குஜராத் படுகொலை!
நீதிக்காக போராடிய வழக்கறிஞர் தீஸ்தா, டி.ஜிபி சிறீகுமார் கைது !
காவி பாசிசத்தின் பிடியில் நீதித்துறை !
தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்
நாள் 8-7-2022 வெள்ளி காலை 10 மணி.
இந்திய ஒன்றிய அரசே!
குஜராத் படுகொலைக்கு நீதிகேட்டு வழக்கு நடத்திய தீஸ்தா செதல்வாத், சிறீகுமார், ஆகியோரை உடனே விடுதலை செய்!
அன்பார்ந்த பெரியோர்களே!
குஜராத்தில் 2002 ஆம் வருடம் ஆர்.எஸ்.எஸ் தலைமையில் இயங்குகின்ற சங்பரிவார் அமைப்புகள் நடத்திய இஸ்லாமியர்கள் மீதான இனப்படுகொலையை( genocide) உலகம் மறக்காது.
அன்றைய முதல்வர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இந்த படுகொலையை தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். அதுமட்டுமல்ல கலவரம் செய்பவர்களை தடுக்க வேண்டாம் என போலீசாருக்கு உத்தரவு போட்டனர். வன்முறை மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தது. இதற்கான ஆதாரத்தை அன்றைக்கு டி.ஜி.பியாக இருந்த சிறீகுமார். எஸ்பியாக இருந்த சஞ்சீவ் பட் ஆகியோர் உச்சநீதிமன்றத்திலும், விசாரணை கமிசனிலும் வாக்குமூலமாக அளித்தனர்.
“நாங்கள்தான் அனைத்து வன்முறைகளையும் செய்தோம், இஸ்லாமிய பெண்களை வன்புணர்ந்தோம்” என பெருமிதத்துடன் பேசிய குற்றவாளிகளின் வாக்குமூலங்களை தெகல்கா இதழ் வெளியிட்டது.
குஜராத் அரசுக்கு எதிராக சாட்சி அளித்தார் என்பதற்காக பழிவாங்கும் நடவடிக்கையாக பொய் வழக்கில் சஞ்சீவ் பட் தற்போது ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்.
சிறீகுமார் மற்றும் குஜராத் படுகொலைக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் வழக்கறிஞர் மனித உரிமை போராளி தீஸ்தா செதல்வாத் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படிக்க:
- குஜராத் இனப்படுகொலை 2002! குற்றவாளிகள் தப்பி விட்டனர்! எதிர்த்து போராடியவர்கள் ஒடுக்கப் படுகின்றனர்!
- நுபுர் சர்மாவுக்கு ஒரு நீதி! தீஸ்தாவுக்கு ஒரு நீதி!. இதுதாண்டா பார்ப்பன மனுநீதி!
இந்த சட்டவிரோத அரசு பயங்கரவாத அடக்குமுறைகளுக்கு எதிராக நாட்டில் உள்ள பல்வேறு முற்போக்கு, புரட்சிகர, ஜனநாயக சக்திகள் என அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குஜராத்தில் 2002 ம் வருடம் காங்கிரஸ் எம்பி ஏசான் ஜாஃப்ரி உட்பட 68 பேர் குல்பர்கா சொசைட்டியில் வைத்து உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். ஐயோ எங்களை காப்பாற்றுங்கள் என்று கதறிய, கொல்லப்பட்ட எம்பி முதல்வர், டிஜிபி என பலரையும் தொடர்பு கொண்டு முறையிட்டார். எந்த பயனும் இல்லை. இந்த படுகொலைக்கு நீதி கேட்டு மோடி அரசுக்கு எதிராக அவரது மனைவி ஜாகியா ஜாஃப்ரி மூலம் தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
‘பேஷண்ட் டெத் ஆப்ரேசன் சக்சஸ்’ என்பது போல் மோடி அரசு நிரபராதி என்றும், நீதி கேட்டு வழக்கு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை என தீர்ப்பில் சொல்லப்பட்டதால் வழக்கு பதிவு செய்த சமூக செயற்பாட்டாளர்களின் மீது குற்றம் சுமத்தி மோடி அரசு கைது செய்துள்ளது.
மையின் ஈரம் காய்வதற்குள் தீஸ்தாவும், டிஜிபி சிறீகுமாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அமித்ஷா தனது பேட்டியில் மோடி இத்தனை ஆண்டுகள் தனது மனஉளைச்சலை பொறுத்துக் கொண்டார் என சொல்கிறார்.
பெரியோர்களே இதே நீதிமன்றம் குஜராத் அரசுக்கு எதிராக பலமுறை தனது கண்டனங்களை தெரிவித்துள்ளது. வன்முறையை வேடிக்கை பார்த்த மோடி அரசின் செயலை பற்றி “ நவீன நீரோ“ என தலையில் குட்டி கண்டனத்தை தெரிவித்தது.
அன்றைய பிரதமர் வாஜ்பாய் “எந்த முகத்தை வைத்துக் கொண்டு உலகநாடுகள் முகத்தில் முழிப்பேன். தீராத களங்கம் ஏற்பட்டு விட்டது. அரசு அனைத்து மக்களுக்கும் அரணாக திகழ வேண்டும். ராஜ தர்மத்தை மோடி அரசு மீறி விட்டது” என தெரிவித்தார். அமித்ஷா குஜராத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார். சிறையில் இருந்தார். கலவரம் செய்து கொலை செய்த குற்றவாளிகள் நூறு பேருக்கு மேல் சிறையில் தண்டனை பெற்று இருக்கின்றனர். குஜராத் படுகொலைக்கு காரணமான மோடிக்கு பல நாடுகள் வருவதற்கு தடை விதித்தன.
