிவத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்வதன் மூலம் அதைச் செய்ய விடாது. ஏனெனில், அது மக்களுக்கு எதிரான, மக்களின் அடக்குமுறைக் கருவியாக உள்ளது. எனவே தான் ஜனநாயக கூட்டரசு என்ற புதிய வடிவத்தை நோக்கிய நீண்ட கால திட்டத்துடன் பயணிக்க வேண்டும்.

உலகின் பல நாடுகளில் பாசிச அல்லது இராணுவ சர்வாதிகார ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுவதும் அதற்கு முன்பு இருந்ததை விட மேம்பட்ட ஆட்சி முறைக்கு மாறுவதும் சாதாரணமாக நடக்கிறது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை போலி ஜனநாயகத்தை விட்டால் வேறு வழியே கிடையாது என்றே அரசியல்வாதிகள் கருதுகின்றனர். நாம் முன்வைக்கும் ஜனநாயக கூட்டரசு என்பதைக் கூட கூட்டணி ஆட்சியைப் போல ஒன்றா என்றே கேள்வியெழுப்புகின்றனர். முதலாளித்துவ சார்பு அரசியல் பேசுபவர்களுக்கு மாற்றம் தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால் பாட்டாளி வர்க்கத்திற்கு தனது அரசியல் நடவடிக்கை அனைத்திலும் மக்களது முன்னேற்றம் மட்டுமே குறியாக இருக்க முடியும்.

  • முனியாண்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here