குல்பர்க் சொசைட்டி இஸ்லாமியர்கள் இனப்படுகொலையின் சாட்சியான சாகும் வரை நீதி கேட்டுப் போராடிய ஜாகியா ஜாஃப்ரி பிப்ரவரி 1 அன்று உயிரிழந்தார்.
2002 ஆம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தை பயன்படுத்திக்கொண்டு குஜராத் சங்பரிவார் கும்பல் இஸ்லாமியர்களை நரவேட்டையாடியது. கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இஸ்லாமிய பெண்கள் காவி கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இந்தப் படுகொலையின் ஒரு பகுதி தான் குல்பர்க் சொசைட்டி. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் குல்பர்க் சொசைட்டியை 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அன்று இந்து மதவெறி கும்பல் தாக்கியது. இந்த கலவரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எஹ்சான் ஜாஃப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர்.
காவி கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எஹ்சான் ஜாஃப்ரி வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் என நம்பி இஸ்லாமியர்கள் தஞ்சம் புகுந்தனர். ஆனால் காவி கும்பலைப் பொறுத்தவரை எம்பியாக இருந்தால் என்ன நீயும் முஸ்லிம் தானே என்று குல்பர்க் சொசைட்டியை எல்லா பக்கங்களிலும் இருந்து தாக்கியது வானர கும்பல்.
அப்போது குஜராத் மாநிலத்தின் முதல்வராகவும் இந்த இனப்படுகொலைக்கு காரணகர்த்தாவாக இருந்தவர் தான் இப்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி. மோடி நம்மை காப்பாற்றுவார் என எண்ணிய எஹ்சான் ஜாஃப்ரி அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் அவருக்கு உதவ யாரும் முன் வரவில்லை. இதன் காரணமாக பலர் வீட்டிலேயே தீ வைக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டனர்.

இதில் அதிர்ஷ்டவசமாக தப்பி பிழைத்தவர் தான் எஹ்சான் ஜாஃப்ரியின் மனைவியான ஜாகியா ஜாஃப்ரி. இந்த படுகொலைக்கு காரணமானவர் மோடி தான் என்று 2006 ஜூன் மாதம் மோடி உட்பட 63 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய குஜராத் காவல்துறை தலைமை இயக்குனரிடம் ஜாகியா ஜாஃப்ரி மனு அளித்தார். இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க நரேந்திர மோடி உட்பட எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
ஜாகியா ஜாப்ரியின் மனுவை மாநில காவல்துறையின் டிஜிபி நிராகரித்தார். இதையடுத்து குஜராத் உயர்நீதி மன்றத்தை நாடினார். 2007 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றமும் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
2008ல் அரசு சாரா அமைப்பின் உதவியுடன் உச்சநீதிமன்றத்தை அணுகினார். அதிலிருந்து தொடர்ந்து நீதிமன்றத்தில் போராடிய ஜாகியா ஜாஃப்ரியை நொறுக்கும் விதமாக 2013 ஆம் ஆண்டு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் பிற அதிகாரிகள் குற்றம் அற்றவர்கள் என்று பெரு நகர நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது குஜராத்தின் முதல்வராக நரேந்திர மோடி இருந்தார். இந்த தீர்ப்பு தான் மோடியை பிரதமர் வேட்பாளருக்காக தயார்ப்படுத்தியது.
படிக்க:
ஜாகியா ஜாஃப்ரி விடாமல் தொடர்ந்து போராடினாலும் அவரது மேல்மறையீட்டு மனுவை 2022 ஆம் ஆண்டு நிராகரித்த உச்ச நீதிமன்றம் இந்த கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 60க்கும் மேற்பட்டோர் குற்றமற்றவர்கள் எனக் கூறியது.
இந்த வழக்கில் ஜாகியா ஜாஃபிரிக்கு பேருதவியாக இருந்தவர் செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் மற்றும் ஆர்.பி.ஸ்ரீகுமார். இவர்கள் இருவரும் எஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியை மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு ஒரு கருவியாக பயன்படுத்தியதாக போலீஸ் ஆவணங்களின் அடிப்படையில் கைது செய்தது.
2002ல் குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்தது உலகமே அறிந்த விஷயம். மோடி தலைமையிலான சங்பரிவார் கும்பல் தான் இதை செய்தது என்பதால் மோடிக்கு அமெரிக்கா விசாவை மறுத்தது. ஆனால் இது எதுவும் நீதிமன்றத்திற்கோ காவல்துறைக்கோ தெரியாது என்றால் யாராவது நம்புவார்களா?
படிக்க:
🛑 குஜராத் இனப்படுகொலை: இஷான் ஜாஃப்ரிக்கு என்ன நடந்தது? | பாகம் 1
இதே குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு குடும்பமே படுகொலை செய்யப்பட்டும் நீதிக்காக போராடிய நேரடி சாட்சிதான் பில்கிஸ் பானு. நீண்ட போராட்டத்திற்கு பின்பு தான் ‘வேறு வழியின்றி’ நீதி கிடைத்தது. ஆனாலும் இந்த கொலைகார கும்பலை நல்லவர்கள் என விடுதலை செய்தது குஜராத் அரசு. ஒருவேளை பில்கிஷ் பானோவும் கொல்லப்பட்டிருந்தால் கொலைகாரர்கள் 10 பேரும் எம்எல்ஏ, எம்பி, முதலமைச்சர் என பாஜகவில் உயர்ந்திருக்கவும் வாய்ப்பு உண்டு. பிரக்யா சிங் தாக்கூரே இதற்கு சிறந்த உதாரணம்.
ஜாகியா ஜாஃப்ரி தான்சாகும் வரை போராடியும் நீதி கிடைக்கவில்லை என்பதற்கான காரணம், அரசு அதிகார மையங்களில் எல்லா மட்டங்களிலும் ஆர்எஸ்எஸ் – பார்ப்பன கும்பல் அமர்ந்திருப்பது தான். நீதி கேட்டுப் போராடிய ஜாஃப்ரி தோற்கவில்லை. கொலைகார கும்பலுக்கு ஆதரவாக நின்ற நீதித்துறை தான் தோற்றிருக்கிறது.
ஜாகியா ஜாஃப்ரி, பில்கிஸ்பானோ உள்ளிட்டோரின் போராட்டங்கள் என்றும் தோற்பதில்லை. இம்மண்ணில் காவிப் பாசிச கும்பல் வீழ்த்தப்படும் நாளிலேதான் அவர்களுக்கு நீதி கிடைக்கும். அதற்கான போராட்டத்தை தொடர்வோம்
- நலன்