”தேர்தலுக்கு பிறகு பாஜக கலவரத்தில் இறங்கும்” மார்க்சிய புரோகிதர்களின் ஆரூடம்!

பாசிச எதிர்ப்பு என்பதை மக்கள் எழுச்சியின் மூலம் மட்டுமே வீழ்த்த முடியும் என்பதை புரட்சிகர இயங்கியல் பார்வையில் புரிந்து கொள்ளாமல், அரூபவமாகவும், சூக்கும வடிவத்திலும் புரிந்து கொள்கிறார்கள்.

‘2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பாஜகவை தோற்கடிக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் அரசு கட்டமைப்பின் அனைத்து உறுப்புகளையும் கைப்பற்றி வைத்துள்ளார்கள் என்பதால் அவ்வளவு எளிதில் ஆட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்’; ’பாசிச பாஜகவின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு இருந்தாலும், அவர்களை எதிர்த்து நிற்கின்ற எதிர்க் கட்சிகளின், குறிப்பாக இந்தியா கூட்டணியின் ஒற்றுமை சந்தேகமாக உள்ளது.

’பாசிசத்தை தேர்தல் பாதையில் வீழ்த்த முடியாது’; ’பாசிசத்தை மக்களின் எழுச்சியின் மூலம் மட்டுமே முறியடிக்க முடியும்’; ’பாஜகவிற்கு மாற்றாக காங்கிரசை நம்ப முடியாது ஏனென்றால் அவர்களும் பாசிசத்திற்கு எதிரான திட்டவட்டமான கொள்கையை கொண்டிருக்கவில்லை’!

’பாசிசத்தை தேர்தலில் வீழ்த்த முடியும் என்று பேசுபவர்கள் அயோக்கியர்கள்’; ’மக்களின் எழுச்சியே பாசிசத்தை வீழ்த்தும் என்பதுதான் உலகம் முழுவதும் உள்ள பாசிச எதிர்ப்பு நாடுகளின் அனுபவம்’.

’எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் தலைமை தாங்கி பாசிச பாஜகவிற்கு எதிரான போராட்டங்களை நடத்துவதன் மூலமே தேர்தலில் கூட வெற்றி பெற முடியும்’; ’பாஜகவை தேர்தலில் வீழ்த்துவது எப்படி?’; ’பாஜகவை வீழ்த்துவதற்கு தேர்தலை புறக்கணிப்போம்’.

என்று பாசிச பாஜகவிற்கு எதிராக நாடு தழுவிய அளவில் மிக பெரும் மாற்றம் ஒன்று உருவாகி விடாது என்ற கண்ணோட்டத்திலிருந்து பேசிக் கொண்டிருந்த போலி புரட்சியாளர்கள் மற்றும் சித்தாந்த ஓட்டாண்டிகள், மார்க்சிய புரோகிதர்கள் முன் வைத்ததை சமீபத்தில் சில நாட்களாக நாடு முழுவதும் உருவாகியுள்ள பாசிச மோடி எதிர்ப்பு அலை பொய்ப்பித்துக் கொண்டுள்ளது.

பாசிச பாஜக தேர்தலில் தோல்வியடைவதை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத மேற்கண்ட ’சித்தாந்த புலிகள்’ சமீபத்தில் நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் மோடி எதிர்ப்பலையை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் அல்லது தாங்கள் முன்வைத்த ஆரூடங்கள், ஜோசியங்கள் பலிக்காமல் போய்விட்டால், தங்களுக்கு பின்னால் உள்ள ஒரு சிலரும் கழண்டுக் கொண்டு விடுவார்கள் என்ற அச்சத்தில் பிதற்ற துவங்கியுள்ளனர். இதை இப்படியும் கூறலாம். தேர்தலில் பாஜகவின் தோல்வியை இவர்கள் ஏற்கவில்லை

பாசிச பாஜக தேர்தலில் வீழ்த்தப்பட்டாலும், அதன் பிறகு அவர்கள் பின்வாங்க மாட்டார்கள் என்பதை பாசிசத்தை எதிர்த்து நேர்மையாக போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் புரிந்து கொள்ளாமல் இருப்பதை போலவும், தேர்தலில் மட்டுமே பாஜகவை தோற்கடித்து விட்டால் போதுமானது என்று மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஊட்டி வருவதாகவும் தங்களது ’கற்பனை குதிரைகளை’ அவிழ்த்து விடுகின்றனர்.

பிரகலா பிரபாகர் போன்று நாட்டிலுள்ள ஜனநாயக சக்திகள் யாராவது தேர்தலுக்குப் பிறகும் போராட வேண்டும் என்று முன் வைத்து விட்டால், இதைத் தானே நாங்கள் முன்பே சொன்னோம், யாரும் கேட்கவில்லையே என்று ஒப்பாரி வைக்கின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததும், தேர்தலுக்கு முன்பே நீதிமன்ற உத்தரவின் பெயரில் ஜாமீனில் வெளியே விட்டதும், கோடி மீடியாக்கள் ஒவ்வொன்றாக காங்கிரசை ஆதரித்து பேச துவங்கியிருப்பதும், காங்கிரசின் தலைவர் ராகுல் காந்தி தொடர்ச்சியாக பாஜக மற்றும் மோடியை அம்பலப்படுத்தி வருவதையும், ஆர்எஸ்எஸ் மோடி கும்பலின் இசுலாமிய வெறுப்பு அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் எதிர் நிலைக் கருத்துகளை உருவாக்கி வருவதையும், பஞ்சாப், அரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களில் விவசாயிகள் பாஜகவினரை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பதையும் கண்ணெதிரே கண்டும், எதுவுமே நடக்காதது போல நடந்துக் கொள்கிறார்கள்.