சாத்தான் வேதம் ஓதியது என சொல்வார்கள். காவி பாசிச அரசின் படுகொலைக்கு எதிராக நீதிமன்றம் சென்றால், அங்கேயும் பாசிசம் தலைவிரித்தாடுகிறது என்றால் வேறு எங்கே சென்று நீதிபெறுவது?.
சங்பரிவாரின் கொலைகளுக்கு அஞ்சாமல் மோடி அரசுக்கு அடிபணியாமல் போராடி வரும் வழக்கறிஞர் தீஸ்தாவின் கைதுக்கு எதிராக நாம் போராட வேண்டும். அவருக்கு துணை நிற்க வேண்டும். கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு எதிராக உண்மையை பேசிய எழுதிய போராடிய வழக்கறிஞர்கள் உட்பட அறிவுத்துறையினர் 16 பேர் பீமா கொரேகான் வழக்கில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக பிணையின்றி சிறையில் உள்ளனர்.
சிறை கொடுமையில் ஸ்டேன்ஸ் பாதிரியார் சிறையிலேயே போதுமான கவனிப்பின்றி கொல்லப்பட்டார். பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா தொலைகாட்சி பேட்டி ஒன்றில் நபிகள் நாயகம் பற்றி அவதூறாக தெரிவித்த கருத்தை வெளி உலகுக்கு கொண்டு சென்றார் என்பதற்காக ஆல்ட் நியுஸ் நிறுவனர் ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார். நுபுர் சர்மாவை கண்டித்து அலகாபாத்தில் போராட்டம் நடத்தியதற்காக ஜாவித் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
படிக்க
- காவி பாசிசத்திற்கு எதிராகப் போராடினால் புல்டோசர்! வழக்கு போட்டால் கைது! அமுலாகிறது சட்டப்படியான பாசிசம்!
- ALT news முகமது ஜூபைர் கைது! கருத்துரிமையை பறிக்கும் பாசிஸ்டுகள்.
அவரது மகள் அப்ரின் பாத்திமா போராட்டத்தை முன்னேடுத்தார் என்பதற்காக அவரது வீடு தரைமட்டமாக்கப்பட்டது. ஓய்வு பெற்ற உச்சநீ நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இதற்கு எதிராக கண்டன குரல் எழுப்பியதுடன் உச்சநீதிமன்றம் இதில் தலையிட வேண்டும் என கோரினர்.
நுபுர் சர்மா கருத்துக்கு டிவிட்டர் மூலம் ஆதரவு தெரிவித்தார் என்பதற்காக கன்னையா என்ற டைலர் கொடூரமாக கொல்லப்பட்டார். அதற்கு காரணமான இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு எதிர்வினைகள் தண்டிக்கப்படுகிறார்கள். வன்முறையை தூண்டிய நுபுர் சர்மா மற்றும் பா.ஜ.கவிற்கு எந்த தண்டனையும் வில்லை.
உச்சநீதிமன்றம் நுபுர் சர்மாவிற்கு எதிராக தெரிவித்த கருத்துக்கள் மூலம் இதன் அபாயத்தை புரிந்து கொள்ளலாம். “பா.ஜ.க செய்தி தொடர்பாளர் என்றால் எதையும் பேசலாமா?. இன்று நுபுர் சர்மாவால் நாடே பற்றி எரிகிறது. டைலர் கொலைக்கு காரணம் இவரது பேச்சுதான். நுபுர் சர்மாவால் அச்சுறுத்தலா அல்லது பிறரால் இவருக்கு அச்சுறுத்தலா?. நுபுர் சர்மா நாட்டு மக்களிடம் டிவி மூலம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளனர்.
பாசிச மோடி அரசுக்கு எதிராக உண்மையை பேசியவர்களை கைது செய்து சிறையிலடைப்பது தொடர்கிறது. இதன் மூலம் நாட்டு மக்களை அச்சுறுத்துகிறது. இத்தகைய அநீதியை தடுத்து நிறுத்தாவிட்டால் நமக்காக யார் உண்மையை பேசுவார்கள்?.வரலாறுகளும் தீர்ப்புகளும் உண்மை தன்மை இல்லாவிட்டால் வருங்கால தலைமுறைகளுக்கு அது குப்பை காகிதம் தானே. மக்களின் இறுதி புகலிடம் நீதிமன்றம் என இன்னமும் இந்த நாட்டின் மக்கள் நம்புகின்றனர்.
நெஞ்சை உறைய வைக்கும் குஜராத் இனப்படுகொலைக்கு எதிராக வழக்கு போட்டவர்களை சிறைக்கு அனுப்புவது ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் விடப்பட்ட எச்சரிக்கை! இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை காவி பாசிசத்தின் பிடியில் இருக்கிறது. பாசிச பா.ஜ.க மோடி அரசை அதிகாரத்திலிருந்து தூக்கி எறியாமல் நமக்கு வாழ்வு இல்லை .