இந்தியாவில் மக்களின் வரிப்பணம் பல்லாயிரம் கோடி ரூபாய் தலைவர்களின் பாதுகாப்பு செலவுகளுக்கு என்ற பெயரில் கொட்டியளக்கப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்ற அதிநவீன, உயர்தர பாதுகாப்பு படைகள் யார் யாருக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என்ற கேள்வியை நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் கூட எழுப்ப அனுமதிக்கப்படுவதில்லை.
அவ்வாறு கேள்வி எழுப்பினால் இது ராணுவ ரகசியம் என்றும், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ரகசியம் என்பதால் இவற்றை வெளியிட முடியாது என்று மட்டையடியாக வாய் மூடி மௌனிக்க வைக்கின்றனர்.
இந்தியாவின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது என்பது ஒரு நடைமுறையாக உள்ளது என்கின்ற போதே குறிப்பான அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் மதத்தலைவர்களுக்கு தீவிரவாத, பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது என்ற பெயரில் உளவுத்துறையின் பரிந்துரையின் கீழ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
அவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடு பெற்றுள்ள முக்கிய நபர்களின் பட்டியலில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமை பிரச்சாரகரான திருவாளர் மோகன் பகவத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி முக்கியத்துவம் பெற்றுள்ளது என்ற போதிலும் இது சாதாரண செய்தியை போல கடந்து செல்வதற்கு ஊடகங்கள் பயிற்றுவிக்கின்றன.
143 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், மீனவர்கள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் போன்றவர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லை.
இன்னும் சொல்லப்போனால் தான் விரும்பிய தொழிலை அல்லது நேசிக்கின்ற தொழிலை செய்து நேர்மையாக வாழ்வதற்கு கூட வாழ்க்கை உத்தரவாதம் கிடையாது; பாதுகாப்பும் கிடையாது என்பதை தான் கொல்கத்தா பயிற்சி மாணவர் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை நிரூபித்துள்ளது.
”இரவுகளில் பெண்கள் சுதந்திரமாக நடந்து செல்வதற்கு எப்போது சூழல் உருவாகின்றதோ அப்போதுதான் இந்தியா உண்மையான சுதந்திரத்தை பெற்றது” என்று காந்தி சொன்னதாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் இரவில் மட்டுமல்ல, பகலிலேயே பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியவில்லை; பணியிடங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு கிடையாது.
இரத்த வேர்வை நிலத்தில் சிந்தி பாடுபடுகின்ற தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு கிடையாது. பணியிடங்களிலும் பாதுகாப்பு கிடையாது. வெறும் கண்காணிப்பு மட்டும்தான் நிரந்தரமான பொறியமைப்பாக மாற்றப்பட்டுள்ளது.
பெரும்பான்மை மக்களுக்கு எதிரான இப்படிப்பட்ட கேடுகெட்ட சூழலில் நாட்டில் பாதுகாப்புக்கு என்று ஒவ்வொரு ஆண்டும் ராணுவ பட்ஜெட் ஒதுக்கப்படுகின்றது. இது ஒவ்வொரு ஆண்டும் மூன்று முதல் ஐந்து சதவீதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ராணுவ பட்ஜெட் மூலம் ஒதுக்கப்படும் தொகையில் கணிசமான தொகை நாட்டின் முக்கிய விஐபிகள் என்று தீர்மானிக்கப்படுகின்ற நபர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மதத் தலைவர்களுக்கு பாதுகாப்புக்கென ஒதுக்கப்படுவது தான் நாம் தட்டிக் கேட்க வேண்டிய கேள்வியாகும்.
அந்த கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது ஆர்எஸ்எஸ் கும்பலின் பயங்கரவாதியான மோகன் பகவத்திற்கு எப்படி இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க முடியும் என்ற கேள்வியை பாட்டாளி வர்க்கத்தின் சார்பில் நாம் எழுப்புவோம்.
நமது நாட்டில் நிலவுகின்ற பாதுகாப்பு முறைகள் ஏற்பாடுகள் என்ன என்பதை புரிந்து கொண்டால் தான் இதில் உள்ள சிக்கல்களை நாம் புரிந்து கொள்ள முடியும் என்பதால் அதைப் பற்றி சுருக்கமாக பருந்துப் பார்வையில் சில விவரங்களை தெரிவிக்கின்றோம்.
இசட், இசட் ப்ளஸ், எக்ஸ், ஒய், ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் அரசியல் கட்சி தலைவர்களுக்கும், வி.ஐ.பி.களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அளித்து வருகிறது. இசட்பிளஸ் என்பது மிக மிக உயரிய பாதுகாப்பு பிரிவாகும். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், உச்சநீதிமன்ற நீதிபதி, மற்றும் மிகுந்த அச்சுறுத்தல் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மட்டுமே இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.
