”இத்தாலியும், அயர்லாந்தும் – சிற்றின்ப ஈடுபாட்டு உலகமும், மிகுதுயர் வருத்தும் உலகமும் – வியப்பான முறையில் சேர்ந்திருப்பதை இந்துஸ்தான சமயத்தின் பண்டைய மரபுகள் முன்பே உணர்ந்து புலப்படுத்தியிருக்கின்றன.
அந்த மதம் புலனுணர்ச்சி இன்பங்களில் மூழ்கி திளைப்பதை வலியுறுத்தும் மதமாக உள்ளபோதே தன்னைத்தானே, வதைத்துக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தும் துறவு மதமாகவும் விளங்குகின்றது. லிங்கத்தை வழிபடும் சமயமும் அதுவே; ஜெகந்நாதனின் மதமும் அதுவே; தேவதாசி மதமும் அதுவே; சன்னியாசியின் சமயமும் அதுவே.” பார்ப்பன (இந்து) மதத்தைப் பற்றி காரல் மார்க்ஸ்.
இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் முன்வைத்த கண்ணோட்டத்தில் சிந்திக்கின்ற அறிஞர்கள் மிகவும் குறைவானவர்கள். இந்தியாவின் கடந்த கால வரலாற்றைப் பற்றி எழுதுவதாக இருந்தாலும் சரி! நிகழ்கால வரலாற்றைப் பற்றி எழுதுவதாக இருந்தாலும் சரி! மதம் என்ற வரையறைக்குள் கொஞ்சமும் அடங்காத, படிநிலை சாதிகளின் தொகுப்பு என அம்பேத்கரால் இடித்துரைக்கப்பட்ட பார்ப்பன (இந்து) மதத்தை விமர்சிக்காமல் எழுதவே முடியாது. இந்த கேடுகெட்ட இந்து மதத்தை கட்டிக் காக்கின்ற பயங்கரவாத அமைப்பான ஆர்எஸ்எஸ் பாஜகவை பற்றி விமர்சிக்காமல் கருத்துக்களை கூறவே முடியாது.
சட்டத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல், ’மீனுக்கு தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டுகின்ற விலாங்கு மீன்களைப் போல்’ வாழ்கின்ற எண்ணற்ற அறிவுஜீவிகள் மத்தியில் இன்று நம்மை விட்டு பிரிந்த வழக்கறிஞர், ஆய்வாளர், எழுத்தாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளரான அப்துல் கஃபூர் அப்துல் மஜீத் நூரானி (ஏ.ஜி.நூரானி) முக்கியத்துவம் வாய்ந்தவர்.
1930 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த நூரானி 1953 ஆம் ஆண்டு சட்டம் பயின்ற வழக்கறிஞராக மும்பை உயர்நீதி மன்றத்தில் தன்னை பதிவு செய்துக் கொண்டார். வழக்கறிஞர் தொழில் மூலம் வழக்குகளை நடத்தி தனது வருமானத்திற்கு வழி தேடுவதைக் காட்டிலும் சமகாலத்தில் நிலவுகின்ற அரசியல், பொருளாதாரம், அரசாங்கத்தின் நடைமுறை, அதன் தவறுகள் போன்ற அனைத்து சமகால சிக்கல்களின் மீது விவாதத்தை தூண்டுகின்ற மிகச்சிறந்த எழுத்தாளராக, விமர்சகராக நூரானி வாழ்ந்து வந்தார்.
அவர் எழுதிய கட்டுரைகள் எக்கனாமிக்கல் அண்ட் பொலிடிகல் வீக்லி, தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்,, தி ஸ்டேஸ்மேன் மற்றும் இந்து குழுமத்தில் இருந்து வெளி வருகின்ற ஃப்ரண்ட்லைன் ஆகிய முன்னணி இதழியல் ஊடகங்களில் இடம் பெற்றது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஃப்ரண்ட்லைன் இதழில் முக்கியமான கட்டுரைகளை எழுதுகின்ற எழுத்தாளராகவும், வெறும் எழுத்தாளராக மட்டுமில்லாமல் சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளின் மீது விமர்சனப் பார்வையில் செயல் ஊக்கத்தை தூண்டுகின்ற செயல்பாட்டாளராகவும் வாழ்ந்து வந்தார்.
அவர் எழுதிய காஷ்மீர் தகராறு, பிரிவு 370 ஜம்மு மற்றும் காஷ்மீரின் அரசியலமைப்பு வரலாறு போன்ற நூல்களும், ஹைதராபாத் பிரிக்கப்பட்ட வரலாறு, அமைச்சர்களின் தவறான நடத்தை, அரசியலமைப்பு மற்றும் குடிமக்கள் உரிமைகள் பற்றிய கேள்விகள், ஆர்எஸ்எஸ்: இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் போன்ற நூல்கள் வரலாற்றை விருப்பு வெறுப்பின்றி, ஒரு பக்க சார்பின்றி பெரும்பான்மை மக்கள் நலனுக்கு உகந்த வகையில், அறிவியல் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ள நூல்களாகவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், புரட்சிகர, ஜனநாயக சக்திகள் வரை அனைவருக்கும் வழிகாட்டும் ஆவணமாக திகழ்கின்றது.