பாசிச எதிர்ப்பு என்பதை மக்கள் எழுச்சியின் மூலம் மட்டுமே வீழ்த்த முடியும் என்பதை புரட்சிகர இயங்கியல் பார்வையில் புரிந்து கொள்ளாமல், அரூபவமாகவும், சூக்கும வடிவத்திலும் புரிந்து கொள்கிறார்கள்.

இதற்கெல்லாம் அடிப்படை ஒன்றே ஒன்றுதான் தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் பல்வேறு பிரிவு உழைக்கும் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு, அறைக்குள் அமர்ந்து கொண்டு ஊடகங்களில் வருகின்ற செய்திகளை வரிகளுக்கிடையில் படித்து தாங்கள் புதிதாக கண்டுபிடித்து விட்டது போல எழுதி தள்ளுவதும், காணொளிகளை வெளியிடுவதும் இவர்களின் செயல்பாடாக உள்ளது.

இதனால்தான் சாதாரண டீக்கடை மற்றும் காய்கறி கடை, மளிகை கடைகளில் துவங்கி அன்றாட, வார சந்தைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், தொழிலாளர்கள் பணி புரிகின்ற ஆலைகள், ஆலையில் உள்ள உணவகங்கள், தியேட்டர்கள், விளையாட்டு மைதானங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் மக்கள் மத்தியில் நடக்கின்ற விவாத பொருளை. அதாவது ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு தேர்தலில் இறங்கு முகமாக உள்ளது என்பதை பற்றிய விவாதப் பொருளை, இவர்கள் அதன் முழுமையான பொருளில் உணரவில்லை.

ஒருவேளை தேர்தலில் தோல்வியுற்றால் பாசிச பாஜக ஆர்எஸ்எஸ் குண்டர் படை கலவரங்களில் இறங்கும் என்று தற்போதே முன்வைத்து பேசுவதன் மூலம் தம்மை அனைவருக்கும் மேலான, ’மார்க்சிய சித்தாந்த புலிகளாக’ நிரூபித்துக் கொள்வதற்கு படாத பாடுபடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்: 2024 நாடாளுமன்ற தேர்தல் பாசிச BJPயை தோற்கடிப்போம்! INDIAயை ஆதரிப்போம்!

நாட்டில் 60-70% மக்கள் தேர்தல் அரசியலில் பங்கெடுத்து அதன் மூலம் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று யோசிப்பது, எல்லாம் ஒன்றுமே இல்லாத விஷயங்கள் போல பேசுவதும், பாட்டாளி வர்க்க இயக்கம் நாடு தழுவிய அளவில் ஒரே கட்சி தலைமையின் கீழ் செயல்படாத சூழலில், பாசிசத்தை எதிர்த்து குறிப்பான செயல் தந்திரம் ஒன்றை முன்வைத்து மக்களை திரட்டாத சூழலில், தேர்தலால் ஒன்றும் முடியாது, மக்கள் எழுச்சியின் மூலம் தான் முடியும் என்றெல்லாம் பேசுவது வடிகட்டிய முட்டாள்தனமாகும்.

கார்ப்பரேட் காவி பாசத்தை வீழ்த்துவதற்கு தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்துவோம் என்று மக்கள் அதிகாரம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் முன்வைத்தவுடன் தேர்தலில் ஓட்டுப் பொறுக்க சென்று விட்டார்கள் என்று கீழ்த்தரமாக பிரச்சாரம் செய்து தங்கள் அணிகளை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்ற இதுபோன்ற போலி புரட்சியாளர்கள், தேர்தலில் மூலமே பாசிசத்தை வீழ்த்த முடியும் என்று மக்கள் அதிகாரம் கூறுவதாக தொடர்ந்து பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர்.

சமுதாயத்தில் நடக்கின்ற நிகழ்ச்சி போக்குகளை உயிர்த்துடிப்புடன் அவதானித்து எமது செயல்தந்திர அரசியலை கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்திய அரசியல் முன்முயற்சியை புரிந்து கொள்ளாமல், வழக்கமாக எல்லா காலகட்டங்களிலும் ஒரே விதமான தேர்தல் புறக்கணிப்பு பஜனையும், (இது பற்றி தனியே எழுத உள்ளோம்) அதற்கு ஒத்திசைந்த வகையில் ஆரூடத்தையும் முன் வைக்கும் போலி புரட்சிகர அமைப்புகளுக்கு பாசிச பாஜகவின் தேர்தல் தோல்வி மிகப்பெரும் நெருக்கடியை தரும் என்பது மட்டும் உறுதி.

  • சீராளன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here