பாதுகாப்பை பொறுத்தவரை இசட் பிரிவுக்கும், இசட் பிளசுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆனால் நம்மில் பலருக்கு இது தெரிவதில்லை. சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், பிளாக் கேட்ஸ் எனப்படும் கருப்பு பூனைப்படைகள் சகிதம் ஒரு தலைவர் வலம் வந்தால் அவர் இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளார் என தெரிந்துகொள்ளலாம்.
மேலும், ஒய், எக்ஸ், ஆகிய இரண்டு பாதுகாப்பு பிரிவுகளை காட்டிலும் இசட் மற்றும் இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் வீரர்கள் சர்வ வல்லமை படைத்தவர்களாக திகழ்வார்கள். ஆயுதங்களே இல்லாமல் கூட எதிரிகளை சமாளிக்கும் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள். காரணம் அந்தளவு அவர்களுக்கு புடம் போட்ட தங்கமாக கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படும்.
இந்த நான்கு பிரிவுகளில் ஒன்றான ‛இசட்பிளஸ்’ உடன் ஏ.எஸ்.எல். எனப்படும் மேம்படுத்தப் பட்ட பாதுகாப்பு இணைப்புடன் கூடிய சிறப்பு பாதுகாப்பு பிரிவின் கீழ் மோகன் பகவத்திற்கு பாதுகாப்பு வழங்கிட மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது
இதன்படி, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஆயுதமேந்திய 55 வீரர்கள், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்குவர். இப்பிரிவின் கீழ் தேவைப்பட்டால் கூடுதலாக ஹெலிகாப்டரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
2020-21 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், சிறப்பு கமாண்டோக்கள் 3,000 பேர் கொண்ட எஸ்பிஜிக்கு செய்யப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் தயாநிதி மாறன் எழுப்பிய இந்த கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. உயரடுக்கு எஸ்பிஜி படைக்கு 2020-21 ஆம் ஆண்டில் ரூ. 592.55 கோடியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளார். இது 2019-2020 ஆண்டை ஒப்பிடும் போது 10 சதவீதம் அதிகம் ஆகும்.
படிக்க:
♦ ஒன்றிய அரசின் பட்ஜெட்: விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்!
♦ பேரிடர் நிதி: நிர்மலா சீதாராமன் திமிர் பேச்சு! தமிழக மக்கள் மீதான வன்மம்!
2019-20 ஆம் ஆண்டில் நான்கு விஐபிக்களை பாதுகாக்க எஸ்பிஜிக்கு பட்ஜெட்டில் 540.16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி ஒரு தனிநபரை பாதுகாக்க ஆகும் செலவு ரூ .135 கோடி, அதாவது பிரதமர் மோடி மற்றும் சோனியா காந்தி உள்ளடக்கிய நான்கு விஐபிகளைப் பாதுகாப்பதற்கான சராசரி செலவு தலா ரூ .135 கோடி. ஆனால் இப்போது ரூ. 592.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே பிரதமர் மோடிக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு என்பதால் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 340 சதவீதம் அதிகம் ஆகும். அதாவது தினமும் பிரதமர் மோடியின் எஸ்பிஜி பாதுகாப்புக்கு 1.62 கோடி ரூபாய் செலவு ஆகும்.
ராணுவ அமைச்சகத்துக்கான 2024-25 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.6,22,000 கோடியும், உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.2,19,643 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பகுதியான ரூ.1,43,275 கோடி ரூபாய் மத்திய போலீஸ் படைகளான சி.ஆர்.பி.எப்.(CRPF), எல்லை பாதுகாப்பு படை (BSF), மத்திய தொழிலக பாதுகாப்பு படை(CISF) ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 76,368 கோடி தலைவர்களின் பாதுகாப்புக்காக நான்கு வகை பிரிவுகளுக்கு ஒதுக்கப்படுகிறது.
நாட்டு மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. ஆனால் நாட்டில் அமைதியை கெடுத்து மதக்கலவரங்களை தூண்டுகின்ற பயங்கரவாத கும்பலான ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத்திற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது நமது தன்மானத்திற்கும், சுயமரியாதைக்கும் விடப்பட்டுள்ள சவாலாகும்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வாதப்படியே ‘தேசத்தின் நலனுக்காக, தன்னலமில்லாமல் தியாகம் செய்கின்ற’ கொள்கையை கொண்டவர்களுக்கு பாதுகாப்பு என்ற மண்ணாங்கட்டி எதற்கு. ஆயுதங்களின் மூலம் பாதுகாப்பை பெற்று அமைதியாக வாழ பயங்கரவாதிகள் முயற்சிக்கின்றனர். அப்படிப்பட்ட அமைதியை தொடர்ந்து அனுமதிப்பது பாட்டாளி வர்க்கத்தின் போர்க்குணத்திற்கும், தன்மானத்திற்கும் சவாலாகும்.
- பார்த்தசாரதி.