அட்சய திருதியை தங்க விற்பனை அதிகரிப்பு! ஆணாதிக்க சமூகத்தின் அசிங்கம்!

அட்சய திருதியை மட்டுமல்ல! பொதுவாக தங்கத்தின் முதலீடு செய்வது தான் பாதுகாப்பானது என்ற உணர்வு இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பது ஒரு புறமிருக்க, ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் தங்க நகை அணிந்து வருவது கட்டாயமான விதியாக மாற்றப்பட்டுள்ளது.

”அனாதி காலம் தொட்டு இந்திய உழைப்பாளிகளின் போற்றத்தக்க ஆடைகளை பெற்று வந்தது. ஐரோப்பா அவற்றுக்கு பதிலாக தன் உயர் உலோகங்களை அனுப்பி இந்திய சமூகத்தின் திறமையான உறுப்பினரான பொற்கொல்லரின் தேவையை பூர்த்தி செய்தது. இந்தியர்களுக்கு பொன்னில் செய்த அணிகளில் ஆசை அதிகம். மிக எளிய நிலையில் இருப்பவர்கள் கூட, கிட்டத்தட்ட அம்மணமாக உள்ளவர்கள் கூட பொன்னில் செய்த காதணியும், கழுத்தணியும் தரித்துக் கொள்வது சகஜம். மோதிரமும், மெட்டியும் அணிவதும் கூட சகஜமாக உள்ளது. அனேக பெண்களும், குழந்தைகளும் தங்கம் அல்லது வெள்ளியில் செய்த எடை மிகுந்த கை வளையல்களும், காற்சிலம்புகளும் அணிகின்றனர். தங்கத்திலும், வெள்ளியிலும் செய்த தெய்வ விக்கிரகங்களையும் பல வீடுகளில் பார்க்க முடியும்”.

  • இந்தியாவைப் பற்றி.. காரல் மார்க்ஸ்.

காரல் மார்க்ஸ் சுட்டிக்காட்டியபடி நீண்ட காலமாக தங்க நகை மீது இந்திய மக்களுக்கு இருக்கும் ஆசையையும், பெண்களை பண்டமாக கருதும் ஆணாதிக்க சமூகத்தின் மத்தியில் நிலவும் படுபிற்போக்கான பழக்க வழக்கத்தையும் ஊக்குவித்து, நுகர்வு வெறியை  உருவாக்கி வெற்றி பெற்றுள்ளது ஏகாதிபத்திய முதலாளித்துவம்.

இதற்கு பலியாகி அட்சய திருதியை பண்டிகை நாளில் ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்ற ’சென்டிமென்ட்’ மக்களிடம் தலை விரித்தாடுகிறது. விளைவு லைட்வெயிட் நகைகள் மற்றும் தங்க நாணயங்கள் விற்பனை ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

மே 11 தேதியன்று நள்ளிரவு வரை அட்சய திருதியை பண்டிகை பெரும் கொண்டாட்டத்துடன் முடிவடைந்துள்ளது, நேற்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் தமிழகத்தில் சுமார் 14000 கோடி ரூபாய் அளவிலான தங்கம், அதாவது 24,000 கிலோ தங்கம் விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது

கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி, அதாவது அட்சய திருதியை அன்று, டெல்லியில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,300 ஆக இருந்தது. 2024 ஆம் ஆண்டு அட்சய திருதியைக்கு சில நாட்களுக்கு முன்பு வரை  தங்கத்தின் விலை 10 கிராம், 24 கேரட் தங்கத்தின் விலை, ரூ.71,700 ஆக இருந்தது. நேற்று அதன் விலை மேலும் உயர்ந்து 10 கிராம் தங்கத்தின் விலை 72,633 ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த அடிப்படையில் பார்த்தால் போன ஆண்டில், தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 17 சதவீத லாபம் கிடைத்திருக்கும். கடந்த 6 மாதங்களில் தங்கத்தின் விலை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு முதலீடு செய்தவர்களுக்கு அடுத்த ஆண்டு 40% லாபமாக கிடைக்கும் என்று உசுப்பேத்துகின்றனர். மேலும் 10 கிராம் தங்கம் 1 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் ஆசை காட்டுகின்றனர்.

அதுமட்டுமின்றி தினமும் ரீடைல் சந்தை விற்பனைக்காக 2 முறை தங்கம் விலை மாற்றப்படும் வேளையில், நேற்று அட்சய திருதியை பண்டிகையை காரணம் காட்டி காலை 7 மணிக்கு ஒரு முறை விலை அப்டேட் செய்யப்பட்டது கவனிக்கத்தக்க விஷயமாகும். இந்த வகையில் நேற்று மட்டும் மூன்றுமுறை விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையிலும் பகல் கொள்ளையடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: சின்னஞ்சிறு குழந்தைகளைக் கொன்று மேக்-அப் சாதனங்களா? கலெக்டர் ஏன் மேக் அப் போடல….?

இந்த அட்சய திருதியை பண்டிகைக்கு ஆன்லைன், ஆப்லைன் ஆகிய இரு பிரிவிலும் அதிகப்படியான தங்கம் விற்கப்பட்டுள்ளது, தங்கத்தின் விலை உயர்வு இருந்தபோதிலும், இந்த அட்சய திருதியையன்று நகை விற்பனையும் அதிகரித்துள்ளது. சென்னை நகைக்கடை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், ’சுமார் 75% முதல் 80% வரையிலான வாடிக்கையாளர்கள், விலை உயர்வு பாதிப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக முன்பதிவு செய்து தங்கம் வாங்கியுள்ளதாகவும், இந்த மாதத்தில் அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்த காரணத்தால் தங்கத்தின் விலை கிராமுக்கு வெறும் ரூ.155 மட்டுமே உயர்ந்தது, டாலர் வலிமையான இருந்திருந்தால் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்திருக்கும்” என்றும் சலானி தெரிவித்துள்ளார்.

