2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே 2004 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள தேசிய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இது புதிய ஓய்வூதிய திட்டம் என்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில் இவ்விரு திட்டங்களும் நடைமுறையில் இருக்கும் என்றும் இவற்றில் எதை வேண்டுமானாலும் பணியாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
ஆனால், பெரும்பான்மையான மத்திய மாநில அரசு ஊழியர்கள் இந்த இரண்டு ஓய்வூதிய திட்டங்களும் தங்களுக்கு வேண்டாம் என்றும் 2003 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டம் தான் வேண்டும் என்று விடாப்பிடியாக கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைக்காக தொடர்ந்து போராடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.
ஏன் இந்த நிலை என்பதை பார்க்கும் முன்பாக ஏற்கனவே கைவிடப்பட்டு விட்ட பழைய ஓய்வூதிய திட்டத்திலும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திலும் என்ன உள்ளது என்பதை பார்த்து விடுவோம்.
பழைய ஓய்வூதிய திட்டம்(OPS):
- பணியில் இருக்கும் காலத்தில் பணியாளர்களின் சம்பளத்திலிருந்து எந்த ஒரு தொகையும் பிடித்தம் செய்யப்படாமலேயே ஓய்வூதியம் வழங்கப்படும்.
- பணியாளர்கள் கடைசியாக தாங்கள் ஓய்வு பெறும் பொழுது பெற்ற சம்பளத்தில் 50% ஓய்வூதியம் ஆக கிடைக்கும் மேலும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியமும் அதிகரிக்கும்
- ஓய்வு பெறும் பொழுது அதிகபட்சம் ரூ. 20 லட்சம் வரை பணியாளர்களுக்கு கிடைக்கும். இத்துடன் பணிக்கொடை தொகையும் கிடைக்கும்.
- ஓய்வூதியம் பெறும் பணியாளர் இறந்த பிறகும் அவரது குடும்பத்திற்கு ஓய்வூதிய பலன்கள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்(UPS):
- பணியாளர்கள் பணியில் இருக்கும் பொழுது அவர்களது அடிப்படை சம்பளத்தில் 10% ஓய்வூதியத்திற்காக என்று பிடித்தம் செய்யப்படும். மேலும் இந்த அடிப்படை சம்பளத்தில் 18.5%த்தை அரசு தன் பங்களிப்பாக செலுத்தும்.
- 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு கடைசி 12 மாதங்களில் பெற்ற சம்பளத்தின் சராசரியில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு உத்தரவாதம் கிடையாது.
- 10 லிருந்து 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ஓய்வூதியம் விகிதாச்சார அடிப்படையில் ஏற்ற இறக்கமாக தான் கிடைக்கும்.
- 10 ஆண்டுகளுக்கும் குறைவாக பணியாற்றியவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு 10,000 உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் கிடைக்கும்.
- ஓய்வூதியம் பெறும் பணியாளர் இறந்த பிறகும் அவரது குடும்பத்திற்கு 60% ஓய்வூதியம் கிடைக்கும்
- இது தவிர ஆறு மாதத்திற்கு அரை மாத சம்பளம் என்ற வகையில் பணிக்காலம் முழுவதும் பணியாளர்கள் பெற்ற சம்பளத்திலிருந்து தொகை கணக்கிடப்பட்டு ஒரு பெரும் தொகை பணியாளர்களுக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
எதிர்ப்பு ஏன்?
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்திற்கு என்று பணியாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையும் இதற்கான அரசின் பங்களிப்பாக வரும் தொகையும் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யப்பட்டு அதில் வரும் வருமானத்தில் இருந்து தான் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் இதனால் பணியாளர்களுக்கான ஓய்வூதியத்திற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்றும் மத்திய அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த துரைபாண்டியன் அவர்கள் ஆணித்தரமாக கூறுகிறார்.
ஓய்வூதியத்திற்கு என்று தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையும் அரசாங்கத்தின் பங்களிப்பும் என இப்பொழுது வரை திரட்டப்பட்டுள்ள தொகை ரூ 10,53,858 கோடி. இந்தத் தொகையும் இனிமேல் திரட்டப்படும் தொகையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு அதன் மூலம் பெறப்படும் லாபத்தில் தான் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தத் தொகை முழுவதுமாக கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவாக்கப்பட உள்ளது. அதே சமயம் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் என்பது உத்தரவாதமற்ற ஒன்றாக மாற்றப்பட உள்ளது.
சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் தலைமுறை தலைமுறையாக ஒடுக்கப்பட்டு வந்தவர்கள் இட ஒதுக்கீட்டின் மூலமாக பணியில் சேரும் பொழுது அவர்களுக்கு வயது வரம்பில் சலுகை அளிக்கப்படுகிறது. இதன்படி சிலர் 40 வயதிலும் கூட மத்திய அரசு பணியில் சேருகின்றனர். இவர்கள் 25 ஆண்டுகள் பணியாற்றிட வாய்ப்பு இல்லாத நிலையில் (ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திலும் தேசிய ஓய்வூதிய திட்டத்திலும்) இவர்களுக்கு மிக மிக குறைந்த அளவிலான ஓய்வூதியம் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது என்பது கொடூரத்தின் உச்சம். அதுவும் கூட பங்குச்சந்தை சூதாட்டத்தின் காரணமாக கிடைக்குமா என்பது சந்தேகமே.
படிக்க:
♦ தொழிலாளர்களை இரத்தக்காவு கேட்கும் இனவெறி ஓநாய்கள்!
♦ அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் உரிமையை புறக்கணிக்கும் தமிழக அரசு!
புதிய ஓய்வூதிய திட்டம் அல்லது தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) என்பது தற்பொழுது அமல்படுத்தப்பட உள்ள தேசிய ஓய்வூதியத் திட்டத்தை விட மிகவும் மோசமான ஒன்று என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்பதால் அதைப் பற்றி நாம் இங்கு விரித்து கூறவில்லை.
பாசிச மோடி அரசு இப்பொழுது ஏன் தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருகிறது? என்ற கேள்வி எழுகிறது.
ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், சட்டீஸ்கர், மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை நிராகரித்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமுல்படுத்திக் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத்தில் தாங்கள் ஆட்சி அமைக்கும் பொழுது பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரப் போவதாக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலின் பொழுது பிரச்சாரம் செய்து வந்ததுடன் இப்பொழுதும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே ஆதரித்து வருகிறது. மோடியின் அரசு பெரும்பான்மையில்லாத அரசாக இருக்கும் நிலையில் தற்பொழுது மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தேர்தல்கள் வர உள்ளன.
எனவே தேர்தல் ஆதாயத்தை கணக்கில் கொண்டும் அதே சமயம் கார்ப்பரேட்டுகளின் நலனையும் கைவிடாமல் இரண்டுக்கும் இடைப்பட்டதான ஒரு திட்டமாகத்தான் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை பாசிச மோடி அரசு அமுல்படுத்திட உள்ளது.
மோடி கார்ப்பரேட்டுகளுக்கு ஆதாயம் இல்லாத ஒரு திட்டத்தை சிந்தித்து கூட பார்க்க மாட்டார் என்பதுடன் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதாயம் கிடைக்கும் எனில் அரசு ஊழியர்களின் ஓய்வு காலத்தைக் கூட உத்திரவாதம் அற்றதாக ஆக்கத் தயங்க மாட்டார் என்பது தான் இதிலிருந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய பாடம்.
- குமரன்