தமிழகத்தின் கொள்ளைக்காரி பாசிச ஜெயலலிதாவுக்கு எதிராக தமிழக திமுக அரசின் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் வாதாடியது மட்டுமின்றி, நீண்டகாலம் சிறையிலடைக்கப் பட்ட காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான ஷேக் அப்துல்லாவிற்காக வழக்குகளை நடத்தியுள்ளார்.
அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக மனித உரிமைகளை முன்னிறுத்தி போராடுகின்ற போராளியாகவும் வாழ்ந்து வந்தவர் தான் நூரானி. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி பாசிசம் முதல் ஆர்எஸ்எஸ் கும்பலின் கார்ப்பரேட் காவி பாசிசம் வரை அனைத்து வகையான பாசிச ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக போராடியுள்ளார். காஷ்மீரில் இசுலாமியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் முதல் இந்தியாவில் இசுலாமியர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், தாக்குதல்கள், சட்டப்பூர்வ உரிமைகள் பறித்தல் வரை அனைத்துக்கும் எதிராக போராடும் களப்போராளியாக சக வழக்கறிஞர்கள், அறிவு ஜீவிகளுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்துள்ளார் நூரானி.
முனைவர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், அறிவுஜீவிகள், அதிலும் குறிப்பாக இடதுசாரி அறிவு ஜீவிகள் என்று பலவிதமாக அழைக்கப்படுகின்ற ’எச்சரிக்கை மிகுந்த அறிஞர்கள்’ மத்தியில் இடதுசாரி கருத்துகளை உள்வாங்கி சமகாலத்தில் நடக்கின்ற நிகழ்வுகள் மட்டுமின்றி, கடந்த கால வரலாற்றையும் வரலாற்று பொருள் முதல்வாத கண்ணோட்டத்தில் அணுகுகின்ற தனிச்சிறப்பான தன்மை கொண்ட ஆளுமையாகவே நூரானி போற்றப்பட வேண்டும்.
”ஆர்எஸ்எஸ் என்பது இந்தியாவில் நிலவுகின்ற மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்கத்திற்கு மட்டும் எதிரானது அல்ல, அது ஜனநாயக ஆட்சி முறைக்கும் இந்தியா முழுமைக்குமான அச்சுறுத்தல் என்பதையும், அது இந்தியாவின் ஆன்மாவையே பலி வாங்க நினைக்கின்றது என்பதையும், ஆனால் அது வீழ்த்த முடியாத அமைப்பு அல்ல என்பதையும்,” சமகாலத்தில் துணிச்சலாகவும், அறிவு ஜீவிகளுக்கு முன்னுதாரணமாகவும் தனது கருத்துகளை மறைத்துக் கொள்ளாமல் நூரானி தனது ஆர்எஸ்எஸ் குறித்த நூலில் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.
தனது 94 வயது வரை வாழும் காலத்தில் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் குறிப்பாக ஆர்எஸ்எஸ் என்ற பாசிச பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகளை துணிச்சலுடன் தோலுரித்துக் காட்டிய நூரானி இந்திய வரலாற்றில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பதித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள உழைப்பாளி மக்களின் தோளோடு தோள் நின்று போராடிய போராளியாகவும், கம்யூனிஸ்ட்களுடன் நெருக்கமான உறவை மேற்கொண்டு வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வை பற்றிய புரிதலை கம்யூனிஸ்டுகளுக்கும் கற்றுக் கொடுத்த மிகச்சிறந்த அறிஞராகவும் திகழ்ந்து வந்த நூரானியின் இறப்பு பாட்டாளி வர்க்கத்திற்கு உண்மையிலேயே பேரிழப்பாகும்.
இசுலாமியர்களுக்கு எதிராக பாசிச பாஜகவின் குண்டர்கள் தாக்க்குதலை தொடுத்து வரும் தற்போதைய காலக் கட்டத்தில் ”என்னை கபூர் என்று அழையுங்கள்!” என்று துணிச்சலுடன் முன்வைத்த நூரானி கடைப்பிடிக்க தகுந்த அறிஞர் மட்டுமல்ல, பாசிச எதிர்ப்பு போராளியுமாவார். அவருக்கு எமது அஞ்சலியை செலுத்துகின்றோம்.
30-08-2024.
தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்
சிறப்பான இரங்கல் பதிவு . பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும், ஒட்டுமொத்த சமூகக் கண்ணோட்டத்தில் பாசிச எதிர்ப்புப்
போராளியாகத் திகழ்ந்த மாபெரும் அறிஞர் நூரானியைப் போற்றுவோம்! அவர் வழி பின் தொடர்வோம்! ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்துவோம்!!