இந்த அட்சய திருதியை தினத்தில், தங்கத்தின் விலை கடந்த ஆண்டை விட சுமார் 20 சதவீதம் அதிகரித்திருந்த போதிலும் நகை விற்பனை சிறப்பாக இருந்தது என்று நகைக் கடைக்காரர்கள் குதூகலிக்கின்றனர்.  அதேசமயத்தில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு லேசான நகைகள் அதாவது லைட்வெயிட் நகைகள் மற்றும் தங்க நாணயங்கள் தான் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளது எனவும் தொழில் துறை நிபுணர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.

இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் நகை கடைகள் மூலமாக நேரடியாக விற்பனை செய்யும் தங்கத்தின் அளவில் கடந்த ஆண்டை காட்டிலும் 15-18 சதவீதம் குறைந்துள்ளது. இதேவேளையில் தங்கம் விற்பனை செய்யப்பட்ட மதிப்பு 10-30 சதவீதம் அதிகரித்துக் காணப்படுகிறது எனவும், தங்கத்தின் சந்தை விற்பனை நிலவரம் கூறுகிறது. இதேபோல் ஆன்லைன் விற்பனை மூலம் 1 கிராம், 10 கிராம் தங்கம், வெள்ளி நாணயம் அதிகளவில் விற்கப்பட்டு உள்ளது.

அட்சய திருதியை மட்டுமல்ல! பொதுவாக தங்கத்தின் முதலீடு செய்வது தான் பாதுகாப்பானது என்ற உணர்வு இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பது ஒரு புறமிருக்க, ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் தங்க நகை அணிந்து வருவது கட்டாயமான விதியாக மாற்றப்பட்டுள்ளது.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்த துவங்குவதற்கு முன்பாக கூட வரதட்சணை வாங்குவது, தங்கத்தை சீதனமாக கேட்பது போன்றவை விமர்சனத்திற்குரிய ஒன்றாக இருந்தது. தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் மனைவியிடம் வரதட்சணையை கேட்டு பெறுவது இழிவானது என்று கருதப்பட்டது. சட்டரீதியாகவே வரதட்சணை பெறுவது குற்றம் என்றெல்லாம் இருந்தது, அவை அனைத்தும் இப்போது சமூகத்தின் நடைமுறையில் ஒழித்துக் கட்டப்பட்டுள்ளது.

திருமணத்தின் போது இத்தனை பவுன் தங்கத்தை பெண்களுக்கு போட வேண்டும் என்பது கட்டாயமாகவும், மேட்டுக்குடிகள், பணக்காரர்கள் அதிகபட்சம் நூற்றுக்கணக்கான பவுன்களை போடும்போது, உழைப்பாளிகள் ஒரு பவுன், இரண்டு பவுன் அல்லது ஐந்து பவுன் வரை போடுவது சர்வ சாதாரண நிகழ்வாகிவிட்டது.

இதனால் இந்திய சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகில் அதிக தங்கத்தை கையில் இருப்பு வைத்துள்ள அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ், ஜப்பான், இத்தாலி, நார்வே போன்ற நாடுகளின் வரிசைப்பட்டியலில் இந்தியா 9வது இடத்தை பிடித்திருக்கிறது. இந்தியாவில் 822.09 டன்கள் தங்கம் கையிலிருப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 18.51 டன்கள் உயர்வு ஆகும்.

அன்றாடம் ஒரு வேளை உணவு இல்லாமல் 40 கோடி மக்கள் பட்டினியில் கிடக்கிறார்கள் என்று இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அதனால் வீட்டில் ஓருவர் அல்லது இருவர் வேலையில் இல்லாத நிலைமை உருவாகியுள்ளது.

இதெல்லாம் ஒரு பக்கம் மக்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கும்போது தமிழகத்தில் ஒரே தினத்தில் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தங்கம் விற்பனையாகியுள்ளது என்பது பெருமைப்படத்தக்க அம்சம் அல்ல! ஆணாதிக்க வக்கிர வெறி பிடித்த சமூகத்தில் தங்கத்தை கொண்டே பெண்களின் வாழ்வு தீர்மானிக்கப்படுகிறது. சமூகத்தில் சரிபாதிக்கும் மேலாக உள்ள பெண்களின் வாழ்வு இந்த அளவு சீரழிக்கப்படுவதை கண்டு வெட்கித் தலைகுனிவோம்.

”நாம் (சோசலிசம்) உலக அளவில் வெற்றி பெற்ற பின்னர், உலகத்தின் மிகப் பெரும் நகரங்கள் சிலவற்றில், தெருக்களில் பொதுக் கழிப்பிடங்களின் தளங்களுக்கு தங்கத்தைப் பயன்படுத்துவோம் என்று நினைக்கிறேன்” என்று தங்கத்துக்கு கம்யூனிஸ்டுகள் தர வேண்டிய மதிப்பை தெளிவு படுத்தினார் தோழர் லெனின்.

தோழர் லெனின் முன்வைத்தபடி விரைவில் சோசலிச சமுதாயத்தை கட்டமைப்போம் தங்கத்தை கழிப்பறைகளில் பயன்படுத்துகின்ற அளவிற்கு அதன் மதிப்பை வீழ்ச்சி அடைய செய்வோம். அந்த நாள் தான் உழைப்பாளி மக்களின் உண்மையான கொண்டாட்ட தினமாக இருக்கும்.

  • மருது பாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here